குடிப்பொறுக்கிகள்

யானைப்பாதையில் பாட்டில்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கடந்த ஒரு வாரமாக வேறு எந்த வாசிப்பும் இல்லாமல் உங்கள் தளத்தில் கடந்த ஒரு மாதமாக வந்த பதிவுகளை தான் வாசித்து கொண்டிருந்தேன். வேலை காரணங்களால் வாசிப்பு குறைந்து விட்டிருந்தது. நண்பர் கதிரின் யானைப்பாதையில் பாட்டில்கள் பதிவை படித்ததும்  சமீபத்திய என் அனுபவத்தை பகிர தோன்றியது.

நீண்ட நாட்களுக்கு பின் கொல்லிமலை சென்று இருந்தேன் ஒரு நண்பருடன். அவ்வப்போது அங்கு சென்று 2, 3 நாட்கள் மலைகள் நடுவே, காட்டுக்கு அருகே இருப்பது எப்போதுமே ஒரு எழ்ச்சியான ஆன்மீக அனுபவம். சென்று கிட்ட தட்ட  ஒரு வருடம் ஆகிவிட்டதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.

ஆத்தூர் தாண்டி இராசிபுரம் சாலை வந்த உடனேயே பெரும் அதிர்ச்சி. சாலை இரண்டு பக்கமும் பெரும் மரங்கள் –  சாலை விரிவாக்கத்திற்காக அனைத்தும் வெட்டி போடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 10, 15 அடியாவது சுற்று வட்டம் கொண்டது. வயிற்றெரிச்சல் ஆக இருந்தது. ஆம், சாலை அகலமாகவும், மேடு பள்ளம் இல்லாததாக இருந்தால் மகிழ்வதும், பாராட்டுவதும் நாம் தான். ஆனால் அதற்காக இத்தனை பெரும் மரஙகளை, 15, 20 வருடங்கள் வளர்ந்த்தவை வெட்டி எடுத்து தான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அதன் சமன் சரிதானா? என்ற கேள்வி எப்போதும் தொக்கி நிற்கிறது..  சாலை செல்ல செல்ல , இரு புறமும் இந்த பெரு மரங்கள்  வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பதை பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.. எத்தனை பறவைகளின், பூச்சிகளின் வசிப்பிடமாக இருந்திருக்கும் இவை? இனி இந்த  இடங்களில் பறவை சத்தங்கள் இல்லாமல் வரும் வெறுமையை உணர்வார்களா அங்குள்ள மக்கள்?

நான் வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடத்திலும் இதே நிலை. வெளிச்சுவரில் வண்ணம்  பூச வேண்டி 25 வருடங்கள் வளர்ந்த மரத்தை வெட்ட  வருத்தமே  இல்லாமல் matter of fact ஆக வேலை முடிந்தது.. பள்ளி நாட்களில் அடிக்கடி பெரும் எண்ணிக்கையில் பார்க்கும் சிட்டுக்குருவிகள் இப்போதுதான் மீண்டும் பார்க்க கேட்க ஆரம்பித்து இருந்தோம்.. இப்போது மீண்டும் மௌனம்..    civilization, வளர்ச்சி எனும் கருத்து bull dozer போல் அனைத்தையும் முழுங்கி விட்டு பெரு நடை போடுவதை எண்ணும் போது கீதையில் விஸ்வ ரூப தரிசனத்தில் வரும் கால தத்துவ விளக்கம் தான் மனதில் தோன்றுகிறது..

மலை மேல் சென்று மறுநாள் இரவு உணவிற்கு செம்மேடு எனும் ஊருக்கு இறங்கி வந்தோம். கடைகள் நிறைந்த மைய்ய இடம் இரவு 9.30 மணிக்கும் திருவிழா கோலம் போல் இருந்தது. 17, 18 வயதில் இருந்து 30 வயது வரை உள்ள அநேகமாக ஆண்கள் கூட்டம்.. குழு குழுவாக அங்கும் இங்கும் பேச்சும், கடைகளில் பொருள்கள் வாங்குவதும்… மொத்த சூழலே உடனே ஒரு ஒவ்வாமையை அளித்தது. காதில் விழுந்த பேச்சுக்கள் எல்லாம், எங்கு மது கிடைக்கும், எங்கு பார் உள்ளது, என்பதை சுற்றித்தான்.  சென்ற வருடம் வந்த பிரயாணங்களில் கூட இவ்வளவு மோசமாக இருந்த நினைவு இல்லை.

இதே கதியில் போனால் இப்போது சுற்றுலா மக்கள், “குடி” மக்கள் அதிகம் வராத, தொடாத இடமாக இருக்கும் இந்த அருமையான இடத்தின்   சீரழிவை தடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அன்புடன்

வெண்ணி

அன்புள்ள வெண்ணி,

இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எங்கள் ஓய்வுமாளிகை அமைந்திருப்பது ஈரட்டி அருவி என்னும் காட்டருவிக்கு நேர்மேலே. அது பாதுகாக்கப்பட்ட காடு. ஆகவே உள்ளே செல்ல அனுமதி இல்லை. வனத்துறை முள்வெட்டி வழிகளை எல்லாம் மூடியிருக்கிறது.

ஆனாலும் கூகிளில் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு எல்லா ஞாயிறன்றும் இருபது முப்பது பைக்குகள் கார்கள் வருகின்றன. அனைவரும் இளைஞர்கள். வண்டி முழுக்க குடியும் தீனியும். அங்கே பாறைகளில் அமர்ந்து குடித்து சத்தம்போட்டு சலம்பி மாலையில் சென்று சேர்கிறார்கள்.எதை கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. குறைந்தபட்ச நடத்தை நாகரீகமோ, அடிப்படைப் பண்புகளோ எவரிடமும் வெளிப்படுவதில்லை. உண்மையில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பது என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அறிந்த மகிழ்ச்சி இதுதான்.

எங்கள் மாளிகைக்கு முன்னாலுள்ள கல்லிருக்கைகளில் வந்தமர்ந்து குடிப்பார்கள். அது தனியார் இடம் என்று சொன்னால் முறைத்தபடி கிளம்புவார்கள். அங்கே ஆளில்லாவிட்டால் அங்கே முழுக்க உடைந்த குப்பிகள்தான் பரவிக்கிடக்கும். காகிதக்குப்பைகள், உணவுக்குப்பைகள். நான் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு மணிநேரம் சில்லுகளை பொறுக்கிச் சேர்க்கவேண்டியிருக்கிறது. அழகுமிக்க தாமரைக்கரை மலைப்பகுதி முழுக்க அங்கே வரும் இந்தப்பதர்களால் சீரழிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களில் ஒரு சதவீதம்பேர் கூட குடிப்பவர்கள் அல்ல.

நாகர்கோயிலில் என் வீட்டைச் சுற்றியிருக்கும் மலையடிவாரங்கள் ஏரிக்கரைகள் எங்குமே இன்று ஒரு நடை செல்லமுடியாது. இங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று நான் முடிவெடுக்க அது முக்கியமான காரணம். அற்புதமான ஏரிக்கரைகள், வயல்வெளிகள் எங்கு பாத்தாலும்  கூடி அமர்ந்து குடிக்கும் கும்பல்கள். தரையெங்கும் உடைந்த கண்ணாடிப்புட்டிகள், காகிதக்கோப்பைக் குப்பைகள். தமிழகத்தில் குடிகாரர்கள் போதையில் உரையாடிக்கொள்வதோ, விளையாடி மகிழ்வதோ அரிதினும் அரிது. பெரும்பாலும் வாய்ச்சவடால்கள், சட்டென்று சண்டை சச்சரவு.

இன்று இந்த போக்கு எல்லையை கடந்துவிட்டிருக்கிறது. இதனால் முதன்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். அவர்கள் வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லமுடியாத நிலை. பொதுவான சாலைகளில் நடமாடலாம். அதுவும் சிறிய ஊர்களில் அந்திக்குள் வீடுதிரும்பிவிடவேண்டும். தனியாக ஒரு நடை செல்வதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது.

இது ‘புதிய நாகரீகம்’ என்றும் ‘சுதந்திரம்’ என்றும் இதை கண்டிப்பது ‘ஒழுக்கவாதம்’ என்றும் அறிவுஜீவி என்னும் பெயரில் திரியும் கேனைகள் சொல்லும் சூழல் இங்குள்ளது. நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் குடி அவர்களின் பண்பாட்டில் ஒரு பகுதி. எங்கும் அதற்கென சில வரைமுறைகள் உண்டு. எங்கு குடிப்பது, எப்படிக் குடிப்பது என. பொது இடங்களை குடிக்குமிடமாக மாற்றிக்கொள்வதும், குப்பிகளை உடைத்து வீசுவதும், வழிப்போக்கர் அஞ்ச பூசலிடுவதும், பொதுமக்கள் நடமாட அஞ்சும் சூழலை உருவாக்குவதும் நாகரீக நாடுகளில் எதிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. இங்கே சலம்பும் இதே கும்பல் சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ எத்தனை ஒழுங்குடன் இருக்கிறது என்பதையும் கண்டிருக்கிறேன்.

உண்மையில் இதைப் போன்ற சூழல் இருக்கும் நாடுகள் இன்று ஆப்ரிக்காவிலேயே உள்ளன. பல ஆப்ரிக்க ஊர்களில் மாலை ஆறுமணிக்கு மேல் வெளியே செல்லமுடியாது. பொதுவான சில இடங்கள் தவிர வேறெங்கும் ஆயுதங்கள் இல்லாமல், துணை இல்லாமல் செல்லமுடியாது. தமிழகமும் கேரளமும் ஏற்கனவே அந்நிலை நோக்கிச் செல்ல தொடங்கிவிட்டிருக்கின்றன. சமீபமாக கேரளம் மிக கடுமையான போலீஸ் நடவடிக்கைகளை தொடங்கியது. பொது இடங்களில் குடிப்பது, அனைத்து விடுதிகளிலும் பார் அமைப்பது எல்லாம் தடைசெய்யப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் கண்டிப்பான கோரிக்கையே காரணம். அது பயனளிக்கிறது.

நம் பண்பாட்டில், கல்வியில் இந்த ஒழுங்கை கற்பிக்கும் அமைப்புகள் எல்லாம் வலுவற்றிருக்கின்றன. இனி தற்கட்டுப்பாட்டைப் பற்றி பேசி பயனில்லை. தமிழக அரசு மிகக்கடுமையான போலீஸ் நடவடிக்கைகள் வழியாக கட்டுப்படுத்தாவிட்டால் தமிழகத்தில் பொதுவெளியில் குடிகாரப்பொறுக்கிகள் அன்றி எவரும் நடமாடமுடியாத நிலை உருவாகும்.  இன்று தமிழகப்போலீஸ் குடிப்பொறுக்கிகளை பொதுவாக தண்டிப்பதில்லை. அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு பின்னணி ஆதரவு இருக்கும். கட்சிகள், சாதியமைப்புகள், உள்ளூர் ரவுடிகள். போலீஸ் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவேண்டும். பொது இடங்களுக்கு போலீஸ் பொறுப்பேற்கவேண்டும்.

அ. எந்நிலையிலும் எந்த பொது இடத்திலும் எவரும் அமர்ந்து குடிப்பதோ, குடிப்பொருட்களுடன் தென்படுவதோ கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அபராதம் அல்ல, சிறைத்தண்டனையே தேவை

ஆ. குடித்தபின் வண்டிகளை ஓட்டுபவர்களை இப்போது எளிய அபராதத்துடன் விட்டுவிடுகிறார்கள். சிறைத்தண்டனை அல்லது பல ஆயிரம்ரூபாய் அபராதம் விதிக்கப்படவேண்டும்.

இவை இரண்டும் கண்டிப்பாக நடைமுறை செய்யப்படாவிட்டால் இங்கே குடிக்காதவர்கள் எல்லைவகுக்கப்பட்ட சில இடங்களுக்குள் சிறைவாழ்க்கை வாழ மற்றவர்கள் சுற்றித்திரியும் அபத்தமான சூழலே உருவாகும். குற்றம் பெருகும்போது அது அரசுமீதான கசப்பாகவே திரும்பும்

ஜெ

முந்தைய கட்டுரைபிரதமன், கடிதம்
அடுத்த கட்டுரைப.சரவணனுக்கு விருது