ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
அன்பின் ஜெ
வணக்கம். பிரான்சிஸ் கிருபாவின் அஞ்சலி வாசித்தேன். உடன் பயணித்து துக்கத்தில் பங்கெடுத்ததாக உணர்ந்து அழத்தொடங்கிவிட்டேன்.
நேற்று ஒரு சம்பவம் நடந்திருந்தது, ஒருமுறை பிரான்சிஸின் கவிதை தொகுப்பை விற்பனைக்கு எடுத்திருந்தேன்.
நண்பரிடம் அவர் பற்றி அறிமுகம் செய்து புத்தகம் விற்பனையில் உள்ளதாகக் கூறினேன். கொஞ்ச நேரம் யோசித்தவர், முகநூலில் யாரும் அந்த நூலை பற்றி பேசினார்களா என கேட்டார். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. இக்கேள்வி என்னைக் கோவப்படுத்தியது.
எதிரில் இருக்கும் ஒருவன் சொல்வதை விட முகநூலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
நேற்று அந்த நண்பர் அழைத்திருந்தார். அன்று நான் சொல்லும் போதே புத்தகத்தை வாங்கியிருக்க வேண்டும். இன்று முகநூல் முழுக்க பிரான்சிஸ் கிருபாவின் முகங்கள் இருப்பதை சொல்லி புத்தகம் கைவசம் உள்ளதா என்று கேட்டு வருந்தினார்.
ஒரு கவிஞன் இருக்கும் போதே வாசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அந்தப் பாக்கியத்தை நீங்கள் தவறவிட்டீர்கள் என்று சொல்லி கைவசம் புத்தகம் இருந்தும் இல்லையென்றேன்.
உங்கள் அஞ்சலியை வாசித்ததும் இதனை பகிரத் தோன்றியது.
அன்பும் நன்றியும்
தயாஜி
அன்புள்ள ஜெ,
பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி” நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல். புனைவுகளால் நம்மை கதைகளத்துக்குள் இட்டுச் செல்கிறது நாவல். கனவில் வரும் தேவகுமாரன் சுமந்த சிலுவையை பிரான்சிஸ் சந்தன பாண்டி சுமக்க நேர்கிறது காதலால். சத்ராதியால் பீடிக்கப்பட்டு மனப் பிறழ்வில் நினைவுகளால் வாழும் பாண்டிக்கு மருத்துவம் பார்க்கும் நிகழ்வுகளால் முடியும் முதல் பாகம்.
இரண்டாம் பாகமோ பாண்டியின் அக்கா வயதுள்ள அமலாவோடு வரும் அளவுகடந்த அன்பில் பயணிக்கிறது. அவர்களுக்கிடையில் இருப்பது அன்பிற்கும் காதலுக்கும் இடையேயான கண்ணி. பெண் துறவிக்காக பயிற்சியிலிருக்கும் அமலா கடல் அலையைப் போல நெருங்கி பாண்டியிடமிருந்து விலகுகிறாள்.
மூன்றாம் பாகத்தில் சாராவை திருவிழாவில் காண்கிறான். தன் அத்தையின் சாயலை ஒத்த அவள் மீது தீரா காதலில் அலைகிறான் ஆனால் இறுதியில் அவளும் கன்னியாஸ்திரி ஆகிறாள். பாண்டி பித்தேறி கிடப்பதோடு முடிகிறது கன்னி. பாண்டி வாழ்வில் அமலா, சாரா, விஜிலா என கன்னியர்களின் தாக்கம் அதிகம். ஆனால் நேசித்த கன்னியர்களோ தேவகுமாரனுக்கு சேவை செய்யச் செல்வதால் சிலுவையை நிரந்தரமாக சுமக்கும் தேவகுமாரனாகிறான் பாண்டி.
பிரான்சிஸ் கிருபா கவிஞராதலால் வார்த்தைகள் எல்லாம் வானவில்லாய் விழுகின்றன. கடலும் தேவாலயமும் கதாபாத்திரங்களாக உலவுகின்றன. படிக்கும் போதே கண்களில் கடல் தெரிகிறது. கிருபாவின் கவித்துவ வரிகளில் சில
* இருளை அடிக்க ஓங்கிய பிரம்பு போல இருந்தது டியூப்லைட்
* தண்ணீரில் நடந்து போனவனின் பாதச்சுவடுகள் துடுப்பற்ற படகுகளாக அலைந்தன.
* பாதமளவு பருத்த மீனொன்று நீர் நிலை தேடி நிலத்தில் துள்ளிச் சென்றது போல் குருத்து மணல் பரப்பில் சுவடுகள் புதைந்து பதிந்து கிடக்கிறது.
* மாலைக்கண் வியாதியில் கூரை விளக்குகள் மங்கலான ஒளியைப் பரப்பியிருந்தன.
* தேவாலய கோபுரங்கள் வானத்தில் எதையோ எழுதப் போகும் பென்சில்களாக சீவி வைக்கப்பட்டிருந்தன அதன் உச்சியில் ஏறி விளக்கைப் பற்ற வைப்பதை விட ஒரு நட்சத்திரத்தை அதில் இறக்கி வைப்பது சுலபம்.
வார்த்தைகளெல்லாம் வானவில்லாய் வந்து விரிகிறது கிருபாவின் வானில்.
ஒரு நாவலில் என்னை உறங்கவிடாமல் செய்தவனே எப்படி ஒரு நாளில் உறங்கிப் போனாய்…..
செல்வராஜ்
திசையெட்டும் தமிழ்
பட்டுக்கோட்டை
அன்புள்ள ஜெ
பிரான்ஸிஸ் கிருபா அவர்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து அவருடைய கன்னி நாவலில் கையெழுத்து வாங்கியிருக்கிறேன். திடீரென்று அந்தக் கையெழுத்து எத்தனை முக்கியமானதாக ஆகிவிட்டது என்னும் ஆச்சரியம் ஏற்பட்டது. நான் சந்தித்தபோதே உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது.
ஒரு கவிஞர் என்ற வகையில் அவருடைய வாழ்க்கை பற்றியெல்லாம் நான் பேச நினைக்கவில்லை. அவருடைய பழக்கவழக்கங்கள் எல்லாம் எனக்கு முக்கியமில்லை. அவற்றை கொண்டாடுவதோ அல்லது இகழ்வதோ சமமானதுதான். அவருக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. மனச்சிக்கல்களை அவரே சொல்லியிருக்கிறார். அவருடைய கவிதை அந்த இருட்டிலிருந்து அவர் தேடித்தேடித் தவித்த ஒளியை காட்டுகிறது. நமக்கும் அந்த ஒளிதான் முக்கியமானது. ஆகவேதான் அவர் நமக்குரிய கவிஞர்
அன்புடன்
ஆர்.எஸ்.
ஜெ
புத்தகச் சந்தையில் வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் வந்திருக்கிறார். திரும்ப வருவார் எனச் சொன்னார். வெளியேறி காத்திருந்தேன்.
அப்போது ஒரு இளைஞன் சிரித்தபடியே வந்து என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என விசாரித்தார்…. நான் காடு, மணற்கடிகையை காண்பித்தேன். அவரது தோற்றத்தை கண்டு கொஞ்சம் எச்சரிக்கையோடே சம்பாஷித்தேன்.
“கன்னி புத்தகம் வாங்குங்க அண்ணா என்றார் நல்ல புத்தகம்” …என்றார்.
“யார் ரெகமண்ட் செய்திருக்காங்க?” என்றேன்.
“நான்தான்” என்றார்.
“நீங்க யார்?”என்றேன்
”நான் பிரான்சிஸ் கிருபா” என்றார்.
சிரித்த படியே மறுபடி உள்ளே போய் கன்னியை வாங்கினேன். அந்த வருடத்தின் அற்புதம் வாங்கிய எந்த புத்தகமே சோடையல்ல.
சுப்ரமணியம் ரமேஷ்