இசை, மீண்டும் சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

என் தாத்தாவின் ஊர்த் திருவிழாவில் (ஓட்டப்பிடாரம்) கரகாட்டம் போன்ற நாட்டார் கலைகளைப் பார்ப்பது உண்டு. கிராம மக்கள் அதில் ரசிப்பது, இந்த ஆட்டங்களின் ஆபாசத்தன்மையினையே. அங்கீகரிக்கப்பட்ட record dance-ஆகவே கரகாட்டம் அங்கே பயன்படுத்தப்பட்டது. நாட்டுப்புறக் கதைகளும் பெரும்பாலும் பச்சையான பாலுணர்வின் வடிகாலாகவே காணப்படுகிறது. (என் அம்மாச்சி சொன்ன மூத்திரக்கதை சிறுவர்களிடையே வெகு பிரபலம்)

இதன் மூலம் நாட்டார் கலைகளின் மேல் எனக்கு ஆழ்ந்த அசுவாரசியமும், அதன் விளைவான சிறு குற்ற உணர்வும் உண்டு. உங்கள் கட்டுரை மூலம தெளிவு ஏற்படுத்தியமைக்கு நன்றி…

“பிராமணர்களின்” கர்நாடக இசைக்கும், கோவில்களில் பிராமணரல்லாத, சாதி அடுக்கில் உயராத குலத்தினரால் இசைக்கப்படும் இசைக்கும் உள்ள தொடர்பும் நான் அறிய ஆசைப்பட்ட விஷயம். கர்நாடக இசை பிராமணர்களின் பாரம்பரியமான குல இசை என்ற மாயையை உடைத்தமைக்கு நன்றி.

ஒரு வகையில் தமிழக பிராமணர்கள் திராவிட இயக்கத்தினருக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்… வேதங்கள், ஞானங்கள், இதிகாசங்கள், செவ்வியல் கலைகள் போன்ற நம் மண்ணின் அத்தனை பெருமைகளையும் பிராமணர்களுக்கு அள்ளி வழங்கிய தியாக உள்ளம் பெரியாரின் சீடர்களுக்கே உரித்தானது.

நன்றி,
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

உண்மை. தமிழகத்தில் அன்றி எங்குமே பிராமணர்களுக்கு இந்த பெரிய மணிமுடி எங்குமே சூட்டப்படதில்லை. கோயில்கள் அவர்களுடையது. வேதம் முதலாம் எல்லா நூல்களும் அவர்களுடையது. சம்ஸ்கிருத மொழி மட்டுமல்ல, ஆயுர்வேதம் முதலிய எல்லா கலைகளும் அவர்களுடையது. இசை அவர்களுடையது. கம்பராமாயணம் அவர்களின் நகல். கபிலர் அவர்களின் ஆள்….கட்டக்கடைசியில் என்னதான் தமிழர்கள் படைத்தார்கள்?

அந்த சிறு குழுவினர் சொல்வதையெல்லாம் நம்பி மூவாயிரம் வருடங்களாக மண்ணாந்தைகளாக இருக்கும் ஒரு கூட்டம், அவ்வளவுதானா? ஆளைவிடுங்கள். கேரளத்தில் நாங்கள் அப்படி இல்லை )))

ஜெ

88

ஹா ஹா ஹா..  நல்ல கேள்வி… ஆனால் நீங்கள் சொல்லுமளவுக்கு நாங்கள் ஒன்றும் மோசமில்லை… சமஸ்கிருதத்தில் எழுதியது வேண்டுமானால் ஆரியர்களாக இருக்கலாம்… ஆனால் சமஸ்கிருதத்தை எழுதியதே  நாங்கள்தாம்… சந்தேகமிருந்தால் பாவாணரைக் கேட்டுப் பாருங்கள்… பாவாணர் மீதே சந்தேகமென்றால் அதை உங்கள் வலைப்பக்கத்தில் எழுதிப்பாருங்கள்…  நீங்கள் ஒப்புக்கொள்ளும் வரையில் தமிழர்கள் சான்றுகளை அனுப்பித் தள்ளி விடுவார்கள்…

ஆனால் ஒன்று… தற்காலத் தமிழ் இடைச்சாதிகளைப் பார்க்கும் போது ஒன்று தோன்றுகிறது… தாங்கள் எல்லாம் மூன்று வேளை சோறு சாப்பிடுவதே பெரியாரின் உபயத்தில்தான்… கீழ்சாதீய ஒடுக்குமுறைக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்த்தமும் கிடையாது என்று நம்பும் புத்திசாலிகள் இவர்கள்… கொஞ்சம் மூளையை உபயோகித்தால் இவர்களை மண்ணாந்தைகளாக்குவது அப்படி ஒன்றும் கடினமல்ல என்றே தோன்றுகிறது…
ரத்தன்
***
அன்புள்ள ஜெயமோகன்
“நாட்டார் கலைகள், அதன் மண்ணில் அதனுடன் ஈடுபாடு கொண்டு சிறுவயதுமுதலே இருந்துவரும் சிலருக்கே அது கலையனுபவத்தை அளிக்கும், அதன் எல்லைக்குட்பட்ட அனுபவத்தை.” – எனில்,  நகர்ப்புறமாக்கலும், வளர்ச்சியும் அடையும் சமூகத்தில் அக்கலைகள் அந்த மண்ணோடு மடிவதை எப்படித் தடுக்க முடியும்? அக் கலைகளின் பிண்ணனியை அதன் விரிவை, ஆழத்தை,  இந்த புதிய் சமூகத்தின் பார்வைக்கும் ரசனைக்கும் வழங்கும் ஒருஒரு முயற்சியாக சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை (தவறுகள் இருப்பினும்)  ஏன் நாம் கருதக் கூடாது? 
கிராமத்து மண்ணில் இருந்து, குடிபெயர்ந்து சென்னையில் வாழும் ‘அந்த மண்” சார்ந்தவர்கள் அவற்றைத் தமது சந்ததியினருக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பாவது கிடைக்குமல்லவா?
அன்புடன்
கோபிநாத்

அன்புள்ள கோபிநாத்

அது உண்மை. நாட்டார்கலைகள் புரவலர்களால் பேணப்படுமென்றால் அவை அடுத்த கட்டம் நோக்கி நகரும். புதிய கலைகளை அவை தங்கள் அடிப்படைக்கட்டுமானத்தில் இருந்து முளைத்தெழச்செய்யும்.நம்முடைய நாடகமும் தாளக்கலையும் புதியதாகப்பிறக்கும்

சென்னை சங்கமம் மூலம் அப்படி நடந்தால் நல்லதுதான்
ஜெ

**

ஜெ,

”சென்னை சங்கமத்தின் நாடார்கலைகள் மிகத் தரம் குறைந்தனவாக இருந்தன”’ 

 உங்கள் எழுத்து பிழைகளில் சாதி கலவரமே நடக்க வாய்புள்ளது புரட்சி எழுத்தாளர் தான்

கலகுங்க

செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்
அச்சுப்பிழை இல்லாவிட்டால் அது நான் எழுதியது என்றே நம்ப மாட்டார்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்

தமிழிசையைப்பற்றிய உங்கள் கட்டுரைகளையும் கடிதங்களையும் நான் தொடர்ந்து கவனித்துவருகிறேன். தமிழிசை இயக்கம் தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்துவிடது என்பதுதான் உண்மை. ஏன் என்று நோக்கினால் எனக்குப்படுகின்ற காரணங்கள் கீழ்க்கண்டவை.

தமிழிசையைப் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் அதில் அரசியலைக் கலந்தார்கள். கலை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஈவேரா பெரியார்தான் தமிழிசையை வளர்த்தார் என்று ஒரு அமைச்சர் மேடையில் பேசியதை டிவியில் கண்டேன். தமிழிசைக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர்களின் பெயர்கள் இப்போது எவருக்கும் நினைவில்லை. பெரியாருக்கு இசையே பிடிக்காது என்பதும் பொருட்டல்ல

உண்மை என்னவென்றால் தமிழிசை இயக்கத்தை அரசியலாக்கிய திராவிட இயக்கம் மெல்ல மெல்ல அதை அழித்தது. அதன் தலைவர்களில் இசை ஆர்வம் கொண்ட எவருமே கிடையாது. ஓரளவுக்கு க.ராஜாராம் பாட்டு கேட்பார் என்பார்கள். அவ்வளவுதான். ஆகவே தமிழிசை முன்னோடிகள் திராவிட இயக்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டார்கள். சிறந்த உதாரணம் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் புறக்கணிக்கப்பட்டது. பைசா பெறுமானமில்லாத அரசியல்வாதிகள் எல்லாம் பாடப்புத்தகங்களில் இருக்கிறார்கள். ஆபிரகாம் பண்டிதரைப்பற்றி ஒரு நல்ல பாடம் கிடையாது. அவர் சொன்னது என்ன என்று நம் மாணவர்களிடம் கேட்டால் பதில் கிடைக்காது

வீ.ப.கா.சுந்தரம், குடந்தை சுந்தரேசனார், தண்டபாணி தேசிகர் போன்ற தமிழிசை இயக்க முன்னோடிகளைப்பற்றி நம் கல்வித்துறையினருக்குக் கூட ஆர்வம் இல்லை. இவர்கள் எவரைப்பற்றியும் யாரும் பேசுவதில்லை. இவர்களை அரசோ அமைப்புகளோ பொருட்படுத்தியதில்லை — ஆரம்பகாலத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகம் மட்டுமே சற்று ஆதரவளித்தது. இதெல்லாம் இப்போது பழங்கதையாக ஆகிவிட்டது.

தமிழிசை அழிந்தமைக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. நம் இசை பக்தியுடன் தொடர்பு உடையது. பக்தி இயக்கத்தால் நம் இசை வளர்க்கப்பட்டது. தமிழிசை மூவரின் இசைப்பாடல்களும்  பிறகு வந்த சுத்தானந்த பாரதி, பெ.தூரன் போன்றவர்களின் பாடல்களும்  பக்திப்பாடல்களே. பகுத்தறிவு என்ற பேரில் பக்தி இயக்கத்தை புறக்கணித்த திராவிட இயக்கம் இசைக்குப் பின்புலமாக உள்ள பண்பாடையே நிராகரித்தது. சமீபத்தில் ஒரு பாடகர் வீரமணியைப்பற்றி பக்திப்பாடல் ஒன்றை பாடுவதை கேட்டேன். எப்படி இசை வளரும்?

ஏன் இசை பிராமணர்களுக்குச் சென்றது என்றால் கோயில்களை அவர்களுக்குக் கொடுத்துவிடோம் என்பதனால்தான்.கோயில், இசை, ஆடல்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை பிரிக்க முடியாது. கோயிலை நாம் நம் பண்பாட்டின் மூலமையங்களாகவே நோக்க வேண்டும். அவற்றில் இருந்து நம்முடைய பண்பாட்டின் வேர்களைக் கண்டடைய வேண்டும். இப்போது செய்யவேண்டியது அதுதான்

குறள் அருணாச்சலம்

அன்புள்ள ஜெயமோகன்

தமிழிசை மீதான உங்கள் அக்கறையும் ஆர்வமும் நான் அறிந்ததே.சிலம்பு போன்ற தொல்லிலக்கியங்களில் சுட்டப்படும் பண் ரபின் ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது ஓரோவழி வகைப்பட்ட நீட்சியாக தேவார இசைமரபை உணர்கிறேன்.பிற மொழி கீர்த்தனைகளின் பாணியிலேயே தமிழில் பாடிய வாக்கேயர்கள் பின்னால் வந்தவர்கள்.அவர்கலின் கீர்த்தனைகளையே தமிழிசையின் அடையாலம் என்றிருக்கும் பரவலான புரிதல் குறித்ததே என் ஆதங்கம்.
அசோகவனம் தயார்தானே

மரபின்மைந்தன் முத்தையா

அன்புள்ல முத்தையா,

தமிழிசை கர்நாடக சங்கீதமாக மாறியதை நீங்கள் ‘அன்னிய மொழிப் பாதிப்பின்’ மூலம் உருவான திரிபாக பார்க்கிறீர்கள். நான் அதை ஒரு வளர்ச்சிநிலையாகவே பார்க்கிறேன். இசைவரலாற்றை நான் அறிந்தவரை விரிவான கொடுக்கல் வாங்கல் மூலமே அது வளர்கிறது.

இந்திய இசைமரபுகள் அனைத்துக்குமே  ஹ¤மாயூன் காலம் முதல் ஒரு பெரும் வளர்ச்சி உருவானது என்று சொல்கிறார்கள். பெரும் இசைப்பைத்தியமாக இருந்த அவர் உலகம் முழுக்க இருந்த இசைவாணர்களைக் கொண்டுவந்து தன் சபையை உருவாக்கினார். அந்த இசைமரபுகள் நம் நாட்டு இசைமரபுகளுடன் உரையாடி உருவானதே இந்துஸ்தானி இசை . அந்த உரையாடல் இந்தியா முழுக்க பரவி எல்லா இசைமரபுகளையும் மாற்றியமைத்தது.

ஹைதராபாத் நிஜாமின் அவை அவ்வாறு இந்துஸ்தானி இசையின் மையமாக விளங்கியது. அந்த அவையின் ஆஸ்தானக் கலைஞராக இருந்தவர் சாரங்கதேவர். இன்று நாம் காணும் வகையில் தமிழிசையை மறு தொகுப்புசெய்தவர் அவர். சந்தா சாகிப் [குறிப்பாக அவரது பேகம்] மிகப்பெரிய இசை ரசிப்பு கொண்டிருந்தார். அவரது அவை தமிழிசையை மாற்றியமைத்ததில் பெரும் பங்கு வகித்தது. நம்முடைய மரபான பண் முறையானது இன்றைய ராகங்களாக அவ்வாறுதான் மாறியது. நம் இசையைப்பற்றிய விரிவான வரலாற்று ஆய்வுகள் செய்யப்படவில்லை.

ஓதுவார்களின் பண்ணிசை மாற்றமில்லாமல் நீடித்த ஒரு கோயில் கலை. இந்துஸ்தானியிலும் அப்படி மாற்றமில்லாம்ல் நீடித்த கோயில்கலை மரபு ஒன்று உண்டு என்று ஷாஜி சொல்கிறார்.

ஆகவே கோயில் இசை அல்லது பண்ணிசை மட்டுமே ‘தூய’ தமிழிசை என்று சொல்ல முடியாது. பல்வேறு கலைமரபுகளுடன் உரையாடி இன்றைய கர்நாடக சங்கீதம் உருவாகியிருந்தாலும் அதன் அடிப்படைக் கட்டுமானம் தமிழின் தொல்லிசை மரபே
ஜெ

இசை, மீண்டும் சில கடிதங்கள்

திரைப்பாடலில் ராகங்கள்

தமிழிசை ,மீண்டும் கடிதங்கள்

இசை, நீடிக்கும் விவாதம்

தமிழிசை ஒரு கடிதம்

பெரியசாமி தூரன்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

  • குறிச்சொற்கள்
  • இசை
முந்தைய கட்டுரைஅரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைநான் கடவுள் சில கேள்விகள்.1