அன்புள்ள ஜெ
கீழ்க்கண்ட செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இந்த வழக்கு எப்படி செல்கிறது என்று கவனித்துக்கொண்டிருக்கிறீர்களா?
நாகராஜன்
அன்புள்ள நாகராஜ்,
இந்த வழக்கு பற்றி எழுதியபோதே இது இப்படித்தான் செல்லும் என எனக்குத் தெரியும், எழுதியுமிருக்கிறேன். கேரளம் ஆதிவாசிகளின் காலனி என்று ஒரு சொல்லாட்சி உண்டு. பழங்குடி மக்களை பொதுவாக மலையாளிகள் எதிரிகளாக, இழிமக்களாகவே பார்க்கிறார்கள். தலித்துக்கள்கூட. அவர்கள் மொத்த கேரளத்தாலும் ஒடுக்கப்படும் மக்கள். எந்தக் கட்சியும் அவர்களுக்கான கட்சி அல்ல என்பது மட்டுமல்ல எல்லா கட்சியினரும் அவர்களை ஒடுக்கும் மக்களின் வாக்குகளால் வாழ்பவர்களும்கூட.
நம் நீதிமன்றங்கள் திட்டவட்டமான சாட்சிகள் இருந்தாலே ஒரு குற்றவழக்கில் ஒருவரை தண்டிக்க பற்பல ஆண்டுகள், ஒரு தலைமுறைக்காலம், எடுத்துக்கொள்ளும். அதுவரை வழக்கை எடுத்து சலிக்காமல் நடத்த ஆள்வேண்டும். பழங்குடிகளுக்காக அப்படி எவரும் அங்கில்லை. ஏதாவது தன்னார்வக்குழுவினர் அவ்வழக்கை ஏற்று நடத்தினால்கூட காவல்துறை ஒத்துழைக்கவேண்டும். காவல்துறை ஒட்டுமொத்த கேரளத்தையே பிரதிநிதித்துவம் செய்யும், பழங்குடிகளை அல்ல. ஆகவே நீதி அனேகமாக கிடைக்காது. கேரளத்தில் பெரும்பாலும் எந்த வழக்கிலும் பழங்குடிகளுக்கு நீதி வழங்கப்பட்டதில்லை.
ஜெ