இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள் வழியாக ஓர் ஆசிரியரை மேலும் பலரிடம் கொண்டு செல்ல முடியும். அது ஓர் இலக்கியப்பணி.
நாஞ்சில்நாடன் ஏற்கனவே பிரபலமான எழுத்தாளர். ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கிடைத்து, இருநூறுக்கும் மேல் பாராட்டுக்கூட்டங்கள் நிகழ்ந்தபோது அவருக்கு முற்றிலும் புதிய ஒரு வாசகர் வட்டம் உருவானதை நான் கண்டேன். அவர்களில் பலர் இலக்கியத்துக்கே புதியவர்கள். தமிழகத்தில் கல்வித்துறை வழியாகவோ பொது ஊடகம் வழியாகவோ ஒருவர் இலக்கியத்துக்கு வரும் இயல்பான பாதை என ஒன்று இல்லை என்பதனாலேயே இத்தகைய இலக்கியவிழாக்கள் தேவையாகின்றன.
25 மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி அதிகாலை விழுப்புரம் சென்று சேர்ந்தேன். எழுத்தாளரும் பேச்சாளரும் கல்வியியலாளருமான ஜி.கே.ராமமூர்த்தி அதிகாலையில் ரயில்நிலையம் வந்து என்னை வரவேற்றார். அவருடைய ஊர் விழுப்புரம்தான். இமையத்துக்கு நெருக்கமானவர். வழி முழுக்கப் பேசிக்கொண்டே சென்றோம்.
முகையூர் அசதாவின் ஊரான முகையூர் வழியில்தான். அங்கே புனித மகிமைமாதா திருத்தலம் உள்ளது. மழைச்சாரல் இருந்த விடியற்காலையில் காரில் இருந்து இறங்கி மெல்லிய ஒளியில் மழையீரத்தில் மின்னிய மாதாகோயிலை சுற்றிப்பார்த்தேன். ஸ்பானிஷ்- பைசண்டைன் பாணியில் இருந்து உருவான மாதா கோயில் வடிவம். மையத்தில் அரைவட்ட டோம் கொண்டது. ஒலிப்பெருக்கியில் பிரார்த்தனை ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கே அப்போது எவருமில்லை.
முகையூர் அசதா எனக்கு அணுக்கமானவர், நல்ல மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். வார்த்தைப்பாடு என்னும் சிறுகதைத் தொகுதி தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது
திருக்கோயிலூர் வழியாகச் செல்லும்போது விடிந்துவிட்டிருந்தது. காரில் தல்ஸ்தோய் -தஸ்தயேவ்ஸ்கி பற்றியும், வெள்ளையானை நாவல் பற்றியும் பேசிக்கொண்டே சென்றோம். வழியில் ஒரு கடையில் சிறந்த காபி. ராமமூர்த்தி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பவர். அவருடைய தந்தை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர். தோழர் பி.ராமமூர்த்தி நினைவாக போடப்பட்டது அவர் பெயர்.
நேராக பவா செல்லத்துரையின் ’பத்தாயம்’ என்னும் அமைப்பைச் சென்றடைந்தோம். மலையாளத்தில் பத்தாயம் என்றால் களஞ்சியம். வீட்டின் முகப்பிலேயே மரத்தாலான நெற்களஞ்சியம் இருக்கும். அதேபோன்ற நெற்களஞ்சியங்களை இப்போது ஆலயங்களில் காணலாம்.
குதிர் என்றால் மண்ணால் உருவாக்கப்பட்ட பெரிய கலையம் போன்ற நெற்களஞ்சியம். முன்பு வைக்கோலாலேயே குதிர் செய்து நெல்லை உள்ளே போட்டு மேலே களிமண் பூசி உலரவைப்பார்கள். எலி துளைக்காமலிருக்க வைக்கோல் உருளைக்கு வேப்பிலை, எருக்கிலை, கைநாறி போன்ற சில இலைகளை வைத்து அதன்மேல் களிமண் பூசுவதுண்டு.
பத்தாயம் பொதுவாக காஞ்சிர மரத்தால் செய்யப்படும். காஞ்சிரத்தை எலி துளைக்காது. அதன் மடிப்புகளில் எலி துளைக்காமலிருக்க உலோகப்பட்டைகள் அறைவதுமுண்டு.
கேரளத்தின் பழையபாணி வீடுகளில் முகப்புத்திண்ணையில் வலப்பக்க எல்லையில் பத்தாயம் இருக்கும். அதன்மேலேயே ஒருவர் படுக்கும்படி கட்டில் வடிவம் இருக்கும். அத்தகைய வீடுகளுக்கு அக்காலத்தில் பத்தாயப்புரை என்று பெயர். பத்தாயப்புரையில் பத்தாயத்தில் படுப்பது குடும்பத்தின் மூத்த தாய்மாமனின், அதாவது காரணவரின், உரிமை.
பவா இலக்கியக் களஞ்சியம் என்றபொருளில் பத்தாயம் என பெயர் வைத்திருக்கலாம். அதன்மேல் படுத்திருக்கும் காரணவர் யாரென்று தெரியவில்லை. கி.ரா இருந்தவரை அவரைச் சொல்லியிருக்கலாம்.
பத்தாயம் இருக்குமிடம் பவாவின் அப்பாவால் வாங்கப்பட்ட விளைநிலம். நான் அங்கே முதல்முறையாக வந்தது 1988ல். அக்காலத்தில் அதன் மிக அருகே காடு இருந்ததாக நினைவு. பின்னர் பவா அங்கே சில குடில்களை அமைத்தார். அவை இன்று விருந்தினர் தங்குமிடங்களாக விரிவாகக் கட்டப்பட்டிருக்கின்றன.
அருகே ஒரு சிறிய அரங்கும் கட்டியிருக்கிறார். இரு கிணறுகள் உள்ளன, இறங்கி நீந்திக்குளிக்கும்படியாக. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்குபுறமாக இருந்த இடம் இன்று நகருக்குள் வந்துவிட்டது. சென்னையிலிருந்தும் பக்கம். ஆகவே அங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள்.
காலையில் பவா அங்கிருந்தார். மற்றும் நண்பர்கள். பவா பேசிக்கொண்டே இருந்தார். நினைவுகள், வேடிக்கை நிகழ்வுகள். பவாவிடம் பேசிக்கொண்டிருந்தால் மொத்தத் தமிழிலக்கியமும் இனிய வேடிக்கைகள் வழியாக ஒழுகி வந்திருப்பதாகத் தெரியும். அவர் உலகப்போரையே கூட அவ்வாறுதான் நினைவில் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.
சென்னையில் இருந்து சண்முகம், ராஜகோபாலன், காஞ்சி சிவா வந்திருந்தார்கள். நாகர்கோயிலில் இருந்து ராம்தங்கமும், ராகுலும் வந்திருந்தனர். மதுரையிலிருந்து குக்கூ நண்பர்கள் ஸ்டாலின் தலைமையில் வந்திருந்தனர். பெங்களூரில் இருந்தும் சென்னையிலிருந்தும் ஏராளமான நண்பர்கள்.
பத்துமணிக்கு நிகழ்ச்சி. மெல்ல மெல்ல கூட்டம் திரண்டு கிட்டத்தட்ட நாநூறு பேர் வந்துவிட்டனர். அரங்கு அத்தனை பெரிய கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. பாதிப்பேர் வெளியே நின்றிருக்க வேண்டியிருந்தது.
நிகழ்வுகளை இப்போது விவரிக்க வேண்டியதில்லை. அவை உடனே சுருதி டிவி கபிலனால் அவருடைய சுருதி இலக்கியம் தளத்தில் காணொலியாக வெளியாகிவிடுகின்றன. இமையம் ஒர் அமைச்சர் போல கட்சிக் கொடிபோட்ட காரில் வந்திறங்கினார். உற்சாகமாக இருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் நண்பர் எஸ்.கே.பி.கருணாவைப் பார்த்தேன்.
இமையம், கருணா இருவரின் தமையன்களும் இன்று மாநில அமைச்சர்கள். ஆனால் இருவருமே அதற்கு முற்றிலும் அப்பால் அவர்களுடைய பொருளியல் சிக்கல்களுடன் வாழ்கிறார்கள் என எனக்குத் தெரியும். இமையம் இன்னமும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்தான். அமைச்சரின் ஒன்றுவிட்ட சித்தப்பாக்களின் மூன்றாம் வீட்டுக்கு பக்கத்தில் வீட்டில் குடியிருப்பவர்கள் கோடீஸ்வரர்களாக ஆகும் தமிழக அரசியல் சூழலில் இது அரிதான ஒன்று.
மதியம் இரண்டு மணிக்கு நிகழ்ச்சி நிறைவு. அதன்பின் உணவு. வழக்கமாக பிரியாணிதான். அன்று அதற்கான சமையல்காரர் வராததனால் ஆட்டுக்கறிக் குழம்பு தனியாக. சைவ உணவுக்காரர்களான ராஜகோபாலன், காஞ்சி சிவா இருவரும் மகிழ்வடைந்தனர். பிரியாணி என்றால் வெறும் சோறும் ரசமும் சாப்பிட வேண்டியிருக்கும்.
ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக்கொண்டு சொல்லிக்கொண்டு கிளம்பினர். இமையம் சாயங்காலம் ஐந்து மணிவரை இருந்தார். அதுவரை பேசிக் கொண்டிருந்தோம். நான் முந்தையநாள் சரியாகத் தூங்கவில்லை. விடியற்காலையில் எழவேண்டும் என்றாலே நான் இரவில் தூங்குவதில்லை. ஆகவே நல்ல தூக்கக்கலக்கம். ஒருமணிநேரம் தூங்கினேன்.
ஆறரை மணிக்கு எழுந்து வந்தேன். மீண்டும் நண்பர்களுடன் உரையாடல். இரவு பதினொரு மணிக்குத்தான் தூங்கச் சென்றேன். ஆனால் அதன் பின்னரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பின் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இனிய நாட்களை நினைவில் சேர்த்துக் கொண்டே இருப்பதுதான் இலக்கியப் பயணங்களின் பேறுகளில் முக்கியமானது.