ஒரு பேரிலக்கியம், கடிதம்

ஒரு பேரிலக்கியத்தின் வருகை

அன்பு நிறை ஜெ.

உங்களுடைய கிறிஸ்துவ கதைகள், பால் சக்கரியாவின் இயேசு கதைகள், சில உலக இலக்கிய கிருஸ்துவ கதைகளுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை, நாம் அதை படித்துக்கொண்டு இருக்கும்போதே, மனித குமாரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும், நம்மோடு உரையாட எத்தனிப்பதையும் உணர முடியும். க.நா.சு மொழிபெயர்த்த ‘பாரபாஸ்’ நாவல் முழுவதும் அவனும், இயேசுவும் உரையாடிக்கொண்டே இருக்க, நாம் நடுவில் அமர்ந்து உற்சாகமாகவும், கண்ணீர் மல்கியும், அனுதாபம் கொண்டும், கேட்டுக்கொண்டே இருப்போம்.

இன்று தளத்தில் வந்த ‘மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன்’ சுபஸ்ரீ அவர்களின் அபாரமான மொழிபெயர்ப்பு. ஒரு முழு நாளும் தேவ சாந்நித்யத்தில் திளைக்க செய்தது. ஒரு சிறு சொல்லைக்கூட இடம்பெயர்க்க இயலாத வண்ணம், மிகவும் கூர்ந்து அல்லது அவனிடம் ‘தயை கூர்ந்து’ செய்யப்பட்ட ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பு. இது குறித்து நண்பர் சுபஸ்ரீ அவர்களோடும் பேசினேன்.

இந்த நாவலிலும், நம் அகத்தை வைத்து விளையாட, நம்மை முழுவதுமாக ஒப்படைக்க, நம் போதாமையை ஒரு கதாபாத்திரத்தின் வழியாக, ஏற்றிப்பார்க்க என எண்ணற்ற சாத்தியங்கள் உள்ள நாவல். இந்த சிறிய உடலுக்குள் மட்டும், இன்று நான் ”ஜீன் பாடோ” என, குழந்தைகள் ஹென்றியும், பாபெட்டும், என, பருத்த சரீரம் கொண்ட மேடம் பாடொ என, விருந்தினனாக வந்த கிளாட் காஸோ, என இவர்கள் அனைவரோடும் சொற்களாக ஊடாடிக்கொண்டிருந்த, தேவ மைந்தன் என, மாறி மாறி உணரவும், நாவலின் வழியாக அவர்களை என்னுள் உயிர்த்தெழவும் செய்ய வைத்த மொழிக்கு நன்றி.

கார்டினலின் உள்ளிருந்து வரும் குரல் என, “மனிதகுமாரன் பூமிக்கு வரும்போது அவர் மண்ணில் விசுவாசத்தைக் காண்பார் என எண்ணுகிறீர்களா?” என்கிற கேள்விக்கு அவரே ஓரிடத்தில் ‘இல்லை’ என்றும் ஒருசிலரேனும் அந்த விசுவாசத்திற்கு பாத்திரமாக இருப்பார்கள் என்றும் சொல்லும் இடங்கள் அனைத்தும், இது கர்னலின் குரல் அல்ல நம் ஆன்மாவின் குரல் தான் அப்படி ஒலிக்கிறது என்று தோன்றியது.

“ஆம், நிச்சயமாக அவர் விசுவாசத்தைக் காண்பார். ஒரு சிலரிலேனும். சிலபேர் ஆயினும் சர்தையிலும் உண்டு!- என்கிற வரிகளில். எதோ ஒரு உந்துதலில், ‘அந்த ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருக்க கடவுக’ என கையுயர்த்த தோன்றுகிறது. நாவலின் மையம் ‘ இறையுணர்தல் ‘ என நிறைவுறுகிறது.

ஆகவே “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்,…..எனத்தொடங்கும் அந்த வசனங்கள், உன் செயல்கள் அனைத்தையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணி என்கிற. ”ஈஸ்வர ப்ரணிதானா” என்கிற வரிகளுடன் இயல்பாக வந்து பொருந்திக் கொள்கிறது. மேலும் சுபஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புக்காக காத்துகொண்டிருக்கிறேன்.

அவருக்கு அன்பும், நன்றியும்.

சௌந்தர்

***

அன்புள்ள ஜெ

சுபஸ்ரீ மொழியாக்கம் செய்த பகுதிகளை வாசித்தேன். அற்புதமான சரளம். மூலத்துடன் ஒப்பிட்டால் சொல்லுக்குச் சொல் மொழியாக்கமாகவும் இருக்கிறது. தமிழில் பல மொழியாக்கங்களை வாசித்து மனம் வருந்தியவள் நான். இந்த மொழியாக்கம் மொழிபெயர்ப்பாளர் தன் ஆன்மாவைக் கொடுத்து செய்தது என்று தோன்றச் செய்கிறது. இத்தனைக்கும் மிகமிக நீளமான சொற்றொடர்கள் கொண்ட பழையபாணி பிரிட்டிஷ் ஆங்கிலம். இதை வாசிப்பது ஒரு தவம் போல அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.

கிறிஸ்தவ விழுமியங்களைப் பற்றிய நாவல். நவீனத்துவமும் ஆன்மிகமும் மோதிக்கொள்ளும் புள்ளியை அற்புதமாகச் சித்தரித்த நாவல். நான் இந்நாவலை வாசித்திருக்கிறேன். ஆனால் எனக்கும் நீங்கள் சொல்லித்தான் அறிமுகம். நீங்கள் தஞ்சையில் ஓர் உரையில் இந்நாவலின் கதையை அனேகமாக முழுமையாகவே சொன்னீர்கள். உணர்ச்சிகரமாக இருந்தது அந்த உரை. அன்று சேக்கிழார் அடிப்பொடி, மரபின் மைந்தன் முத்தையா எல்லாம் பேசியதாக நினைவு. இன்றைக்கும் இந்நாவல் இந்தியச் சூழலுக்கு மிகப்பொருத்தமானதாக உள்ளது. என்றைக்குமான அடிப்படைக் கேள்விகளை எழுப்பும் பெரும்படைப்பு

தமிழ்ச்செல்வி மாணிக்கவாசகம்

***

முந்தைய கட்டுரைவிருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர்!
அடுத்த கட்டுரைகல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு