பிரான்ஸிஸ் கிருபா, அஞ்சலி – லாஓசி

பிரான்சிஸ் கிருபா… இலக்கிய அறிமுகம் கிடைக்கும் முன்பே அறிமுகமான கவிஞர். இணைய வெளியில் அதிகம் பகிரப்படும் வரிகள் இவருடையவை. அத்தகைய அறிமுகம் இருந்தும், அவரது கவிதைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. நேற்று அவர் காலமான செய்தி அறிந்தவுடன், மிக நெருக்கமான ஒருவரை இழந்த தவிப்பு… அவரது வரிகளின் மூலம் அவருடன் சிறிது பொழுதை கழிக்க வேண்டும் என மனம் விரும்பியது. அவரது தொகுதிகள் எதுவும் கிண்டிலில் கிடைக்கவில்லை. எனவே இணையத்தில் தேடி வாசிக்க தொடங்கினேன்… கிட்டத்தட்ட 2009ல் இருந்து அவரது வாசகர்கள் பகிர்ந்திருந்த வரிகளுடன் நேற்றைய இரவு விடிந்தது.

அவரது கவியுலகம் இணைந்து முயங்கும் மூன்று வேவ்வேறு உலகங்களால் ஆனது…

“கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது…
ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது!”

என அவளிடம் இறையும் போதும் சரி,

“உன்னை உன்னிடம் மட்டுமே கேட்பேன் கடவுளிடம் கூட அல்ல” என நவிலும் போதும் சரி பெண்ணை, காதலை சுற்றி நகர்கிறது அவரது உலகம். நெருப்பைத் தத்தெடுத்து வளர்க்கும் அவள், அங்கு பிரகாசமான இருளாகவும் இருக்கிறாள்.

“உறக்கத்தில் உதிரும்
சிறு புன்னகை
உயிரைப் பிழிகிறதே
ஏன் வாழ்வே ?”

என்பதில் அவரது வாழ்வாக இருக்கும் அவளிடம் நெருங்க அவளின் அனுமதி கிடைக்கும் என தெரிந்தும் அவரது அனுமதி அவரை அனுமதிக்க மறுக்கிறது.

காதலின் உச்ச தீவிரத்தின் உலகிலிருந்து பிரிந்து வாழ்வின் வலிகளால் மட்டுமே நிறைந்த ஒரு உலகை அடைகிறார்.

அங்கு, பிரியத் தெரியாத ஐந்து விரல்களையுடைய கரத்தை பிரியத்தோடு நீட்டும்போது பற்றிக் குலுக்கிவிட்டுப் பிரியும் மனிதர்களிடையே, ஆயிரம் சுத்திகளால் சூழப்பட்ட ஆணியை ரட்சிக்க வேண்டுகிறார். “கண்ணீர் துளிகளும்……..விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை வேறு சட்டென்று நிறுத்த வேண்டிய நிலையிலும் வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களை பகிர்கிறார்.

தனித் தனியே செல்லவும் தெரியாமல்
பின்னிப் பிணையவும் முடியாமல்
தொட்டும் விலகியும்
தொடர்ந்து செல்கின்றன
தபால்காரனின்
சைக்கிள் தடங்கள்.

வலிகளை பகிர்ந்தாலும், வாழ வழி சொல்லாமலும் இல்லை அவர்….

ஒரு வாழைப்பழத்தைப் போல
ஒரு நாளின் தோலை உரிக்க
உன்னால் கூடுமெனில்
நீ வாழத் தோதானதுதான்
நீ வாழும் உலகம்.

“இறுதியாக அவனை அவனே கைவிட்டான். அதற்குப் பிறகுதான் நிகழ்ந்தது அற்புதம்” , “சலிப்பையும் ரசிக்க முயலும்போது தொடங்கி விடுகிறது சகிக்கமுடியா வியப்பு.” போன்ற வரிகளில், தத்துவார்த்தமாகவும் வாழ்வை அணுகுகிறார். ஆனால், அவை தத்துவமா, அல்லது நிதர்சனத்தின் கசப்பா என்ற கேள்வி எழாமல் இல்லை.

வாழ்வின் வலியிலும், தனிமையிலும் பாறையை உண்டு பசியாறுகிறார், அவர் ஓரிரவு விரித்த பாயில் மீதமிருந்த இடத்தில் படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம். ஆம், முதல் இரண்டு உலகங்களின் பகுதியாகவும், தன்னளவில் தனி உலகமாகவும் அவரது கவிதைகளில் எழுகிறது இயற்கை. அங்கு பறவைகளும், மரங்களும், கடலும், மர நாற்காலியும்… ஏன் காபி கோப்பையிலிருந்து எழும் ஆவி கூட சிந்திக்கின்றன.. சிந்தித்ததை அவருடன் பகிர்கின்றன.

முத்தமிடும் பறவைக்கு மீனை பிடித்துக் கொடுக்கும் கடலின், கிழவனை வைத்து சூதாடும் பூவரச மரங்களின், தன்னையும் செல்லமாக தோளில் ஏந்தி வருடினால் என்ன என கேட்கும் மர நாற்காலியின் குரலாய் அவரது கவிதைகள் வெளிப்படுகின்றன. காபி கோப்பையில் இருந்து எழுந்து நடனமிடும் ஆவி ஒரு நேர்கோடு கிழிக்க படும் பாட்டை பேசுகின்றன.

பறவைகளை பலர் நினைத்து பார்க்கிறார்கள் பறவைகளை யாருமே பறந்து பார்ப்பதில்லை என கவலை படுபவரின் கவிதைகளை அவரது வார்த்தைகளை கொண்டே வர்ணிக்கலாம் என தோன்றுகிறது.

“என் கவிதைகளில் மொழியின் சிலிர்ப்பு இருப்பதாக நம்புகிறேன்”  என ஒரு பேட்டியில் கூறுபவர், கவிமொழியில்,

“இருந்தும் இங்கே ஏன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்றால் உயிர்த்தெழும்
இந்த சொற்களுக்காகத் தான்
அதன் பொய்யான
மெய் சிலிர்ப்புக்காகத்தான்”

என கூறுகிறார்.

ஆம், அந்த சிலிர்ப்பு தான் அவரது கவிதைகளின் அடிநாதம்!

சிறகுகளைச் சுமந்தபடி
தரையில் நடப்பவனை
உங்களுக்குத் தெரியும்
என்ன செய்வதென்று
எனக்குத்தான் தெரியவில்லை
உறக்கத்தில் அழுபவனை.

லாஓசி

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

முந்தைய கட்டுரைசுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தள்