பழங்காசு, ஒரு கடிதம்

நாணயங்களுடன் ஓர் அந்தி

அன்பின் ஜெ.! வணக்கம்

நாணயங்களுடன் ஓர் அந்தி – மணி அவர்களைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தபோது இத்துறையில் தொடர்புடைய ஒருவரைப் பற்றி தங்களின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்று எண்ணியே இதை எழுதுகிறேன்.

பழங்காசு சீனிவாசன் திருச்சியைச் சேர்ந்தவர். கோட்டாறு மணி ஆர்வம் கொண்டிருப்பதைப் போல பழங்கால நாணயங்களை சேகரிப்பவர் மட்டுமல்லாமல் அதற்கென்று காலாண்டிதழையும் நீண்டகாலம் நடத்தியவர். பிறகு அதுவே முன்னொட்டாக “பழங்காசு”ம் அவருடன் சேர்ந்துவிட்டது. கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் திறனுள்ளவ அய்யா, ஏறக்குறைய முப்பதாயிரம் நூல்களை 50 ஆண்டுகளாக சேர்த்து வைத்துள்ளார். திருச்சி பெல் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக சேர்ந்து இறுதியில் பொறியாளராக ஓய்வு பெற்றிருக்கிறார். சொந்த ஊரில் இருந்தவரை இவ்வளவு பெரிய சேமிப்பை பராமரிக்க முடிந்திருக்கிறது. இப்பொழுது பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை ஆவடியில் மகளின் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நாணயங்கள், நூல்களை வேறொரு வாடகை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறபோதிலும் அது எத்தனை நாட்கள் தொடரும் என்று சொல்லமுடியவில்லை. அந்த செலவை இவருக்குள்ள சொற்ப வருமானத்தில் ஈடுகட்ட முடியவில்லை.

ரோஜா முத்தையா அவர்களிடமிருந்த சேமிப்பை க்ரியா ராமகிருஷ்ணன் போன்ற சிலர் முன்கையெடுத்து அவரின் சேமிப்புகளுக்கு ஒரு மறுவாழ்வு அளித்துள்ளனர். “ஞானாலயா” கிருஷ்ணமூர்த்தியும், பல்லடம் மாணிக்கமும் சொந்த கட்டிடங்களில் இவற்றை நிலைபெறச் செய்ததைப் போல “பழங்காசு” சீனிவாசன் அவர்களிடம் உரிய நிதியாதாரம் இல்லை. சீனிவாசன் அய்யாவுக்கு ஏற்கனவே 75 வயதை கடந்துவிட்டவர். தான் இருக்கும்வரை எப்படியேனும் பத்திரப்படுத்தி விடுவதில் உறுதியாக உள்ளார். அவ்வளவு பெரிய சேகரிப்பு – அவருக்குப் பிறகு  என்னவாகும் என்கிற கவலை உள்ளது.

ஏற்கனவே பழைய நூல் வியாபாரிகள் குறிப்பிட்ட நபரின் இறந்தவுடன் பல பாகங்களாக பிரித்து விற்று இருப்பதை கண்டு கண்ணீர் விட்டிருக்கிறேன். சீனிவாசன் அய்யாவின் நூல்கள், இதழ்கள், நாணய சேமிப்புகள் பெறுமதியானவை. உரிய இழப்பீட்டை குடும்பத்தாருக்கு அளித்து அவற்றை பொது அமைப்புகள், அரசு முன்வந்தால் பழைய அரிதான நூல்கள், நாணயங்கள் பாதுகாப்பட்டு விடும்.
இதன்பொருட்டு தனிப்பட்ட முறையில் முயற்சித்தபோது தூர கிழக்கு நாட்டில் தொழில் செய்யும் பெருவணிகர் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தன் சொந்த (குக்)கிராமத்தில் அமைத்துள்ள நூலகத்திற்கு ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து கொள்வதாக கூறினார். அதேபோல அரபு நாட்டில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையில் பெருந்தொற்று திடீரென்று அனைத்தையும் முடக்கி போட்டுவிட்டது.

இதுபோன்ற நூலகங்கள் சென்னை போன்ற போக்குவரத்து வலைப்பின்னல் கொண்ட பெருநகரம் ஒன்றில் அமைவதே முதல் தெரிவாக இருக்க வேண்டுமென்று சீனிவாசன் விரும்புகிறார். இந்த நூல்கள், நாணயங்கள் பல இடங்களில் கொஞ்சங் கொஞ்சமாக சிதறிப் போவதைவிட எங்கேனும் இலங்கைக்காவது போய் நல்லபடியாக, பத்திரமாக இருக்குமென்றால்கூட போதுமென்று ஒருமுறை வெறுத்துப் போய் கூறினார்.
இதன் பொருட்டு எனக்கு அறிமுகமுள்ள ஊடகத் துறை நண்பர்களிடம் பேசியதில் (நமது  Jeyamohan.in வலைதள வாசகர்களுக்குத் தெரிந்த) ரியாஸ் நீண்ட நேரம் நடத்திய உரையாடல் இந்து தமிழ்த்திசை நாளேட்டில் பழங்காசு சீனிவாசன் அய்யாவைப் பற்றி நடுப்பக்க கட்டுரை வந்திருந்தது. முனைவர் இளங்கோவனும் தன் வலைப்பூவில் இதை கவனப்படுத்தியுள்ளார். பட்டுக்கோட்டை கூத்தலிங்கம் முன்பு வந்து கொண்டிருந்த “புதிய பார்வை” இதழில் எழுதியிருந்தார். ஆனால் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை.

பழங்காசு இதழ் தொகுப்புகள் முழுவதும் என்னிடமுள்ளன.1974-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பதற்கென மதுரையில் கூடி முடிவு செய்த 35 பேர்களில் சீனிவாசன் அய்யாவும் ஒருவர். பல்லாண்டுகளாக குறிப்பாக மாணவர்களுக்கு கல்வெட்டு முதலிய தொல்லெழுத்துக்களைப் வாசிப்பதற்கான பயிற்சியை பயிலரங்குகளில் நடத்தி வந்திருக்கிறார். காசுகள் பற்றிய சேகரிப்பில் தன்னைச் சேர்ந்தவர்களையும் வளர்த்துவிட திருச்சியில் இருந்தபோது நாணயவியல் கழகத்தை நிறுவியிருக்கிறார். இப்பயிற்சியில் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பழங்காசுகள் ஆகியவற்றின் அடிப்படைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

சங்ககால நாணயங்கள், பல்லவர், பிற்காலச் சோழர், பாண்டியர், மொகாலயர், ஆற்காட்டு நவாப் ஆகியோர் வெளியிட்ட நாணயங்களையும் நமது நாட்டில் வணிகத்தின் பொருட்டு வந்த ஐரோப்பியர் நாட்டினரான ஆங்கிலேய, டச்சு, பிரெஞ்சு, டேனிஷ், போர்த்துகீசிய கம்பெனிகளின் காசுகளையும் வரலாற்று குறிப்புக்களோடு தொகுத்து வைத்திருக்கிறார். ஆங்கில-இந்திய அரசு வெளியிட்ட காசுகள், பணத்தாள்கள் மட்டுமல்லாது சமஸ்தான நாணயங்களையும், குறிப்பாக திருவிதாங்கூர், புதுக்கோட்டை, கட்ச், ஜெய்ப்பூர், ஹைதராபாத் சமஸ்தான நாணயங்களையும் வைத்திருக்கிறார்.

அச்சடிப்பதில் பிழையான அல்லது அச்சுப் பொறியில் ஏடாகூடமாக சிக்கி அச்சிடப்பட்ட நாணயங்கள் பலவும் இவரிடம் உள்ளன. ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட காசுகள், மையத்தில் விலகி அச்சிடப்பட்ட காசுகள், இரு பக்கமும் அசோக சிங்கம் அச்சிடப்பட்ட காசுகள், ஓரங்கள் மட்டும்ம் இரு முகப்பும் அச்சிடாது விடப்பட்ட காசுகளென்று வேடிக்கையான நிலையில் பல காசுகள் இவரிடம் உள்ளன.
காசுகளைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் காசுகளைப் பற்றி நிறைய அறிந்தும் வைத்துள்ளார். பழங்கால நாணயங்களைப் பார்த்தால் புதையலை கண்டுபிடித்தவரைப் போல குதூகலிக்கும் இவர் பழமையான ராஜராஜ சோழன் காலத்து தங்க நாணயம், மலையமான் காசுகள் போன்றவற்றையும் வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது பர்மா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அப்போது ஜப்பான் அரசு பர்மாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் கரன்சிகளையும், சிங்கப்பூரில் புழக்கத்தில் இருந்த டாலர் கரன்சிகளையும் அச்சடித்து வெளியிட்டது. போர்க் காலங்களில் இப்படி வெளியிடப்படும் கரன்சிகளுக்கு அவசர கால பணம் என்று பெயர் என்று ஒரு பேராசிரியரைப் போல் விளக்கம் அளிக்கிறவர் சீனிவாசன் அய்யா.

கி.மு. 300 முதல் வெளிவந்த அரிய செப்பு, வெள்ளி தங்க நாணயங்கள் முதல் 1471-ல் கன்னட அரசன் கோனேரி ராயன் என்பவர் வெளியிட்ட காசு தமிழ் எழுத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடுகளான கல்வெட்டு ஆண்டறிக்கை தொகுதிகளும், தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதிகளும், எபிக்ராபிகா இண்டிகா தொகுதிகளும் இவரிடம் உள்ளன. கி.பி.1601 முதல் 2000 ஆண்டு வரையிலான நான்கு நூற்றாண்டு காலத்தில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட காசுகள் மற்றும் பணத்தாள்களின் புகைப்படங்களுடன் கூடிய அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட அட்டவணைத் தொகுப்புகள், மிகப் பெரிய எட்டுத் தொகுதிகளாக இங்கு உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாணயவியல் நூல்களும் வைத்திருக்கிறார்.

கோயில் கட்டடக் கலை, சிற்பக் கலை நூல்களுக்கும், தொல்லியல் மற்றும் அகழ்வாய்வுத் தொடர்பான நூல்களுக்கும் பஞ்சமில்லை. மாக்ஸ் முல்லர் தலைமையிலான ஏராளமான அறிஞர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த The Sacred Book of East – 50 பெருந்தொகுதி கொண்ட நூல் தொகுப்பினை தனி நபர் ஒருவரிடம் நான் கண்டது சீனிவாசன் அய்யாவிடம் மட்டுமே. அதனால்தான் மிகவும் கடினமான நூல் எனப்படும் விஷ்ணுபுரம் அப்படியொன்றும் எனக்குப் படாமல் போனது என் நல்லூழாகவும் அய்யா போன்றவர்களின் தோழமையுமே காரணம் என்பேன். இப்பொழுது ஓ.ரா.ந.கிருஷ்ணன் வெளியிட்ட மஜ்ஜிம நிகாய தமிழ் மொழிபெயர்ப்பு 5 முழு தொகுதிகளில் பௌத்த மறைஞானம் போன்றவை வந்திருப்பது உரிய கவன ஈர்ப்பை கோரி நிற்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. அவ்வப்போது ஆவடி சென்று அய்யாவை சந்திப்பது, பேசி வருவது என் மனதுக்கு பிடித்த செயல்களில் ஒன்று. அது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்குமென்று கூறமுடியவில்லை.

பின்வரும் சுட்டிகள்  :
https://www.hindutamil.in/news/opinion/668739-pazhangasu-srinivasan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

ஒரு மனிதர் – முப்பதாயிரம் புத்தகங்கள்

http://muelangovan.blogspot.com/2013/09/blog-post_25.html
நூல் தொகுப்பாளார் : பழங்காசு சீனிவாசன்

https://aggraharam.blogspot.com/2017/10/blog-post.html

கொள்ளு நதீம், ஆம்பூர்.

அன்புள்ள கொள்ளு நதீம்,

உண்மையில் இன்னொரு பண்பாட்டிலென்றால் பெரும்செல்வமாக மாறக்கூடிய சேகரிப்புகள் இவை. சேகரிப்பவரை கோடீஸ்வரராக்கியிருக்கக் கூடியவை. ஆனால் தொடர்ச்சியாக இவ்வகையான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நூல் சேகரிப்பாளர்கள், அரும்பொருள் சேகரிப்பாளர்கள், தொல்பொருள் சேகரிப்பாளர்கள் அவர்களின் இறுதிக்காலத்தில் அச்சேகரிப்பை என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள். வாழ்நாள் முழுக்க உழைப்பு செலவிட்டு, நேரம் செலவிட்டு, பணம்செலவிட்டு சேர்த்த பொருட்கள் எந்த மதிப்பும் இல்லாதவையாக சூழலால் கருதப்படுவதைக் கண்டு ஆழ்ந்த விரக்தி கொள்கிறார்கள். அவற்றை எவரிடமேனும் ஒப்படைத்துவிட்டுச் செல்ல முயல்கிறார்கள்.

தமிழகம் அளவுக்கு தன் பண்பாடு, மொழி பற்றி பீற்றல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை. உலகிலேயே இதைப்போல பண்பாட்டுத்தற்பெருமை பேசும் ஒரு சமூகம் இருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் கூடவே பண்பாட்டுக் கல்வியில், பண்பாட்டைப் பேணுவதில் கதமிழகமே இந்தியாவிலேயே முழுமையான அக்கறையின்மையும் அறியாமையும் கொண்ட மாநிலம். முழுக்கமுழுக்க அறியாமை. அறியாமையின் விளைவான மொட்டைப்பெருமிதம். கீழ்த்தரமான பொய்களை தம்பட்டமடித்துக்கொள்ளும் வெட்கமில்லாமை.

தமிழ்ப்பண்பாட்டின் பெரும்செல்வம் என்று சொல்லத்தக்க ஒரு சேகரிப்பைப் பற்றி நீங்கள் எழுதும் இவ்வரிகள் ஆழ்ந்த கசப்பையே அளிக்கின்றன. ஏனென்றால் நான் எழுதவந்த காலம் முதல் வெவ்வேறு அறிஞர்கள், ஆய்வாளர்கள், சேகரிப்பாளர்கள் இந்நிலையில் இருந்ததை கேட்டிருக்கிறேன். நாடெங்கும் முழங்கும் போலிப்பண்பாட்டுப்பெருமிதக் கூச்சல்களுக்குச் செலவிடப்படும் தொகையின் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தால் இவற்றை முறையாகப் பேணிவிடலாம்.

ரோஜா முத்தையா அவர்களின் சேகரிப்பு சிகாகோ பல்கலையால் எடுத்துக்கொள்ளப்பட்டமையால் தப்பித்தது. தமிழகத்தில் எந்த அமைப்பும், எந்த ஆதரவுப்புலமும் இம்மாதிரியான செயல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய நாணயச்சேகரிப்பாளர்களை தொடர்புகொள்வதே உசிதமான செயலாக இருக்கமுடியும். அவர்களுக்கே இவற்றின் அருமை புரியும். இந்தியாவை விட்டு வெளியே சென்றாலே போதும், இச்சேகரிப்புகள் முறையாகப் பேணவும்படும். அதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைசெயல், தடைகள்
அடுத்த கட்டுரைஜே.ஜே.சிலகுறிப்புகளைப் பற்றி சில குறிப்புகள்