சுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்

ஒரு தொடக்கம், அதன் பரவல்

சுக்கிரி குழுமம் -கடிதம்

சுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு

அன்புள்ள ஜெ ,

நலம்தானே? சென்ற சனிக்கிழமை (11.09.2021) அன்று புனைவுக் களியாட்டின் “வரம்” சிறுகதை கலந்துரையாடலோடு சுக்கிரி இலக்கியக் குழுமத்தின் நூறாவது கலந்துரையாடல் நிகழ்வு நிறைவுற்றது. கடந்த பிப்ரவரி 2 அன்று தளத்தில் வெளியான கப்பல்காரர் ஷாகுல் ஹமீது அண்ணாவின் கடிதத்திலிருந்துதான் சுக்கிரி குழுமத்தைப் பற்றி அறிந்தேன். வீடடங்கு காலத்தில் Zoomஇல் இயங்கும் இலக்கியக் கூடுகை என்பது ஒரு நல்ல வசதியான பொழுதுபோக்காக அமையும் என்று நினைத்துதான் அந்த வாரம் நடைபெற்ற “தங்கப்புத்தகம்” சிறுகதைக் கலந்துரையாடலில் இணைந்தேன். அதுதான் என் முதல் இலக்கியக் கலந்துரையாடல் அனுபவம். அந்த அனுபவமே மிகப்பெரிய அதிர்ச்சிதான்.

இலக்கியக் கலந்துரையாடல் என்றால் நான்கு பேர் நான்கு விதமாக கதையின் மையக்கருத்தைப் பற்றி ஏதாவது பேசுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அதற்குமேல் என்னிடம் கல்லூரியில் பொட்டலம் கட்டிக்கொடுத்த ரோலண்ட் பார்த்தின் “Death of the author” வேறு கொஞ்சம் மிச்சம் இருந்தது (உண்மையாகவே சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தில் ரோலண்ட் பார்த், ஃபூக்கோ எல்லாம் இருக்கிறார்கள்). அதை கதைக்குள் பொருத்தி ஒரு சுழற்று சுழற்றிவிட்டால் போதும், அத்தனை பேரும் அசந்துவிடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே சென்றால் அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு என்னைவிட நன்றாகவே ரோலண்ட் பார்த்ஸையும் உங்களையும் தெரிந்திருந்தது. அவர்கள் முன்வைத்த ரசனைகளும் வாசிப்புகளும் என் வாசிப்பைவிட பல மடங்கு நுட்பமானதாகவும் கதையில் நான் அறியாத பல தளங்களை வெளிக்கொணர்வதாகவும் இருந்தது. (அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஒரு முக்கியமான விஷயமே எனக்கு தெரியவந்தது. ரோலண்ட் பார்த்தே இலக்கிய விமர்சகர்தானாம். அவருடைய கோட்பாட்டை கடன்வாங்கித்தான் சட்டத்தில் பயன்படுத்துகிறார்களாம். இதைத்தானே என்னிடம் முதலில் சொல்லியிருக்கவேண்டும்?)

அன்று என் திட்டம் படுதோல்வி அடைந்திருந்தாலும், அன்றைய கலந்துரையாடல் எனக்கு பல திறப்புகளை அளித்தது. ஒரு படைப்பு எத்தனை தளங்களை கொண்டிருக்கமுடியும் என்பதையும், அவற்றை அறிய ஒரு வாசகன் எத்தனை நுட்பமான ரசனையும் உழைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் எனக்கு உணர்த்தியது. அன்று முதல் தொடர்ந்து முப்பது வாரங்களாக சுக்கிரியின் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.

இந்த முப்பது வாரங்களில் எத்தனையோ முறை, இந்த கதையில் அப்படி என்ன வாசிப்பை நிகழ்த்திவிடமுடியும்? என்ற ஆர்வத்துடன் சென்று, இதை இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா? என்ற ஆச்சரியத்துடன் மீண்டிருக்கிறேன். “அருகே கடல்” கலந்துரையாடலில் பழனி ஜோதி sir முன்வைத்த வாசிப்பை கலந்துரையாடலின் முடிவுவரை முழுவதுமாக விளங்கிக்கொள்ள இயலாமல் தவித்து, மறுநாள் விழித்தபொழுது “இன்று என் அறையில் நிறைவது, கடலைப் புணரும், காற்றுணரும் தடையின்மைகள்” என்ற கவிஞர் மனுஷ்யபுத்திரன் சாரின் கவிதையாய் அது துளங்கி வந்தது ஒரு அசாத்தியமான அனுபவம்.

இப்படி இந்த கலந்துரையாடல்களில் ஒவ்வொரு வாரமும் எவ்வளவோ கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அங்கு யாரும் எதையும் கற்பிப்பதில்லை. எந்த சித்தாந்தமோ, கோட்பாடோ, வாசிப்புமுறையோ முன்னிறுத்தப்படுவதில்லை. அங்கு நிகழ்த்தப்படுவது மிக எளிமையான ஒன்றுதான். எவருடைய தனி அகங்காரமும் முன்னிருத்தப்படாமல் இலக்கியம் சார்ந்த உரையாடல் நிகழ்வதற்கான ஒரு நட்பார்ந்த சூழல் அங்கு உருவாக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் மூத்த வாசகர்களும், என்னைப்போன்ற ஒரு சாதாரண தொடக்கநிலை வாசகனும் தொடர்ந்து உரையாடும் சூழல் அங்கு அமைக்கப்படுகிறது. ஒரு படைப்பு சார்ந்த என் வாசிப்பையும், என்னைவிட குறைந்தது நான்கு மடங்கு அதிக வாசிப்பு கொண்ட மூத்த வாசகர்களின் வாசிப்பையும் நான் ஒப்பிட்டுக்கொள்ள அங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அப்படி என் வாசிப்பில் நிகழ்ந்த பல பிழைகளையும், நான் செல்ல வேண்டிய தொலைவையும் உணர்ந்த தருணங்கள் ஏராளம்.

இந்த முப்பது உரையாடல்களில் சில பயங்கரமான அனுபவங்களும் உண்டு. சிறகு, கணக்கு, மணிபல்லவம் கதைகளின் கலந்துரையாடல்கள், “தீவிர” இலக்கிய வாசிப்பு என்ற அடைமொழி எப்படி உருவாகி வந்தது என்று உணர்த்தியவை. அத்தனை தீவிரமாக ஒரு இலக்கியப் படைப்பையும் அது சார்ந்த வாசிப்புகளையும் விவாதிக்கமுடியும் என்பதை இலக்கிய விவாதங்களைப் பற்றிய உங்கள் எழுத்துக்களின் வழியே அறிந்திருந்தாலும், நிஜத்தில் அவற்றில் கலந்துகொள்வது கொஞ்சம் திகிலூட்டும் அனுபவமாகவே இருந்தது. ஆனால் அத்தகைய திகிலூட்டும் விவாதங்களின் முடிவிலும் எந்த அகங்காரமும் இன்றி அனைவரும் புன்னகையோடு விடைபெற்றுச் செல்லும் ஒரு நட்பார்ந்த சூழல் சுக்கிரியில் சாத்தியப்பட்டிருக்கிறது. எந்த விதமான இருக்கமுமற்ற ஒரு நட்பார்ந்த சூழலில் அதிதீவிர விவாதங்களும் நகைச்சுவை உணர்வோடு முன்னெடுக்கப்படுவதாலும், மூத்த வாசகர்களால் தொடர்ந்துமட்டுறுத்தப்படுவதாலும் அவை எக்காரணத்தைக்கொண்டும் படைப்பைவிட்டு விலகுவதேயில்லை.

இந்த குழுமம் உங்கள் கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டது என்றே சொல்லலாம். இதன் கருத்துக்களும், செயல்பாடுகளும் உங்கள் நண்பர்களாளும் வாசகர்களாலும் வடிவமைக்கப்படுபவை. இலக்கிய உரையாடல்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களால் வழிநடத்தப்படுபவை. சுக்கிரியின்தொடக்கத்திலும், செயல்பாட்டிலும், தீவிரத்திலும், உங்கள் கருத்துக்கள்தான் உள்ளன.

நான் மீண்டும் ரோலண்ட் பார்த்ஸிடமே செல்கிறேன். பார்த்ஸ் Author என்னும் நிலை ஒரு தேவையற்ற கட்டமைப்பு என்றார். அதனால் அவர் authorஇன் அதிகாரத்தை நீக்கி அவன் வெறும் scripter மட்டும்தான் என்று வாதிட்டார். அதாவது ஒரு மொழியில் நிகழும் அத்தனை வாசிப்புகளுக்கான சாத்தியங்களும் சமமாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார். அந்த கருத்து அதனளவில் உலகில் பலராலும் ஏற்க்கப்பட்டும் மறுக்கப்பட்டுமிருந்தாலும், நான் அதை அரைகுறையாக படித்தது என்னவோ இரண்டு வருடங்களுக்கு முன்தான். அந்த அரைகுறை புரிதலை வைத்துக்கொண்டு, நான் எல்லா வாசிப்புகளும் சமம்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனவே என்னளவில் நான் வாசிப்பில் அடைவதே போதுமானது. அதற்குமேல் எந்த வாசிப்பும் தேவையில்லை. என் வாசிப்பைப் பற்றி விவாதிப்பது அதன் தனித்துவத்தையும் கவித்துவத்தையும் கெடுத்துவிடும் என்று ஆழமாக நம்பியிருந்தேன்

நான் அந்த கருத்தை கைவிட காரணமாக அமைந்தது சுக்கிரி இலக்கிய குழுமம். ஒரு மொழியில் பல்வேறு படைப்புகளை ஆழக்கற்ற ஒரு மூத்த வாசகர் நிகழ்த்தும் வாசிப்புக்கும் ஒரு தொடக்கநிலை வாசகன் நிகழ்த்தும் வாசிப்புக்கும் வாசிப்புத் தரத்தின் அடிப்படையிலேயே பெரும் வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசத்தை உணர்ந்து உழைப்பதே அந்த நிலையை நோக்கி என் வாசிப்பையும் ரசனையையும் வளர்த்துக்கொள்ள தேவையான அடிப்படை தகுதி என்று சுக்கிரியின் கலந்துரையாடல்கள் உணர்த்தின. இலக்கியம் சார்ந்த தரமான கலந்துரையாடல்களும், சுக்கிரி போன்ற ஒரு குழுமமும் ஒரு வாசகனுக்கு அளிக்கும் மிக முக்கியமான கொடையாக நான் கருதுவது இந்த புரிதலைத்தான்.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

தொடர்புக்கு .

சந்தோஷ்-99653-15137

முந்தைய கட்டுரைஆபரணம், கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைபிரான்ஸிஸ் கிருபா, அஞ்சலி – லாஓசி