ஜெயமோகனின் ‘பூவிடைப்படுதல்‘ உரையின் காட்சிப்படிமமாக உள்ளத்தில் இருப்பது குறிஞ்சி பூத்த மலைவெளி. அந்த உரையில் ‘சீக்கிரமே உங்கள் இருவருக்கும் நடுவில் ஒரு சிறு பூ மலர்வதாக!’ என்று ஒரு வரி வரும். யதிகை பிறந்தபின், இந்த மூன்று ஆண்டுகளில், பலமுறை மெல்லிய புன்னகையுடன் இவ்வரியை நினைவு கூர்ந்திருக்கிறேன். பூவிடைப்படுதலின் இன்பத்தையும் அறிந்த நாட்கள் இவை.
12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, இவ்வருடம் குடகு மலையில் பூத்திருக்கிறது. மடிக்கேரி அருகே மாந்தல்பட்டி மலைச்சரிவில். கொரோனா கால அலைக்கழிப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் நடுவில் ஒரு சிறு பயணம். யதிகாவிற்கு முதல் பயணம். ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து கிளம்பி மடிக்கேரி வந்தடைந்தோம். 4 மணிக்கெல்லாம் மேகங்கள் தரையிறங்கி, மலைகளையும் மறைத்திருந்தது. அரைச்சாரளம் வழியே மிதக்கும் மேகங்களை பார்த்து அமர்ந்திருந்தோம். மறுநாள் காலை மடிக்கேரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாந்தல்பட்டி நோக்கி பயணமானோம்.
செல்லும்வழியில், ஒரு வளைவில், அடர்ந்த மரங்களுக்கு நடுவில் நீல மலர்களுடன் சிறு செடிக்கூட்டம் தென்பட்டது. அதுதானா என்று எண்ணுவதற்குள்ளாகவே கடந்துவிட்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு, மீண்டும் நீலத்தின் இமைநேரத் தொடுகை. அங்கிருக்கிறதா கற்பனையா என்ற உள மயக்கம். கூர் கொண்டிருந்தன விழிகள். மரக்கூட்டங்களுக்குள்ளிருந்து திறந்தவெளி நோக்கிச் சென்ற இன்னொரு வளைவில் கண்டுகொண்டேன். ‘ஏய் குறிஞ்சீ’ என்ற அலறலுடன் வண்டியை நிறுத்தச் செய்தேன்.
நீல மென்துகில் அணிந்த மலைக்குன்று. காடே மலர்ந்திருந்தது. கோடி மலர்கள், கோடி விழிகள், கோடிப் புன்னகை. ஊதா நிறத்திலான சிறிய பூக்கள். வாசனை ஏதும் இல்லை. நாங்கள் வருவதற்கு முன் மென்மழை பெய்திருந்தது. பூக்களில் நீர்த்துளிகள் இருந்தன. மெல்லிய காற்றில் செடிகள் அசைந்து கொண்டிருந்தன. மழைமேகங்கள் சூழ்ந்த வானமாதலால், மிகக்குறைந்த ஒளியே இருந்தது. பனி மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது. தேனீக்களும் வண்டுகளும் பூக்களை சுற்றிய வண்ணம் இருந்தன. சிறிது நேரம் மலர்களை நோக்கி அமர்ந்திருந்தோம். மலர்வெளியில் கொஞ்சம் நடந்துவிட்டு, சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்டபின், மாந்தல்பட்டி முனை நோக்கிப் பயணித்தோம்.
கரடுமுரடான மண்பாதையாகையால், காரை நிறுத்திவிட்டு, ஜீப்பில் செல்ல வேண்டி இருந்தது. சிறிது நேரத்தில் மழை துவங்கிவிட்டது. சுமார் 10 கிலோமீட்டர், மழையில் மலர்வெளியை நோக்கியபடி பயணம். வழியெங்கும் குறிஞ்சி பூத்திருந்தது. மேலே செல்லச் செல்ல, செடிகளின் செறிவு குறைந்து வந்தது. பனி படர்ந்து, நோக்கும் தூரமும் குறைந்து வந்தது. உச்சியை அடைந்ததும், ஜீப்பிலிருந்து இறங்கி, 300 மீட்டர் நடந்து முகட்டை அடைய வேண்டும். அதுவரை மென்மையாகப் பெய்த மழை, சட சடவென கொட்ட ஆரம்பித்தது. மழைக்கான ஆடைகளை அணிந்து கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம்.
இருவரின் கையையும் பிடித்துக்கொண்டு யதிகா தாவித் தாவி ஏறினாள். மேலே சென்றதும் பலமான காற்றும் சேர்ந்து கொண்டது. முகில்கள் முழுவதுமாக எங்களை சூழ்ந்துகொண்டன. விரைவான காற்றும் மழைத்துளிகளும் மழையாடைகளில் அறைந்து ஒலி எழுப்பின. காற்றின் வேகத்தால் உந்தப்பட்ட நாங்கள், அருகிருந்த சிறு பாறையில் சாய்ந்துகொண்டோம். யதிகா கொஞ்சம் பயந்துவிட்டாள். பூனைக்குட்டி போல உடலுடன் ஒட்டிக் கொண்டாள். உச்சியிலிருந்து கீழே எதுவும் தெரியாத படிக்கு பனிசூழ்ந்திருந்தது. பட்டுப்போன மரம் ஓன்று மட்டும் அங்கிருந்தது. சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, இறங்கி வந்தோம்.
ஜீப்பில் ஏறி, சற்று தாழ்வான மலைச்சரிவை அடைந்து, குறிஞ்சி பூத்த இடத்தில் வண்டியை நிறுத்தினோம். நிதானமாக மழையையும் மழையில் பூக்களையும் காணும் வண்ணம் அமைந்திருந்தது அவ்விடம். மழையில் நனைந்தபடியே, மலர்வெளியை நோக்கி நின்றிருந்தேன். காற்றில் ஆடும் குறிஞ்சிச்செடிகளும், மழைக்கால்களும், காற்றின் இசையும் இணைந்த ஒரு நடனம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இம்மழையும், காற்றும், பூவும், காடும் நானே என்றிருந்தேன்.
ஜீப்பிலிருந்து யதிகை அழைத்தாள். மெல்ல விடுபட்டு, அந்நடனத்தை சிறு காட்சித்துளியாக கைபேசியில் அடைத்துக் கொண்டு வண்டியில் வந்தமர்ந்தேன். உடல் எடையற்றிருந்தது, மனம் சலனமற்று, சிறு துள்ளலுடன் இருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தோம். விழி வெறுமே வேடிக்கைபார்த்துக் கொண்டு வந்தது. உள்ளாழத்திலிருந்தென அவ்வரி எழுந்து வந்தது – ‘விசும்புஆடு ஆய்மயில்.’
கபிலரின் வரி. சங்கச்சித்திரங்களில் இப்பாடல் குறித்து ஜெயமோகன் எழுதியிருப்பார்.
கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை
வடுக்கொலப் பிணித்த விடுமுரி முரற்சிக்
கைபுனை சிறுநெறி வாங்கி பையென
விசும்ஆடு ஆய்மயில் கடுப்ப யானின்று
பசுங்காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ தோழி பலவுடன்
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபட காணாது
பெருங்களிறு பிளிரும் சோலை அவர்
சேண்நெடுங் குன்றம் காணிய நீயே.
(நற்றிணை 222, கபிலர், திணை – குறிஞ்சி)
வாழைக் கூட்டம் அடர்ந்த
மலைச் சரிவில் உறங்கும்
பிடி யானையின் மீது
மேகம் படரும்போது
துணைவியைக் காணாத
ஆண் யானை பிளிரும்
சோலைகள் நிரம்பிய
அவனது குன்றைக் காண வசதியாக
கரிய அடிமரமுள்ள
வேங்கை மரத்தின்
சிவந்த பூக்கள் நிரம்பிய கிளையில்
தடம் பதியும்படி கட்டப்பட்ட
அலங்கார ஊஞ்சலில்
உன்னை அமரச் செய்து
இடைக் கச்சையில் பற்றி
மெள்ள ஆட்டிவிடட்டுமா?
விண்ணிலாடும் மயில்போல
வானில் நின்று பார்த்துக் கொள்!
(சங்கச்சித்திரங்கள்)
விண்ணிலாடும் மயில் என வானில் நின்று நோக்கிய கணநேரம்.
ஜீப்பிலிருந்து இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டிருந்தது. அருகே இருந்த சிற்றுண்டிச்சாலையில், நனைந்த உடைகளிலிருந்து கதகதப்பான ஆடைகளுக்கு மாறினோம். காரில் பெங்களூரு நோக்கி பயணமானோம். உடல் மெல்ல களைப்படைந்து கொண்டிருந்தது, மனமும் எண்ணங்களேதுமற்று, புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளவியலா நிலையை அடைந்திருந்தது.
அவ்வப்போது மேகங்கள்
மனிதர்களுக்கு ஓய்வு
நிலவை நோக்குவதிலிருந்து.
(பாஷோ)
பூவிடைபடுதலும் மேகத்திரைகளும் இரு எல்லைகளுக்கிடையேயான ஊசலாட்டமும் அளிப்பது இந்த ஓய்வைத்தானா?
*
“மௌண்டைன் ஃபுல்லா பூப்ப்பா! நல்லா இருந்துச்சுல்ல…. எவ்வளவு பூப்பா…” என்று அரற்றிக்கொண்டே வந்தாள் யதிகை.
“தேங்க்ஸ் மா” என்றாள்.
“எதுக்குடி?” என்றேன்.
“நீ தானே பாப்புவெ பூபாக்க கூட்டிட்டு வந்தே. பாப்புவுக்கு அம்மாவெ ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி, இரு கரங்களையும் கழுத்தைச் சுற்றி வளைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
மணி எங்கள் இருவரையும் நோக்கிப் புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான். அவன் பன்னிரு வருடங்களுக்கு முன் எனக்கு எழுதிய வரி மனதில் மின்னி மறைந்தது –
“திசையெங்கும் பரவும் நீலம் உன் பிரியம்!”
கிருஷ்ணப்பிரபா
அன்புள்ள கிருஷ்ணா,
இந்த நாட்களின் அருமையை உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாம் நம் நினைவுகளில் நீடிக்கும் வாழ்க்கையை வாழ்ந்த காலம் முடிந்து இன்னொருவரின் நினைவுகளில் நீடிக்கும் இன்னும் பெரிய ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். குழந்தையில் குடியேறி நம் உடல் வாழும் இந்தக் காலகட்டத்தைக் கடக்கிறோம்.
வாழ்த்துக்கள்
ஜெ
படம் ராதா எந்ந பெண்குட்டி
பாடல் பிச்சு திருமல
இசை கே.ஜே.ஜாய்
பாடகர் ஜெயச்சந்திரன்
காட்டுக்குறிஞ்ஞி பூவும்சூடி
ஸ்வப்னம் கண்டு மயங்ஙும் பெண்ணு
சிரிக்காறில்ல,
சிரிச்சால் ஒரு பூங்குழலி
தளிரும் கோரி குளிரும் கோரி
நூறும் பாலும் குறியும் தொட்டு
நடக்கும் பெண்ணு!
கரயாறில்ல!
கரஞ்ஞால் ஒரு கரிங்குழலி
கோபிக்காறில்ல
பெண்ணு கோபிச்சால் ஈற்றப்புலி போலே
நாணிக்காறில்ல
பெண்ணு நாணிச்சால் நாடன்பிட போலே
தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம் துள்ளி மேளம் துள்ளிவா
தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம் துள்ளி மேளம் துள்ளிவா
பாடாறில்ல இவள்
பாடிப்போயால் தேன்மழ பெய்யும்
ஆடாறில்ல இவள்
இவள் ஆடிப்போயால் தாழம்பூ விடரும்
தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம்துள்ளி மேளம்துள்ளிவா
தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம் துள்ளி மேளம் துள்ளிவா
காட்டுக்குறிஞ்சி பூ சூடி
கனவு கண்டு உறங்கும் பெண்
சிரிப்பதில்லை அவள்.
சிரித்தால் ஒரு பூங்குழலி
தளிர் அள்ளி குளிர் அள்ளி
நறுஞ்சுண்ணமும் மட்டிப்பாலும் சந்தனமும் சூடி
நடக்கும் பெண் அவள்.
அழுவதில்லை அவள்
அழுதால் ஒரு கருங்குழலி
சினப்பதில்லை
பெண் சினந்தால் வேங்கைப்புலி போல.
நாணம் கொள்வதில்லை
பெண் நாணம்கொண்டால் பெண்மான் போல.
மங்கலம்சூடிய பெண்ணே நீலிப்பெண்ணே
தாளம் துள்ளி மேளம்துள்ளி வா
இவள் பாடுவதில்லை
பாடிவிட்டால் தேன்மழை பொழியும்
ஆடுவதில்லை
ஆடநேர்ந்தால் தாழம்பூ விரியும்
மங்கலம்சூடிய பெண்ணே நீலிப்பெண்ணே
தாளம் துள்ளி மேளம்துள்ளி வா
[பாடல் உண்மையில் வயநாட்டில் தோன்றும் குந்திப்புழா என்னும் சிறிய ஆற்றைப்பற்றி வர்ணனை]