ஆசிரியருக்கு வணக்கம்,
நீங்கள் நலமா?
உங்கள் புனைவுக் களியாட்டு கதைகளைப் படித்து குறிப்புகளை எழுதிக் கொண்டு வருகிறேன் (தங்களுடன் நான் உரையாடியது நினைவிருக்கும் என நினைக்கிறேன். அதன் விளைவு எனக் கூட இதைச் சொல்லலாம்). அப்படி எழுதியதில் இது நன்றாக இருக்கிறது என நான் நினைத்தது தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இது என்னை மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது.
முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வர வர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப் பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டம் ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொறுத்தவரை).
இரண்டாவது தளம் நேர்மறையான செயல்கள் செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம் எளிதாக எதிர்மறையான விஷயங்கள் நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்ப்பித்தல் போன்ற விழுமியங்கள் மீது சந்தேகம் எழுவதால் வரும் அச்சம்/பதற்றம், அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். காந்தியைப் போல. எப்படியாவது அவர்களை/அதை ஒழித்துவிட்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும். இல்லை என்றால் எப்படி இந்த எதிர்மறை பண்பில், சாதாரணத்தில் பன்றி போல படுத்து உருள முடியும்
மூன்றாவது தளம் பெண்கள் சார்ந்தது. இதுவும் ஒருவகையில் காமத்துடனே இணைத்துப் பார்க்கலாம். ஆணின் அகங்காரத்தை சீண்டும் பெண்ணை தாங்கி கொள்ள முடியாதவனாகிறான் ஆண். ஒருவேளை அகங்காரம் புண்பட்டுவிட்டாலும் அப்படித்தான் போல. ராமன் எப்படி சீதையை தீக்குளிக்க வைத்தானோ அப்படித்தான் அந்த காட்டுமாட்டையும் அந்த ஊர்மக்கள் செய்தார்கள்.
நான்காவது தளம் விழுமியங்கள் சார்ந்தது. காட்டுப்பசு காட்டின் தெய்வம். அதனை ஊருக்குள் கொண்டுவருவதென்பது தீங்கு விளைவிக்கும் என பூசாரி சொல்கிறான். அந்த பசு மாமிசம் உண்கிறது. தன்னைப் புணர்ந்த காளைகளை அடித்து உண்ணுகிறது. அதனாலே எல்லோரும் அதனிடத்தில் பயம் வருகிறது. குறிசொல்லுபவள், கதிர்மங்கலம் வீட்டுப் பெண்கள் எல்லோருக்கும் அது பெண்தெய்வமாகத் தெரிகிறது ஆனால் ஊரின் மற்ற எல்லோருக்கும் மாடு ரத்தம் உறிஞ்சும் காடேரியாகத் தெரிகிறது. அதனை எரித்து மகிழ்கிறார்கள். ஒருவகையில் இந்த காட்டுப்பசும் முதலாமன் தானே. தன்னை பலிகொடுத்து ஊரைக் காக்கிறது. அதனாலே அது தெய்வமாகிறது. வேறு என்ன செய்யமுடியும் பலிகொடுத்த பின்?
மறுவாசிப்புக்கு உட்படுத்தினால். இன்னும் நிறைய தளங்கள் திறக்கும் என நினைக்கிறேன்.
நல்ல இலக்கிய வாசகனாக வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி
மகேந்திரன்.
***