26 ஆம் தேதியின் நிகழ்வுகள்

விஷ்ணுபுரம் அமைப்பு தொடங்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகள் இடைவிடாத செயலூக்கத்துடன் நிகழ்ந்த அரசியல்கட்சி சாராத இலக்கிய இயக்கம் வேறேதும் தமிழில் இல்லை. இதன் வெற்றிக்கு முதன்மையான காரணம், இது ஓர் இறுக்கமான அமைப்பு அல்ல என்பதுதான். திட்டமிட்டு உருவானது அல்ல என்றாலும் இதன் நெகிழ்வான வடிவம் மிக உதவியானது என்பதை பின்னர் கண்டடைந்தோம். இதற்கு தலைவர், பொருளாளர், செயலாளர் என பதவிகள் ஏதுமில்லை. எந்த பொறுப்பாளருமில்லை. அவ்வப்போது வசதிப்பட்டவர்கள் பொறுப்பேற்றுச் செய்கிறார்கள். அனைவருக்கும் இணையான இடம்தான். ஒரு பெரிய நட்புக்கூட்டமைப்பு மட்டும்தான் இது.

சமீபத்தில்தான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஓர் அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது, இந்தியாவில் அல்ல அமெரிக்காவில். அங்கே அவ்வாறு செயல்படவேண்டிய தேவை இருப்பதனால். இங்கே இன்னமும்கூட இது ஒரு நண்பர்கூட்டம்தான். இதில் தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள் அனைவருமே இதன் உறுப்பினர்கள் என்று கொண்டால் ஏறத்தாழ நாநூறுபேர் சேர்ந்த அமைப்பு இது என்று சொல்லலாம். நிதியளித்தும், விழாக்களில் பங்குகொண்டும், விவாதங்களில் ஈடுபட்டும் உடனிருக்கிறார்கள்.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்ந்து ஆண்டு தோறும் கோவையில் ஒரு விருதுவிழாவும், சென்னையில் குமரகுருபரன் விருதுவிழாவும், ஊட்டியில் குரு நித்யா ஆய்வரங்கும் நடத்துகிறோம். இதைத்தவிர புதியவாசகர் சந்திப்புகள் ஆண்டுக்கு குறைந்தது மூன்று. இரண்டு ஆண்டுகளாக குருபூர்ணிமா அன்று வெண்முரசுநாள் கொண்டாட்டம். அவ்வப்போது நூல்வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இவை தவிர தொடர்ச்சியான விவாதக்குழுமங்கள் நாலைந்து உள்ளன. லண்டனிலும் அமெரிக்க நகரங்களிலும் உள்ளவர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளன.

விஷ்ணுபுரம் அமைப்புடன் தொடர்புள்ள நண்பர்கள் வெவ்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக நடத்திவரும் தனி இலக்கிய அமைப்புகள் பல உள்ளன. அவர்கள் மாதந்தோறும் சந்தித்துக் கொள்கிறார்கள். இணையவழி தொடர்ச் சந்திப்புகளும் உள்ளன. என் இணையதளத்தில் சிலவற்றுக்கே அறிவிப்புகள் வெளியாகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எல்லா வார இறுதிகளிலும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்புடன் தொடர்புடைய இலக்கியநிகழ்வுகள் நாலோ ஐந்தோ தமிழகம் முழுக்க நிகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலும் எவற்றிலும் நான் கலந்துகொள்வதில்லை.

ஒரு சிறு முயற்சியாக ஆரம்பித்த இந்த இலக்கியச்செயல்பாடு ஓர் இயக்கமாக மாறிவிட்டிருப்பது நிறைவளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு க.நா.சு. ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என இதையே கனவுகண்டார். ஜெயகாந்தன் [இலக்கியவட்டம்] பிரமிள் [இன்னர் இமேஜ் வர்க்‌ஷாப்] ஜி.நாகரானன் [பித்தன்பட்டறை] சுந்தர ராமசாமி [காகங்கள்] என பல்வேறு முயற்சிகள் தமிழில் நடந்திருக்கின்றன. இன்றைய தொழில்நுட்ப வாய்ப்புகளால் அந்த கனவு நடைமுறையாகியிருக்கின்றது.

இந்த இயக்கத்தில் இருந்து உருவான அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை காண்கிறேன். எந்த இலக்கிய இதழை எடுத்தாலும் அதில் எழுதியிருப்பவர்களில் நேர்பாதியினர் இங்கிருந்து எழுந்தவர்கள் என்பது பெருமிதத்தை அளிக்கிறது. இச்செயல்பாட்டின் வெற்றிரகசியம் என்பது இரண்டுவிஷயங்கள்தான். ஒன்று, அரசியலை முற்றிலும் தவிர்த்துவிடுவது. இரண்டு, எந்நிலையிலும் எல்லா விவாதங்களும் தனிப்பட்ட நட்பு எல்லையை கடக்காமல் இருந்தாகவேண்டும் என்னும் கட்டாயம். சென்றகாலத்தில் பல இலக்கியச் செயல்பாடுகள் இவ்விரு காரணங்களால்தான் சிதைந்தன.

26-09-2021 அன்று மட்டும் பல இலக்கிய நிகழ்வுகள்.நீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்  கோவையில் நிகழ்கிறது.கடலூர் சீனு கலந்துகொள்கிறார். சென்னை நற்றுணை இலக்கிய அமைப்பு சிறில் அலெக்ஸுடன் ஓர் இலக்கியச் சந்திப்பை இணையத்தில் ஒழுங்கு செய்கிறது . உப்புவேலி பற்றி அவர் பேசுகிறார்.வெண்முரசு ஆவணப்படம் சிகாகோவில் வெளியாகிறது.வெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ

இதே நாளில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற இமையத்துக்கு ஒரு பாராட்டுவிழாவை பவா செல்லத்துரை ஒருங்கிணைக்கிறார். திருவண்ணாமலையில் நிகழும் அந்த விழாவில் நான் கலந்துகொள்கிறேன்.திருவண்ணாமலையில் பாராட்டுவிழா.

அடுத்தவாரமே 2-10-22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஈரோடு கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் ஒர் உள்ளரங்கக் கவிதை விவாத அரங்கு. இரண்டுநாட்கள் நிகழும் அந்நிகழ்வில் பத்து கவிஞர்களும் இருபது வாசகர்களும் கலந்துகொள்கிறார்கள்.நான் பேசாத பார்வையாளனாக மட்டும் கலந்துகொள்கிறேன். கவிஞர்கள் அரங்கு நடத்தி, விவாதத்தையும் நிகழ்த்துவார்கள்.

எல்லாவற்றிலும் முடிந்தவரை அனைவரும் கலந்துகொள்ளவேண்டுமென கோருகிறேன்

ஜெ

நீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்

நற்றுணை கலந்துரையாடல்

வெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ

திருவண்ணாமலையில் பாராட்டுவிழா

முந்தைய கட்டுரைபிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைஆட்கொள்ளும் கொற்றவை