கௌதம நீலாம்பரன், கடிதங்கள்

எழுத்தாளனின் வாழ்க்கை

அன்புள்ள ஜெ

நலமா? இன்று தாங்கள் தளத்தில் பகிர்ந்த ‘எழுத்தாளனின் வாழ்க்கை’யை படித்துவிட்டு எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களின் மனைவியை அழைத்து பேசினேன், அவர்கள் எங்களுக்கு தூரத்து சொந்தம். மிகவும் மகிழ்ந்தார், நினைவு கூர்ந்தமைக்கு தன் நன்றிகளை தெரிவிக்கச் சொன்னார்.  சற்றும் அறிந்திராத எழுத்தாளரின் அயராத போராட்டங்களை படித்தபின் நெகிழ்ந்துவிட்டேன், இந்நாளில் எழுத்தாளரின் படைப்புக்களையும், விருதுகளையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்
இந்து

அன்புள்ள ஜெ,

எழுத்தாளனின் வாழ்க்கை என்ற குறிப்பு நெகிழச்செய்தது. ஓர் எழுத்தாளனின் போராட்டம் என்பது எப்போதும் ஒன்றுபோலவே இருக்கிறது. புதுமைப்பித்தன் காலகட்டத்தில் அவர் சந்தித்த துயரங்களை வாசிக்கிறோம். கௌதமநீலாம்பரன் அவருடைய மூன்றாம் தலைமுறை. அப்போதும் வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது.

ஏனென்றால் இங்கே புத்தகவாசிப்பு என்பது மிகமிகச் சிலரிடம் மட்டும்தான் உள்ளது. அரைசதவீதம்பேர்தான் ஏதாவது வாசிக்கிறார்கள். கௌதமநீலாம்பரன் வணிக இதழ்களிலே எழுதியவர். அனைவரும் வாசிக்கத்தக்க எழுத்துக்களை உருவாக்கியவர். ஆனால் அவருடைய எழுத்துக்களை வாசிப்பவர்களேகூட அரைசதவீதம்பேர் இருந்தால் ஆச்சரியம்தான்.

ஆகவே இங்கே எழுத்தை நம்பி வாழ முடியாது. ஆனாலும் கௌதமநீலாம்பரன் போன்றவர்கள் ஏன் எழுதுகிறார்கள்? ஏன் எழுதி வாழலாமென முடிவுசெய்கிறார்கள்? குருவி கூடுகட்டுவது போலத்தான். அவர்களால் அதைத்தான் செய்யமுடியும். அதைச்செய்து வாழ்வதுதான் அவர்களுக்கு நிறைவு.

கௌதமநீலாம்பரன் கஷ்டப்பட்டிருப்பார். ஆனால் அவருக்கு அவருடைய வாழ்க்கை பற்றிய நிறைவு இருந்திருக்கும். அவர் போட்டித்தேர்வு எழுதி ஜெயித்து ஓர் அதிகாரி ஆகி நிறைய சம்பாதித்து அதிகாரத்துடன் வாழ்ந்து எதையும் எழுதாமல் இருந்திருந்தால் ஆழமான நிறைவின்மை அவருக்கு இருந்திருக்கும். தன் வாழ்க்கை ஒரு வீண் என அவர் நினைத்திருப்பார். ஆகவே அவருடையது நிறைவாழ்க்கைதான்.

இதை நான் என் அனுபவத்தில் சொல்கிறேன். என் அறுத்தேழாவது வயதில் என் வாழ்க்கை என்பது ஒரு வீணடிப்பு என்றுதான் உணர்கிறேன்

ஜே.நாராயணமூர்த்தி

முந்தைய கட்டுரைவெண்முரசு : ரசனையும் ஆய்வுநோக்கும்- சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்