அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன். கதைகள் அவர்களுக்குள் விரிந்திருக்கும் கோணங்கள் எனக்கு மேலும் கதையின் ஆழம் தொட உதவுகிறது.
[லீலை] பற்றி என் எண்ணங்கள் :
பெண் ஆடும் விளையாட்டு. தன் தந்திரம் மூலம் பல அவதாரங்களாய் அவள் வாழ்வில் அவளாடும் ஆட்டம். அனைத்து அவதாரங்களும் அதன் லீலையை கச்சிதமாய் ஆடுகிறது. எல்லா அவதாரங்களுக்கும் பொதுவான கதை நான் ஒரு அபலை. ஒரு சோகக் கதை மூலம் பெண்ணால் எளிதாக ஏமாற்றமுடிகிறது. சமூகமும் அதைதான் எதிர்பார்ப்பது போலுள்ளது. உரப்பன் கணேசன் தன்னை அவளின் ஆபத்பாந்தவனாய் கற்பனை செய்து கொள்கிறான். பெண்ணின் கஷ்டங்களை துடைக்க துடிக்கும் ஆண். பெண்ணை அபலையென நினைக்கும் சராசரி ஆண். அவள் எல்லாரையும் ஏமாற்றிவிட்டு இவனிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லும்போது இவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவள் சொல்லாமல் போன ஏமாற்றத்தின் சுமையோடு வாழ்கிறான். மீண்டும் பேருந்தில் சந்தித்து இன்னொரு சோகக் கதையை கேட்கும்போது வெறுமையின் அழுத்தம் கூடுகிறது. ஆழ்மனம் இவள் உன்னையும் ஏமாற்றுகிறாளோவென பூடகமாய் எச்சரிக்கிறது. அத்தனை தெளிவாய் புரிந்துகொள்ள முடியாததனால் வெறுமை கூடுகிறது. அவள் பேருந்தைவிட்டு இறங்கும் போது வரும் அந்த ஒயர்கூடை அம்மாவிடம் அவள் பேசும் உரையாடலை கேட்கிறான். அந்த நொடி ஒரு தரிசன நொடி. இவள் எடுத்த பாத்திரத்தை சிறப்பாய் ஆடும் நல்ல ஆட்டக்காரியென உணர்கிறான். அவளின் ஆட்டம் அவனுக்குள் சிரிப்பாய் மலர்கிறது. சராசரி உரப்பன் கணேசன் மறைந்தான்.
அன்புள்ள,
மோகன் நடராஜ்
***
அன்புள்ள அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,
அன்புடன் சொல்ல நினைப்பது. முதலில் நான் குறைந்த நேரத்திலேயே வாசிப்பில் வாழ்கிறேன். நான் வாசித்தவரை உரைநடையில் நாஞ்சில் நாடன் அவர்களை பெரிதும் மனம் பற்றிக்கொண்டுவிட்டது.நாஞ்சில் நாடன் அவர்களின் நடை எனக்கு எப்போதுமே உவகை தருகிறது. என்றுமே ஆசானாய் அவர் என் மனதில்… கவிதையில் நித்தம் வியப்பாய் வண்ணதாசன் அவர்களை பார்க்கிறேன். இன்று அவரின் முகநூல் பதிவில் ஒரு கவிதையில் வாசித்த ‘இருபதன்’ என்ற சொல் பற்றி தேடுதல் மேற்கொள்ளும்போது ‘நற்றுணை’ பற்றிய ஒரு சகோதரியின் (ஜெயந்தி அவர்கள்) கடிதம் கண்ணுற்றேன். படித்துக்கொண்டிருந்த போதே நற்றுணை படிக்க ஆவலுற்று தொடர்ந்தேன். தொடரத் தொடர் கேசினியை உள்வாங்கிய அம்மிணி தங்கச்சியாய் மனம்… கதையோட்டம் ஒவ்வொரு சொல்லிலும் உயிர்ப்பாய்… உள்வாங்கி சேகரம் செய்தால் யாவர்க்கும் கேசினி துணை நிற்பாள் என நம்புகிறேன். தெய்வம் தெளிமின்! தெளிந்தோர் பேணுமின்! நிறைவாய் உறங்கச் செல்லலாம் கேசினி நம்மை காப்பாள் என…உங்களை ‘ Daredevil’ என சொல்ல மனம் விழைகிறது…
வணக்கத்துடனும் கட்டுக்கடங்காத அன்புடனும்
ம.பார்த்திபன்,
காரைக்கால்.
நள்ளென்ற யாமம் .