விக்ரமாதித்யன், கடிதங்கள்-16

அன்புள்ள ஜெ.

நான் கவிதை வாசகன் அல்ல. உரைநடையே எனது தெரிவு. நான் படித்த கவிதைகள் பெரும்பான்மையும் நமது தளத்தில் நீங்களோ, பிற வாசகர்களோ பகிர்ந்து கொள்பவை மட்டுமே. ஆயினும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட செய்தி மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஒரு வார இதழில் அவரது “பொருள்வயின் பிரிவு” என்றொரு கவிதையை வாசித்தேன். அன்றிலிருந்து இன்று வரை அந்த கவிதையை சில நாட்களுக்கு ஒரு முறையாவது நினைவு கூறாமல் இருந்ததே இல்லை.

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

முதல் பத்தியை முடிக்கும் முன்பே, மனதில் இரவின் நிசப்தமும், அதிகாலையின் சுகமான குளிரும் பரவத் தொடங்கிவிடும். இரண்டாவது பத்தியில் பிரிவின் துயரும், வாழ்வின் நிதர்சனமும் தெரிந்து விடும். பெரும்பாலும் அந்த பத்து வரிகளைத் தாண்டி படிக்க முடிந்ததே இல்லை. அவரை எனது கவிஞன் என்று உரிமையுடன் கூற, எனக்கு அந்த முதல் பத்து வரிகள் மட்டுமே போதும். ஆரம்ப நாட்களில் அந்த கவிதையைப் படிக்கும் போது என்னை அயர்ந்து தூங்கும் பெரியவனாக எண்ணி கொள்வேன். இன்று, பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின், பொருள்வயின் பிரிந்து சென்றவனாக இருந்து அதை வாசிக்கிறேன்.

மத்துறு தயிரின் ராஜம் உண்மையில் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் முதன்முறை அந்த கதையைப் படிக்கும் போதே, கவிஞரை மனதில் வைத்துதான் படித்தேன். அந்த கதையில், பேராசிரியர் தனது ராஜத்திற்கு ‘பிரைஸ்’ கிடைக்கும் கனவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார். கவிஞருக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய பதிவும், அதே மனநெகிழ்வைத் தந்தது.

உங்கள் வாசகனாக நின்று பெருமைப்பட இது இன்னுமொரு தருணம். கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கும், ங்களுக்கும்,  வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

-சாரதி

***

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலம்.

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது.  பிரியத்துக்குரிய கவிஞர் அவர். அவருடைய அலைக்கழிப்புடன் தமிழில் பெரும்பாலானவர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அது என் பார்வையில் லௌகீகமான ஒன்று அல்ல. ஒட்டுமொத்த தமிழ்ப் பாரம்பரியத்தையும் சுமந்துகொண்டு இந்த அன்றாட வாழ்க்கையில் உழல்வதில் இருக்கும் சிக்கல்தான் அவருடைய கவிதைகளிலே வெளிப்படுகிறது என்பதே என்னுடைய வாசிப்பு.

விக்ரமாதித்யன் கவிதைகளில் வரும் மரபுசார்ந்த குறிப்புகளைப் பார்ப்பேன். அவருக்கு மரபுமேல் பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் அதனால் இன்று எந்த பயனும் இல்லை என்ற நினைப்பும் உண்டு. மரபுடன் இணைந்திருக்கும் தனக்கும் தன் கவிதைக்கும் இங்கே எந்த இடமும் இல்லை என்று நினைக்கிறார். அந்த நினைப்புதான் அவரை அலைக்கழிய வைக்கிறது.

கடல்
இசைக்கும் ராகம்

சூரியோதயம்
சந்திரோதயம்

தாய்தயவில்
தெற்குக் கடைசியில்.

என்று ஒரு நவீனக்கவிஞன் எழுதுவது ஆச்சரியம்தான். அதுதான் அவரை தனித்து அலையவும் செய்கிறது.

அர்விந்த்குமார்  

முந்தைய கட்டுரைகுழந்தைகளின் விளையாட்டு-கடிதம்
அடுத்த கட்டுரையோக அறிமுகம்