எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பான ‘மாயப்பொன்’ -ஐ கவிஞர் பி. ராமன் மொழிபெயர்த்து மாத்ருபூமி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுப்பைப் பற்றிய மதிப்புரையை பிரசித்தா மனோஜ் எழுதியிருக்கிறார்.
மயக்கும் மாயப்பொன் ഊതിക്കാച്ചി മയക്കിയ ‘മായപ്പൊന്ന്’……
தமிழும் மலையாளமும் கலந்து ஒழுகக்கூடிய நாஞ்சில் நாட்டின் எல்லை கிராமங்களின் மனிதர்களைப் பற்றிய வாழ்வியல் சித்திரத்தை “மாயப்பொன்” தொகுப்பு மூலமாக ஜெயமோகன் படைத்திருக்கிறார். உணர்வுகள் உருகி வழியும், மகிழ்ச்சியான தருணங்கள் வழியாக அதை வாசகர்களுக்குக் கடத்தியிருக்கிறார். வாழ்க்கையின் அப்பட்டமான புறக் காட்சிகளை ஜெயமோகன் தன் அகக் கண்ணால் பார்க்கிறார். அதன் ஆழத்தை அறிந்து மானுடனின் அற்புதத் தருணங்களை தன்னுடைய எழுத்துக்களில் அவர் காட்சிப்படுத்துகிறார்.
இக்கதைகள் யாவும் கொரோனா நோயச்ச காலத்தில் எழுதப்பட்டதாகும். நோயச்ச காலத்தனிமையில் அவரின் படைப்பாற்றல் இரட்டிப்பாகியிருக்கிறது. எளிமையான ஓர் அறிமுகத்தில் துவங்கி அங்கிருந்து கதையைச் சொல்லி சொல்லி சிறிது சிறிதாக நம்மை மாயப்பொன்னின் ஒளிவீசும் தருணத்தை நோக்கி அவர் இட்டுச் செல்வதை நாம் இக்கதைகளில் பார்க்கலாம். தமிழில் எழுதப்பட்ட இக்கதைகளின் தனித்துவமும் உண்மையும் குறைவுபடாமல் அதே சுவையுடன் மலையாளத்தில் கொண்டு வரக்கூடிய கவிஞர் நமக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறார்.
பி.ராமனில் இருக்கும் ஒரு கவிஞனின் கண்கள் கதைசொல்லியின் சுவாசத்தைக் கூட கதைகளில் கண்டடைந்திருக்கிறது. அவரிலிருக்கும் மொழித்திறமையால் இந்தக் கதைகளை கவிதைகளாக்கி எந்த சிக்கலுமில்லாமல் அதை மலையாளத்தில் வடித்து எடுத்திருக்கிறார். கதையுலகத்திற்கு அறிமுகமில்லாத ஒரு கவிஞனை இந்த மொழிபெயர்ப்பின் மூலமாக புத்தம் புதிய ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்ல ஜெயமோகனின் இக்கதைகளுக்கு முடிந்திருப்பது மலையாளக் கதையுலகின் கனவையும் நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது.
முதல் கதையான ‘தேவன்’ (தமிழில்: “இறைவன்”) வாசித்து முடிக்கும் போது கண்களினின்று சிந்திய துளியானது இதயத்தின் ஆழத்திலிருந்து பெயர்ந்து விழுந்த ஏதோ ஒன்றுதான். மனிதனுடைய ஆத்மாவில் எரியும் தீ ஒன்று உண்டு. அது செயல்தீவிரத்தின் தீயேயாகும். உண்மையின் வழி நிற்கும் மனிதர்கள் தன்னை எரித்து சுடர் விடவும், அதற்காக தன்னை அர்பணித்துக் கொள்ளவும் தூண்டும் தீவிரம் நிறைந்த தீ அதுவாகும்.
தேவனும், மாயப்பொன்னும் பேசும் அந்த ஆத்மாவின் தீயில் இருந்து தான் எழுத்தாளனும் படைப்பின் பிரம்மாண்டத்தை எடுத்து சமைத்திருக்கிறார். “இப்ப நாம கிணறு தோண்டுதோம்லா? மண்ணுக்கு அடியிலே இருந்து தண்ணி அதிலே ஊறி வருதுல்லா?” என்பது தான் படைப்புச் செயல்பாட்டைப் பற்றிய மாணிக்கம் ஆசாரியின் எளிமையான பார்வையாகும். கதையில் வரும் ‘இசக்கியம்மை’ என்னும் கதாப்பாத்திரம் சுவற்றில் தெய்வமாகி எழுந்தருளும் பகவதியைவிட தீவிரமாக படைக்கப்பட்டுள்ளது. அது அனுபவத்தின் வலிமையால் உருவான கதாபாத்திரம். தான் இழந்ததை இசக்கியம்மைக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும் கனிவும் திறனும் மாணிக்கத்திற்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. யாராலும் கண்டுகொள்ளப்படாத மனிதரின் அகத்தை ஊடுருவிப் பார்க்கும் கடவுள்தன்மையை தன் படைப்புத் திறனின் மூலம் சில கலைஞர்கள் அடைகிறார்கள் என்பதை மாணிக்கம் என்ற கதாப்பாத்திரத்தின் வழி கதைசொல்லி சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.
‘பாப்பாவின் சொந்த யானை’. ஒரு குழந்தை தான் இழந்து போன வீட்டை மீட்டெடுக்கும் கதை. யானை விளையாட்டு மூலம் எப்படி ஒரு மனிதன் கொரானா வீடுறைவு காலத்தில் சிறைபட்டிருக்கிறான் என்பதை உணரக்கூடிய தருணம் இக்கதையில் சொல்லப்படுகிறது. குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைத் திரும்பப் பெறுவதும், அவர்களை யானைப் பாகனாய் இருந்து கட்டுப்படுத்துவது, மந்திரவாதியாக மாறி டப்பாவில் அடக்குவது போல இனிமையான காட்சிகளாக அமையப் பெறுகின்றன. இந்த கதை நிகர்வாழ்க்கை அனுபவம் போல சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குட்டிக் கதை வழியாக மிகப்பெரிய தரிசனத்தை உணர்த்தியிருக்கிறது.
‘ரயில்’ (தமிழில்: தீவண்டி) கதையும் கடந்து போன ஒரு காலத்தின் கதையாகும். ஜான் என்ற சினிமா வெறியனின் பைத்தியக்காரத்தனமும் கனவுகளும் நிறைந்த வாழ்க்கையின் எச்சங்களைப் பற்றி பேசும் கதையாக இது விரிகிறது. கோழிக்கோடு பேச்சுவழக்கின் அழகில் இக்காவும் அப்துல் அஜீஸும் நடத்தும் உரையாடலாக இக்கதை சொல்லப்படுகிறது. நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கி விரிந்து இறங்கி மயங்கிச் செல்ல வாசகனை இது அழைக்கிறது. கெஸ்ஸு பாடல்கள், ஜானின் நடிப்பு பாவனைகள், மது பாட்டில்கள் நிறைந்த ஒரு சிதறுண்ட உலகம் ஆகியவற்றை நமக்குக் காட்டுகின்றது. உள்நின்று தீ நுரைத்துப் பொங்கி வழியும் மனிதர்களின் வாழ்க்கையையும் அதன் வெதுவெதுப்பையும் இங்கே காணலாம். இதன்மூலம் திரைப்பட உலகிற்குப் பழகிப்போன ஓர் உலகத்தை கதைசொல்லி வழி நினைவு கூர்கிறார்.
‘வண்ணம்’ ஒரு கதையா அல்லது ஒரு வரலாற்றுப்பயணமா என்று நம்மால் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் பயணத்தின் வழியிடையே கண்டு சிலாகித்துப் பழக்கமான கோவில்கள், வயல்கள் மற்றும் உப்பளங்கள் ஆகியவற்றைச் சொல்லும் பழங்கதைகளின் உணர்வுகளுக்கு ‘வண்ணம்’ கதை நம்மை அழைத்துச் செல்கிறது. மகாராஜா வீரகேரளவர்மாவுக்காக கப்பம் வசூலிக்க அயக்கரை கிராமத்திற்குச் சென்ற சர்வாதிகாரர், போர்வீரர்கள் மற்றும் அதை செலுத்த வழியற்று நிர்கதியான கிராமவாசிகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இக்கதை. விவசாய நிலத்தைப் பற்றி தெரியாமல் வரி வசூலிக்கும் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவும் புத்திசாலித்தனமான கிராம மக்களின் சுவாரஸ்யமான வரலாற்றினூடே பயணித்து அமுதகலம் ஏந்திய பூமாதேவி சமேதராக அமர்ந்திருக்கும் விஷ்ணு அமிர்தாமயன் வாழும் கோவிலின் பெருமையை நோக்கி கதைசொல்லி நம்மை கொண்டு செல்கிறார். சிலைகளாக வேடமிட்டு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பித்த கிராமவாசிகள் மற்றும் அவர்களின் ராஜாவின் கதை இது.
‘குருவி’ கதையின் ஆழத்திற்குச் சென்றால், இயற்கையில் வாழும் உயிரினங்களுக்கென தனித்தன்மைகள் இருப்பதைப்போல சில மனிதர்களுக்கும் இருப்பதைக் காணலாம். மாடன் பிள்ளை தான் விரும்பிய வேலையையல்லாது தொலைபேசித் துறையில் கடைமட்ட ஊழியராக வேலை செய்பவர். தனது சொந்த ஆசைகள் மற்றும் ரசனையைத் தியாகம் செய்ததன் விளைவாக, ஒரு முழுக்குடிகாரனாக மாறி, தனது வேலையில் இருந்து இடைநீக்கத்தையும் பெறுகிறார். அதே நேரத்தில் ஓவியனும் சிற்பியுமான ஒரு கலைஞனைத் தனக்குள் சுமந்தலைகிறார். மனிதன் உள்ளுணர்வோடு பிறந்தவன். அதைத் தடுக்க முயற்சிக்கும் எதையும் சமாளிக்கும் ஒருவன் அவனுக்குள் இருப்பான். அது சாத்தியமற்றுப் போகும் போது அவன் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறான். அவனுடைய வாழ்க்கை யாருக்காகவும் இல்லாமல் தன் ஆன்மாவின் மகிழ்ச்சிக்கு மட்டுமேயானது என்று மாடன் பிள்ளை மூலம் கதைசொல்லி கூறுகிறார்.
நிறபொலி (தமிழில்: சூழ்திரு) ஒரு திருமண விழாவின் தனிச்சிறப்புகளைக் கொண்டிலங்குகிறது. அனந்தன் என்ற பையன் தன் வகுப்பு தோழிகளான இரட்டையரின் அக்காவின் திருமணத்திற்குச் சென்ற கதையாக இக்கதை அமையப் பெறுகிறது. அருமையான நாட்டுப்புறத் திருமணக் கொண்டாட்டத்தைப் பற்றிய தகவல்கள் காணக்கிடக்கின்றன. இந்தக் கதை விவரிப்பது திருமண விருந்தின் சிறப்பையும் அதன் சுவை வகைகளையும் ஆகும். ஓவியம் போல, கவிதை போல, தனித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களால் மட்டுமே சுவையின் கொண்டாட்டத்தை உருவாக்க முடியும். வெவ்வேறு படைப்புச் சுவைகளை ஒரே போலப் பாவிக்கும் சமன்வயப்பார்வை ஒரு திருமண விருந்தின் கொண்டாட்டத்தில் வெளிப்படுகிறது. ‘நாதஸ்வர’ இசையின் பரவசமும் விருந்து சுவையின் அதே பரவசத்துடன் வெளிப்படுத்தப்படுவது சிறப்பு.
‘ஏதேன்’ சொர்க்கத்தைக் கனவு கண்டு அதை அடையமுடியாத மனிதர்களின் கதை. தனது சொந்த நிலத்தை விற்று, ‘விவசாயத்தை’ ஒரு பெரிய தொழிலாக மாற்ற வெளிநாடு புறப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. ஆனால் அங்கிருந்த மகிழ்ச்சியான கள்ளமில்லாத பூர்வகுடி மக்கள் அவனின் உழைப்பின் பயனைத் துய்க்கின்றனர். இறுதியில் மீட்ட இயலாத ஓர் இழப்புடன் ஏதேனை விட்டு வெளியேறிய ஒரு நிராதரவான மனிதனின் கதையாக இது அமையப் பெறுகிறது.
‘தேனீ’ கதையும் படைப்பாற்றலின் தாள இடைவெளிகளுக்குள் நடக்கும் உரையாடலைத் தான் சொல்கிறது. சுசீந்திரத்தைச் சேர்ந்த ஒரு நகை ஆசாரியின் கைவினைத் திறன் மற்றும் அவர் வழிபடும் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையின் நினைவுகளில் உருவாகிய கதை இது. நகைத் தொழிலில் நிபுணராக இருந்தவர் அவர். தேனீ போல ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு நகரும் வேலைத் திறமும் அர்ப்பணிப்பும் அவர் வேலையில் இருந்தது. அதைப் போலவே தான் இசை அவருள் விழும் தருணங்களும் இருந்தன. பழைய தென் கேரளாவில் அமைந்த புராதனமான சுசீந்திரம் கோவிலின் தெருக்களில் முழங்கும் ஒலியும், அதன் அழகும் இக்கதையின் சாரமாகும்.
ஒரு திருமண வீட்டிற்கு ‘அணஞ்சியம்மை’ என்ற கிழவியின் வருகையே ‘கோட்டை’ சிறுகதை. பண்டுவச்சி அணஞ்சியின் மனித உடல் பற்றியுள்ள அப்பழுக்கற்ற நேரடியான கேலிகளும் தத்துவநிலைபாடுகளும் நாம் ரசித்து வாசிக்கும் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘சுகு’ என்ற பையனின் இளமை அறிதலின் ஆர்வத்தினூடே இந்தச் சிறுகதை முன் நகர்கிறது.
‘மாயப்பொன்’ சிறுகதை சாராயம் காய்ச்சும் தொழிலை படைப்புத் தீவிரத்துடன் செய்யும் நேசையனின் நேர்மை மற்றும் அவர் தயாரிக்கும் பொருட்களின் தரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவருக்குத் தன் சொந்த வாழ்க்கையை விட அவரது படைப்பு தான் முக்கியம். ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரவர் உச்சம் என்ற ஒன்று உள்ளது. நேசையனுக்கு அது அவன் காய்ச்சும் சாராயத்தின் மிகச் சிறந்த ஒரு துளியில் உள்ளது. அந்த தருணத்திற்கான காத்திருப்பு தான் அவரைப் போன்ற படைப்பாளிகளின் வாழ்க்கை என்று இந்த கதையில் எழுத்தாளர் கூறுகிறார். ‘மாயப்பொன்’ தான் அவர்களுக்குக் காத்திருக்கும் அற்புதம். இந்தக் கதையின் பயணம் அந்த மாயையை அடிப்படையாகக் கொண்டது.
இவ்வாறு வெவ்வேறு தளங்களில் சொல்லப்பட்டு, நாட்டுப்புறக்கதைகளின் பின்னணியில் வாசகனை ரசிக்க வைத்து சிந்தனையைத் தூண்டும் பத்து கதைகளின் தொகுப்பு இதுவாகும்.
எல்லா கதைகளிலும் அடிப்படையாக இழையோடும் படைப்பாற்றலின் சக்தியும் படைப்பாளியின் ஆன்மாவின் நெருப்பும் எவ்வளவு தீவிரமானது என்பதை கதைசொல்லி அறிவுறுத்துகிறார். வட்டார வழக்கின் அழகு குறையாமல் கவிஞர் பி. ராமன் மொழிபெயர்த்திருப்பதால் வாசிப்பின்பமும் குறைவுபடாமல் இக்கதைகளில் இருக்கிறது.
ஜெயமோகனின் இந்தக் கதைத் தொகுப்பு வாசகர்களின் மனதை ‘மாயப்பொன்’ போல் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழில்: ஜெயராம் மற்றும் இரம்யா