ஆபரணம், கடிதங்கள்

ஆபரணம், பா.திருச்செந்தாழை

அன்புள்ள ஜெ சார்,

திரு பா. திருச்செந்தாழை அவர்களின் ஆபரணம் மிகவும் நுட்பமான கதை. பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் எதுவென்று மெல்லிய கோடுகளால் குறிப்புணர்த்தும் கதை. இதை படித்ததும் நினைவுக்கு வந்தது நமது கதைத் திருவிழாவின் ‘நகை’. நகை என்பதில் புன்னகை அல்லது ஆபரணம் என்னும் பொருளில், பெண்ணுக்கு நகையாவது முக அழகை விட அவளது வெற்றியும் தன்னம்பிக்கையுமே என்று குறிப்புணர்த்துவது. அவ்வகையில் இந்த இரு கதைகளும் ஒரே தளத்தின் இரு வேறு வகைமைகளாகவும், ஒன்றன் வாசிப்பை மற்றோன்று மெருகேற்றுவதாகவும் தோன்றியது.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

***

அன்புள்ள ஜெ

பா.திருச்செந்தாழையின் கதையை வாசிக்கையில் எனக்கும் நீங்கள் சொன்ன அந்தச் சிக்கல் இருந்தது. கொஞ்சம் கவனமாக பாதிவரை வாசிக்காவிட்டால் கதைக்குள் செல்லமுடியாது. பெரும்பாலும் நாம் சிறுகதைகள் முதல்வரியில் தொடங்குவதைத்தான் கண்டிருக்கிறோம். அதுதான் சிறுகதைக்கான கிளாஸிக்கல் இலக்கணம். உங்களுடைய எல்லா கதைகளுமே முதல்வரியில் சரியாகத் தொடங்கிவிடுகின்றன. சூழலைச் சொல்லி மெல்ல விரிவது நாவலுக்கான இயல்பு. இவருடைய சிறுகதைகள் நாவலின் அத்தியாயம் போல் இருக்கின்றன.

இதை இவர் ஏன் செய்கிறார் என்றால் கதை, கதைமாந்தரின் தன்மைகள் ஆகியவற்றை ஆசிரியரே சொல்வதுபோல வந்துவிடவேண்டாம் என்பதற்காக. அவர்களில் ஒருவரின் மனம் வெளிப்படுவதுபோல கதையைச் சொல்கிறார். ஆனால் இதற்கு பல உத்திகள் உள்ளன. இவ்வாறுதான் அமையவேண்டும் என்பதில்லை. ஆகவே இதை ஒரு சிறப்பாகவோ குறைவாகவோ கொள்ள வேண்டியதில்லை. இவருடைய இயல்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் கதை முடியும்போது மனிதனை மீறிய ஒரு வாழ்க்கைத்தருணம் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியத்தின் டிராஜடி என்பதே மனிதனை துளியாக ஆக்கும் ஒரு விதியின் தருணத்தைச் சொல்லிவிடுவதுதான். அதைச் சொல்லியிருக்கிறார். அழகான கதை. பாராட்டுக்கள்.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ

பா.திருச்செந்தாழை உங்கள் தளம் வழியாக என் கவனத்திற்கு வந்தவர். சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாக அதிகமாகக் கவனிக்கப்படுகிறார் என நினைக்கிறேன். முக்கியமான எழுத்து. இப்போது பலர் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்.

கதையை வாழ்க்கையில் இருந்து எடுக்க ஆரம்பித்தாலே அதற்கு ஒரு நம்பகத்தன்மையும் கலைமதிப்பும் அமைந்துவிடுகிறது. கதையை வாழ்க்கையில் இருந்து எடுப்பதற்காக வாழ்க்கையை பார்க்கும்படி அகக்கண்ணை திறந்து வைத்திருக்கவேண்டும். அதுதான் எழுத்தாளனின் தகுதி. அரசியல் சர்ச்சைகள், இலக்கிய வம்புகளில் திளைக்கும் எழுத்தாளர்களுக்கு அந்த கண் இருப்பதில்லை. ஏதாவது எழுதுவதற்கு இருந்தாலும் எழுதும்போது அது திரிந்து விடுகிறது

திருச்செந்தாழையின் கதைகள் சொல்லப்படாத ஓர் உலகைச் சொல்கின்றன. ஒவ்வொரு உலகும் அதற்கான நெறிகளையும் வேல்யூஸையும் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றிப் பேசுகின்றன. வலியது வாழும் என்ற நெறி உள்ள ஓர் உலகம். வியாபார உலகம். ஆனால் வலியது என்றால் என்ன? எதன்முன் வலியது? எறும்புகளில் வலியது சிறியதை வெல்லும். ஆனால் அங்கே புயல் அடிக்குமென்றால்? வலிமை என்பதே ஒரு மாயைதான்

சாரங்கன்

***

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
அடுத்த கட்டுரைஅரசி