அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
அன்பு ஜெ,
கவிதை முகாமில் கலந்து கொண்ட இரண்டு நாட்களும் அறிதலுடன் கூடிய மகிழ்வான நாட்களாக நினைவில் தங்கிவிட்டது. அதைத் தொகுத்துக் கொள்ள எத்தனித்து இந்தக் கடிதம்.
தேர்வுப்பாடமாக வரலாற்றுப் பின்புலத்தோடு சங்கக் கவிதைகள் முதல் நவீனக் கவிதைகள் வரை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அறிதலுக்காக படிக்கும் முதிர்ச்சி தருணத்தில் புறநானூற்றின் பொருண்மொழிக் காஞ்சித் துறைப் பாடல்களும், குறளும் தன்னை திறந்து கொண்டு என் முன் நின்றன. வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் அவை வந்து முன் நிற்கும் போதெல்லாம் மேலும் மேலுமென அவை திறந்து கொண்டே இருக்கின்றன.
தீவிர இலக்கிய வாசிப்பை குழுவாக முன்னெடுக்கலாம் என்றெண்ணி நண்பர்கள் சகிதம் ஜெ -வின் “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” என்ற புத்தகத்தோடு வாசிப்பைத் தொடங்கினோம். அந்தப் புத்தகத்தில் நவீனக் கவிஞர்களாக ஜெ அறிமுகப் படுத்தியிருந்த கவிஞர்களை, கவிதைகளை இணையம் வழி கண்டடைந்தேன். ஜெ வின் இணையதளத்தில் கவிதையைப் பற்றி கவிஞர்களைப் பற்றி எழுதியிருந்த பல கட்டுரைகள் மேலும் உதவி புரிந்தன. எல்லாம் சுற்றி வந்து என் மனதிற்கு அணுக்கமாகி அமர்ந்தது பிரமிளின் கவிதைகள் தான்.
மதாரின் கவிதை வெளியீட்டு விழாவின் போது ஜெ ஆற்றிய உரை கவிதையின் வரலாற்றுப் பின்புலத்தோடு பின் நவீனத்துவக் கவிதைகளை அறிமுகம் செய்தது. அதற்குப் பின் நண்பர் மதாருடனான கவிதை உரையாடலில் மேலும் மேலுமென கவிதைத் தருணங்களை சிலாகித்திருந்தேன். தேவதேவன், தேவதச்சன், இசை என அவர் சிலாகிக்கும் கவிதைகளின் வழி கண்டடைதல் நிகழ்ந்து கொண்டே இருந்தது.
ஒருவகையில் இவையாவுமே வாசகனாய் கவிதைகளுக்குள் சென்று அதன் அனுபவத்தின் வழி கவிஞனுக்குள் சென்று அவன் அடைந்த கணத்தை அடைந்து கரைந்து மேலும் மேலும் வாசகனாக உள்நுழைந்து செல்ல என்னை மயக்கி நின்றது.
கோவை கவிதை முகாம் நிகழ்ந்த இந்த இரண்டு நாட்களும் வாசகராக பல கேள்விகளைக் கேட்டு தெளிபடுத்திக் கொண்டோம். பிறரின் கேள்விகளில் பல திறப்புகள் கிடைத்தன. கேள்விகளில் பிரதானமாக நின்றது “எது நல்ல கவிதை? ஒரு நல்ல கவிதையின் அளவுகோல் தான் என்ன? ” என்பது. இதை இரண்டு நாட்களுமாக வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி கிருஷ்ணன் அவர்கள் கவிஞர்களிடம் கேட்டுப்பார்த்தார். அவர் கேள்வி வாசகர்களுக்குள் நுழைந்து இன்னும் ஆழமாக அப்படி ஒரு கேள்வியின் தேவையைச் சொல்லி கேட்டுப் பார்த்தாயிற்று. முழுமுற்றான எந்தப்பதிலும் கிட்டவில்லை. அப்படியொரு வரையரையால் வாசகனுடைய பார்வை சுருங்க வாய்ப்புள்ளதாகச் சொல்லியே யுவன் இந்தக் கேள்வியை தவிர்த்துக் கொண்டேயிருந்தார். வெண்முரசின் இளைய யாதவனைப் போல அரங்கம் அடித்துக் கொண்டு அமைதியாகும் தருணத்தில், அதுவும் மேலதிக விளக்கம் தான் ஏதும் சொல்ல வேண்டுமென இருந்தால் இறுதியாகப் பேசினார் ஜெ.
இரண்டாம் நாள் யுவன் மற்றும் மோகனரங்கன் அரங்கில் “கவிதை வாசிப்பு முறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்பொழுதும் அந்தக் கேள்வி வந்து நின்றது. யுவன் காலங்காலமாக பிடிகொடுக்காமல் இதே பதிலைச் சொல்வதாக கிருஷ்ணன் குறைபட்டார். நண்பர் விஜய் எழுத்தாளனாக கவிஞனாக வாசகனாக புதிதாகப் பிரவேசிக்கும் ஒருவனுக்கு அந்த அளவுகோல்கள் எத்தனை முக்கியத்துவம் என்பதை அழாத குறையாகவும் எடுத்து வைத்து விட்டார். யுவன் எப்படி சுற்றி வலைத்துக் கேட்டாலும் தன்னுடைய டிரேட்மார்க் சிரிப்போடு அந்த வரையறை தேவையில்லை என்ற கருத்தோடு வாதத்தை முடித்து வைப்பார். முடிக்கும் கணந்தோறும் ஏமாற்றத்தோடுதான் அரங்கு அமைந்து போகும்.
இந்த ஒரு இறுக்கமான கேள்வியும், பிடிகொடுக்காத பதிலும் கவிஞர் மதாரின் “தற்கால கவிதைகள்” அரங்கில் தவிடுபொடியானது. பின்நவீனத்துவக் கவிதைகளை கவிஞர்கள் மிக ஆவலாக விவாதித்தது தான் கவிதையின் இலக்கணத்தை வரையறை செய்தது எனலாம். இலக்கணம் என்பதைக் காட்டிலும் அவர்கள் எந்தக் கவிதையை சிலாகித்தார்கள், எந்தக் கவிதையை எந்தக் காரணங்களை எல்லாம் சொல்லி புறந்தள்ளினார்கள் என்பதை கண்ணுற்று நாங்கள் வரையறுத்துக் கொண்டோம் எனலாம். மதாரின் அரங்கில் கவிஞர்கள் பேசியது ஒருவாராக பல காலமாக உட்பொதிந்திருந்த மனக்குமுறல் போல தென்பட்டது.
வைப்பு முறையின் ஒழுங்கு, தொனி, உணர்வுகள், உள்ளொளி என சிலாகிப்பதைத் தாண்டி எங்கெல்லாம் கவிதை கவிதையில்லாமல் ஆகிறது என்பதைக் கூறினார்கள். கலைச்சொற்களையெல்லாம் இட்டு நிரப்பி சமைக்கும் கவிதைகள், ஒன்றை முதலில் கவிதையில் சமைத்துவிட்டு அதை அப்படியே விட்டுவிட்டு வேறொன்றை சமைக்க ஆரம்பித்து வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் (SHIFT FALLACY/ THEME SHIFT) கவிதைகள் (இதே theme shif -ஐ கவிதையில் ஓர் உச்சத்தை நிகழ்த்திக் கடப்பவர்களும் இருக்கிறார்கள் தான் என்றார் யுவன்), தேவையில்லாமல் அதிக சொற்களைப் பிரயோகப்படுத்தி கவிதையெனும் தன்மையையே குலைத்துவிடும் கவிதைகள் (நீள் கவிதைகளில் உச்சம் அடைந்த கவிதைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை), ஏற்கனவே பிரபலமான கவிதைகளை நகலெடுக்க எண்ணி குழப்பமாக்கி காலப்போக்கில் அதை கிளிஷேவாக்குதல் (அபியின் வாழ்வின் தரிசனமாக நிற்பது கோடுகளும் புள்ளிகளும். அதை மேலதிகமாக சொல்ல முடியுமானால் எழுதலாம். ஆனால் அதையே தரிசனமேயில்லாமல் குழப்பி எழுதுவது கவிதையே அல்ல. அது காலத்தில் நிலைக்காது என்றார் ஜெ.
கவிதையின் புறத்தில் இசையை நிகழ்த்தக்கூடிய நவீன யாப்பு கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் கவிதையின் அகத்தில் நிகழக்கூடிய இசை (INNER MUSIC, RHYTHM) ஒன்றுள்ளது. அதை வாசகன் நுகரக்கூடியவாறு அமைப்பது ஒரு நல்ல கவிதை என்றார் ஜெ.
ஒரு வாசகனாக கவிதையை என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான பதிலை அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிஞர்கள் சொல்லியதை வைத்து தொகுத்துக் கொள்ள முடிந்தது. “ஒரு கவிதையை உடைத்து உடைத்து மறுஉருவாக்கம் செய்து குலைப்பது. வாசக /ஊடு பிரதி என அதற்காக அலைந்து அலைந்து கவிதையின் சுவையைத் தவற விடுவது, கோட்பாடுகளைத் தேடுதிறேன் பேர்வழி என கோட்பாட்டுப் புத்தகங்களின் சுமையை அதில் ஏற்றி வைப்பது, பல வகை விமர்சனங்களையும் முன்னரே படித்துவிட்டு அந்தப் பார்வையோடே அதை அணுகுவது” ஆகியவை கவிதையின் சுவையைக் கெடுக்கும் என்றார்கள்.
“ஒரு கவிதையை கவிதையாக அப்படியே பாருங்கள். அதனுடன் உரையாடுங்கள். உங்கள் அனுபவத்தைக் கொண்டு அதை உணர முற்படுங்கள்” என்று கவிஞர்கள் திரும்பத்திரும்ப கூறினார்கள்.
கவிஞர் யுவன் அவர்கள் சொல்லும்போது தி. ஜா -வின் யமுனா தனக்கு காலத்தில் எவ்வாறெல்லாம் மாறி நிற்கிறாள் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் அவர் என் மனதில் நின்றுவிட்டார். உள்ளம் கலங்கி நின்று அவரை அது கேட்டுக் கொண்டிருந்தது. “யமுனாவை பருவ வயதில் கேட்டபோது அவளைக் காதலித்து அவளுடன் வாழ வேண்டும் என்று தோன்றியது. நடு வயதில் ஒரு முறையேனும் அவளுடன் இருந்தால் போதும் என்று தோன்றியது. நாற்பது வயதுக்கு மேல் ஒரு தந்தையாக நின்று அவளுடைய நிலைக்காக பரிதாபப்பட்டேன். இப்பொழுது அவளை நினைத்தால் அந்தத் துயர் அவளுக்கு வந்திருக்கக்கூடாது என்று மட்டுமே தோன்றுகிறது. தி. ஜா வின் யமுனா அப்படியே தான் இருக்கிறாள். நான் மாற மாற அவள் தன்னை மாற்றிக் காட்டுகிறாள். ஒரு நல்ல கவிதை என்பது அது தான்.” என்றார் யுவன். இந்த அவரின் வரிகளின் வழி என்னை நோக்குகிறேன். வள்ளுவனை மனனம் செய்வதிலிருந்து அவரைக் கவிஞனாகக் கண்டடையும் தருணத்தை நோக்கி வந்திருக்கிறேன். முதிர்ச்சியாகுந் தருணந்தோறும் எனக்கு குறள் திறக்கும் தருணம் வியக்க வைக்கிறது. சில கவிதைகளும் அப்படித்தானே!
ஜெயமோகன், யுவன், போகன், மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன், சாம்ராஜ், இசை, மதார் என கவிஞர்களால் அரங்கம் நிறைந்திருந்த இடத்தினுள் ஒரு வாசகராக அமைந்து அவர்களைக் கேட்பது மகிழ்ச்சியளித்தது.
போகனின் சீனக் கவிதைகளோடு முதல் நாள் துவங்கியது. சீன வரலாற்றுப் பின்புலத்தைச் சொல்லி கவிதைகளுக்கான பேசு பொருள் எவ்வாறெல்லாம் அங்கு உருவாகி வந்துள்ளது என்பதை விளக்கி சில மொழிபெயர்ப்பு கவிதைகளைப் பற்றிக் கூறினார். கவிதைகளை விடவும் போகன் அவர்களின் உரை மிகவும் கவர்ந்தது. முற்றிலும் நிலத்தாலும் பண்பாட்டாலும் வேறுபட்ட மொழியிலுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பை சுவாரசியமாகக் கடத்திய பெருமை அவரையே சாரும்.
சமகால இந்தி கவிதைகளைப் பற்றி கோபாலகிருஷ்ணன் அவர்கள் அரங்கில் உரையாடினார். ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தையளித்து குறிப்பிடத்தக்க இந்தி கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். பார்ப்பதற்கும் ஒரு இந்தி பண்டிட் போல இருந்ததால் அவர் சொல்வது நம்பும்படியாக இருந்தது. அக்ஞேய, அசோக் வாஜ்பேயி, கிரிராஜ் போன்ற பெயர்கள் மனதில் பதிந்துவிட்டன. கிரிராஜின் கவிதையின் சாரம் இரண்டு நாட்களும் ஏதோவோர் வகையில் கோடிட்டு காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
“தேநீர் தயாரித்துத் தருமாறு அவன் கனவில் என்னிடம் கேட்டான்
பல ஊர்களைச் சுற்றிவிட்டு நீண்ட யாத்திரையிலிருந்து திரும்பியிருந்தான்
அவனுக்காக வெண்டைக்காய்களை நறுக்கத் தொடங்கினேன்
இட்லி சாப்பிட விரும்புவதாக அவன் சொன்னான் நான் அதைத் தயாரிக்கத் தொடங்கினேன்
அவன் துணிகளைத் துவைக்க ஏற்கெனவே ஒதுக்கி வைத்திருந்தேன்
அப்போது அவன் சிறியவொரு செடியாக மாறினான்
இப்போது அவன் தனக்கு நீருற்ற வேண்டுமென அவன் என்னிடம் எப்படிச் சொல்வான் என்று நான் எண்ணினேன்
இரண்டு மூன்று நாட்களாகவே வீட்டில் தண்ணீர் இல்லை
என்னுடைய மனக்குழப்பத்தை அறிந்தவன்போல் அவன் நீராக மாறி வழியத்தொடங்கினான்
அவன் வீட்டிலிருந்து வெளியே பெருக்கெடுக்க நேரும் என்பதால் அவனை நான் கையில் அள்ளி குடத்தில் ஊற்றினேன்
தேநீர் தயாரித்துத் தர இத்தனை நேரமா என்று அப்போது அவன் கத்தினான் என்னிடம் இரண்டு கைகள்தான் உள்ளன என்னை ஏதாவது ஒரு வேலையைச் செய்ய விடு என்றேன்
பிறகு சொன்னேன் என்னவோ நாம் இருவரும் ஏற்கெனவே சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டதைப்போல இப்படி ஆத்திரப்படுகிறாய் நீ.”
-கிரிராஜ் கிராது
ஜெ இந்தக் கவிதையை எடுத்துக் காட்டும் போது “தேநீர் போடப் போகும் அந்த சிறு பொழுதுக்குள் என்னவெல்லாம் அவன் ஆகிறான் பாருங்கள்! செடியாக, நீராக, மாறும் அவனை அவள் எதிர் கொண்டு சினுங்கி நிற்கிறாள். அதுவும் ஒரு நொடிக்குள்… கனவில்…
கடைசி நேரத்தில் மலையாளக் கவிதைகளைப் பற்றி அரங்காட வேண்டிய கவிஞர் ஆனந்த்குமார் வர இயலாமல் போன வருத்தம் இருந்தது. அவர் கவிதைகளை சிலாகிக்கும் விதம் மிகவும் பிடிக்குமென்று மதார் கூறுவார். அவருடைய ஆழ்ந்த குரலில் சிலாகிக்கும் கவிதைகள் எங்கோ இருளின் ஆழத்திலிருந்து ஒளிர்ந்து நம்மை நோக்கி வருவது போலத் தோன்றும். அதை ஒரு அமர்வாக அனுபவிக்க முடியவில்லையெனினும் மதாரின் அரங்கில் அனைவருக்கும் பிடித்துப்போன கவிதையாக அவரின் ஒரு கவிதை அமைந்தது.
“குழந்தை
எப்போது
என் குழந்தை?
ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை.
வளர்ந்த குழந்தையை
அணைக்கும்போதெல்லாம்
அது என் குழந்தை
விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை.”
-ஆனந்த் குமார்
என் குழந்தை என் குழந்தை என அனைவரும் அந்தக் கவிதையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். மதாரின் இந்தக் கவிதைத் தேர்வு ஆனந்த்குமாரை அரங்கிற்கு சிறப்பாக அறிமுகப்படுத்தியது எனலாம்.
முதல் நாள் மனதை நிறைத்தவர்களில் கவிஞர் இசை முதன்மையானவராக எனக்குத் தோன்றினார். அகழ் மின்னிதழில் “நாட்படுதேறல்” என்ற மூன்று தொடர் கட்டுரைகளின் நீட்சியாக எழுதப்பட்டது என்று கூறி அரங்கை ஆரம்பித்தார். சங்க காலம் முதல் இன்று வரை பசியைப் பற்றி, சோற்றுக் கவலையைப் பற்றி கவிதைகளின் வழி எடுத்துக் கூறினார்.
தன்னுடைய வாழ்க்கைப்பாட்டை எடுத்துக் கூறி அதை ஆரம்பித்தது அவரை மேலும் அணுக்கமாக்கியது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மருந்தாளனாக தென்படாத ஒரு கவிஞனை, கவிதையை சிலாகிக்குங் கணந்தோறும் உணர்வின் உச்சத்தத்தை அடைந்து புன்னகைப்பவனை என்ன சொல்லி விளக்குவது. மயங்கிப் போய் தான் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.” என்று கவிதையை மட்டுமே தொழிலாகக் கொண்டு செறுக்கிச் சென்ற ஒளவையைக் காணித்தான். “பசிப்பிணி மருத்துவன் இல்லம்.
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!” என்று பிணியோடிருந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் காணித்தான். சற்றே மதுரகவியாரின் தனிப்பாடலைப் படித்துக் காணித்து புன்முறுவலுடன் எங்களைப் பார்த்தான். “சோறே இல்லயாம். என்ன செறுக்கு பாருங்க” என்று புன்னகையோடு மீண்டும் அந்தக் கவிதையை வாசித்தான்..
“நீளத்திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே – காளத்தி
நின்றைக்கே சென்றாக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு.”
“இன்றைக்கே சற்றே இருங்கறான்” என்று செய்கையோடு இறுதி வரியைச் சொல்லி அவன் சிரிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது.
“இதுக்குமேல ஒருத்தன் இருக்காம்பாருங்க அவன் நமக்குத் தொழில் கவிதை… ங்கறான்” எனும் போது சிரித்துவிட்டோம்.
அங்கிருந்து கவிஞர் யூமாவாசுகியின் கவிதையைச் சொல்லும்போது அவரின் தொனி கராராகியிருந்தது.
“என் பங்கு சோற்றை
நீங்களே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்…. ”
என்ற கவிதை அது. நிகழுலகில் கவிஞனாக மட்டுமே இருந்து வாழ்க்கைப்பாட்டை நடத்த கவிஞனால் இயலாமல் இருப்பதன் மனக்குமுறலில் வரும் வரிகள் தான் “ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதும் “பறந்து கெடுக உலகியற்றியான்” என்பதும் என்றான். உழைப்பதைப் போலத்தானே கவிதை எழுதுவதும் என்று சொன்னான். உடனே அரங்கிலிருந்த ஒருவர் அ.முத்துலிங்கம் ஐயா கம்பனைப் பற்றிச் சொன்ன வரிகளை நினைவுகூர்ந்தார். “கம்பன் தன் வாழ்நாளில் எத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறான்! எத்தனை ஓலைகள்! எத்தனை எழுத்துக்கள்! எத்தனை முறை ஓலைகளை அடுக்கியிருப்பான். அதற்கு இணையான உடலுழைப்பு எது. எதை அத்துடன் நிகர் செய்ய முடியும்” என்ற வரிகளை நினைவுகூர்ந்தார். அப்படியே இசை யூமாவின் கவிதையோடு அதைத் தொடர்பு படுத்தி “என் பங்கு சோற்றை” என்பதை மேலும் விரித்தார்.
“என் பங்கு சோற்றை
நீங்களே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
எனவே என் பசிக்கு
பொறுப்பாவது நீங்களேதான்
எனக்குண்டானதை விடுவிக்கச் சொன்னால்
உழைத்துப் பெறும்படி அறிவுரைக்கிறீர்கள்
உங்களுடையதை விட
நூறு மடங்கு அதிகமானதென் உழைப்பு
உணவின் பொருட்டாய் அமையவில்லை
என்னைப் போன்றவர்களிடத்தில் நீங்கள்
ஒரு போதும் நியாயம் காட்டியதில்லை
அறியாத்தனங்களை
கண்டுகொள்ளாதிருப்பதற்கும்
ஒரு எல்லை உண்டு
செல்வந்தனாவதற்குரிய சூத்திரத்தை
உபதேசிக்காதீர்கள் தயவு செய்து
எனக்கு
கவிதை வசப்பட்டாக வேண்டும்
நான் நடக்கத் தரையிருக்கிறது
என்னுடைய காற்றிருக்கிறது
எழுத்திடையில் பசியெடுக்கும் போதுதான்
இருந்திருக்க வேண்டிய
என்னுடைய சோற்றைத் தேடுகிறேன்
நான் மீண்டும் கடவுளாகும்படி
ஒரு கவிதை கட்டாயப்படுத்துகிறது
நான் எழுதப் போகிறேன்
முடிந்த பின்
இந்த படகினுள்ளே பார்க்கும் போது
எச்சரிக்கை
என் சோற்றுத்தட்டு வந்திருக்க வேண்டும்
உங்களுக்கு ஒரு
சிறிய சலுகை தர முடியும்
கடற்கரை வெளிச்சம் மறைந்து
வெகுநேரம் கழிந்த பின்பே
படகினுள் பார்ப்பேன்”
என்று அவர் படித்து முடிக்கும் போது மனம் கனமாகியது. அப்போதும் அவரில் மருந்தாளனின் சாயல் தெரியவில்லை. மதாரையும், லஷ்மி மணிவண்ணனையும், போகனையும் ஒரு முறை கண்களால் தொட்டு வந்தேன். யாவரும் அதை வழிமொழிந்திருக்கக் கூடும். கவிஞன் வாழ்க்கைப்பாட்டுக்கும் சேர்த்தே கவிஞனாக மட்டும் இருந்துவிடும் காலம் கனியுமா! என்ற தொனியோடு இசையின் அரங்கு முற்று பெற்றது.
எழுத்தாளர் சுனீல் அவர்கள் ஆன்மீகக் கவிதைள் என்ற தலைப்பில் பேசினார். ரிக் வேதம் தொடங்கி தாவோ, யுவனின் பெயரற்ற யாத்ரீகன், கபீர், மீரா, அக்கம்மா தேவி, ரூமி என நீண்ட ஆன்மீகக் கவிதை மரபை விளக்கி கவிதைகளை வாசித்தார். பக்தி இலக்கிய காலம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நவீனத்தில் பாரதியைத் தொட்டு அதனோடு வெண்முரசின் நீலம் நாவலின் கவிதைத்தன்மையில் கொணர்ந்து நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்த விவாதத்தில் தத்துவப் பொருளைச் சொல்வதும், திறப்பதுமே நல்ல கவிதையா என்ற விவாதம் சுவாரசியமாக இருந்தது. எப்படியும் இறுதியில் “அதுமட்டுமல்ல கவிதை” என்று முடித்துவிடுவார்கள் எனினும் விவாதத்தின் போக்கு அறிதலுக்கானவையே.
கவிஞர் சாம்ராஜ் அவர்களின் அரங்கில் “கவிதைகளில் உடல்மொழி” என்ற தலைப்பில் பேசினார். அவரின் அமர்வில் யாவரும் சிலாகித்த கவிதை கவிஞர் இசையின் “நளினக் கிளி”
“அந்த சிமெண்ட் லாரிக்கு வழி வேண்டும்
டிரைவரின் கீழ்படியும் “கிளி”
தன் ஒற்றைக்கையை வெளியே நீட்டுகிறது.
விறைத்து நீண்ட ஒரு உலக்கையைப் போலல்ல..
ஐயா ..அவசரம்.. என்று கெஞ்சுகிற பாவனையிலல்ல..
அது கையை நீட்டியதும்
அதன் மணிக்கட்டில் உதித்த சாம்பல்நிறப்பறவை
அலையலையாய் நீந்துகிறது.
நான் காண்கிறேன்..
இந்த மீப்பெருஞ்சாலையின் அந்தரத்தில்
ஓர் அற்புதநடனமுத்திரை.
அதன் நளினத்தின் முன்னே
உலகே ! நீ வழிவிட்டொதுங்கு!.”
அந்த கவிதைத் தருணத்தை இசை விளக்கும்போது “ஆஹா! ” என்று தோன்றியது. அந்தக் கிளீனர் பையன் எத்தகைய மனநிலையில் இருந்தால் அவ்வளவு நளினமாகக் கையசைப்பான். அவன் முகத்தில் அத்துனை புன்னகை. அந்த அசைவின் முன்
“உலகே ! நீ வழிவிட்டொதுங்கு!.”
என்றார். மயங்கிவிட்டோம். ஒரு சைகையின் வழி கவிதை உருவாகி வரும் கணத்தை காட்சிப்படுத்தினார். கவிஞர் சாம்ராஜ் தேர்ந்தெடுத்த கவிதைகளை அவர் விளக்கிய விதமும் அவருடைய வாசிப்புப் பார்வையும் அருமையாக இருந்தது. அரங்கின் இறுதியில் ஜெ இத்தகைய கவிதைகள் கவிதையாக முற்றுபெறாமல் ஒரு பிளாஷ் தருணமாக படம்பிடித்துக் காணிப்பது கலை காட்சி ஊடகமாக தன்னை நிகழ்த்திக் கொண்டபின் தேவை தானா என்ற விவாதத்தை ஆரம்பித்தார். அது போன்ற ஃபிளாஷ் கவிதைகளைச் சொல்லி அதன் இறுதியில் “அதனால் என்ன (so what)? ” என்ற தொனியில் கொணர்ந்து நிறுத்தியது சைகைக் கவிதைகளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. எப்படி ஒரு உடல் மொழி கவிதையாக நிகழ்ந்தது என்பதை மீண்டும் இசையின் அதே கவிதையின் வழி அதன் மறுபக்கத்தையும் நிறுவினார். திரைப்படத்துறையில் இயங்குபவராக கவிஞராக சாம்ராஜ் அவர்கள் உடல்மொழி/சைகைக் கவிதைகளுக்கான சாத்தியம் உள்ளது எனவும். அவை இன்னமும் உச்சமடையவில்லை எனவும் கவிஞர்கள் அதை முயன்று பார்க்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த அரங்கிற்கான கவிதைகளை தேர்வு செய்ததாகச் சொன்னார். அது யாவரும் ஏற்கும்படியும் இருந்தது.
அந்தியூர்மணி அவர்கள் “பழந்தமிழ்க் கவிதைகளில் அறிவும் கல்வியும்” என்ற தலைப்பில் முதல் நாளின் இறுதி அமர்வாகப் பேசினார்.
“…மம்மர் அறுக்கும் மருந்து.” என்று கல்வியைப் பற்றிய நாலடியார் பாடலுக்கு ஜெ மேலதிக விளக்கமாக மம்மர் என்பதை மூவினை என விளக்கினார். அதாவது சஞ்சிதம் (தொல்வினை), பிராப்தம் (முன்வினை), ஆகாமியம் (புதுவினை) ஆகிய மூன்றையும் அறுக்கும் மருந்து என்று கூறியது திறப்பாயிருந்தது.
நிகழ்வின் இறுதி அரங்காக கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அவர்கள் “விக்ரமாதித்யன் கவிதைகள்” பற்றி பேசினார். கவிதை அரங்கு லஷ்மி மணிவண்ணனில் தொடங்கி லஷ்மி மணிவண்ணனில் நிறைவு கொண்டது எனலாம். முதல் நாளின் அறிமுக உரையில் அவர் கவிதை ஏன் எழுதப்படுகிறது என்று கூறினார்.
“ஒரு சமநிலை இல்லாதவர்கள்/ ஏதோவோர் பிசகு இருப்பவர்கள்/பள்ளம் இருப்பவர்களே தாங்கள் கைப்பற்ற முடியாமல் இழந்த கணத்தை மீட்கும் முயற்சியாக கவிதை எழுதறாங்க. சமநிலையுடன் எழுதப்படுவது செய்யுள்” என்றார்.
இதே கேள்வி கவிஞர் இசையின் அரங்கின் நிறைவிலும் வந்தது. ஒருவேளை இந்த வறுமையும், சோற்றுப்பாடும் பள்ளமாக அமைந்து தான் கவிஞனை கவிதை எழுத உந்தித்தள்ளுகிறதா என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஜெ தாகூரையும் பாரதியையும் ஒப்பு நோக்கினார். தாகூரின் செல்வமும் வசதியான வாழ்வும் அவரை உலகக் கவியாக ஆகுவதினின்று தடுக்கவில்லையே என்றார். பாரதி அதிக கவிதைகளை எழுதியது அவர் வசதியாக இருந்த போது தான் என்றார். இன்னது தான் கவிஞனாக்குகிறது என்று சொல்லிவிட முடியாது என்று ஜெ முடித்தார்.
லஷ்மி மணிவண்ணன் அவர்கள் தொடர்ந்து சொல்லிவரும் இன்னொரு கருத்து “கவிஞனை கவிஞனாக மட்டுமே பாருங்கள்” என்பது. சாதியை மதத்தை, கொள்கையை, அரசியலை, அவன் சார்ந்திருக்கும் அமைப்பை வைத்து ஒரு கவிஞனை மதிப்பிடாதீர்கள் என்பது. அறிமுக உரையில் மீண்டும் அவற்றை நினைவுகூர்ந்தார். “கவிஞன் என்பதே ஒரு இயக்கம் தான். எதை நோக்கி நகர்கிறானோ அதில் அமைவதே அவன் கவிதை. அரசியல் போன்ற எளியவற்றுக்கு இடமில்லை. எது ஒரு கவிஞனின் அழகியலை வடிவமைக்கிறது என்று சொல்லிவிடமுடியாது” என்றார்.
கவிஞர் விக்ரமாதித்யனுக்கும் தனக்குமான உறவு மற்றும் அவரின் சில கவிதைகள் வழி அவரை இறுதி அமர்வில் எடுத்துரைத்தார். விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் கவிஞர் விக்ரமாதித்யனை அவருடன் உடனிருந்த நண்பராக, சக கவிஞர் என்ற முறையிலும், நல்ல கவிதை வாசகனாகவும் இருந்து லஷ்மி மணிவண்ணன் அவர்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது நிறைவாக இருந்தது.
கவிதை முகாமின் நிறைவில் கவிதையாய் என் மனதில் நின்றது இசையும், யுவனின் அந்த புன்சிரிப்பும் தான். கவிஞர் போகனும், யுவனும், சாம்ராஜ் -ம் துருதுருவென விவாதத்தை நகர்த்திச் சென்றார்கள். கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பகிர்வுகள், விளக்கங்கள் மேலும் பயனுள்ளதாக்கியது. ஆசிரியர் ஜெயமோகனுடனான இரண்டு நாள் அருகமைவு மகிழ்வும் அறிதலும் அணுக்கமும் நிறைந்ததாக அனைவருக்கும் அமைந்தது. குற்றாலக் கவிதை முகாம் பற்றி அதில் கலந்து கொண்ட கவிஞர்கள் பற்றியும் ஜெ பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மலையாளம்-தமிழ்க் கவிஞர்கள் சந்திப்புகளைப் பற்றி பகிரும்போது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். “குற்றாலம் எஃபெக்ட்” என்று மலையாளத்தில் இன்றும் பரவலாக அறியப்படக்கூடிய ஒன்றை உருவாக்கியது குற்றாலக் கவிதை முகாம். அது செயல்படாமல் போனதற்குப் பிறகு பத்து வருடங்கள் கடந்து இந்தக் கவிதை முகாம் நடந்திருக்கிறது. இது மேலும் தொடர வேண்டும் என்று ஜெ சொன்னபோது இந்த இரண்டு நாளின் முக்கியத்துவத்தை முழுதுணர்ந்தோம்.
இனிய நினைவாக மனதில் பதித்துக் கொள்ளக் கூடிய இரண்டு நாட்களாக மாற்றித் தந்த பெருமை கிருஷ்ணன் சார், கதிர் அண்ணா, பாலு அண்ணாவையே சாரும். கவிதை அரங்கிற்கான தலைப்புகள், கவிஞர்களுக்கான கவிதைகள், வாசகர்கள் அவற்றை நகலெடுதஅது படித்து வரச் செய்வது என நிகழ்வு நிகழ வேண்டுமென நினைத்த கணம் முதல் அது நிறைவுறுவது வரை சிறப்பாக செயல்படுத்தியது கிருஷ்ணன் சார் தான்.
பாலு அண்ணாவின் தோட்டத்தில் இந்த முறை சிறுகோட்டுப் பெரும்பழங்கள் தொங்கவில்லை, நாவல் பழங்கள் பழுத்துத் தொங்கவில்லை, எலுமிச்சம் பழங்கள் அதன் வாசனையை மண்ணில் புதைக்கத் தரையிறங்கவில்லை. சப்போட்டாக்கள் சில பழுத்திருந்தது, மந்தாரைப்பூக்கள் பூத்து சிரித்துக் கொண்டிருந்தது. முன்பு பார்த்த நாய்களும் அதன் குட்டியும் பெரிதாகியிருந்தது. இந்தப் பண்ணை பருவங்கள் மாறுகின்றன என்ற சிரத்தையே இல்லாமல் எப்பொழுதும் நிறைந்து பூத்து கனிந்து கிடப்பது போலவே நான் நினைத்துக் கொள்வதுண்டு. பாலு அண்ணாவின் மனதைப் போலேயே. பாலு அண்ணாவின் பண்ணைத்தோட்டம் மேலுமொரு நினைவாக இந்த நிகழ்வை தன்னில் பதித்துக் கொண்டது.
சிறப்பாக ஒருங்கமைக்கப்பட்டு அறிதலாக, இனிய நினைவாக அமைந்த கவிதை முகாமிற்காக மிக்க நன்றி ஜெ.
பிரியமுடன்
இரம்யா