ஆபரணம், கடிதங்கள்-3

ஆபரணம், பா.திருச்செந்தாழை

அன்புள்ள ஜெ,

ஆபரணம் ஒரு நல்ல கதை. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று அவ்வப்போது குரல்கள் உருவாகும். அப்படி ஒரு குரல் எண்பதுகளில் வந்தபோது இமையம், சோ.தர்மன், ஜோ டி குரூஸ் போன்று ஒரு அணி வந்து யதார்த்தவாதம் அதுவரை தொடாத இடங்களை தொட்டுக்காட்டியது. அதேபோலத்தான் இப்போதும். தமிழ்ச்சிறுகதையில் இன்றைக்கு ஆண்பெண் உறவு, மிடில்கிளாஸ் சிக்கல்களை எழுதும்போக்கு உருவாகிவிட்டது. கொஞ்சம் பெர்வெர்ஷன். பெர்வெர்ஷனை எழுதுவதற்காக செயற்கையாக அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுவதுபோல ஒரு பாவனை.

நேர்மையான எழுத்தின் வலிமையை நாம் திருச்செந்தாழையின் எழுத்திலே காண்கிறோம். இதுவரைச் சொல்லப்படாத உலகம். பேரமும் சூதும் வாழும் ஓர் உலகம். அங்கே உள்ள அறமும் கருணையும். அந்த உலகத்தை மிகையாக்காமல் நம்பகமாகச் சொல்கிறார். அத்தனை ஆண்டுகளுக்குப்பின் குழந்தையைப் பார்க்கச் செல்லும்போதுகூட மனமறிந்து ஒரு நல்ல தின்பண்டம் துணி வாங்கப்போகாத மரியத்தின் உள்ளம் அழகாக வந்திருக்கிறது. இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது நம்மைச்சுற்றி.

எஸ். பிரபாகர்

***

அன்புள்ள ஜெ,

பா.திருச்செந்தாழையின் ஆபரணம் ஒரு அற்புதமான கதை. மெய்யான ஆபரணம் எது என்னும் இடத்தை தொட்டுச்செல்கிறது. இதே கதைக்கருவுடன் சுஜாதா ஒரு கதை எழுதி வாசித்த ஞாபகம். ஆனால் அதிலுள்ள கூர்மை செயற்கையாக இருந்தது. இதிலுள்ள சிதைவும் மழுங்கலும் இந்த உலகுக்கு உரிய யதார்த்தமாக தோன்றியது

ஆர்.கே

***

அன்புள்ள ஜெயமோகன்,

“ஆபரணம்” கதை ஒரு நுட்பமான வாழ்க்கைத் தருணத்தை மொழியால் அள்ளி முன்வைக்கிறது. கதையின் துவக்கத்திலும் மத்தியிலும் சித்திரை மேல் குவிக்கப்படும் பரிதாப உணர்ச்சி கதை முடிவில் மரியத்தின் மீது திருப்பப்படுகிறது. நிராயுதபாணிகளின் மீது கொலை ஆயுதத்தை  எறிந்து  அவர்களை நிர்மூலமாக்கும் ரௌத்திரம் கொண்ட மரியத்துக்கு இறுதிவரை நிம்மதியே ஏற்படவில்லை. சித்திரைக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று மரியத்தைத் தொடர்ந்து வென்றபடியே உள்ளது. அதை மரியம் மட்டுமே தெளிவாக உணர்ந்து அமைதியிழந்தபடி இருக்கிறாள். சித்திரைக்கும் அது தெரியும் என்றாலும் அதைத் தனது இயல்பான கள்ளமின்மையால் கவனிக்காமல் இருக்கிறாள்.

ஆனாலும் அவர்கள் இருவரை மீறிய ஏதோவொன்று அவர்களின் உண்மையான இடத்தை இருவருக்குள்ளும் காட்டிச்சென்று விடுகிறது. கதையின் துவக்கத்தில் புகைமூட்டமாகத் தென்படும் சூழலும் மனிதர்களும் மிக விரைவிலேயே வாசக மனதுக்கு அணுக்கமாகிவிடுகின்றன.  மிகக் கனமான கதை. பெரிய பாம்பொன்று இயல்பாக தன் புற்றுக்குள் சென்று மறைவது போல கதை நடந்து முடிந்துவிடுகிறது.

திருச்செந்தாழை பயன்படுத்தும் சொற்கள் உவமைகள் யாவும் புதுமையாக இருக்கின்றன. புதுத் துணியை முகர்ந்து பார்ப்பதைப் போலிருக்கிறது ஒவ்வொரு உவமையும்.

“அழுக்கான பழைய மெழுகுவர்த்தியைப் போல சித்திரை வியர்வைக்குள் நின்றிருந்தாள்”

“பழைய சதுரங்கப் பலகையொன்றில், அழுகைகளோடும் கோபங்களோடும் பிரிந்து சென்ற யானைகளும் குதிரைகளும் ஆண்டுகளின் களைப்போடு மீண்டும் எதிர்கொள்கின்ற சித்திரத்தைப் போல கிடந்தது வீடு”

“ நீரடிக் கூழாங்கல்லாக அவர் அறிந்தே இருந்தார்”

“திலகரின் கடை முழுக்க முழுக்க நன்னீரால் குளிப்பாட்டிய சிறிய தாவரம் போல எளிய மகிழ்ச்சிகளில் நிறைந்திருந்தது”

“திசையெங்கும் சூன்யமாகி கண்பார்வை இழந்தவனைப் போல அவன் உடைந்தமர்ந்திருந்தான்”

“வாளின் கூர்நுனியால் வெட்டிட முடியாத நுரைக்குமிழி போல அந்த மகிழ்வு மிதந்தேறி அவளுக்கு அகப்படாமல் விலகிச்சென்றது”

இப்படிப்பட்ட புதிய உவமைகளும் சொல்லாட்சிகளுமே வாசகனைக் கதைக்குள் மேலும் மேலும் ஈடுபட வைக்கிறது.

மிக்க அன்புடன்

கணேஷ்பாபு

சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைநூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்
அடுத்த கட்டுரைசுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்