கேளாச்சங்கீதம் [சிறுகதை]

Nadya Korotaeva

“கைவெஷமாக்குமே” என்றார் கொச்சன் வைத்தியர். நான் திகைத்து நின்றேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த அணைஞ்சபெருமாளும் திகைப்படைந்து மெல்ல முனகினார்.

அணைஞ்சபெருமாளின் மகன் கணேசன் அப்போதுதான் காரிலிருந்து இறங்கி நின்றிருந்தான். டிரைவர் முத்துநாயகம் வண்டியை பின்னால் நகர்த்தும் பொருட்டு ஜன்னல் வழியாகத் தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டு ஸ்டீரிங்கைச் சுழற்றிக் கொண்டிருந்தான்.

நான் பெருமூச்சு விட்டேன். அணைஞ்ச பெருமாள் “அப்டி பலபேரு சொன்னாங்க. எங்களுக்கு முதலிலே நம்பிக்கை இல்லை. ஆனால் வேற வளியில்லாததனாலே கூட்டிட்டு வந்தோம்” என்றார்.

“கைவெஷம்னா லெச்சணங்கள் உண்டுமோ?” என்றேன்.

“அம்பதடிக்கு அப்பாலே பாத்தா தெரியும்” என்றார் வைத்தியர். “அவன பாருங்க. என்ன செய்யுதான் பாருங்க.”

கணேசன் முற்றத்தில் எதையோ பார்த்தபடி நின்றிருந்தான்.

“என்ன?” என்றேன்.

“நம்ம முற்றத்திலே ஒற்றை ஒரு செம்பரத்திச் செடியாக்கும் நிக்குதது. அதிலே பூத்திருக்குதது ஒற்றை ஒரு பூவு. அதையாக்கும் மயங்கிப்போய் பாத்துட்டு நிக்கிறாரு.”

நான் திரும்பிப் பார்த்தேன். கணேசன் பூவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். முகம் மலர்ந்து கண்கள் அகன்றிருந்தன.

“ஒரு பூ போரும் அவருக்க மனசிலே ஒரு பூக்காடு விரிய” என்றார் வைத்தியர். “இனிப்பும், நறுமணமும், சங்கீதமும் எல்லாம் எள்ளு போல இருந்தாப்போரும் ஏளுமலைபோல வளர்ந்துபோடும்… அதாக்கும் கைவெஷத்துக்க லெச்சணம்.”

“எடுத்திடலாமா வைத்தியரே?” என்று அணைஞ்ச பெருமாள் உடைந்த குரலில் கேட்டார். “துள்ளித்திரிஞ்ச பயலாக்கும். இப்ப இப்டி இருக்குதான். அவனுக்க அம்மை இப்ப கிடந்த கிடையாக்கும்.”

“பாப்பம், எவ்ளவு உள்ள போயிருக்கு, என்னதுன்னு” என்றார் வைத்தியர். “வந்ததும் பாருங்க இந்த பழுக்கடைக்கா பாக்கை எடுத்து பாப்பாரு. இது பொன்னுமஞ்சள் நெறமுல்லா? அதையே உருட்டி உருட்டி பாப்பாரு. பொன்னைப் பாத்து தீராது.”

முத்துநாயகம் கணேசனின் தோளைத் தொட்டு அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான். வந்து அமர்ந்ததுமே வைத்தியர் சொன்னதுபோல கணேசன் அந்த பொன்னிறமான பழுக்கடைக்காவை கையில் எடுத்தான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. கண்கள் அந்த பொன்னிறத்தையே வெறித்தன.

நான் வைத்தியரைப் பார்த்து தலையசைத்தேன்.

வைத்தியர் கணேசன்னிடம் “கணேசனாக்கும் பேரு, இல்லியா?” என்றார்.

அவன் திடுக்கிட்டு “ஆமா” என்றான்.

“இங்க எதுக்கு வந்திருக்கீகன்னு தெரியுமா?”

அவன் கண்களைத் தழைத்தான். அவனுடைய இமைப்பீலிகள் பெண்களுடையவை போல தடிமனானவை. நீண்ட கண்கள் வேறு.  சிவந்த உதடுகள். புகைபடிந்தது போன்ற மீசை இல்லையென்றால் பெண் என்றே சொல்லிவிடமுடியும்.

“சொல்லுங்க.”

“ம்” என்றான்.

“தெரியுமா?”

“ஆமா”

“அப்பா சொல்லித்தான் கூட்டிட்டு வந்திருக்காரு, இல்ல?”

“ஆமா”

“நான் தெளிவாட்டு சொல்லிடுதேன். இதுக்கு சிகிச்சைன்னு ஒரு இல்லை. இது மருந்தா மந்திரவாதமான்னு சொல்லிட முடியாது. நீங்க நோயாளியான்னு எங்கிட்ட கேட்டா நான் அதை நீங்கதான் சொல்லணும்னு சொல்லிப்போடுவேன். வைரப்புதையல் எடுத்து ஒளிச்சு வைச்சவனை மத்தவனுக கண்டா கிறுக்கன்னுதான் சொல்லுவானுக. நோய்னு நீங்க நினைக்கணும். சிகிச்சை வேணும்னு நீங்களே விரும்பணும். அப்ப நாம சிலது செய்ய முடியும்.”

அவன் கண்கள் கலங்கின. உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. நான் என் பார்வையை திருப்பிக்கொண்டேன். அவன் இருக்கும் அந்நிலையை நான் பலமுறை பார்த்துவிட்டேன். என்னால் அவனை அப்படிப் பார்க்கமுடியாது. அவனை எச்சில் வழியும் வாயுடன் சிரிக்கும்  செல்லக்குட்டியாகத் தூக்கித் தோளில் வைத்து ஆடினவன் நான்.

“சொல்லுங்க”

“என்னைய மீட்டிருங்க… என்னாலே முடியல்ல. எனக்காக அப்பாவும் அம்மையும் படுத பாடக் கண்டா செத்துப்போவலாம் போல இருக்கு…” என்று அவன் உடைந்த குரலில் சொன்னான்.

“மக்கா லே, என்னலே பேசுதே. நீ செத்தா பின்ன நாங்க என்னத்துக்குடே இருக்குதோம்?” என்றார் அணைஞ்சபெருமாள்.

“நீங்க பேசாதீங்க… நான் அவரு கிட்டே பேசிட்டிருக்கேன்லா?” என்றார் வைத்தியர். “அப்ப இது நோய்னு நீங்க உறுதியா இருக்கீங்க. நீங்க இதை நோய்னு நிலைநிறுத்தினாத்தான் நான் வைத்தியத்தை தொடங்கமுடியும்.”

“என்னாலே முடியல்ல… நான் விட்டுவெலக நினைக்கேன். என்னாலே முடியல்ல… என் மானம் மரியாத எல்லாமே போச்சு. எல்லாரும் பாத்து சிரிக்குத மாதிரி ஆயாச்சு… நான் செத்திருவேன்… சத்தியமா செத்திருவேன்.”

“என்னத்துக்கு சாக? இஞ்ச பாருங்க பிள்ளே. இது ஒரு மதுரமாக்கும். இதிலே ஒரு சொட்டு குடிக்காத மனுசன் இல்லை. சிலருக்கு அந்த தேவமதுரம் கொடம் கொடமா கிட்டிருது. அமிருதம் மிஞ்சினா வெசம். அவ்ளவுதான்… மத்தவன் உங்களை நினைச்சு பொறாமைப்படத்தான் செய்வான்…” என்றார் வைத்தியர். “அதை விடுங்க.. வேண்டுமளவுக்கு ஆயாச்சுன்னா வெளியே வந்திடலாம்.”

“நான் வந்திடுதேன்” என்று அவன் சொன்னான். “என்னாலே முடியல்ல. நான் வந்திடுதேன்.”

“செரி, அப்ப வாங்க முதல்ல தடம் பாப்போம்” என்றார் வைத்தியர். “நான் கேக்கப்பட்டதுக்கு பதில் சொல்லுங்க. வயித்திலே வலி உண்டா? ஊமைவலி?”

“ஆமா, தினம் காலம்பற வலிக்கும். தொட்டா வலிக்காது. ஆனா உள்ள ஒரு வலி இருக்குத மாதிரி இருக்கும். உள்ள என்னமோ உருண்டு அசையுத மாதிரி.”

“ம்” என்றார். “மனசு எப்டி இருக்கு?”

“மனசுன்னா… எப்பமுமே மனசு பதறிட்டே இருக்கு. ஒரு பெரிய விசயத்துக்காக எதிர்பார்த்துட்டிருக்கிற மாதிரி. என்னமோ பெரிய ரகசியத்த உலகத்துக்கிட்டே இருந்து ஒளிச்சு வைச்சுக்கிட்டது மாதிரி… தாங்கமுடியாத சந்தோசம் வந்து அதுவே அழுகையா மாறும்லா, அதுமாதிரி. கொஞ்சமா வந்தா அது பெரிய கொண்டாட்டமாக்கும். ஒரு அஞ்சுநிமிசம் பத்துநிமிசம் அப்டி இருந்தா அதை ஜென்மகாலத்திலே மறக்க மாட்டோம். ஆனா இது அப்டியே நாள்முழுக்க இருக்கும். நாட்கணக்கிலே வாரக்கணக்கிலே இருக்கும்… அப்ப அது பெருந்துன்பம்… அது சீழ்கட்டின ரெத்தக்கட்டியோட தெறிப்பு மாதிரி ஆயிடுது. மண்டைய கொண்டுபோயி எங்கியாம் சுவரிலே முட்டிக்கிடணும்னு தோணிடுது. முட்டை உடையுத மாதிரி மண்டை உடைஞ்சு தெறிச்சிரணும்… உள்ளே இருந்து மூளை சீழும்சலமுமா வெளிய சிந்தினா எல்லாம் தெளிஞ்சிரும்னு தோணிடும்.”

“ம்ம்” என்றார் வைத்தியர். “கொஞ்சம் விடுதலை எப்ப வரும்?”

“காலம்பற எந்திரிக்கிறப்ப… அப்பதான் வயிறு வலிக்கும். ஆனா மனசு தெளிஞ்சிருக்கும். எல்லாத்தையும் நல்லா பாக்க முடியும். இனி இல்லே, இவ்ளவுதான்னு தோணும். இதோட விட்டாச்சுன்னு சபதம் எடுப்பேன். ஆனா அது முட்டி தலையுடைக்குத ஆடு மெல்ல பின்னாலே காலெடுத்து வைக்கிறது மாதிரித்தான்… அது மறுபடி வலுவா முட்டிக்கிறதுக்குக் குறி பாக்குது, அவ்ளவுதான்.”

“சொப்பனங்கள்?”

“சொப்பனங்கள்னா… என்னன்னு சொல்ல? நெறைய…”

“நான் கேக்குதேன். சொப்பனத்திலே சங்கீதம் உண்டா?”

“ஆமா, ஆமா… புல்லாங்குழல், மணி, வீணை எல்லாம் உண்டு…”

“கெந்தர்வம்” என்றார் வைத்தியர். “சொப்பனத்திலே நல்ல மணம் வருமா?”

“எல்லா மணமும் உண்டு. கஸ்தூரி கோரோசனை சாம்பிராணி… எல்லா பூவுக்க மணமும் உண்டு.”

“சொப்பனத்திலே பூக்கள் வாறதுண்டா?”

“பூவாத்தான் நிறைஞ்சிருக்கும்”

“கண்ணுகள் வாறதுண்டா? அழகான கண்ணுகள்?”

“ஆமா…” அவன் உடல் ஒருமுறை உலுக்கிக் கொண்டது.

“அதான்… சம்சயமில்லை” என்றார்.

“எடுத்துப்போட முடியுமா வைத்தியரே, எனக்கு ஒத்த ஒரு பயலாக்கும். என் செல்லமாக்கும்”

“பாப்பம்”

“அந்தத் தேவ்டியா…”

“வேண்டாம்” என்றார் வைத்தியர்.

நான் “இனிமே என்ன செய்ய?” என்றேன்.

“சில வழிமுறைகள் இருக்கு… அதுக்கு முன்னாலே பையன் கொஞ்சம் ரெஸ்டு எடுக்கட்டும்.”

“அவனுக்கு உறக்கமே இல்ல வைத்தியரே…. ஒரு அரமணிநேரம் உறங்குவான்… உடனே எந்திரிச்சிருவான். உடம்பு நடுங்கிட்டிருக்கும். கெளம்பிப் போயிடுவான். ராத்திரியிலே போயி அங்க நின்னுட்டிருப்பான். நிலாநாளுன்னா குன்றுமேலே கேறி மொட்டைப்பாறையிலே நிக்கிறது… ரூமை வெளியே பூட்டினா கதவிலே மண்டைய போட்டு முட்டுறது…”

அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவன் விரல்களை பார்த்தால் எப்போதும் ஏதோ வீணைக்கம்பிகளை மீட்டியபடி இருப்பதைப்போல அசைவது தெரியும்.

“கொஞ்சம் அரிஷ்டம் குடிக்கலாமா?” என்று வைத்தியர் கேட்டார்.

“வேண்டாம்” என்று அவன் சொன்னான்.

வைத்தியர் கண்காட்ட அவருடைய உதவியாளன் ஒரு பெரிய புட்டியை எடுத்துவந்தான். “தசமூலமாக்கும்” என்றார்.

அவர் அதன் மூடியை திறந்தார். மயக்கும் மதுவின் மணம் எழுந்தது. அவன் தீயால் சுட்டதுபோல துடிப்படைந்தான். சட்டென்று அதை எடுத்து அப்படியே குடிக்க ஆரம்பித்தான்.

அவன் குடிக்கும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. வைத்தியர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் ஒழிந்த குப்பியை கீழே வைத்தான். உதடுகளில் மது வழிந்தது. உடலை நனைந்த ஆடுபோல சிலிர்த்து உலுக்கிக்கொண்டான்.

“இப்டித்தான் குடி… குடம்நிறையுத மாதிரி சத்தம் வாற குடி. நான் என்ன செய்வேன்!” என்றார் அணைஞ்சபெருமாள்.

வைத்தியர் “அது அப்டித்தான்… யட்சகந்தர்வாதிகளோட சீலம் அதாக்கும்” என்றார்.

அவன் ஏப்பம் விட்டான். மெல்ல அசைந்தான்.  அவன் உடல் வியர்வை பூத்து சிலிர்ப்படைவதைக் கண்டேன். மீண்டும் ஏப்பம் விட்டான். குமட்டல் போல உடலை உலுக்கிக் கொண்டான்.

அவன் ஒருபக்கம் சாய்வதற்குள் வைத்தியர் பிடித்துக் கொண்டார். அவருடைய உதவியாளன் அவனை தூக்கிக் கொண்டுசென்று படுக்கவைத்தான்.

அவனுடைய குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்தது.

“செல்லம்போல இருந்த பயலாக்கும். சின்னப்பையன் மாதிரி இருப்பான். எப்பமும் சிரிப்பும் பாட்டும் டான்ஸுமா இருப்பான். சங்கீதம்னா உசிரு. நல்லா படமும் வரைவான். அம்மைக்க செல்லமகனாக்கும்… இப்டி ஆக்கிப்போட்டா அந்த பாவி…”

“பாப்பம்”

“அவள நீங்க பாக்கணும்… அப்டி ஒண்ணும் கண்ணுக்கு நல்லா இருக்க மாட்டா… இவனக்காட்டிலும் எட்டுவயசு மூப்பு. என்னத்த கண்டானோ….”

“கைவிஷமுல்லா வேலை செய்யுது?” என்றார் வைத்தியர்.

“நான் அவகிட்டே போயி நியாயம் கேட்டேன். அவன் அம்மை போயி அவளுக்க காலைப்பிடிச்சு அளுதா. அவ நம்மளைவிட ஓங்கி அளுவுதா. எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் ஒரு வார்த்தை சொன்னதில்லை. நான் என்ன வேணுமானாலும் செய்யுதேன், நீங்க உங்க பிள்ளைய கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லுதா…”

“ஓ”

“அவளுக்கு கல்யாணமாகி ஒரு பிள்ளையும் இருக்கு. அவ புருசன் சொல்லுதான், உங்க பயலுக்கு மண்டைக்கு கிறுக்கு. அவனாலே எங்க வாழ்க்கை நாசமாகுது. கொண்டுபோயி ஆஸ்பத்திரியிலே சேருங்கன்னுட்டு… நான் என்ன செய்வேன்?”

“பாப்பம், வழி இருக்கு” என்றார் வைத்தியர்.

“இதுக்கு என்னவாக்கும் வைத்தியம்?” என்றேன்.

“முதல்ல விஷமிருக்கும் இடமென்னன்னு பாக்கணும். நீல அவுரிக்க இலை வேணும். அதை பாலிலே அரைச்சு அந்த விழுதை வயித்திலே தடவிப்பாக்கணும். பச்சிலைப்பசை தொப்புளுக்குமேலே காயாம இருந்தா வெஷமிருக்கிறது வயித்திலே. தொப்புளுக்குக் கீழே உலராம இருந்தா அது மலக்குடலுக்கு வந்தாச்சு. மலக்குடலுக்கு வந்தாச்சுன்னா அமிர்தம் திரிஞ்சு மலமா ஆயாச்சுன்னு அர்த்தம். எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு. மலம் எதுவானாலும் உடலைவிட்டு போயாகணும். அது அதமஸ்திதி. எல்லாம் சுளுவா முடிஞ்சிரும்.”

வைத்தியர் சொன்னார் “கைவெஷம் இரைப்பயிலே இருந்தா அதை கர்ப்பஸ்திதின்னு சொல்லுவோம். அது மத்திமம். அங்க அது மண்ணுக்குள்ளே விதைபோல இருக்கு. அங்கே இருந்து அதை குடலுக்கு கொஞ்சம் கொஞ்சமா நகத்தணும்.. அதுக்கும் மருந்து இருக்கு. கொஞ்சம் நாளாவும். செஞ்சுபோடலாம்.”

அவர் உதவியாளனிடம் “அமரி இருக்காலே? நீல அமரி?” என்றார்.

“அமரின்னா?” என்றேன்.

“இங்க மலையாள வைத்தியமாக்கும். இதிலே அமரின்னு பேரு.”

உதவியாளன் “களியான்தோட்டத்திலே நிக்குது… கொண்டுட்டு வாறேன்” என்றான்.

“எப்டியாவது காப்பாத்திக் குடுங்க வைத்தியரே” என்றார் அணைஞ்ச பெருமாள்.

“இது எப்டி உள்ள போச்சு?” என்றேன்.

“பலவழிகள் இருக்கு. ஏதாவது ஒருவழியிலே வயித்துக்குள்ளே போக வைக்கணும். தாம்பூலத்திலே ஒரு நாலு குருமிளகோட வைச்சு குடுக்கிறது வழக்கம். அதிலே ஏற்கனவே சுண்ணாம்பு பாக்கு காரம்னு இருக்கிறதினாலே ருசிபேதம் அவ்ளவா தெரியாது.”

“மந்திரம் உண்டோ?” என்று நான் கேட்டேன்.

“உண்டு. பிடிக்கவேண்டிய ஆளுக்க தலைமுடியோ நகமோ உடம்பிலே ஒரு துண்டு வேணும். அதை சொந்த ரத்தம் ஒரு துளியிலே நனைச்சுக்கிடணும். சில மந்திரஙகள் இருக்கு. ஆயிரத்தெட்டு லெச்சத்தி எட்டுன்னு சில கணக்குகள் உண்டு. அதன்படி சொல்லணும். உருப்போடுறதுன்னு சொல்லுவாங்க…”

“அத மந்திரவாதிதான் செய்யணுமோ?”

“மந்திரவாதி செய்தா மறுமந்திரமும் சுளுவிலே நடந்துபோடும்” என்றார் வைத்தியர். “சம்பந்தப்பட்ட ஆளு செய்தா அதிலே இருக்குதது அசல் ரெத்தமாக்கும். அதுக்க பவர் வேறே”

அவர் வெற்றிலை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார். நாங்கள் திண்ணையில் அமர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவருடைய தாடை செவிப்பொருத்தருகே இறுகி அசைந்து கொண்டிருந்தது. உள்ளே கணேசனின் குறட்டை கேட்டது.

“அந்த மந்திரம் என்னவாக்கும்?” என்றேன்.

“பிரீம்னு ஒரு மந்திரம். அது தேவியோட மந்திரங்களிலே ஒண்ணு. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்னு பதினெட்டு இருக்குல்லா அதிலே ஏழாவது. பிரீம்னா தேவியை சர்வாலங்காரியா, காமரூபிணியா உருவகிக்கிறது. பிடிக்கவேண்டிய ஆளை மனசிலே மதுரமதுரமா நினைச்சுக்கிடணும். உடலிலேயும் மனசிலேயும் தீபோல காமம் வேணும். வேற ஒரு சிந்தையும் இருக்கப்பிடாது. அந்தப் பேருதான் மந்திரம். அந்த நினைப்புதான் தந்திரம்… நடுவிலே ஒரு கணநேரம் நினைப்பு தவறிப்போச்சுதுன்னா மறுபடி தொடக்கத்திலே இருந்து வரணும்… அப்டி லெச்சத்தி எட்டுன்னா அதுக்கு ஆனைச்சங்கிலிக்க சக்தியாக்கும். பிரம்மா நினைச்சாக்கூட உடைக்கிறது கஷ்டம்.”

“பிறவு?” என்றேன்.

“முறையா ஜெபிச்சா அந்த ரெத்தம் அப்டியே காயாம இருக்கும்… கருப்பு மையாட்டு ஆயிடும். அதை சின்ன தர்ப்பைமுனையாலே தொட்டு ஒரு வெத்திலையிலே யந்திரம் எழுதணும்… யந்திரம்னா இந்தா இதுமாதிரி இருக்கும். சொன்னேன்லா, கைவெஷத்துக்க மந்திரம் பிரீம். அதை மலையாள எளுத்துலே இப்டி எளுதினா எந்திரம்… அதை எளுதி அந்த வெத்திலையைச் சுருட்டி பிடிக்கவேண்டியவருக்கு குடுத்துட்டா அது உள்ள போயி தங்கிரும். அதாக்கும் கைவெஷம்.”

“கைவெஷம் குடுத்துப்போட்டாளே, சண்டாளப்பாவி” என்றார் அணைஞ்சபெருமாள்.

“அவ குடுத்திருப்பாளா?” என்று நான் வைத்தியரிடம் கேட்டேன்.

“அவ குடுத்திருக்கணும்னு இல்லை. யாரோ யாருக்காகவோ வச்ச கைவெஷம் தவறுதலா இவருக்க வயித்திலே போயிருக்க வாய்ப்பிருக்கு… அவளே அறியாம சொப்பனத்திலே கைவெஷம் குடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அவ குடுத்ததும் இவரு தின்னதும் சொப்பனத்திலே நடந்திருக்கலாம்.”

“சொப்பனத்திலேன்னா…”

“பிள்ளே, சொப்பனம்னா வேரு, யதார்த்தம் மரம் பாத்துக்கிடுங்க.   வேரு முளைச்சா அது மரம். வேரறியாக் கனியில்லேன்னு பாட்டு உண்டு…” என்றார் வைத்தியர். “எல்லாம் தெய்வங்களுக்க விளையாட்டுல்லா? ஆரை நாம குற்றம்சொல்ல?”

அவுரிச் செடியுடன் அவருடைய உதவியாளன் வந்தான். சீமைக்கொன்றை இலை போல கொத்துக்களாக இருந்தது. அதை உருவி இலைகளை ஒரு கல்லுரலில்  இட்டு வெண்கலப் பூணிட்ட உலக்கையால் இடித்து அரைத்தான். வைத்தியர் இடையில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டு நின்றார். அவருடைய தோளிலிருந்து துவர்த்து நீண்டு கிடந்தது. சட்டையில்லா மார்பு. கையில் ஒரு செம்பு மோதிரம். நரைத்த நீண்ட தாடி. கொம்புச்சட்டமிட்ட கண்ணாடி.

அரைத்த விழுதை வழித்து ஒரு செம்புக்கலுவத்தில் இட்டு பால்விட்டு நன்றாகக் குழப்பினார். வைத்தியர் அதை வாங்கி அவரே இன்னும் நன்றாகக் கலக்கி அரைத்தார்.

“பிள்ளைக்க சட்டைய களட்டுங்க” என்றார்.

நான் எழுந்து சென்று கணேசனின் சட்டையின் பித்தான்களைக் கழற்றி விலக்கினேன். உடல் மெலிந்து, வெண்ணிற தோலுக்குள் வரிவரியாக எலும்புகள் தெரிந்தன. வயிறு ஒட்டி பள்ளமாக வளைந்திருந்தது.

மெல்ல ஏதோ மந்திரத்தை முனகியபடி வைத்தியர் அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டு பாம்புவிரலால் மும்முறை அந்த நீலப்பச்சை விழுதை தொட்டார். அதன்பின் மெல்ல எடுத்து தொப்புளருகே வைத்து மெல்லச் சுழற்றினார். சுழற்றிச் சுழற்றி வயிறெங்கும் அதை பூசினார்.

கலுவத்தை உதவியாளனிடம் அளித்துவிட்டு “பார்ப்போம்” என்றார்.

நான் அந்த பூச்சை பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுடைய உடல் எப்போதுமே காய்ச்சல் வந்ததுபோல கொதித்துக் கொண்டிருக்கும். மெல்லிய நடுக்கம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த பூச்சு காய்வதாகத் தெரியவில்லை. அல்லது என் கண்களுக்கு அப்படித் தோன்றுகிறதா…

“காயல்லியே வைத்தியரே” என்றார் அணைஞ்சபெருமாள்.

“மேலேயும் கீழேயும் காயல்லேன்னா…” என்று வைத்தியர் இழுத்தார். “அப்ப கொஞ்சம் கஷ்டமாக்கும்… கைவெஷம் நெஞ்சுக்கு போயிருக்கு. அதாக்கும் உத்தமம். ஹ்ருதயஸ்திதின்னு சொல்லுறதுண்டு. கைவெஷம் அங்கே பூத்து நிறைஞ்சிருக்கு…”

“கடும் மந்திரவாதிய வச்சு செஞ்சதோ?” என்றேன்.

“இல்ல, இத எந்த மந்திரவாதியும் செய்ய முடியாது. இதை சம்பந்தப்பட்டா ஆளே செஞ்சிருக்கணும். தனக்க சொந்த ரெத்தம் எடுத்து புடம்போட்டிருக்கணும். லெச்சத்தி எட்டு முறை ஒரு கணம் சொல்லும் மனசும் பதறாம மந்திர உச்சாடனம் நடந்திருக்கணும்… இது ஆனைச்சங்கிலி கூட இல்லை. இது பெரும்பாறைகளை உச்சிமலையிலே கட்டிவைச்சிருக்கிற கொலைப் பகவதிக்க பூட்டாக்கும்.”

“எனக்க மண்டைக்காட்டமோ, நான் சாவுதேன்! நான் சாவுதேன்!” என்று அணைஞ்ச பெருமாள் நெஞ்சில் அறைந்து அழுதார்.

“நில்லும் ஓய்” என்று நான் அவர் கையை பிடித்து ஓர் அதட்டு போட்டேன். “உக்காரும்… உக்காரும் ஓய்” என இழுத்து அமரச்செய்தேன். அவர் விசும்பி அழ ஆரம்பித்தார்.

வைத்தியர் மீண்டும் போய் பெஞ்சில் அமர்ந்து வெற்றிலைச் செல்லத்தை எடுத்தார். அணைஞ்சபெருமாள் ஓசையின்றிக் குலுங்கி அழுதபடி பெஞ்சில் படுத்துக்கொண்டார்.

“இது என்னவாக்கும்?” என்றேன்.

“பிள்ளே, இங்க மனுசங்கள பாத்தா ஒவ்வொருத்தரும் தனித்தனியா அலையுத மாதிரி தோணும். ஆனா அத்தனைபேரையும் ஒண்ணாச் சேத்துக் கெட்டிப்பின்னி வச்சிருக்கு. சொந்தம், பந்தம், பாசம், அன்பு, காதல், காமம்னு என்னென்னமோ இருக்கு. அது ஒரு மாதிரி ஒரு பசைன்னு வையுங்க. இல்ல ஒரு வலைன்னு சொல்லுங்க. அதனாலேதான் மனுச வாழ்க்கை இங்க நடக்குது. மனுசங்கள்லாம் சேந்து ஒற்றைக்கெட்டா இங்கிண வாழுறாங்க… “

நான் கைகளை கட்டிக்கொண்டு அவர் சொல்வதை கேட்டிருந்தேன். என்னால் அவர் சொல்லும் அத்தனை சொற்களையும் செவிகளால் வாங்க முடியவில்லை.

“தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்” என்றார் வைத்தியர்.

“இதுக்கு மறுவளி உண்டா?”

“சில வளிகள் உண்டு” என்றார். “இந்த கட்டை இதை போட்டவதான் அவுக்க முடியும். இதிலே அவ போட்ட எந்திரம் நாம அறிஞ்ச பிரீம் மந்திரம் இல்ல. இது அவளுக்க கைரேகை. தனக்க சுட்டுவிரல் கைரேகையையே அவ யந்திரமா வைச்சிருக்கா.”

“ஏன்?”

“கைரேகையை யந்திரமா வைச்சா வைச்சவங்களும் யந்திரத்திலே மாட்டிக்கிடுவாங்க. அவங்களும் வெளியே போகமுடியாது… வலையிலே வேடனும் இரையும் மாட்டிக்கிடுதது மாதிரி.”

என்னால் அதை உள்வாங்கவே முடியவில்லை.

“அவளே அந்த கைவெஷத்தை திரும்ப எடுத்தாகணும். வேற வளியே இல்ல.”

நான் தலையசைத்தேன்.

“அதுக்கு மந்திரத்தை போட்டது மாதிரியே சொந்த ரெத்தம் எடுத்து மை செய்யணும். அப்டியே மனசு நிலைச்சு வெத்திலையிலே கைரேகையை வைக்கணும். அதை இவன் திங்கணும்… அப்ப முடிச்சுகள் அவுந்து விடுதலை ஆயிடுவான்.”

“அதை அவ செய்யணுமே”

“செய்ய வைக்கணும்…” என்றார் வைத்தியர். “அவளுக்கு நாம திருப்பி மந்திரம் வைக்கணும். ஒரு மந்திரத்தை வைக்கிறப்ப நாம ஒண்ணைமட்டும் நிறுத்தி மத்த எல்லாத்தையும் விலக்குதோம். கூர்மையாகிறது, குவிஞ்சுகிடுறதுக்குத்தான் மந்திரம்னு பேரு. ஆனா விலக்கின எதுவும் இல்லாம போறதில்லை. அதெல்லாம் அங்கதான் இருக்கும். அதெல்லாம் கோவத்திலே வெறிகொண்டிருக்கும். அதையெல்லாம் திருப்பி மந்திரம் போட்டவங்க மேலெயே ஏவ முடியும்.”

அவர் அதை ஒரு ரகசியம்போல மெல்லச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என்னென்ன இருக்கு. மந்திரம் போடுறவன் அந்நேரத்திலே தேவன். அவனை அங்க அப்டி இருக்க மனுசனை ஆட்சிசெய்ற தெய்வங்கள் விட்டிருமா? சீக்கு, துக்கம், சாவு… எல்லாம் வந்து சுத்தி பிடிச்சுகிடும்ல? உடம்பு உக்கி பூட்டுபூட்டா வலிக்கும். எலும்பும் சதையும் மட்கி மண்ணு மண்ணா உதிரும்.  வாதை தாங்கமுடியாம அவளே அலறுவா, நான் விட்டுடுதேன் நான் மாறிப்போறேன்னு கதறி விளிப்பா. அப்ப போயி மறுமந்திரம் செய்ய வைக்கணும்.”

“ஓ” என்றேன். என்ன சொல்வதென்று தெரியாமல். பிறகு “முன்ன இப்டி நடந்திருக்கா.” என்றேன்.

“ஆமா, நான் செஞ்சிருக்கேன். ஒருத்தி இப்டி உத்தம மந்திரம் செஞ்சு கைவெஷம் குடுத்துப்போட்டா. கெந்தர்வன் மாதிரி பையன். அடிமையா ஆயிட்டான். கிறுக்கனா ஆயிட்டான். பூவும் நெலாவும் தேடி அத்து அலைஞ்சான். காணாப்பொன் கண்டவன் மாதிரி, கேளாச்சங்கீதம் கேட்டவன் மாதிரி வெறிச்சுப்பாத்துட்டு உக்காந்திருந்தான்…”

அவர் தலைகுனிந்து மெல்ல எவரிடமோ குற்றமேற்பு செய்வதுபோல சொல்லிக் கொண்டிருந்தார். “நான் கடுத்த மந்திரம் செஞ்சு தெய்வங்களை ஏவிவிட்டேன். கைவெஷம் குடுத்தவ அப்டியே உளுத்து உதிரமா கொட்டி நாளுக்குநாள் செத்தா. ஆனாலும் அவ அவனை விடச் சம்மதிக்கல்லை. எட்டு வருசம். எட்டுவருசம்னா எத்தனை நாளு! ஒவ்வொரு நாளும் நரகம். ஆனா அவ அவனை விடலை. அவனும் அவளும் சேந்து செத்தாங்க.. அவன் இனிச்சு இனிச்சு செத்தான். அவ…”

“அவளும் இனிச்சு இனிச்சுத்தான் செத்திருப்பா” என்றேன்.

அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். கண்களுக்கு கீழே புதிதாக உருவான சுருக்கங்களுடன் சட்டென்று பல ஆண்டுகள் வயதானவராகத் தெரிந்தார்.

“அவ செத்தா அவனும் செத்திருவான்… அந்த பிடிப்பு அப்டி. ஆனா அதுக்கு முன்னாடி கொஞ்சநேரம் அவனுக்கு ஒரு விடுதலை கிடைச்சிருக்கும். ஒரு சின்ன ஆசுவாசம் மாதிரி… என் செல்லப்பயலுக்கு அதுவும் கிடைக்கலை. அவன் அவளுக்கு முன்னாடியே போனான்… ஒருநாள் முன்னாடி…” அவர் தலை தாழ்ந்து தொங்கியது. “தெய்வங்களுக்கு இரக்கமில்லை. மனுசனை வைச்சு விளையாடுறதிலே அவங்களுக்கு ஒரு கணக்குமில்லை.”

நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

அவர் நீண்ட பெருமூச்சுடன் நிமிர்ந்து கணேசனைப் பார்த்தார். “பூட்டை எடுத்திடலாம்… விதி இருக்கணும், அவ்வளவுதான்.”

நான் அவரிடம் “ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” என்றேன்.

அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். தலை ஆடிக்கொண்டே இருந்தது.

அணைஞ்ச பெருமாள் எழுந்து “வைத்தியரே என் பயல காப்பாத்துங்க… அவன் இல்லேன்னா நான் செத்திருவேன்” என்றார்.

“சாமிகளை கும்பிட்டுக்கிடுங்க… விதியிருந்தா நடக்கும்” என்றார் வைத்தியர். “முள்ளுநுனியிலே பனித்துளின்னாக்கும் மனுசனை பத்திச் சொல்லியிருக்கு.”

***

உயிர்மை இருநூறாம் இதழ் அக்டோபர் 2021

முந்தைய கட்டுரைஅஜ்மீர் கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைசிஷ்டி கவிதைகள்- கடிதங்கள்