அண்ணா,
மறுபடியும் ஒரு தற்கொலை நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமை என்பதைவிட அதனால் வரும் தோல்வி அந்த மாணவனுக்கு ஒரு விதமான பதட்டம் முக்கியமாக there is no plan B.
இதையும் அரசியலாக்கி மிக எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். இதற்கு கூட்டு பொறுப்பாக முதலில் தாய் தந்தை, ஆசிரியர்கள் கடைசியாக சமூகத்தை பொறுப்பாக்கலாம்.
இங்கே சில சுட்டிகளை இணைத்திருக்கிறேன் ஜெ
The male to female suicide ratio in 2019 was 70.2:29.8
However, if the rate of suicides (number of suicides per 1 lakh of population) is compared statewise, it shows the southern states have far higher rates of suicide than the northern ones.
Compare this to states such as Bihar, Uttar Pradesh and Jharkhand — among the poorest in the country. At 0.5, Bihar has the lowest suicide rate in the country among states. UP recorded a suicide rate of 2.4 and Jharkhand 4.4.
அடிப்படையாகவே தமிழ் நாட்டின் மக்கள் பலவீனமானவர்கள் என்பது புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெளிவாகிறது .
குறிப்பாக தெற்கு மாநிலங்களில் அதிகம் என்கிறது. தெற்கு மாநிலங்களில் தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பின் மீது பெரும் மோகம்கொண்டு திணிக்கிறார்கள் . so பெற்றோர்கள் தான் almost தொண்ணூறு சதம் இந்த பொறுப்பை தூக்கி சுமக்க வேண்டும்.
அதற்கு நிச்சயம் அவர்கள் போலிப் பாவனைகள் இடம் கொடுக்காது. அதனால் அரசியலாக்கி தாங்கள் பொறுப்பல்ல என்று திரும்ப திரும்ப தங்களுக்கே சொல்லி கொள்கிறார்கள் .
அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன்
***
அன்புள்ள பன்னீர்செல்வம்
இந்தச் சூழலில் இதைப்பற்றிப் பேசுவதில் ஒரு சிக்கல் உள்ளது. நம் பொதுக்களத்தில் உள்ள அத்தனை விவாதங்களும் அன்றைய செய்தியைச் சார்ந்தவை. அன்றைய தலைப்புச்செய்தியை ஒட்டி தங்கள் அரசியலையும் சார்புகளையும் முன்வைத்து, எதிரிகளை வசைபாடி முடித்துவிடுவதே இங்கே விவாதமென நிகழ்கிறது. இச்சூழலில் எதைப்பேசினாலும் அப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் விவாதங்களின் ஒரு பகுதியாக அக்கருத்து ஆகிவிடுகிறது. எதிர்வினைகளும் அந்த நிலையில் இருந்தே வருகின்றன. எவருமே பொருட்படுத்தி யோசிப்பதில்லை. இக்காரணத்தால் நான் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை. கொஞ்சம் காலம் கடந்து, அதன்பின்னரும் அந்த விஷயத்தில் ஆர்வம் நீடிப்பவர்களிடம் மட்டுமே பேச விரும்புகிறேன்.
தமிழகத்தை விட கேரளமே தற்கொலையில் முன்னிற்கும் மாநிலம். கேரளம் இந்தியாவிலேயே கல்வியறிவு மிக்க மாநிலம். பொருளியல்நிறைவு கொண்ட மாநிலம். பண்பாட்டுச்செறிவும் இலக்கியமும் தொடர் அரசியல் விழிப்புணர்வும் கொண்ட மாநிலம். ஆனால் அதுவே இந்தியாவில் தற்கொலையில் முதலிடம். ஏன்? இன்று உளச்சோர்வும் தற்கொலை என்பது நவீனமயமாதலின் ஒரு உடன்விளைவாக உள்ளன. பொருளியல் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் அடையுந்தோறும் உளச்சோர்வும் தற்கொலையும் பெருகுகிறது. தமிழகத்திலும் நிகழ்வது அதுவே.
தற்கொலையை ஒரு ஓர் அபூர்வமான மானுடநிகழ்வாகக் கொள்ளவேண்டியதில்லை. வெவ்வேறுவகையில் மானுட வரலாறு முழுக்க தற்கொலை இருந்துகொண்டிருக்கிறது. சென்ற யுகத்தில் தற்கொலை என்பது சமூகக் கூட்டுநலனுக்காக மேற்கொள்ளப்பட்டது. சமூகமே அதைநோக்கி மானுடரை உந்தியது. அந்த தற்கொலைகள் போற்றிக் கொண்டாடப்பட்டன. போர்களில் தற்பலி கொடுப்பவர்கள், அரசனுக்காகவும் தெய்வத்திற்காகவும் ‘இட்டெண்ணி தலைகொடுப்பவர்கள்’ பெருவீரர்களாக நிலைநிறுத்தப்பட்டனர். பெண்கள் நீரிலும் எரியிலும் புகுதல் போற்றப்பட்டது. துறவியர் உண்ணாநோன்பிருந்தும் புனிதநீரில் மூழ்கியும் மறைதல் சிறப்பான முடிவென கொள்ளப்பட்டது. தமிழகம் முழுக்க நாம் நவகண்டம் என்னும் தற்பலி கொடுத்துக்கொண்டவர்களின் சிலைகளைக் காண்கிறோம். நம் நாட்டுப்புறத் தெய்வங்களில் கணிசமானவை தற்கொலை செய்துகொண்டவர்கள்.
அந்த மனநிலைக்கு இன்றும் மதிப்புள்ளது. புரட்சிப்படையினரில் தற்கொலை அணியினர் பெருவீரர்களாகக் கருதப்படுகின்றனர். பெரும்பாலான புரட்சிவீரர்கள் ஒருவகை தற்கொலை மனநிலையுடன் செயலில் இறங்கி உயிர்நீத்தவர்களே. பொதுவான சமூகநோக்கத்துடன் தற்கொலை செய்துகொண்டவர்களை நாம் இன்றுகூட கொண்டாடுகிறோம். மொழிப்போர் தியாகிகளில் தொடங்கி வெவ்வேறு நிகழ்வுகளில் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கான நினைவிடங்கள் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை. தற்கொலை செய்துகொண்ட தொண்டர்களை கட்சிகள் போற்றிப்புகழ்கின்றன. அவர்களை உரிமைகொண்டாட போட்டியிடுகின்றன. அவர்களின் குடும்பங்களுக்கு நிதி அளிக்கின்றன. அவர்களின் தற்கொலையின் தேவை பற்றி ஐயம்கொள்வதே அவமதிப்பாக கருதப்படுகிறது.
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் தற்கொலை இன்னொரு அர்த்தத்தை அடைந்துள்ளது. சென்ற யுகத்து மனிதனுக்கு திட்டவட்டமான தனியாளுமை இல்லை. ’நான்’ என அவன் நினைப்பது அவனுடைய குடியாலும் இனக்குழுவாலும் மதத்தாலும் சமூகத்தாலும் உருவான ஓர் திரள்அடையாளத்தையே. அவன் அவனும் உட்பட்ட திரளின் ஒரு பகுதி. அந்த குடும்பம், இனக்குழு, அல்லது சமூகம் அவனை முழுமையாக வடிவமைத்து வாழ்நாள் முழுக்க கட்டுப்படுத்தியது. அவனும் தன்னை அந்த குழுவாகவே எண்ணிக்கொண்டான். அவனுடைய கேள்விகளுக்கு அத்திரளின் பொதுவான பதில்களே ஏற்புடையவையாக இருந்தன. அவனுடைய இலக்குகளை அத்திரளே தீர்மானித்தது. அவனுடைய தெரிவுகள் முடிவுகள் அனைத்துக்கும் அதுவே பொறுப்பேற்றுக்கொண்டது
ஆனால் இன்றைய நவீனயுகத்து வாழ்க்கையில் மனிதன் தனியாளுமையாகவே கருதப்படுகிறான். அவ்வாறே வாழ்கிறான். அவனுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய தனியாளுமையின் வெற்றிக்காகவும் நிறைவுக்காகவும் மட்டுமே. அவன் தனக்கான எல்லா முடிவுகளையும் அவனேதான் எடுக்கவேண்டும். தானே அதற்குப் பொறுப்பாகவேண்டும். அவனுடைய வெற்றியும் தோல்வியும் அவனுடையவை மட்டுமே.இது பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகிய ஒரு தத்துவப்போராட்டத்தின் விளைவு. Free will movement என அதைச் சொல்கிறார்கள். தன் வாழ்வை, தன் மீட்பை தானே முடிவுசெய்வதற்கான சுதந்திரத்திற்கான போராட்டம் அது. அதை முந்நூறாண்டுகளில் மானுடம் அடைந்தது. நாம் அந்த சுதந்திர யுகத்தில் வாழ்கிறோம்.
ஆனால் சுதந்திரம் என்பது பொறுப்பும்கூட. பொறுப்பு பெரும் பதற்றத்தை அளிக்கிறது. நாம் நம் வாழ்க்கையை முழுதாக அறிவதற்கு முன்னரே அதைப்பற்றிய உறுதியான ஒரு முடிவை எடுத்தாகவேண்டியிருக்கிறது. நமக்கு சமூகம் பற்றியோ, வரலாறு பற்றியோ ஒன்றுமே தெரியாமலிருக்கையிலேயே எல்லா முடிவுகளையும் எடுத்தாகவேண்டியிருக்கிறது. அம்முடிவுக்கான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இங்கிருந்து தொடங்குகிறது இந்த யுகத்தின் எல்லா சிக்கல்களும்.இதைத்தான் angst என்று இருத்தலியலாளர் சொல்கிறார்கள். பறதி என்பது இதற்கான தமிழ்ச்சொல். மார்ட்டின் ஹைடெக்கர் முதல் சார்த்ர் வரை இதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். இன்று தற்கொலை என்பது இந்த பறதியின் விளைவாக நிகழ்கிறது. Free Will இயக்கத்தின் இயல்பான விளைகனியே existentialism.
இன்று சமூகத்தின் இயல்பும் இடமும் மாறிவிட்டிருக்கிறது. நேற்று அது உருவாக்கி, வழிகாட்டி, ஆட்கொண்டு, தப்பவிடாமல் கட்டி கொண்டுசெல்லும் ஒரு பேரமைப்பு. பொறுப்பேற்றுக்கொள்ளும் தெய்வம். இன்று அது போட்டிக்களத்தை உருவாக்கி அளித்துவிட்டு ஒதுங்கிநின்று தீர்ப்புசொல்லும் நடுவர். வென்றால் கொண்டாடுவதும் தோற்றால் இழிவுசெய்வதும் அதன் இயல்புகள். தோல்வியுற்றவர்களை மிதித்துக்கொண்டு வென்றவர்களை முன்னெடுத்தபடி அது வரலாற்றில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இங்கே ஒவ்வொருவரும் அந்தச் சமூகப்பார்வையைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். தெய்வத்துக்கு நிகரான இடம் அதற்கு இன்று உள்ளது. எல்கேஜியில் பையன் முதலிடம் வராவிட்டால் “வெளியே தலைகாட்ட முடியாது” என்று நம்மவர் மனம் புழுங்குகிறார்கள். குழந்தைகள் ‘நாலுபேர்’ மெச்சும்படி பெரிய இடத்தில் இருந்தாகவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன்பொருட்டே எல்லா போட்டியும்.
எண்ணிப்பாருங்கள், இன்று நமக்கு நினைவு தெரியும்போதே சமூகம் அறிமுகமாகிவிடுகிறது. அது உருவாக்கி அளிக்கும் போட்டிக்களத்தை நம் பெற்றோர் நமக்கு பழக்கப்படுத்துகிறார்கள். எல்கேஜி நிலையிலேயே நாம் போட்டிபோட ஆரம்பிக்கிறோம். எல்கேஜியிலேயே வெற்றியின் இனிப்பையும் தோல்வியின் கசப்பையும் அறிய ஆரம்பிக்கிறோம். அந்த ஓட்டம் முடிவதே இல்லை. இந்த ஓட்டத்தின் வெற்றிதோல்விகளே நம் வாழ்க்கையின் சாராம்சமாக, விழுப்பொருளாக ஆகிவிட்டிருக்கின்றன.
நேற்றைய சமூகம் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு விழுப்பொருட்களை நமக்கு அளித்தது. [தர்ம, அர்த்த, காம, மோட்சம்] அறம் என்பது நம் சமூகத்துடனும், இயற்கையுடனும், இங்கு நிகழும் வாழ்வுடனும் இசைந்து போதல். அவற்றின் இயல்பான கூறாக இருத்தல். அந்நிலையில் நாம் ஆற்றவேண்டியவற்றை ஆற்றுதல். அவற்றின் நெறிகளே அறம். அவற்றை அறிந்து இயைந்து ஒழுகுபவனே உண்மையாக வாழ்பவன். பொருள் என்பது அந்த அறத்தின் எல்லைக்குள் நின்றபடி இவ்வுலகில் ஈட்டிக்கொள்ளும் உலகியல் நன்மைகள்ளான அதிகாரம், செல்வம், போகம் போன்றவை. காமம் என்பது நாமே நமக்கென அடையும் அக இன்பங்கள். ஒரு கட்டத்தில் இம்மூன்றையும் விட்டுவிட்டு நாம் அடையும் முழுமையே வீடு.
இன்று அர்த்தமும் காமமும் மட்டுமே விழுப்பொருள் என இச்சமூகம் நமக்குக் கற்பிக்கிறது. உண்மையில் பொருள் ஒன்றே விழுப்பொருள் எனச் சொல்லித்தருகிறது. காமம் என்பது அதன் வழியாக நாம் அடையும் லாபம். இதை நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கிறோம். மிக இளமையிலேயே அவர்களுக்கு உலகியல் இலக்குகளை அளித்துவிடுகிறோம். அவர்கள் தங்கள் இயல்பென்ன, தங்கள் ருசிகள் என்னென்ன, தங்கள் திறன்கள் என்ன என்று அறிவதற்குள்ளாகவே அந்த இலக்குகள் அவர்களுக்குரியவையாக வகுக்கப்பட்டுவிடுகின்றன. அவர்கள் அதற்காக மிகமிகக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அவர்களின் இளமைப்பருவமே அதற்காகச் செலவிடப்படுகிறது. அவர்களுக்கு இளமையின் கொண்டாட்டங்களே இல்லை. அவர்கள் வாழ்வதே இல்லை. அவர்கள் போட்டியில் ஓடிக்கொண்டே இளமையைக் கடந்துவருகிறார்கள்.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். இலட்சியம் வேறு, இலக்கு வேறு. இலட்சியம் என்பது ஒருவன் தன் இயல்பென்ன என அறிந்து, அதற்கேற்ப கண்டடையும் ஒரு செல்வழி. சென்றடையும் இடம் அதில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருப்பதில்லை. செல்லும் திசை மட்டுமே அவனால் கண்டடையப்படுகிறது. அவன் மேம்படுத்திக்கொண்டபடியே சென்று ஓர் நிறைவுப்புள்ளியை அடையலாம். ஆனால் அது மெய்யான இலட்சியம் என்றால் செல்லும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் அவன் அதற்குரிய நிறைவை, வெற்றியை அடைந்துகொண்டேதான் இருக்கிறான். ஆகவே ஒவ்வொருநாளும் அது மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அதில் ஏமாற்றமே இல்லை. எங்கே சென்று நின்றாலும் அதுவே அவனுக்கான உச்சப்புள்ளி. இலட்சியவாதம் என்பது அந்தப்பயணம்தான்.
ஆனால் இலக்கு என்பது ஓர் உலகியல் சார்ந்த இடம் அல்லது பெறுபொருள். அதை அடையாவிட்டால் அதுவரையிலான பயணமே வீண்தான். வாழ்க்கையில் இலக்கு கொண்டவர் வேறு, இலட்சியவாதி வேறு. இலட்சியவாதிக்கு சோர்வுக்கணங்கள் இருக்கலாம், வெறுமையுணர்வு இருக்காது. இலக்கு கொண்டவர்கள் எய்தாவிட்டால் வெறுமையை அடையவேண்டியிருக்கும். எய்தினாலும் தற்காலிக நிறைவுக்குப்பின் அடுத்த இலக்கு தேவைப்படும்.
நான் இப்போது வரும் பல இளைஞர்களை கூர்ந்து பார்க்கிறேன். அவர்கள் அனைவரையுமே ஒரே சொல்லில் ’இளமையை இழந்தவர்கள்’ என்று வரையறை செய்வேன். அவர்களுக்கு இளமை என்பது மிகக்கடுமையான கல்விப்பயிற்சி மட்டும்தான். விளையாட்டேகூட இளமையில் ஒருவகை கல்விதான். இவர்களுக்கு விளையாட்டும் வெறும் போட்டிதான். ஆகவே கற்பதிலுள்ள இன்பத்தை அவர்கள் அறிந்ததே இல்லை. கல்வி என்பது போட்டி என்று ஆகிவிடும்போது கல்வியில் மகிழ்ச்சியே இருப்பதில்லை.
அவர்களை ‘இலக்கு கொண்டவர்கள் ஆனால் இலட்சியவாதம் என்பதையே அறியாதவர்கள்’ என அடுத்தபடியாக வரையறைசெய்வேன். ஆகவே அவர்களுக்குச் செயல் என்பதிலுள்ள நிறைவும் மகிழ்வும் தெரிந்திருப்பதே இல்லை. அவர்கள் எப்போதுமே பதறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இளமையிலேயே பெரிய இலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் அந்த இலக்கை தவறவிட்டதைப் பற்றி வருத்ததுடன் சொல்கிறார்கள். ஐஐடி படிப்பு, மருத்துவப்படிப்பு இப்படி எதையாவது. மிகப்பெரும்பான்மையினர் தங்கள் வாழ்க்கை எப்போதைக்குமாக பாழாகிவிட்டது என்னும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆட்சிப்பணித் தேர்வில் தோல்வியடைந்த சிலரை எனக்கு தெரியும். அரசுப்பணியில் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் வாழ்க்கை ஒரு பெருந்தோல்வி என்னும் எண்ணத்திலேயே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பேச ஆரம்பித்தாலே அதைத்தான் சொல்வார்கள்.
இன்று பத்துபேர் தற்கொலை செய்துகொண்டால் ஆயிரம்பேர் கடுமையான உளச்சோர்வில் தற்கொலையின் மிக அருகே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்கொலை பற்றி கற்பனை செய்தபடி, அந்த விளிம்பிலேயே நிரந்தரமாக வாழ்கிறார்கள். அவ்வாறு வாழவைப்பவை இன்றைய மாத்திரைகளும் போதையும்தான். அந்த சோர்வுக்குக் காரணம் உலகியல் இலக்குகளும் அதைநோக்கியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பதும்தான். இலக்குக்காகவே வாழ்பவர்கள் மற்ற அனைத்தையும் அதன்பொருட்டு இழக்கிறார்கள். அதை அடையவில்லை என்றால் வாழ்க்கையை இழந்ததாக உணர்கிறார்கள்.
இலக்கு ஒன்றுக்காகவே வாழ்க்கையைச் செலவிடுபவர்கள் தங்கள் இயல்பென்ன, சுவை என்ன என்று கண்டுகொள்வதில்லை. ஆகவே தங்களை மகிழ்விக்கும் எதையுமே அவர்கள் அறிந்திருப்பதில்லை. தங்களுக்குரிய அகப்பயணம் எதுவுமே அற்றவர்களாக இருப்பார்கள். அத்துடன் கற்பதன் இன்பம் இல்லாத ஒரு தளத்தில் நீண்டநாட்கள் முழு மூளையையும் செலவிடுபவர்களுக்கு நரம்புரீதியாகவே கூட ஏதாவது பாதிப்புகள் இருக்கலாமென எனக்கு தோன்றுகிறது. ஆகவே அவர்கள் மிக இயல்பாக உளச்சோர்வுக்குச் செல்கிறார்கள்.
இன்றைய உலகில் உளச்சோர்வு [Hyper Depression] நோய்க்கு ஆளாகிறவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உயர்குடியினர் மற்றும் உயர்நடுத்தர குடியினர். பெரும்பாலானவர்கள் நல்ல கல்வி பெற்று மற்றவர் பார்வையில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கென வைத்துக்கொண்ட இலக்கை அவர்கள் எட்டியிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் போட்டியாளர்களாக நினைப்பவர்கள் அவர்களை விட முந்திவிட்டதாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். இலக்கு ஒன்றுக்காகவே வாழ்வதனால் அவ்விலக்கு தவறுகிறது என்னும்போது வாழ்க்கை வெறுமையாகிவிட்டதாக உணர்கிறார்கள்.
அடுத்தபடியாகத்தான் மாணவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் உச்சகட்ட இலக்கே ஒரு தேர்வு, ஓர் இடம்தான் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் முழுமூச்சாகச் செயல்படவேண்டும் என்பதற்காக அதை மீண்டும் மீண்டும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி அவ்வெண்ணத்திலேயே வளர்க்கிறார்கள். அதை இழந்தால் எஞ்சுவதொன்றும் இல்லை என்று அவர்களுக்குச் சொல்பவர்கள் பெற்றோர்தான். பெரும்பாலானவர்கள் சமூகத்தின் கண்ணில் தாங்கள் வெற்றிபெற, தங்கள் குழந்தைகள் சமூகத்தை வெற்றிபெற இதைச் செய்கிறார்கள்.
இலக்குகள் கொண்டிருப்பவர் அனைவரும் அவ்விலக்கை அடையமுடியாது. தகுதி மற்றும் உழைப்பு போன்றவை ஒருபக்கம் இருக்க, வெறும் சந்தர்ப்பசூழலே கூட அதைத் தீர்மானிக்கும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இடங்கள் வரையறை செய்யப்பட்டிருக்கையில் மயிரிழையில் வாய்ப்பு தவறுவது மிக இயல்பு. அந்நிலையில் வெல்பவர்களைவிட தோற்பவர்களே மிகுதியாக இருப்பார்கள். வெறுமையை அடைந்து உயிரை மாய்த்துக்கொண்டால் அதற்கு முழுப்பொறுப்பும் அந்த பெற்றோரே. அருண்மொழி மருத்துவ நுழைவுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வேறுபாட்டில் தோற்றபோது தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லியிருக்கிறாள். பதினேழு வயதில். இன்று அதை எண்ணினால் அவளுக்கு சிரிப்புதான் வரும்.
பள்ளிநாட்களில் இலக்குகள் தேவைதான். அவை நம் முயற்சியை ஒருங்கிணைக்கும் என்பதும் உண்மைதான். இன்றைய வாழ்க்கை போட்டிமிக்கதாக இருப்பதனால் போட்டியைச் சந்திக்கும்பொருட்டு கடுமையான பயிற்சி எடுத்துக்கொள்வதையும் தேவையில்லை என்று சொல்லமாட்டேன்.வேறு வழியில்லை. ஆனால் அதன் எல்லைகளை நாம் உணர்ந்திருக்கவேண்டும், இச்சமூகம் அதை குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும். பெற்றோருக்கும் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.
சமூகம் போட்டியை உருவாக்கி தீர்ப்பளிக்கும் இரக்கமற்ற அமைப்பாக மட்டும் நின்றுவிடலாகாது. கொஞ்சமேனும் அரவணைக்கும்தன்மையும் அதற்குத்தேவை. உலகியல் இலக்குகளே ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. உலகியல் இலக்குகளில் வென்றவர்கள் எல்லாவற்றையும் அடைந்தவர்கள் அல்ல. தவறியவர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்களும் அல்ல. உலகியல் இலக்குகள் உலகியல் சார்ந்தவை மட்டுமே. அவை நான்கு விழுப்பொருட்களில் ஒன்றான ‘பொருள்’ என்னும் எல்லைக்குள் மட்டுமே நிற்பவை. பொருள் மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருள் இவ்வுலக வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கியமான இடம் வகிக்கிறது. ஆனால் அதன் பொருட்டு மற்ற மூன்றையும் இழந்தால் பொருளாலும் பயனில்லாமல் ஆகும்.
பொருள் மட்டுமே வாழ்க்கை என்று தன் குடிகளுக்குக் கற்பித்தது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய- அமெரிக்கச் சமூகம். அதன் விளைவாக பொருளியல்வெற்றி பெற்ற சமூகமாக அது ஆகியது. அதன்பொருட்டு அது ஒவ்வொரு தனிமனிதரையும் பொருள்வேட்டையாடுபவராக ஆக்கியது. அவ்வேட்டையில் ஆயிரம்பேர் கலந்துகொண்டால் ஒருவரே வெல்லமுடியும் என்னும்போது எஞ்சிய அனைவருக்கும் தோல்வியின் வெறுமையையே அதனால் அளிக்கமுடியும். அந்த அமைப்பின் பின்விளைவே உளச்சோர்வு. உலகிலேயே அதிகமாக உளச்சோர்வு மாத்திரைகளை உண்ணும் சமூகங்கள் அவை. உளச்சோர்வு மாத்திரை உற்பத்தி உலகின் மாபெரும் வணிகமாக ஆகிவிட்டிருக்கின்றது.
உளச்சோர்வு மற்றும் தற்கொலை நோக்கிக் கொண்டுசெல்வதில் பொருளுலகின் இலக்கு நோக்கிய போட்டிக்குச் சமானமான இடம் இன்று அகவுலகின் உறவுச்சிக்கல்களுக்கு உள்ளது. தமிழகத்தைவிட கேரளத்தில் இந்த அம்சம் மிக அதிகம். அகவுலகிலுள்ள உறவுகள் என்பவை ஒட்டுமொத்தமாக இன்பம் அதாவது காமம் என்னும் சொல்லுக்குள் அடங்குபவை. எல்லா உறவுகளும்தான். அவை இனியவை, மனிதனுக்கு இன்றியமையாதவை. ஆனால் அவை வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியே. அது இளமையில் தெரிவதில்லை. பலருக்கு முதுமை வரை புரிவதில்லை.
காதல், அன்பு என்பவை போன்றவை ஆழமான உணர்வுகள். ஆனால் மிகமிகக் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நின்றிருப்பவை. அந்த எல்லைக்கு வெளியே அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த எல்லைக்குள் நின்றிருக்கையில் அவையே வாழ்க்கையின் எல்லாமும் என்று தோன்றும். மிக உச்சகட்டமாக நாம் சொல்லும் பெற்றோர்பாசம் கூட மிகமிக எல்லைக்குட்பட்ட எளிமையான உணர்வுதான். ஒரு மனிதன் அன்புக்காக, காதலுக்காக, பாசத்துக்காக மட்டுமே வாழ்ந்தான் என்றால் அவன் மிகமிகச் சிறிய மனிதன். எந்த உறவாவது ஒரு மனிதனை முற்றிலும் கட்டிப்போடும் என்றால், எந்தப் பிரிவாவது மூன்றுமாதங்களுக்கு மேல் ஒருவனை சோர்வில் ஆழ்த்தும் என்றால் அவன் மிகமிகமிகச் சிறிய வாழ்க்கை வாழ்பவன்.
இன்றைய சூழலில் நாம் எடுக்கும் ஓர் இரட்டைநிலைபாடு அடுத்த தலைமுறையிடம் பெரும்குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. சென்றகாலகட்டத்தின் உளநிலைகளின் நீட்சியாக நாம் அவ்வப்போது தற்கொலைகளைக் கொண்டாடுகிறோம். நீட் தற்கொலையை ஓர் அரசியல்நிகழ்வாக ஆக்குகிறோம். ஈழத்துக்காக ஒரு பெண் எரிபுகுந்தால் அவளை கிட்டத்தட்ட தெய்வமாக ஆக்குகிறோம். மறுபக்கம் ஒரு மாணவர் இலக்கை தவறவிட்ட சோர்வில் தற்கொலை செய்துகொண்டால் அது பெரிய பிழை என்கிறோம். இளையோருக்கு அந்த வேறுபாடு தெரிவதில்லை.
ஒரு சூழலில் எது மையப்பேசுபொருளாக உள்ளதோ அது அனைத்து தனியுள்ளங்களையும் ஆட்கொள்கிறது. ஒரு பண்பாட்டுச்சூழல் தற்கொலை பற்றிப்பேசிக்கொண்டே இருந்தால் உளச்சோர்வில் இருப்பவருக்கு இயல்பாக தற்கொலை எண்ணம் வருகிறது. கொலையை போற்றி ஆர்வத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் சமூகத்தில் ஒர் எளிய தூண்டுதலிலேயே கொலை நடக்கிறது. தென்மாவட்டங்களில் இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்த டீக்கடையிலும் கொலைதான் பேசுபொருளாக இருக்கும். அன்றாடம் கொலை விழுந்தபடியும் இருக்கும்.
தற்கொலைகள் நிகழும் குடும்பங்களைப் பார்த்தால் அங்கே முன்னரும் தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். உதாரணம் என் குடும்பம். குடும்பச்சூழலிலேயே தற்கொலை பற்றிய பேச்சு இருந்துகொண்டிருப்பதே காரணம். ஆகவே தற்கொலையை எதன்பொருட்டும் விதந்தோதுவதை தவிர்க்கவேண்டும். தற்கொலை செய்துகொள்வது அனுதாபத்தை கொண்டுவரும் என தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணும் சூழலே தற்கொலைகளை நிறைய நிகழச்செய்கிறது. தற்கொலையை முன்வைத்து செய்யப்படும் அரசியல், தற்கொலையை வைத்து நிகழ்த்தப்படும் சமூக ஆய்வுகள் எல்லாமே தற்கொலைக்கான தூண்டுதல் காரணங்களே.
என் வாழ்க்கையின் பின்னணியில் பார்த்தால் தற்கொலைசார்ந்த கதைகளை அதிகமாக எழுதியிருக்கவேண்டியவன் நான். என் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டவர்கள். நானும் தற்கொலை மனநிலையுடன் இருந்திருக்கிறேன். ஆனால் என் எழுத்தில் நான் கண்டவற்றைப் பற்றியே எழுதுகிறேன்.
என் நோக்கில் தற்கொலை என்பது பாவம் ஒன்றும் அல்ல. அது ஒரு வீண்செயல். உற்றாருக்கு மீளாத்துயரை அளிப்பது. அதற்கு எவருக்கும் உரிமை இல்லை. என் பெற்றோர் எனக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்தார்கள் என்றே இன்று உணர்கிறேன். இன்று அவர்கள்மேல் எனக்கு பெரிய அன்போ அனுதாபமோ இல்லை. தற்கொலை ஒரே ஒரு தளத்தில்தான் ஏற்றுக்கொள்ளத் தக்கது. ஒரு மெய்யறிவர் தன் வாழ்க்கையை நிறைவு என உணர்ந்து, உடலை முடிவுக்குக் கொண்டுவருவது. அது சமணம், பௌத்தம், இந்து மதங்களிலுள்ள வழக்கம். அது தற்கொலை அல்ல,உடல்நீப்பு.
இன்றைய சூழலில் பொருளும் காமமும் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று சொல்லிக்கொண்டே இருப்பதொன்றுதான் வழி. அறம் என்று நூல்கள் சொல்வது ஒருவன் தன் வாழ்நாளில் கடைக்கொள்ளவேண்டிய மேலும் பெரிய பணிகளும் பொறுப்புகளும் அடங்கியது. இப்பிரபஞ்ச இயக்கத்தில் இசைவுகொண்டு, இங்கே தான் ஆற்றியே ஆகவேண்டிய செயல்களை ஆற்றுவது அது. சமூகப்பணி, அறிவுப்பணி, அதற்கும் அப்பால் செல்லும் பணிகள் பல இங்குள்ளன.
அவற்றில் இருந்து நம்மை விலக்கி பொருளிலும் காமத்திலும் மட்டுமே நிலைநிறுத்துவது நம் ஆணவம் மட்டுமே. வெல்லவேண்டும், பிறர்மேல் செல்வாக்கு செலுத்தவேண்டும், உடைமையுடன் இருக்கவேண்டும் என நம்மை ஆட்டுவிக்கும் விசை ஆணவமே. ஒருவன் ஒரு பாறையுச்சியில் நின்று தன்னைச் சுற்றியுள்ள காட்டை ஆணவத்தை சற்றேமறந்து நோக்கினான் என்றால்கூட இங்கே என்ன செய்கிறேன், எவ்வளவு அபத்தமாகத் துருத்திநிற்கிறேன் என உணர்வான். அந்த பெருவெளியுடன் இசைவுகொள்ள அவனுடைய அகம் துடிப்பதை உணர்வான். அவன் தன்னுடைய அகம்நாடும் செயல் வழியாகவே அதை அடையமுடியும் என்றும் உணர்வான்.அதுவே மெய்யின்பம். பொருள் இன்பம் எல்லாம் அதற்கு அடுத்தபடியாகத்தான் முக்கியமானவை. அந்த அறத்தை இயற்றத் தேவையான துணைகள் அவை.
அத்துடன், அனைத்தையும் கடந்துசென்று அடையும் முழுமை என ஒன்று உண்டு என நம் முன்னோர் ஈராயிரமாண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை வாழ்வில் திளைக்கையில் உணரமுடியாது. வாழ்வு நிறைகையில் அது நம் முன் வந்து உண்மை என தன்னைக் காட்டும். அப்போது அதை தவிர்க்கலாகாது. நம்முடைய எளிய தன்னலங்களும் ஆணவங்களும் அதற்குத் தடையாக ஆகக்கூடாது.
உண்மையில் தொல்பழங்காலம் முதல் இருந்துவரும் ஒரு மெய்யறிதலையே நாம் உணர்ந்து அடுத்த தலைமுறைக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. அது மனிதவாழ்க்கையின் விழுப்பொருள் ஒன்றல்ல, நான்கு என சொல்கிறது. இங்குள்ள நுகர்வுக்கலாச்சாரம், பொருளியல் முறைமை, அரசியல்கோட்பாடுகள் அனைத்துமே அதற்கு எதிரானவை. இங்குள்ள எல்லா ஊடகங்களும் நுகர்வுக்கலாச்சாரத்தை, போட்டிப்பொருளியலை, ஆதிக்க அரசியலையே சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதற்கு மாற்றாக சொல்லப்படும் எல்லாவற்றையும் இழிவுசெய்து கேலிசெய்து ஒதுக்கிக் கொண்டிருக்கின்றன.
ஏனென்றால் வெறிகொண்ட நுகர்வோராக, அதன்பொருட்டு கண்மூடித்தனமாக உழைப்பவராக, அதற்குரிய அரசியலை நம்புபவராக ஒவ்வொருவரையும் ஆக்குவதே அவற்றின் நோக்கம். அதனால் உளச்சோர்வடைந்து உடைபவர்கள் அச்சுழற்சி உருவாக்கும் வெறும் குப்பைகள், அவர்கள் அள்ளி அப்பாலிடப்படுவார்கள். சுழற்சி நடந்துகொண்டே இருக்கும். அதற்குரிய எல்லா கொள்கைகளும் கோட்பாடுகளும் அந்த அமைப்புகளால் சமைக்கப்படுகின்றன.
உண்மையில் இலக்கியங்களே கூட அத்தகைய நுகர்வுமனிதனை , உழைப்பு மனிதனை, அரசியல்மனிதனை, தனித்த மனிதனை உருவாக்கும் பொருட்டு செயற்கையாக படைக்கப் படுகின்றன. உயர்தர இலக்கியமேகூட இந்த பேரமைப்புகளால் மறைமுகமாக உருவாக்கப்படுகிறது. சென்ற நூறாண்டுகளில் மனிதனை தனிமையானவனாக கட்டமைக்கும் இலக்கியங்கள் முன்னிறுத்தப்பட்டன. அவை பரிசும் புகழும் பெற்று ஒவ்வொருவர் கைக்கும் வந்து சேர்ந்தன.
சென்ற நூறாண்டுகளில் புகழ் வழியாக நமக்கு கிடைத்த இலக்கியங்களை எண்ணிப்பாருங்கள். அவை மதம், ஆன்மிகம், இலட்சியவாதம் எல்லாவற்றையும் மறுத்து எள்ளிநகையாடின. குடும்பம், காதல், காமம் உறவுகள் அனைத்தையும் எளிய நுகர்வின்பங்களாக கட்டமைத்தன.நம் சிந்தனையை அவை இன்றும் ஆள்கின்றன. நாம் சொந்தச்சிந்தனை என நினைப்பவை பெரும்பாலும் இவ்வாறு நமக்கு அளிக்கப்ப்பட்டவை மட்டுமே.இன்றைய உலகின் உளச்சோர்வை உருவாக்கியதில் அந்த இலக்கியங்களுக்கு மிகமுக்கியமான பங்குண்டு.
அவ்வாறு ஊடகங்கள் வழியாக வந்துசேர்வனவற்றை விமர்சனமே இல்லாமல் ஏற்று, நம்பி, எங்கும் வந்து அதைச்சொல்லி இளிக்கும் பெருந்திரள் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. பெரிய சுழி போல அவர்கள் தாங்களும் சுழன்று மூழ்கி, தங்களைச் சூழ்ந்தவர்களையும் இழுத்துச் செல்கிறார்கள். ஆயினும் விடாப்பிடியாக இதைச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும். பொருளும் காமமும் மானுட வாழ்க்கையில் ஒரு சிறிய பங்குதான் வகிக்கின்றன. மானுட வாழ்க்கை ஒருவன் தானே கண்டடடைந்து தானே ஆற்றிநிறையும் அறத்தால் ஆனது.
ஜெ