சாத்தானைச் சந்தித்தல்-கடிதம்

சாத்தானைச் சந்திக்க வந்தவர்

அன்புள்ள ஜெ

சாத்தானை தேடி வந்தவர் கட்டுரை வாசித்தேன். அருமையான கட்டுரை. பகடியுடன் இருப்பதனால் எளிதாக வாசிக்க முடிந்தது. உங்களை தேடிவந்த அந்தப் பையனை என்னால் அணுக்கமாகப் பார்க்கமுடிகிறது. ஏனென்றால் அவரைப் போன்றவர்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். வாயில் நுரைதள்ள பேசுவார்கள். பெரும்பாலும் அங்கே இங்கே கேட்டறிந்த வம்புச்செய்திகள். எதையுமே உண்மையா என்று ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டார்கள். ஒருமுறை கூகிள் செய்து பார்த்தால் தெரியும் செய்தியையேகூட பரிசோதனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் எந்த இடத்திலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசுவார்கள்.

அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்றால் அவர்கள் தங்களைப்பற்றி வைத்திருக்கும் சில வகையான பாவனைகளால்தான். தங்களை அதிதீவிர முற்போக்கு என்றோ ’சாவுக்கடின’ இந்துத்துவா என்றோ  கற்பனை செய்திருப்பார்கள். அவர்கள் புழங்குவது அந்த வகையான சின்ன வட்டத்தில் என்பதனால் அந்தக் கற்பனை அப்படியே உடையாமல் பல ஆண்டுகள் நீடிக்கும். அதோடு அவர்கள் பேசிக்கொண்டிருப்பது யாரிடமென்பதும் முக்கியம். அவர்களின் சூழல் என்பது பெரும்பாலும் சும்மா சோறு சினிமா என்று வாழும் பாமரர்கள். எதைச்சொன்னாலும் ‘இருக்கும்போல, நாம என்ன கண்டோம்’ என்று தலையை ஆட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

இந்த அப்பாவிகள் நஞ்சைப்பரப்புபவர்களும்கூட. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இந்த அசடர்களை அசடர்கள் என்று புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வை ஒருவன் இயல்பாகவே பெற்றிருக்காவிட்டால் அவன் இலக்கியத்திற்குள் அறிமுகமாகியும் பெரிய பிரயோசனம் இல்லை. அவன் கொடிபிடிக்கவேண்டிய ஆள். அப்படியே இருப்பதுதான் நல்லது

அருண்குமார்

அன்புள்ள அருண்குமார்,

உண்மைதான். எனக்கு வரும் வாசகர்கள் இயல்பில் ஒர் அறியாமையை அல்லது நுண்ணுணர்வின்மையை அடையாளம் காணும் திறனை இயல்பிலேயே கொண்டிருப்பவர்கள்தான். நான் எழுதுவது இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் அபத்தத்தை சுட்டிக்காட்டவே.

ஜெ

***

அன்புள்ள ஜெ

சும்மா ஒரு வேடிக்கைக்காக இதை அனுப்புகிறேன். இது முகநூலில் ஒருவர் எழுதியது. [ஆளின் பெயர் படம் எல்லாம் அனுப்பியிருக்கிறேன்]

ஐயா எனக்கு உலகளவில் பெரும் பெருமை உண்டு… ஜெ.மோ போன்ற அற்ப வலதுசாரியை மும்முறை வன்முறை கொண்டு அறைந்தவன்… “முருகபூபதி” திருமண நிகழ்வில்…

அவன் காந்தியாரை தன் முகமூடியாகப் பயன் படுத்தும் அற்பன்…. விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஐந்து லட்சம் பரிசு உங்கள் மென்பொருளுக்கு ஏற்கிறீர்களா? எனக் கேட்டதும்….

ஆணியே புடுங்காதீங்க… “விலையற்றவன் தளையற்றவன் துரை” என நகைத்துக் கடந்தவன்…. அவன் அற்பன்… அவ்வளவே.

இதை எழுதியவரை நீங்கள் கேள்விகூட பட்டிருக்கமாட்டீர்கள் என்று சந்தேகமில்லாமல் தெரியும். ஆனால் என்னென்ன வகையான பாவனைகள் இங்கே உள்ளன என்று சொல்லத்தான் இதை எழுதுகிறேன்.  இந்த வகையானவர்களே முகநூலில் மிகுதி. இவர்கள் உருவாக்கும் பொய்தான் இங்கே நுரைபோல நிறைந்திருக்கிறது.

இவர்களின் மனநிலை என்பது தங்களைப் பற்றிய வீங்கிய அகந்தை. ஆகவே பிரபலங்களைப் பற்றிய பொறாமை. சாதித்தவர்கள் பற்றிய காழ்ப்பு. அவர்களைப்பற்றி அபத்தமான அவதூறுகளைப் பரப்புவது. ஆனால் அதை நம்பும் கும்பலும் அதேபோல பாமரர்கள்தான்.

சுந்தர்ராஜன்

***

அன்புள்ள சுந்தர்,

‘உலகளவில் பெரும்பெருமை கொண்ட’ இந்த ஆத்மாவை நான் எங்குமே பார்த்த நினைவில்லை. ஆனால் நான் இதைச் சொன்னால் அவரே நம்பமாட்டார். அவரே அவ்வாறெல்லாம் சொல்லிச் சொல்லி நிகர்உண்மையாக தனக்கே நிலைநாட்டி வைத்திருப்பார். இது உளச்சிக்கல் அல்ல, உளநோய்.

இது நடந்துகொண்டே இருக்கிறது. நானே பலமுறை எழுதியிருக்கிறேன். முன்பு ஒருவர் நான் அவரிடம் “என்னை எல்லாரும் திட்டுகிறார்கள்” என்று சொல்லி  அவருடைய தோளில் விழுந்து குமுறிக்கதறி அழுதேன் என ஒரு கட்டுரை எழுதித் திண்ணையில் அது பிரசுரமாகியிருக்கிறது. நான் அவரை நேரில் கண்டதே இல்லை. நாலைந்து கார்டுகள் எனக்கு எழுதியிருக்கிறார், அவ்வளவுதான். திண்ணை ஆசிரியருக்கு அந்த விஷயத்தை எழுதி அக்கட்டுரையை நீக்கினேன். அவர் உடனே அதை பதிவுகள் தளத்திற்கு அனுப்ப ,அதன் ஆசிரியரான மொண்ணை அக்கட்டுரையை உடனே பிரசுரம் செய்தது. அந்த தளத்துடன் என் உறவை முறித்துக் கொண்டேன்.

இன்னொருவர் நான் வல்லிக்கண்ணனுக்கு நிகழ்ந்த பாராட்டு விழாவில் ஆபாசமாகவும் திமிராகவும் பேசியதாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். நான் அவரை மட்டுமல்ல, வல்லிக்கண்ணனையே நேரில் பார்த்ததில்லை என மறுப்பு எழுதினேன். ”என் கண்ணால் நான் பார்த்தேன்” என அவர் ஆணையிட்டார். அப்போதுதான் நான் இந்த உளநோயை முழுமையாக அறிந்துகொண்டேன். இதிலேயே முருகபூபதி என எவரையோ சொல்கிறார். அப்படி எவரையும் எனக்கு அறிமுகமில்லை. கோணங்கியின் தம்பி முருகபூபதியை தெரியும், பழக்கமில்லை. ஆனால் இந்த ’சான்று’ எல்லாம் இவர் திட்டமிட்டுச் சொல்வது அல்ல. உளநோய் இப்படி மெய்நிகர் அனுபவங்களை மிக நுட்பமாக புனைந்துகொள்ளும் திறன் கொண்டது.

நான் கண்ட ஒன்று உண்டு, உளநோய்க்கு மற்றவர்களை பாதிக்கும் ஆற்றல் அதிகம். பொய்யைவிட தீவிரமாக அது மற்றவர்களால் ஏற்கப்படும்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

சாத்தானைச் சந்திக்க வந்தவர் பற்றி சொல்லியிருந்தீர்கள். நீங்கள் உங்களைத் தேடி வருபவர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள். நாங்களெல்லாம் இங்கே இலக்கியக் கூட்டங்களில் இப்படிப்பட்டவர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களின் உலகமே தனி.

மூன்று ஆண்டுக்குமுன் சென்னையில் ஒரு கூட்டம். ஒரு பேச்சாளர் “ஜெயமோகனுக்கு தினமும் வாசகர் கடிதம் வருகிறது. பரவாயில்லை நல்லாவே எழுதறார்” என்றபின் நாடகீயமாக இடைவெளிவிட்டு “எனக்கெல்லாம் ஒரு லெட்டர்கூட வர்ரதில்லை” என்றார். அரங்கில் கைதட்டல்.

எனக்கு ஆச்சரியம். யார் அந்த பேச்சாளர் என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு கவிதைத்தொகுப்பு போட்டவராம். அபத்தமான ஆரம்பகட்ட கவிதைகள்.

நான் கூட்டம் முடிந்தபின் அவரிடம் “சரிங்க ஜெயமோகனுக்கு லெட்டர் வரலாம். உங்களுக்கு எதுக்குங்க லெட்டர் வரணும்?” என்றேன். அவர் ஒருமாதிரி பதறிவிட்டார். கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன.

நான் நகர்ந்ததும் ஒரு நடுவயதுப் பெண் என்னை பிடித்துக்கொண்டார். “அவரு எவ்ளோ பெரிய கவிஞர் தெரியுமா? இலக்கிய ஊழலாலே அவரை யாருக்கும் தெரியல்லை” என்றார். அந்தப்பெண்ணும் கவிஞராம்.

இந்தச் சூழல்தான் நிலவுகிறது. முகநூல் பக்கம் வாருங்கள். எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்களெல்லாம் உங்கள்மேல் கடும் பொறாமையில் குமுறிக் கொண்டிருப்பதைக் காணலாம். “ஏய்யா பொறாமைப்படுறதுக்குக் கூட ஒரு அடிப்படை வேணாமா?” என்று எவரும் கேட்பதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்தம் சாதிசனம் சார்ந்த ஒரு சின்ன வட்டம்தான் இருக்கிறது.

ஜெயப்பிரகாஷ், ஆவடி

***

ன்புள்ள ஜெயப்பிரகாஷ்,

ஆவடி என்று பெயருடன் கொடுத்துவிட்டேன். இல்லாவிட்டால் நீங்கள் இல்லை என்பார்கள். இப்போது பெயர் கொடுத்துவிட்டதால் முகநூலில் கண்டுபிடித்து வசைபாடுவார்கள். வசைபாடினால் பரவாயில்லை, பணம் கேட்டால் தப்பிவிடுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைசிரவணபெலகொலா, கிக்கேரி- சுபா
அடுத்த கட்டுரைதொடங்குதல்…