கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
 
இந்திய சிந்தனை மரபில் குறள் ஊன்றிப்படித்துவருகிறேன். உங்களிடம் இதுகுறித்து முன்னம் கடிதம் எழுதியது நினைவிலிருக்கிறது. கட்டுரைகள் முழுமையடைந்தபின் இதுகுறித்து எனது கருத்துகளை உங்கள் முன்வைக்கிறேன்.
 
உங்கள் ஆசிரியர் ஞானி அவர்களின் வேண்டுகோளின்படியோ, அல்லது குறள் ஒரு பௌத்த நூல் என்று நீங்கள் நம்புவதாலேயோ, இந்து ஞான மரபு, இந்திய சிந்தனை மரபாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். :-)
ராமச்சந்திர சர்மா

அன்புள்ள ராம்

நான் இச்சொற்களை ஏற்கனவே வரையறைசெய்திருக்கிறேன். ஆறு தரிசனங்கள்[சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் பூர மீமாம்சம் உத்தர மீமாம்சம்], ஆறு மதங்கள்[சைவம் வைணவம் சாக்தேயம் கௌமாரம் சுரைம் காணபதியம்] ,  மூன்று தத்துவங்கள் [கீதை, பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள்] அடங்கிய பொது மரபை இந்து ஞான மரபு என்கிறேன்.ஆசீவகம்,பௌத்தம்,சமணம்,சீக்கியம் ஆகியவையும் சூ·பி மரபும் அடங்கிய சிந்தனைப்போக்கை இந்திய சிந்தனை மரபு என்கிறேன்
ஜெ

 

அன்புள்ள ஜே,
 
மனிதனால் சாத்தியப்பட்ட அளவு ஒரு கலையில் உச்சத்தை அடைந்தவருக்கு அதன்பின் தென்படும் வெட்டவெளியை ஒரு சூன்யத்தை கையாள்வது எப்படி என்ற கவலை தோன்றியதினாலே இந்திய கலைகள் பெரும்பாலும் கடவுளை நோக்கியே அமைக்கப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.  வாழ்கையிலும் சிலகாலம் சென்றதும் தென்படும் சூன்யத்தை நிறப்பவே கடவுளின் உருவாக்கம் இருக்கக்கூடும் என்றும் நம்புகிறேன். இது இந்து மதங்களில் கடவுள் சூன்யத்தின் மறுபக்கமான நித்யமென்று நிறுவப்பட்டிருப்பதனால் இருக்கலாம்.
 
கடவுள் என்ற உருவாக்கம் இல்லாதபட்சத்தில் சாத்தியப்பட்ட உச்சத்தை அடைந்தவருக்கு அந்த மாபெரும் வெட்டவெளியான சூன்யத்தை, நிதர்சனத்தை  கையாள்வது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஏதும் விளக்கம் உண்டா?
 
பி.கு: நான் கடவுள் உண்டென்ற கட்சியும் இல்லை, இல்லை என்ற கட்சியும் இல்லை. தெரியாது. அவ்வளவே.
 
-ராம்.
அன்புள்ள ராம்
நித்யா ஒரு உரையாடலில் சொன்னார், விடைவராத கணக்குகள் முன் எக்ஸ் என்று வைத்துக்கொண்டு மேலே யோசிக்கிறோம். அது முடிவில்லாத சாத்தியங்களின் மையம், அத்தகைய ஒரு எக்ஸ்தான் பிரம்மம் என்று.   அதுவே சரியான பதிலாக எனக்குப்படுகிறது. கலையும் தத்துவமும் எல்லாம் அந்த முடிவிலியில்தான் இணைய முடியும்
ஜெ
ஒரு சிறு கேள்வி. இந்த வயதிலும், இத்தனை எழுதியும், படித்தும், பேசியும் விவாதித்தும், இன்னும் தங்களை சலிப்படையாது முன்னெடுத்துச்செல்லும் ஊக்க சக்தி (motivating factor) தான் என்ன? 
 
எனக்கு ஏதோ ஏற்கனவே வாழ்ந்து முடித்த வாழ்க்கையை மீண்டும்வாழ்வது போல இருக்கிறது. வெகுவிரைவில் எல்லாமே சலித்துவிடுகிறது. இன்னும் புரியாத ஆச்சரியமென்னவென்றால், இன்னமும் விடாது தொடர்ந்து செய்யும் செயல் ஒன்றுண்டென்றால், பல மாதங்களாக இணையத்திலும், பல வருடங்காளாக புத்தகங்களிலும் உங்கள் எழுத்தை படிப்பது தான். 
 
அரதி என்று நீங்கள் முன்பு குறிப்பிட்டதன் உச்சத்தில் இருக்கிறேனோ என்ற ஒரு எண்ணமும். வாழ்கையை எதிர்கொள்ளும் ஆர்வமும், கேள்விகளும், தைரியமும் இல்லையோ என்ற எண்ணமும். என்ன செய்யலாம். கலை அறிவியல் எல்லாமே என்னை நானே ஏமாற்றிக்கொள்ளுமொரு விதமோ என்றும், என் உணர்ச்சிகளை மழுங்கடித்துக்கொள்ளும் ஒரு கருவியோ என்று தோன்றுகிறது.
 
என்னுடன் பணிபுரியும் ஒருவர் கேட்டார், வாழ்கையில் உங்கள் லட்சியம் தான் என்னவென்று. அவருக்கு பென்ஸ் கார் வாங்கி ஓட்டவேண்டுமாம். சத்தியமாக அடையவேண்டியது என்ற ஒன்று எதுவும் எனக்குத்தெரிந்து என் வாழ்கையில் தோன்றவில்லை. ஏற்கனவே நான் வைத்திருக்கும் ஒரு சில பொருளாதார கமிட்மண்டுகளுக்காக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவே.
 
“You are are loser dude” என்று ஒற்றை வரியில் கருத்துச்சொல்லிவிட்டுப் போய்விட்டார். மேலே என்ன செய்வதென்றும் புரியவில்லை.
 
எனக்கு ஏதும் ஒரு வழிகாட்ட முடியுமா?
ராமச்சந்திரன் பஞ்சாபகேசன்
அன்புள்ள  ராம்
என் கட்டுரையின் சாரமே இந்த நிலையில் இருந்து ஒருவர் தன்னைத்தான் மட்டுமே விடுவித்துக்கொள்வது சாத்தியம் என்பதுதான். இரு வரிகள். காண்டாக்ட் நாவலில் [கார்ல் சகன்] ஓர் இடம். விண்மீன்கள் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறைதான் தோன்றுமென்றால் அந்தக் காசி மானுட மனத்துக்கு எத்தனை மகத்தான அனுபவமாக இருக்கும். எத்தனைபெரிய களியாட்டமாக அதைக் கொண்டாடியிருப்பார்கள். விண்ணின் அந்த அற்புதங்கள் தினமும் தோன்றி மனிதனை அவற்றை உதாசீனம்செய்ய வைக்கின்றன.
ஹெலன் கெல்லரின் சொற்களும் நினைவில் வருகின்றன. காணும் ஒவ்வொன்றையும் அதுவே கடைசியாகக் காண்பது என்று எண்ணிக்கொள்ளுங்கள். கேட்கும்பொவ்வொன்றையும் அதுவே கடைசியாக கேட்பது என்று எண்ணிக்கொள்ளுங்கள். சுவைப்பது ஒவ்வொன்றையும் அதுவே கடைசியாக சுவைப்பது என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
உங்கள் மனநிலை அரதி என்று சொல்வதைவிட ஒரு வகையான பாவனை என்றே படுகிறது. தன்னை அதி நுண்மையானவன், அதி கூர்மையானவன், தனக்கு இந்த பிரபஞ்சம் போதவில்லை என்று எண்ணிக்கொள்ளும் சுயமைய நோக்கு அது. இங்கே செய்வதற்கும் சுவைப்பதற்கும் ஒன்றுமில்லாதவன் என எவர் இருக்க முடியும்?
அத்தகைய பாவனைகளில் இருந்து பிறர் கலைக்க முடியாது. சலித்துப்போய் நாமே கலைத்தால்தான் உண்டு
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நாஞ்சில் நாடன் பற்றியும் அவருடைய உணவு சுவையுணர்வு பற்றியும் நீங்கள் எழுதிய கட்டுரை படித்தேன். நாஞ்சில் உணவு வகைகளையும் மலையாள உணவு வகைகளையும் அந்த மண்ணில் அமர்ந்து ருசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இங்கே சென்னையில் அப்படி ஒன்றும் மகத்தான உணவு கிடைத்ததில்லை எனினும் பசிக்கும் ருசிக்கும் இடைப்பட்ட கணங்களில் சில நல்ல உணவுகள் கிடைத்து விடுகின்றன. குமரெகத்தில் கேரள உணவு கிடைக்கும் – கப்பாவும் மீன் கறியும். அப்புறம் கறிமீன் பொறிச்சது. புட்டும் கடலையும் கூட. ஆந்திர உணவு கோங்குராவுக்கு  கடமைபட்டது. அப்புறம் அஞ்சப்பர், அழகப்பர், அய்யனார், விருதுநகர் என உணவு விடுதிகள் இருந்தாலும், பிரியாணியும் பாயாவும் முட்டை புரோட்டாவும் சுக்காவுமே பலரின் விருப்பம். இதுவும் தவிர ரொட்டியும் கொஞ்சம் வடநாட்டு உணவும். நெல்லையப்பரின் மண்சட்டி மீன் குழம்பு இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. சைவ உணவுக்கு கொஞ்சம் அலையத்தான் வேண்டியிருக்கும். ஒரு இடத்தில் ஆயுர்வேத சைவ சமையல் கிடைகிறது. மற்றபடி எல்லா இடத்திலும் ஒரு சாம்பார் மாதிரி ஒரு வஸ்து, ரசம் என்ற சுடுநீர், கேரட்டும் பீன்ஸும் கொண்ட ஒரு பொரியல் அல்லது அதில் பீட்ரூட்டும் இருக்கும். புளிக்குழம்பு ஒரு களி. தண்ணீரில் வெள்ளையாய் மோர். சோரும் தயிருமே மெய். கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் கொங்குமண்டல உணவு சாப்பிட முடிகிறது. புத்தக சமையல் என்றாலும் கொங்கு மண்டல சமையல் குறிப்புகள் உதவுகின்றன… யாராவது யாருக்காவது சமைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் உணவு தயாரிப்பவர்களை பற்றி யாரும் யோசிப்பதில்லை. மனசு சார்ந்துதான் உணவு என்பதை பெரும்பாலான நேரங்களில் உணர்கிறோம் – எனினும் சமைப்பவரின் மனதை கவனிக்க நேரம் இருப்பதில்லை. ஓடி கொண்டே இருக்கும் வாழ்க்கை சோறு சாப்பிட நிற்பதே பெரிதாக இருக்கிறது.

நன்றி..
முத்துக்குமார்.
அன்புள்ள முத்துக்குமார்

எம் கோவிந்தன் ஓர் இடத்தில் சொன்னார்’நாக்குதான் சுவை. மொழியும் உணவும் ருசிப்பது நாக்கிலே’ மொழி எப்படி பிராந்தியம் சார்ந்து நுட்பங்கள் கொள்கிறதோ அப்படித்தான் உணவும். பெருநகரில் எல்லா தனித்தன்மைகளும் வந்து சங்கமிக்கின்றன. அதற்கே உரித்தான நுட்பம் ஏதுமில்லை. மொழியிலும் சுவையிலும்’
ஜெ

 

 

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 2
அடுத்த கட்டுரைகாவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்