இன்றைய கலைவெற்றிகள், எதிர்வினை

விஷ்ணு, இந்தோனேசியா

இன்றைய சிற்பவெற்றிகள் எவை?

அன்புள்ள ஜெ

வணக்கம்,

இக்கடிதத்தை வெகுகாலம் முன்னர் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நாம் நம் முன்னோர்கள் போன்ற  சிற்பவெற்றிகளை நிகழ்த்த முடியவில்லை என்பதை என்னால் முற்றிலும் ஏற்க இயலவில்லை. சமகால பெருந்தடைகளையும் மீறி நாம் வியக்கத்தக்க படைப்புகளை சென்ற/இந்த நூற்றாண்டில் நிகழ்த்தியுள்ளதாகவே நம்புகிறேன்.

நாம் முன்னோர்களைப் போன்ற அல்லது அவர்களையொத்த  சிற்பவெற்றிகளை அடையவில்லையெனினும் சிற்ப வெற்றிகளின் சாத்தியங்களை, சிற்பத்தின் பரிமாணங்களை மாற்றி அமைத்து உள்ளோம். உதாரணமாக, கேரளத்தின் ஆழிமலை சிவன் சிலையை கூறலாம். அது மிகச்சிறந்த, சமகால கலைப்படைப்பாகவே நான் பார்க்கிறேன். அழகிய  கலை நுணுக்கங்களை (விரிசடை, விரிசடைக்குள் நடனமிடும்  கங்கை, ஈசனின் பழங்குடி போன்ற உடற்கட்டு, அவன் அமர்ந்திருக்கும் கரடு முரடான பாறை முகடு)  கொண்டது. மேலும் சில சமகால கலை முயற்சிகளை இணைத்துள்ளேன். அவை அனைத்தும் வெவ்வேறு  விதத்தில் கலையின் உச்சமாக கொண்டாடப்பட வேண்டியவையே.

  • ஆழிமலை சிவன், கேரளம்
  • ஜடாயு புவியியல் மையம், கேரளம்
  • முருகன் சிலை, மலேசியா
  • இராமனுஜர் சிலை, ஐதராபாத்
  • கருடனும் விஷ்ணுவும், கலாச்சார பூங்கா, இந்தோனேசியா
ஜடாயு சிலை, சடையமங்கலம், கொல்லம்

மன்னராட்சி போல் அல்லாது இன்றைய சமகால அரசியல் சூழல் இந்தவகையான சிற்பவெற்றிகளுக்கு பிரதான தடை. அரசியல் செயல்பாட்டாளர்களின் முக்கியத்துவம், பயணம் என எல்லாமே கலைக்கு, கலைச்செயல்பாட்டிற்கு முற்றிலும் வேறான திசையில் உள்ளது. மன்னர்களின் அரண்மனை, அந்தப்புரங்களை  விட அவர்கள் காலத்தில் நிகழ்ந்த கலைச்செயல்பாடுகள், சிற்ப வெற்றிகள்  இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்ததாக தெரியவில்லை.

இன்றைய போலி சுற்றுசூழல்/முற்போக்கு அரசியல்

உலக வெப்பமயமாதல் உண்மையாகவே ஒரு அபாயம்தான். ஆனால், உண்மையில் அதற்கான செயல் வடிவ எதிர்ப்புகளை முன்வைக்கும் உயர்திரு.பாப்பம்மாளை (பத்மஸ்ரீ விருது வென்றவர்)  விட நாம் வெற்று கூச்சலிடும் Greta வை trend செய்து மகிழ்கிறோம். அதற்கான நியாயத்தினை அவரின் செயல் மூலம் அல்லாமல் அவரின் நோய் மூலம் செய்கிறோம். இன்று தஞ்சை/ திருவரங்கம் கோயில்களுக்கு நிகராக ஒரு பிரம்மாண்டத்தை நம்மால் நிறுவ இயலும். அதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

ஆனால், போலி அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் போராளிகள் அந்த திட்ட வரைவுக்கு (draft level) மட்டுமே, அதனளவிலேயே, என்ன எதிர்ப்பினை கட்டமைப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும்.  புள்ளிவிவர புலிகள் பட்டினி தொடங்கி பாறை உடைப்பு வரை மிகப்பெரிய வெறுப்பு பிரச்சாரம் செய்வர். இது நம் முன்னால் இருக்கும் ஒரு பெரும் சமகாலத்தடை.(பாராளுமன்ற கட்டிட விவகாரம்). முற்போக்கு கேரளாவில் “யட்சி” சிலை வைக்க நேர்ந்த எதிர்ப்பு இவ்வகை கலை செயல்பாட்டுக்கான மற்றொரு தடை. ஆனால், அதுவே நம் நமது சிற்ப வெற்றிக்கான பரிமாணங்களை மாற்றி அமைக்க திறந்திருக்கும் பெரும் வழி.

கங்காதீஸ்வரர், ஆழிமலை, திருவனந்தபுரம்

தொல்-தொழில்நுட்ப பயிற்சி அறுபட்டமை:

மூன்று நாட்களில் 300 மீட்டர் நகரும் கோதண்டராமர் சிலை வடித்து அதில் பெருமை அடைகிறோம். சிலை நிறுவுதலில், திட்ட அளவிலேயே நிகழ்ந்த மாபெரும் பிழை இது. இதிலிருந்து நாம் கண்டிப்பாக மேலெழ தொல்-தொழில்நுட்ப கல்வி உதவலாம். இதனைச் சொல்ல காரணம், பண்டைய சிற்ப வெற்றிகள் அனைத்தும் கல் சார்ந்தவை அவற்றை, அவற்றின் கட்டுமானத்தை  தெளிவுற கற்பதன் மூலம், அதை வரைவு (Syllabus) செய்து பட்டக்கல்வியில் (should be included in civil engineering course, at least for 2 semesters) சேர்த்து அதற்கான அங்கீகாரத்தை அளிப்பதன் மூலம் சமகால சிற்ப வெற்றிகளை அதிக அளவில் மீண்டும், மீண்டும் நம்மால் நிகழ்த்த இயலும்.

இன்றைய சிற்ப வெற்றிக்கான தளங்கள் முற்றிலும் வேறானவை என்பதே என் எண்ணம். நாம் எப்போதும் சிற்ப வெற்றிகளுக்கு சாத்தியங்களை எதிர்நோக்கியே உள்ளோம். ஆனால், இச்செயல்பாட்டில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது கசப்பான உண்மை.

 லெக்ஷ்மிநாராயணன்

திருநெல்வேலி

தேவதத்தன்

அன்புள்ள லக்ஷ்மிநாராயணன்,

நான் அக்கட்டுரையில் தமிழகத்தின் இன்றைய நவீனக் கட்டுமானக்கலை வெற்றிகள் என்றே பேசுகிறேன். கட்டிடங்கள், பெரிய சிலைகள் ஆகியவை அந்த வட்டத்திற்குள் வரும்.

என் அளவுகோல் இது

அ. அது நவீனமானதாக இருக்கவேண்டும். பழைய கட்டிடங்களின் இயல்பான நகலாக இருக்கலாகாது.

ஆ. அது அழகியதாக இருக்கவேண்டும். அதன் அளவுகளின் சரிவிகிதம், அதன் காட்சிக்கோணம், அதன் நெளிவுகள் வளைவுகள் ஆகியவை உருவாக்கும் காட்சியின்பம் முக்கியமானது.

இ. அது குறிப்புணர்த்தல் வழியாக தத்துவ ஆன்மிக அறிதல்களை அளிப்பதாக இருக்கவேண்டும். அவ்வகையிலேயே இரு உதாரணங்களைச் சொன்னேன்.

நீங்கள் உலகளாவச் சென்று சில உதாரணங்களை முன்வைக்கிறீர்கள். அவ்வாறு பார்த்தால் மேலும் பல பெருஞ்சிற்பங்கள், கட்டுமானங்களைச் சொல்லமுடியும்.

சிற்பங்களை, கட்டுமானங்களை நேரில் பார்ப்பது முக்கியமானது. அவற்றின் புகைப்படங்கள் பலசமயம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அழகிய தோற்றத்தை அளிக்கக்கூடும். அவற்றின் வண்ணம் மிகையாக்கப்பட்டிருக்கலாம். சிற்ப அனுபவம் என்பது நேரில் அடையப்பெறுவதே.

நீங்கள் சுட்டுவனவற்றில் நான் இந்தோனேசியாவின் கருடனில் ஊரும் விஷ்ணு சிலையை பார்த்ததில்லை. அது அழகான சிலை என கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்படங்களும் அவ்வாறே சொல்கின்றன.

ராஜீவ் அஞ்சல்

கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ள ஜடாயு சிலை அற்புதமானது. அதை வடித்த ராஜீவ் அஞ்சல் என் நண்பர். அவர் கலை இயக்குநராக திரைத்துறையில் பணியாற்றியவர். திரை இயக்குநர். அவர் இயக்கிய படம் குரு மெய்த்தேடலின் உருவகமாக அமைந்த ஒன்று. என் நண்பர் இயக்குநர்- நடிகர் மதுபால் ராஜீவ் அஞ்சலின் உதவியாளராக இருந்தவர். ராஜீவ் அஞ்சலை ஒரு திரைப்படத்துக்காக சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்தச் சிற்பம் மறைந்த ஆன்மிக ஞானி போத்தன்கோடு கருணாகர சுவாமிகளின் தரிசனமும் ராஜீவின் கலையும் இணைந்து உருவான ஒன்று.

ஆழிமலை கங்காதீஸ்வரர் சிற்பம் உருவாகிக்கொண்டிருக்கையில் இரண்டு முறை மதுபாலுடன் அங்கே சென்றிருக்கிறேன். முடிந்தபின் ஒருமுறை சென்றேன். அதை உருவாக்கிய இளம்சிற்பி தேவதத்தன் அப்போது திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தார். ஆழிமலை சிவன் கோயில் கேரள வரலாற்றில் முக்கியமான ஒன்று. நாராயணகுருவின் வாழ்வுடன் இணைந்தது. அச்சிற்பம் ஒரு கலைச்சாதனை, ஐயமே இல்லை. இன்னும் நெடுநாட்கள் அது கேரளக் கலைவெற்றியாகவே கருதப்படும்

ராமானுஜர் சிலை, ஹைதராபாத்

நீங்கள் சுட்டுவனவற்றில் பல சிலைகளை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள். ஹைதராபாத் ராமானுஜர் சிலை அதன் அளவுகளால் அழகானது, ஆனால் மிகமிக மரபானது. ஒரு சிலை, ஓர் அடையாளம் அவ்வளவுதான். அதற்குமேல் ராமானுஜரின் தரிசனத்தை வெளிப்படுத்தும் எந்த அம்சமும் அதில் இல்லை. எந்த புதிய கலைக்கூறும், மெய்வெளிப்பாடும் அதில் இல்லை.

அதேசமயம் அதன் பொன்னிறப்பூச்சு கண்கூசவைப்பது. உலகமெங்கும் பிரம்மாண்டமான சிலைகள் பளிச்சிடும் வண்ணங்களில் அமைக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவை கண்களைக் கூசவைக்கும். அதன் நுட்பங்கள் மொத்தையாகவே தெரியும். பொன்வண்ணம் மீது இந்தியர்களுக்கு இருக்கும் பாமரத்தனமான ஆர்வமே அதை அவ்வண்ணம் பூச வைத்திருக்கிறது.

மலேசியாவின் முருகன் சிலை  அழகானதுகூட அல்ல. அதன் தோற்ற ஒருமையேகூட பிழையானது. அத்துடன் பார்ப்பவரின் கண்களின் கோணத்தை கணக்கில்கொண்டே சிலையின் விகிதாச்சாரமும், அது அமையும் இடமும் தெரிவுசெய்யப்படவேண்டும். அச்சிலை தவறான இடத்தில் தவறான கோணத்தில் தெரியும்படி அமைக்கப்பட்டது.

நான் உலகிலேயே வெறுக்கும் சிலைகளில் ஒன்று அது. தமிழ்ச் சிற்பக்கலையின் இலக்கணங்களின்படி அது அமையவில்லை. கோபுரங்களிலுள்ள சுதைப் பொம்மைகளின் இலக்கணமே அதிலுள்ளது. அதை அப்படி பூதாகாரமாக அமைக்கும்போது eye sore என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறை அங்கே சென்று அதைப் பார்க்கையிலும் கூசுகிறேன்.

அதை பார்க்கும் அன்னியர்களிடம் “மன்னிக்கவேண்டும். இது ஏதோ மடையனால் உருவாக்கப்பட்டது. எங்கள் சிற்ப- கட்டிடக்கலை இதுபோன்றது அல்ல. உலகின் மகத்தான சிற்பங்கள் பல எங்கள் பண்பாட்டில் உள்ளன. தயவுசெய்து அவற்றை வந்து பாருங்கள். அவற்றைக்கொண்டு எங்களை மதிப்பிடுங்கள்” என்று கெஞ்சவேண்டும் என்று மனம் துடிக்கும். தமிழ்ப்பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பு ஆபாசமான வண்ணம் பூசப்பட்ட அந்த பூதாகரமான பொம்மை.

ஜெ  

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)  – செயல்பாடுகள்
அடுத்த கட்டுரைமகிழ்ச்சியும் பொறுப்பும்