வணக்கம் ஜெ
உங்களின் 2014 ஆம் ஆண்டு மலேசிய வருகையின் போதுதான் உங்களின் தளத்தை வாசிக்கத் தொடங்கினேன். உங்கள் பெயரை இணையத்தில் தேடிய போது மொழி லிபி, பாரதியார் போன்ற ஒரிரு சர்ச்சைகல் தெரிந்தன. உங்கள் தளத்தில் ஒவ்வொன்றையும் இட்டுத் தேடத் தொடங்கினேன். ஒன்றன் பின் ஒன்றாக சரடைப் போல வெவ்வேறு கட்டுரைகளையும் விவாதங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தளம் ஒருவகையான அகராதியைப் போலாயிருந்த தருணமது. தேடலில் எதையாவது தட்டச்சிட்டுத் தேடினால் அதுகுறித்த சித்திரம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அப்படியாகத்தான் காந்தி குறித்த கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்.
எங்கள் வீட்டில் காந்தியின் படமொன்று இருந்தது. பச்சை வண்ணப் பின்னணியில் நேரு, இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரி, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்களுக்கு மேல் காந்தியின் படம் பெரியதாக இருக்கும். காந்தியைப் பற்றிய பிம்பம் ஞானி, மகான் என்றளவில் அறிமுகமாகியிருந்தது. உங்கள் கட்டுரைகளில் இருந்த அவரின் பாலியல் ஒடுக்கச் சோதனை வழிமுறைகள் அதிர்ச்சியை அளித்தன. எப்பொழுதும் அழகாகச் சிரிக்கும் காந்தியின் வரையப்பட்ட படத்திலிருந்து பொக்கைவாய் சிரிப்புடன் இருக்கும் காந்தியின் படமே வித்தியாசமாக இருந்தது. அந்தக் கட்டுரைகளின் வாயிலாகக் காந்தியைப் பற்றிய தரவுகளை நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தது. அவற்றை வீட்டுப் பெரியவர்களுடனான உரையாடலில் குறிப்பிட்ட போது அவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நெடுங்காலத்துக்கு முன்னால் வாழ்ந்த ஞானி என்ற பிம்பமே அவர்களிடம் இருந்தது. எனக்கு காந்தியின் மீதான வழிபாட்டுணர்வு கூட தோன்றியதெனலாம்.
அதன் பிறகு, சத்தியச்சோதனை புத்தகத்தை வாசித்தேன். பின்னர், காந்தியிலாளர்களைப் பற்றி உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளையும் வாசித்தேன். காந்தியைப் பற்றிய தொடர் வாசிப்பு காந்தியத்தை உணர்ந்து கொள்ளச் செய்தது. மீண்டும் இன்றைய காந்தி எனும் காந்தியைப் பற்றிய உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்கும் போது நவீன உலகச் சிக்கல்களுக்குக் காந்தியத்தின் தேவை என்னவாக இருக்கிறதென்பதை உணர முடிந்தது.
பெரும்பாலும், எனக்குள் காந்திய வழிமுறையிலான போராட்டத்தை ஒட்டி சில கேள்விகள் எழுவதுண்டு. உண்ணாவிரதம், சத்தியாகிரகம் போன்றவை எதிர்தரப்பினரின் மனச்சான்றுடன் உரையாடல் நிகழ்த்துமா, கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகப் பங்கேற்பை அளிக்கும் நாடுகளில் இவை சாத்தியமா ஆகியவற்றைச் சொல்லலாம். இந்த ஒட்டுமொத்தத் தொகுப்பில் மீளமீள இடம்பெறும் காந்தியத்தைப் பற்றிய சித்திரம் மக்களிடையே இருக்கும் கருத்தியல் மேலாதிக்கத்தைத் தொடர் உள்ளார்ந்த போராட்ட அணுகுமுறைகளால் மாற்றுவதன் மூலமே எண்ணிய இலக்கை அடைவதென்பது. அதை ஒட்டிச் சிந்திக்கும் போது, மானுடத்தின் மீதான நம்பிக்கையோடும் தியாக உணர்வோடும் காந்தியத்தை முன்னெடுக்கும் போதே அதன் சாத்தியம் எட்டமுடியும் என எண்ணத் தோன்றுகிறது.
அத்தகைய சாத்தியத்தை அடைய ஒருவரால் முடியுமா என அடுத்த கேள்வியும் பிறக்கிறது. ஆனால், மலேசியாவிலே கூட காந்திய வழியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல போராட்டங்கள் எண்ணிய இலக்குகளை அடைந்திருக்கின்றன என உடனடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. ஜனநாயகத்தைப் பற்றிய தொடர் கசப்பான செய்திகள் பரவும் வேளையில் இந்தப் புத்தகத்தின் வாசிப்பு ஒருவகையில் அதிலிருந்து மீள்வதற்கு உதவியாகவும் இருந்தது.
குறைவான நுகர்வும் தொழிற்நுட்பமும் சூழியல் பொருத்தப்பாடும் கூடிய காந்தியத்தின் வாழ்க்கை முறையும் தற்கால வாழ்வுக்கு ஏற்றதாகத் தெரிந்தது. ராட்டை, சத்தியச்சோதனை, படங்கள், மகாத்மா போன்றவற்றுக்குள் காந்தியைச் சிறை வைத்திருக்கும் மனநிலை இங்குமிருக்கிறது. அவற்றிலிருந்து விடுபட்டுக் காந்தியைப் பற்றிய தொடர் உரையாடலையும் சிந்தனையும் நிகழ்த்துவதற்கு இந்நூல் துணையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி
அரவின் குமார்
மலேசியா
இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்