தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை

ஜெ.பாலசுப்ரமணியன்

அன்புள்ள ஜெயமோகன்,

ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு எழுதுவது ஏன் மிகச் சிக்கலானது என்று விளக்கிய பி.கே. பாலகிருஷ்ணனின் கட்டுரை அபாரமானது. அது பற்றி தனியாகவே எழுத வேண்டும். சமீப காலமாக காந்தி-அம்பேத்கர் என்ற இருமை, அதுவும் இரு ஆளுமைகளின் மோதலாக அதீத திரிபுகளுடன் பேசும் போக்கே அதிகரித்ததிருக்கிறது. இதில் இன்று தொலைந்துப் போன பேராளுமை நேரு. காங்கிரஸ்காரர்களே இன்று நேருவைப் பற்றி பேசத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை பேசுவதே கடினமாயிருக்கிறது இதில் எங்கேயிருந்து நேரு பற்றி பேசுவது. வரலாற்றில் இது வரை நாயகர்களாக பார்க்கப்பட்டவர்களின் குறைகளையும் அவர்களைத் தாண்டிய ஆளூமைகள் கவனம் பெறுவது நியாயமானதே. தமிழகத்தை பொறுத்தவரை பெரியார் ஒரு கடவுளாகவே மாறிவிட்டார். திராவிட இயக்கம் பற்றிய பிம்ப கட்டமைப்பு உலக வரலாற்றில் நிகரற்றது.

கடந்த மூன்று மாதங்களாக, ஜூலை முதலே, தலித் வரலாறு சம்பந்தப்பட்ட வாசிப்புகளும் அது தொடர்பான இரண்டு நிகழ்வுகளுமாக ஈடுபட்டிருந்தேன். ஜூலை மாதம் ஸ்டாலின் ராஜாங்கத்தின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தலித் இதழியல் வரலாறு குறித்து ஆய்வாளர் ஜெ.பாலசுப்பிரமணியமின் புத்தகங்களை முன் வைத்து நிகழ்ச்சி நடத்தலாமென்று தோன்றியது. அதனூடாக சம கால செய்திகளிலும், ஊடகங்களிலும் தலித்துகளின் பங்களிப்பும் அவர்கள் பற்றிய சித்தரிப்புகளையும் ஆராய்ந்து எழுதிய ரத்னமாலா அவர்களின் ஆய்வையும் சேர்த்து பேசுவதென்று முடிவு செய்து செப்டம்பர் 18-ஆம் தேதி “தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை” என்ற தலைப்பில் இணைய நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி முடித்தோம். உங்கள் தளத்தின் வாயிலாக இன்னும் பரவலான வாசகர்களை சென்றடையவே இக்கடிதம்.

காந்திய இயக்கத்துக்கு முன்பே மது விலக்குக்காக சங்கம் நடத்தியிருக்கிறார்கள், அதற்கென ஒரு பத்திரிக்கையும் (மது விலக்கு தூதன்) நடத்தியிருக்கிறார்கள். பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் முன்பே ‘திராவிடன்’ சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள், பகுத்தறிவு பேசியிருக்கிறார்கள், ஜாதி மறுப்பு பேசியிருக்கிறார்கள், இன்னும் அநேகம்.

தலித் சமூகம் பற்றி இருக்கும் பொதுப் புரிதலை கேள்விக்குள்ளாக்கும் வரலாறு தலித் இதழியல் வரலாறு. அதனாலேயே அதிகம் பேசப்பட வேண்டியது.

 

நிகழ்ச்சியை ஒட்டி பாலுவின் நூல்களை அறிமுகப்பட்டுத்தி எழுதிய குறிப்புகளின் முழுப் பதிவுகள்

http://contrarianworld.blogspot.com/2021/09/blog-post_29.html.

குறிப்புகளில் இருந்து சில பகுதிகள் கீழே

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரைதலித் இதழ்கள், 1869-1943”

தலித்துகளின் அறிவுப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டி அறிவுச் செயல்பாட்டில் தலித் தரப்பின் முக்கியப் பங்களிப்பை நமக்கு காட்டும் வரலாறு தலித் இதழியல் வரலாறு.

இப்புத்தகத்தின் வெற்றி தலித் சமூகம் பற்றி இருக்கும் பொரு வாசகனின் புரிதலை மொத்தமாக கலைத்துப் போட்டு நிலைப்பெற்று விட்ட பல கதையாடல்களை கேள்விக்குள்ளாக்குவதுதான்.“அறிவுத் தளத்தில் செயல்பட்ட தலித்துகள் முதரபாஷிதம், புலவர், பண்டிதர், நாவலர் போன்ற பட்டங்களை” கொண்டிருந்தார்கள் என்பது வெறும் செய்தியல்ல.

சாதிவாரி கணக்கெடுப்பால் நிகழ்ந்த சாதிய எழுச்சி, ஐ.சி.எஸ் பரீட்சையை இந்தியாவில் நடத்துவதற்கு எதிராக ரெட்டமலை சீனிவாசனின் ‘பறையன்’ இதழ் நடத்திய அறிக்கைப் போர், தலித்துகளுக்கான தனிப் பள்ளி கோரிக்கைகள் ( அதே காலத்தில் நடந்த அமெரிக்க தனிப்பள்ளிகள் போல்), தலித் அடையாள உருவாக்கம், சீர்திருத்தம், மத நம்பிக்கைகளைக் கேள்விக் கேட்பது என்று அடிப்படை வாழ்வாதாரம் தாண்டி அநேக பேசுப் பொருள்களை தலித் இதழ்கள் பேசியிருப்பதாலேயே இதனை நாம் ‘அறிவுச் செயல்பாடு’ எனலாம்.

1909-இல் “மது விலக்கு தூதன்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “Temperance Herald” என்றும் இரு மொழிகளில் டி.மனுவேல் நடத்தியிருக்கிறார். இன்று மது விலக்கு என்றாலே காந்தியைத் தான் நினைக்கிறோம் ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கை தலித் ஆசிரியரால் நடத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் மது விலக்குக்கு ஆதரவாக சங்கமும் நடத்தியிருக்கிறார்கள். அச்சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் அயோத்திதாசரும் தமிழில் உரையாற்ற, எஸ்.அஜீம் உதீன் சாயபு ஆங்கிலத்தில் உரையாற்றினாராம். “தருமதொனி (1932)” என்ற பத்திரிக்கையும் இரு மொழிகளில் வெளிவந்துள்ளது. இரு மொழிகளில் பத்திரிக்கை நடத்துவது பரவலாகவே இருந்திருக்கிறது.

எம்.சி.ராஜாவும் மற்றவர்களும் சிறார்களுக்காக பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார்கள். “ஜாதி பேதமற்றோன் (1922)” என்ற பத்திரிக்கை கத்தோலிக்க சங்கம் ஒன்றின் சார்பில் டி.ஆதிநயினார் வெளியிட்டார், அவர் ஜைன சமயத்தை சார்ந்தவர். “சந்திரிகை (1932)” என்.கிருஷ்ணமூர்த்தி என்கிற பிராமணரை ஆசிரியராக கொண்டு மாசிலாமணி தேசிகர் என்கிற ஆதி திராவிடர் வெளியிட்டார்.

‘திராவிடன்’ என்கிற சொல்லையே பிரதானமாக பயன்படுத்திய தலித் தலைவர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் 1916-ல் பிராமணரல்லாதோர் இயக்கம் தங்களை திராவிடர்கள் என்று குறிப்பிடத் தொடங்கிய பின் “அதி திராவிடர்” என்று மாற்றிக் கொள்கிறார்கள். 1907-இல் “திராவிட கோகிலம்” வெளிவருகிறது. அதன் பின் 1919-இல் வெளிவந்த தலைப்புகள் ஆதி திராவிடன் (கொழும்புவில் இருந்து வெளிவந்தது), மெட்ராஸ் ஆதி திராவிடன், ஆதி திராவிட பாதுகாவலன் (1927-31).

பூலோகவியாஸனும்வழிகாட்டுவோனும்ஒரு குறிப்பு

தலித் இதழியலின் வரலாறு ஏன் முக்கியமானதென்றால் இதன் மூலமே நாம் தலித்துகள், காந்திய அல்லது திராவிட இயக்கங்களின் தோற்றத்துக்கு முன்பே, முன்னெடுத்த சமூக-அரசியல் முன்னெடுப்புகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. அப்படி கிடைக்கும் புரிதல் தலித் சமூகம் பற்றிய பொதுப் புரிதலை தகர்ப்பதோடு இன்று தாங்களே மீட்பர்கள் என்று கட்டமைக்கும் வரலாறுகளையும் தகர்க்கும்.

பூஞ்சோலை முத்துவீர நாவலரால் 1903-917 வரை நடத்தப்பட்ட பூலோகவியாஸன் இதழின் 1909-வருடத்துக்கான சில இதழ்கள் கிடைக்கப்பெற்று அதனடிப்படையில் ஜெ.பாலசுப்பிரமணியம் எழுதியது “பூலோகவியாஸன்: தலித் இதழ் தொகுப்பு” (காலச்சுவடு வெளியீடு)

“பொருளும் பொருளாளிகளும்” என்ற ஏப்ரல் 1909 கட்டுரை செல்வத்தின் நிலையாமைக் குறித்த ஜைன முனிவர் பாடலொன்றை மேற்கோள் காட்டி செல்வம் சேர்ப்போரை நல் வழியில் சம்பாத்திப்பவர்கள், தீய வழிகளில் சம்பாதிப்பவர்கள் என்று வகைப் படுத்தி அவர்களுள்ளும் சேர்த்த செல்வத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை வகைப்படுத்தும் அருமையான கட்டுரை இப்பத்திரிக்கைகள் வெறும் அன்றாட பிழைப்புச் சார்ந்த கோரிக்கைகளைத் தாண்டி தத்துவார்த்த விசாரணையிலும் ஈடுபட்டன என்று சொல்கிறது. அதே வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு கட்டுரை “அத்வைத நிரூபணம்”. கட்டுரையின் உபதலைப்பு, “விஷ்டாத்வைத வெற்றியின் மறுப்பு”. “உங்கள் மதம் ஆராய்ச்சி மதமா, நம்பிக்கை மதமா?’ எனக் கேள்விக்கேட்டு மிக சுவாரசியமாக எழுதப்பட்ட தத்துவார்த்தமான கட்டுரை.

தலித் இதழ்கள் நிச்சயமாக ஆங்கிலேய அரசை வெகுவாகப் புகழ்ந்தே எழுதிகின்றன. சுதேசிக் கப்பல் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டு வாழ்த்தும் போதும் அம்முயற்சி அரசுக்கு எதிராக மாறக் கூடாதென்றே வாழ்த்துகின்றது பத்திரிக்கை (டிசம்பர் 1909)

பூலோகவியாஸன் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவை சிலாகித்து பாராட்டுகிறது. அதே வரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியாவை சூறையாடிவிட்டார் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வழக்குத் தொட்டுத்தார் எட்மண்ட் பர்க் (Edmund Burke). பர்க்கின் ஆங்கில உரைகள் இலக்கிய உலகில் பிரசித்தம். பாராளுமன்றத்தில் அவ்வழக்கு தோல்வியுற்றது. ஹேஸ்டிங்க்ஸின் ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக கீதை மொழிப் பெயர்க்கப்பட்டது அதற்கு நல்ல முன்னுரையும் ஹேஸ்டிங்க்ஸ் எழுதினார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சு புரட்சியை எதிர்த்திருக்கிறார். ஆக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் பல முரண்களை கொண்டிருந்திருக்கிறார்கள்.

விருதுபட்டியில் (விருநகர்) மே மாதம் 21-ஆம் தேதி 1915-ல் ஆரம்பிக்கப்பட்ட “தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “South India Oppressed Classes Union” என்ற பெயரிலும் சங்கம் தொடங்கி நாளடைவில் 49-கிளைகள் தொடங்கி அதன் பின் தங்கள் குரலாக ஒரு பத்திரிக்கை வேண்டுமென்று 1918-இல் “வழிகாட்டுவோன்” தொடங்கினார்கள்.

பிப்ரவரி 1918 சில மாதங்கள் முன் மாண்டேகு பிரபுவுக்கு அனுப்பிய மகஜரை பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். 6 பக்க மகஜர் அபாரமான கோரிக்கைகள் அடங்கியது. 1909-லேயே “மது விலக்கு தூதன்” என்றொரு பத்திரிக்கை வெளிவந்ததையும் மது விலக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதையும் நேற்று எழுதினேன். இந்த 1917-இல் சமர்பிக்கப்பட்ட மகஜரிலும் “மதுபானம் (liquor traffic)” என்ற பகுதியில், கள்ளு மற்றும் மதுபான கடைகள் மூடச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். காந்தியோ, ராஜாஜியோ இக்கோரிக்கைகளை வைக்கும் முன்பே நடந்தது இது.

“ஜீவனார்த்தம் (Economic Condition)” என்ற பகுதியில் தலித் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் கூலி வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லை என்றும் அக்கூலி “முன்னூறு வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதென்பதை கவர்மெண்டார் கவனித்திருக்கலாம்”. வில்வைவாசி உயர்வை கூலி பிரதிபலிக்கவில்லை என்று 1918-இல் சொன்னதை தான் 81 வருடம் கழித்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் சொன்னார்கள்.

“கல்வி (Education)” பகுதியில் கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்தால் தான் கல்வியின் தேவையறியாதவர்கள் கூட கல்விக் கற்க பிள்ளைகளை அனுப்புவார்கள் என்று மிக முக்கிய கோரிக்கை வைக்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு வேறு யார் வந்து என்ன சொல்லிக் கொடுக்கத் தேவையிருந்தது என்று புரியவில்லை?

“Media and Minorities: Media Representation of Dalits in Tamil Nadu”

ரத்னமாலாவின் “Media and Minorities: Media Representation of Dalits in Tamil Nadu” சமகால ஊடகங்களில் தலித்துகள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள், ஊடக நிறுவனங்களில் தலித்துகள் ஒதுக்கப்படுவது ஆகியனப் பற்றிய ஓர் ஆய்வு.

மாஞ்சோலை படுகொலையும் அதையொட்டி தினத்தந்தி, தினமலர், தினமணி பத்திரிகைகளில் அச்செய்தி எப்படி வாசகர்களை சென்றடைந்தது என்பதை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார் ரத்னமாலா. கலவரம், சம்பவம் போன்ற வார்த்தைகளால் போலீஸ் அராஜகம் பூசி மெழுகப்பட்டது, செய்திகளை அரசு தரப்பு குறிப்புகளை அப்படியே சுவீகரித்து எழுதுவது, அரசு தரப்புச் செய்திகளோடு முதல்வர் மற்ற அதிகாரிகளின் புகைப்படத்தோடு வெளியிடும் வேளையில் புதிய தமிழகம் தலைவரின் புகைப்படம் அதே அளவு வெளியிடாமை முதலிய பாரபட்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டன.

வன்கொடுமை நிகழ்வுகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக போலீஸின் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செய்திகளைத் தருவது தங்களுக்கு பாதுகாப்பு என்று வெளிப்படையாகவே பத்திரிக்கை நிருபர்கள் சொல்கிறார்கள்.

அரவிந்தன் கண்ணையன்

தலித் இருட்டடிப்புக்கு நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ் கூட்டங்களை தவறாமல் தங்கள் செய்திகளில் பிரசுரித்த சுதேசமித்திரன் அம்பேத்கர் சென்னைக்கு வந்து உரையாற்றியதை கண்டு கொள்ளாததை “சமத்துவம்” என்ற தலித் இதழ் கண்டித்திருக்கிறது. (ரத்னமாலாவின் புத்தகத்தில் இதைப் படித்த போது தலித்துகள் பற்றி எழுதிய பாரதியும் தலித் சங்கங்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியதாக நினைவில்லை).

நன்றி,

அரவிந்தன் கண்ணையன்

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉருமாற்றங்கள்