மொழிக்கு அப்பால்…

மொழியை பேணிக்கொள்ள…

அன்புள்ள ஜெ

மொழியை பேணிக்கொள்ள… கட்டுரை வாசித்தேன். என்னுடைய சந்தேகம் இதுதான். மொழியை அளிக்காமல் பண்பாட்டை அளிப்பது எப்படி? மொழிதான் பண்பாடு என்று நான் நினைக்கிறேன். மொழியை அளிக்கவில்லை என்றால் பண்பாட்டையே தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் மொழியைக் கற்பிக்க அவ்வளவு முயற்சி எடுத்துக்கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நீங்கள் சொல்வதுபோல இங்கே வெளிநாட்டிலுள்ள குழந்தைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் எழுத்துக்களைக் கற்பித்தாலும்கூட ஆறுமாதம் தொடர்ச்சியாக தொடர்பு விட்டுப்போனால் மறந்துவிடுகிறார்கள். இதுதான் மும்பையிலும் டெல்லியிலுமுள்ள என்னுடைய உறவினர்களின் குழந்தைகளிடமும் காண்கிறேன். மொழியை கற்பிக்காவிட்டால் அவர்களுக்கு வெறுமொரு இன அடையாளம் மட்டும்தான் மிஞ்சும் என்று நினைக்கிறேன். அதுகூட காலப்போக்கில் இல்லாமலாகிவிடக்கூடும். இங்குள்ள கலவையான திருமணமுறையில் இன அடையாளமே அழிந்துகொண்டிருக்கிறது.

இதை எப்படிச் சமாளிப்பதென்பது பெரிய சிக்கல்தான். இங்கே இருக்கும் சீனர்கள், ஜப்பானியர்கள் எல்லாம் அவர்களின் தோல்நிறம் தவிர மற்றபடி அப்படியே அமெரிக்கர்களாகவே இருக்கிறார்கள்.

அரவிந்தன் மகாதேவன்

***

அன்புள்ள ஜெ,

மொழியைப் பேணிக்கொள்ள என்ற கட்டுரையை வாசித்தேன். மொழியை பேணிக்கொள்ளவே முடியாது என்று ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. புலம்பெயர்ந்த ஊர்களில் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிகள் இல்லாத இடமே இல்லை. ஆனால் தமிழில் ஒரு பத்தி வாசிக்கும் குழந்தைகள் அனேகமாக ஒரு சதவீதம்கூட இல்லை. தமிழில் பேசும் குழந்தைகளே பெரும்பாலும் இல்லை. தமிழை கொஞ்சம் புரிந்துகொள்ளும் குழந்தைகள் உண்டு. அவ்வளவுதான். இனி இவர்களின் பிள்ளைகளின் காலத்தில் கண்டிப்பாக தமிழின் சாயலே இவர்களிடம் இருக்காது.

அப்படியென்றால் மிஞ்சுவது என்ன? அப்படியே கடலில் கற்பூரம் போல கரைந்துவிடவேண்டியதுதானா? அந்தக்கேள்விதான் என்னிடம் உள்ளது.

ஆர்.ராகவேந்தர்

***

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்த தளம் தொடங்கியதிலிருந்தே சில தலைப்புக்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன, அதிலொன்று இது. ஏனென்றால் இணையத்தின் சர்வதேசத்தன்மை காரணமாக இந்தத் தளமும் ஒரு புலம்பெயர்’ தன்மையுடன் உள்ளது.ஆகவே அவர்கள் சந்திக்கும் அடிப்படைப்பிரச்சினையான இது இங்கே பேசப்படுகிறது. என்ன கூடுதலாகியிருக்கிறதென்றால் இன்று இந்தப்பிரச்சினை தமிழகத்தின் பெருநகரங்களுக்குரியதாகவும் ஆகிவிட்டது.

நான் முந்தைய கட்டுரையில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். தமிழ்ப்பண்பாடு என்பது தமிழ்மொழி மட்டுமே என்றும், தமிழ் மொழி என்பது தமிழ் எழுத்துக்கள் மட்டுமே என்றும் எண்ணும் இடத்தில்தான் சிக்கல் உள்ளது. தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்திலேயே புழங்கும் குழந்தைகளுக்குக் கற்பித்தால் அவை அவ்வெழுத்துக்களை அடிக்கடி பயன்படுத்தாத நிலையில் விரைவிலேயே அவற்றை மறந்துவிடும். அவ்வெழுத்துக்கள் ஓரளவு நினைவில் நின்றால்கூட அவற்றைக்கொண்டு சரளமாக வாசிக்கவோ, தமிழிலக்கியங்களையும் பிறநூல்களையும் பயிலவோ இயலாது. தமிழ் எழுத்துக்களைக் கற்றேயாகவேண்டும் என்னும் பிடிவாதம் உண்மையில் இளையதலைமுறைக்கு தமிழே சென்றுசேராமல் ஆக்கிவிடும். ஆக்கிக்கொண்டிருக்கிறது. இதுவே நடைமுறை யதார்த்தம்.

எனக்கு வந்த கடிதங்களில் சிலர் குழந்தைகள் இருமொழி கற்றுக்கொள்ள முடியும், குழந்தைமூளை அப்படிப்பட்டது என்றெல்லாம் எழுதியிருந்தனர். கண்முன் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தங்கள் பற்றுகளிலேயே நின்றிருக்கும் பிடிவாதம் மட்டும்தான் இது. இருவகை எழுத்துக்களையும் குழந்தைகளால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை, ஒன்றை தவறவிட்டுவிடுகின்றன என்பது நடைமுறை உண்மை. கண்முன் உள்ள யதார்த்தம். அதிலிருந்தே பேச ஆரம்பிக்கிறோம். இரு எழுத்துக்களையும் குழந்தைகள் எளிதாக நினைவில் வைத்திருக்கும் என்றால் பிரச்சினையே இல்லையே. இதையெல்லாம் பேசவே வேண்டாமே. நம் கற்பனைக்கு ஏற்ப யதார்த்த நிலையை வளைத்தபின் பேச ஆரம்பிப்பது வெட்டிவேலை.

எந்த மொழியானாலும் தொடர்ந்து புழங்காவிடில் அது மறக்கப்படும். தமிழைப் புழங்கும் சூழல் உலகமெங்கும் குறைந்தபடியே வருகிறது. வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் அது அறவே இல்லை. தமிழகத்திலேயே நகர்களில் மிகக்குறைவு. ஏனென்றால் நவீன வணிகம், தொழில், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மொழியாக ஆங்கிலமே உள்ளது. இதுவே உண்மை. நான் என்னுடைய திரைத்துறையில் உயர்தொழில்நுட்பத்தைக் கையாளும் தமிழ் இளைஞர்களைச் சந்திக்கிறேன். அவர்களால் ஒருவகை மழலைத்தமிழ் பேசமுடியும், அவ்வளவுதான். மற்றபடி எல்லாமே ஆங்கிலம்தான். அனைவருமே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள்.

மொழியிலுள்ள பண்பாட்டுக்கூறுகளின் பெரும்பகுதி மொழியாக்கங்கள் வழியாகவும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கப் படலாம். தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு, தமிழிலக்கியம் சார்ந்த நல்ல மொழியாக்கங்களின் பயன் தவிர்க்கமுடியாதது. நான் பொன்னியின்செல்வனின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த ஏராளமான இளைஞர்களை இப்போது சந்திக்கிறேன். அவர்களுக்கு கல்கி தமிழில் நம்மிடம் உருவாக்கிய அந்த இளமைக்கனவை ஆங்கில மொழியாக்கமும் அளித்துள்ளது. ஒலிநூல்கள் வழியாக தமிழிலக்கிய அறிமுகம் கொண்ட ஏராளமானவர்களை காண்கிறேன். ஆகவே கூடுமானவரை ஆங்கிலத்தில் தமிழகம் பற்றிக் கிடைக்கும் நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம்.

ஆங்கில எழுத்துக்களில் தமிழ் படைப்புக்கள் கிடைக்குமென்றால், அவற்றை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி இளமையிலேயே அமையுமென்றால் மிக எளிதாக தமிழ்மொழி, அதன் இலக்கியம், அதன் பண்பாடு ஆகியவற்றுடன் அடுத்த தலைமுறை உறவை மேற்கொள்ளும். சிலநூறாண்டுகளுக்கு அந்த தொடர்பு நீடிக்கவும் செய்யும்.எப்படியும் அதுவே நிகழப்போகிறது, இன்றில்லை என்றால் சற்றுப் பிந்தி. இங்குள்ள அசட்டுப் பற்றுகளின் யுகம் முடிந்தபின்னர்.

ஆனால் எளிதாகக் கைவிட்டுப் போகாமலிருப்பது மதம் என்பதை காண்கிறேன். ஆப்ரிக்காவிலேயே முந்நூறாண்டுகளுக்கு பின்னரும் இந்து மதம் அம்மக்களிடையே நீடிக்கிறது. அவர்கள் அறிந்த மொழிக்கு மாறிக்கொள்கிறது. அங்கிருக்கும் மரபுகளுடன் உரையாடி கொஞ்சம் உள்ளிழுத்து தன்னை மாற்றிக்கொண்டு, அங்கிருக்கும் வாழ்க்கைமுறைக்கேற்ப சற்றே மாற்றம் கொண்டு நீடிக்கிறது.

மதத்தை இறைபக்தி என்று மட்டும் கொள்ளவேண்டியதில்லை. அது மாபெரும் பண்பாட்டுத்தொகை. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே நம் முன்னோர் வாழ்ந்து, சிந்தித்து, ஊழ்கம் கொண்டு அறிந்தவை குறியீடுகளாகத் திரண்டுள்ள ஒரு பேரமைப்பு.மதம் என்பதே குறியீடுகளும் படிமங்களும் ஆழ்படிமங்களும்தான். அவை எல்லாம் ஆழுள்ளம் சார்ந்தவை. ஆகவேதான் அவை எளிதில் மாறாமலிருக்கின்றன. கருத்துக்களை மாற்றிக்கொண்டாலும் உள்ளம் மாற்றத்தை ஏற்காமலிருக்கிறது. அவை நம் கனவில் வாழ்பவை. நம் கற்பனைகளுக்கு வேர்நிலமாகி விரிந்தவை.

ஆகவே மதத்தை குழந்தைகளுக்கு அளித்தால் மொத்தப் பண்பாட்டையே அளிப்பதுதான். சொற்களாக அல்லாமல் படிமங்களாக அளிப்பது அது. முருகனும் கொற்றவையும் தென்னாடுடைய சிவனும் நின்றசீர் நெடுமாலும் தமிழில் இருந்து வேறானவர்கள் அல்ல. நீராட்டும், சுடராட்டும், மலர்செய்தலும்,நோன்பும்,வழிபாடும் நேரடியாகவே நம் பண்பாடுகள்தான். அவை வாழ்க்கைமுறையென ஆனால் எளிதில் அழியாமல் நீடிக்கும். அவை ஆழுள்ளத்தில் பதிந்தால் பண்பாட்டுத்தொகையென்றே நிலைகொள்ளும்.

இங்குள்ள அரைகுறை மொழியரசியலாளர் மதமறுப்பை மேற்கொள்ளலாம். அந்த இடத்தில் மொழியை அல்லது இனத்தை வைக்கலாம். அவர்களுக்குரிய அரசியல் கணக்குகள் அதிலுண்டு. அதற்கப்பால் ஒரு சர்வதேச மதமாற்றத் திட்டமும் அதிலுண்டு. மதத்தை மனிதர்களை அடிமைப்படுத்து போதை என்றும் பிரிவினைப்படுத்தும் சூது என்றும் மதமில்லாத மனிதனே சமத்துவ உலகை உருவாக்க முடியும் என்றும் சொல்வது ஒரு மோஸ்தர். அது சென்ற நூற்றாண்டில் பிரபலமாக இருந்த சிந்தனை. இன்று இளைஞர்களுக்கு ஒரு தோரணைக்காக அது பயன்படலாம். ஆனால் இங்குள்ள தமிழர்கள் பெரும்பாலும் மதநம்பிக்கையாளர்களே. அவர்களின் ஆழுள்ளத்தில் சைவம் வைணவம் நீடிக்கும் வரை தமிழ்ப்பண்பாடும் நீடிக்கும்.

அவ்வண்ணம் மதம் என பண்பாடு அளிக்கப்பட்டால் பின்னர் தேவையென்றால் தமிழை அவர்கள் கற்கமுடியும். தங்கள் அடையாளங்களை இழக்காமலிருக்கவும் தங்கள் பூர்வநிலத்துடனும் மரபுடனும் உள்ள உறவை அறுத்துக்கொள்ளாமலும் இருக்கமுடியும். பலநிலங்களில் அன்றாட வாழ்க்கையில் தமிழே இல்லாமலானவர்கள்கூட வழிபாட்டு மொழியாக தமிழைக் கொண்டிருக்கிறார்கள். ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் அன்றாடம் ஓதுகிறார்கள்.

தமிழ் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்பவர்களின் புழக்கமொழியாக இல்லாமலானால்கூட அகமொழியாக நீடிக்கலாம். அதற்கும் மதம் என்னும் உறுதியான அமைப்பே ஒரே வழியாகும். வெறும் மொழிக்கூச்சல்களும் அரசியல்களும் அதைச்செய்ய முடியாது. ஏனென்றால் மதம் அளிக்கும் வேர்ப்பிடிப்பு மிக ஆழமானது. கரீபியன் தீவுகளுக்கு முந்நூறாண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்கள் மழுங்கிய தமிழில் தோத்திரங்கள் சொல்வதை முன்பு என் நண்பர் வெங்கட்ரமணன் பதிவுசெய்து கொண்டுவந்து காட்டினார். தமிழ் வெறும் ஒலியாக மருவிவிட்டது. மாரியம்மனும் முருகனும் மறையவில்லை.

ஆனால் மதத்தை அதன் செழுமையான தத்துவப்பின்னணியுடன், அறப்பிறழ்வு இல்லாமல் கற்பிக்கவேண்டுமென்பது முக்கியம்.மதம் என்னும் பெயரில் மானுடவிரோத மேட்டிமைவாதத்தை, சாதிக்காழ்ப்புகளை, மூடஆசாரங்களை அளித்தால் அது குளிப்பதற்குப் பதில் சேறுபூசிக்கொள்வதே ஆகும். மதத்தை பழைய மரபுப்படி வெறும் நம்பிக்கையாகவும், பழமையான புராணக்கதைகளாகவும் அளித்தால் இன்றைய நவீனக் கல்விச்சூழலில் குழந்தைகளிடம் அது கேலிக்குரியதாக ஆகும். அற்ப மேட்டிமைவாதத்தை  அளித்தால் அது இன்றைய நவீன அறவியலுக்குள் வாழும் நம் அடுத்த தலைமுறையால் வெறுக்கப்படும். நவீன உலகுக்கு உரிய அழகியல்- தத்துவ – ஆன்மிக முழுமையாகவே மதம் அளிக்கப்படவேண்டும்.

அதற்கு பெற்றோர் மதத்தை உரியமுறையில் கற்கவேண்டும். இந்தியாவை விட்டு வெளியே சென்றதுமே நம் மக்களுக்கு குற்றவுணர்ச்சி வந்து விடுகிறது. ஆகவே இந்தியாவில் தங்கள் இளமையில் அறிந்த ஆகப்பழைய சம்பிரதாயங்களை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள். மூளைமழுங்கி பழைய உலகில் வாழ்பவர்களை நாடுகிறார்கள். அவர்கள் சாரத்தைவிட்டு சக்கையை மென்று துப்பும் சொற்களை ஏற்று அவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்க முயல்கிறார்கள். நடை உடை வாழ்க்கை அனைத்திலும் நவீன உலகிலும் உள்ளத்தால் பழைய உலகிலும் புழங்கி கேலிக்குரியவர்களாக ஆகிறார்கள்.

மதத்தை இளமையிலேயே அளிக்கலாமா? இளமையில்தான் அளிக்கவேண்டும். நாம் அளிப்பது ஒட்டுமொத்தமான ஒரு கலாச்சாரத் தொகுதியை. எதிர்காலத்தில் அதிலிருந்து இறைவழிபாட்டை அந்தக்குழந்தை நீக்கிக்கொள்ளும் என்றால், நாத்திகனாக ஆகும் என்றால் அது அக்குழந்தையின் சுதந்திரம். நாமறிந்ததை நாம் அதற்கு கொடுக்கிறோம். அவ்வளவே நம்மால் செய்யமுடியும். அது நம் கடமை. எல்லாவற்றிலும் அதைத்தானே செய்கிறோம்? ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதே பிழையானது.

குழந்தை வளர்ந்த பின் மதத்தை வேண்டுமென்றால் அடையட்டுமே என்று சொல்பவர்கள் உண்டு. அக்குழந்தை மதத்தின் நம்பிக்கையை மட்டுமே வந்தடையும். அதன் ஆழ்படிமங்களை, அதன் நுண்ணுணர்வுகளை அவ்வாறு வளர்ந்தபின் உள்ளம் உருவானபின் எளிதில் வந்தடையமுடியாது. அது பெரிய இழப்பு. அக்குழந்தையின் வரலாற்றுணர்வு, அழகியலுணர்வு, மொழிநுண்ணுணர்வு எல்லாமே குறைப்பட்டதாகவே இருக்கும். அதனால் எளிய தர்க்கத்துக்கு அப்பால் செல்ல முடியாது. வெறும் மூளையோட்டல்களையே அது கற்றுக்கொள்ளும், கற்பனையும் ஆழுணர்வும் இல்லாமலிருக்கும்.

மதமோ தனிப்பண்பாடோ இல்லாமல் ‘மானுட’ பண்பாட்டுடன் குழந்தையை வளர்க்கலாமே என்று ஒரு கேள்வி அடிக்கடி வருவதுண்டு. அப்படி ஒரு பொதுவான மானுடப்பண்பாடு இல்லை. அது அமெரிக்கப் பண்பாடு அல்லது ஐரோப்பியப் பண்பாடாகவே இருக்கும். அதற்குள் கிறிஸ்தவ அல்லது தாராளவாதப் பண்பாடாக இருக்கும். எந்தப் பண்பாட்டை அளிக்கிறோம் என்பது நம் தெரிவு. நான் பண்பாடு என்பது கற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டு ஒழுகும் ஒன்று என நினைக்கவில்லை. பண்பாடு என்பது தலைமுறை தலைமுறையாக கைமாறி வந்துசேரும் ஒரு ஆழ்படிம -நுண்ணுணர்வுத் தொகை என நினைக்கிறேன். அதுவே கலைகள், சிந்தனைகளுக்கு அடிப்படையானது. நம் குழந்தைகளுக்கு அதை அளித்தாகவேண்டும். மனிதர்கள் கால்களால் வாழ்ந்துவிடலாம். ஆனால் அவர்களுக்குச் சிறகுகளும் தேவை.

ஜெ

முந்தைய கட்டுரைவளர்பவர்கள்
அடுத்த கட்டுரைஅத்தர் – கடிதம்