1980ல் The Gods Must Be Crazy என்ற திரைப்படம் வெளிவந்தது. அன்று அது ஒரு பெரிய வெற்றிப்படம், பல மாதங்கள் அதைப்பற்றிய பேச்சு இருந்தது. தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியும் வெளிவந்தது. விமானத்தில் செல்பவன் ஒரு கொக்கோகோலா பாட்டிலை கீழே போட்டுவிடுகிறான். கீழே கலகாரி பாலைவனம். புஷ்மேன் என்னும் பழங்குடிகள். அவர்களைப் பொறுத்தவரை வானிலிருந்து விழுந்த தெய்வத்தின் கொடை அல்லது சாபம் அல்லது அறிவிப்பு அது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் வாழ்க்கையை அது சில நாட்கள் கொந்தளிக்க வைக்கிறது.
சென்ற டீமானிடேஷனின் போது அதை நினைத்துக்கொண்டேன். வானிலிருந்து தலைமேல் விழ ஏதேதோ காத்திருக்கிறது. அந்தியூருக்கு மேலே மலைச்சரிவுகளில் நித்யநித்திரையில் இருக்கும் அழகிய சிற்றூர்களுக்கு மேலே டெல்லி திரண்டு நின்றிருக்கிறது