26,000 பக்கங்கள், 26 நாவல்கள், ஏழு ஆண்டுகள் என மலைப்பான ஒரு பயணத்தை மேற்கொண்டு, ‘வெண்முரசு’ எனும் நாவல் தொடரை எழுதி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஓர் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார்.
எண்ணிலடங்கா கதாப்பாத்திரங்கள், கதைக் களங்கள், இடங்கள், நிகழ்வுகள் தத்துவங்கள், அழகியல், கவிதைகள், உவமைகள், உணர்வுகள், அறிதல்கள் என ஓர் புனைவுலகப் பிரபஞ்சத்தையே ‘வெண்முரசு’ நாவல் தொடர் வாசக நெஞ்சங்களில் கட்டியெழுப்பியிருக்கிறது.
வாசிக்கும் ஒவ்வொருவரும் புதிதாகப் பிறந்து தான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை, மக்களைப் புதிதாகப் பார்க்கும் ஒரு நிலையை அடைவார்கள் என்பது உறுதி. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் வீதம் எழுதிக் கொண்டிருந்த காலத்தினின்று அவருடனேயே பயணம் செய்து ஏழு வருடங்களாக வாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் இருக்கின்றனர். வாசித்ததோடல்லாமல் ‘வெண்முரசு டிஸ்கஷன்ஸ்’ என்ற தளத்தில் உரையாடி வாசகப் பார்வையை விரித்துக் கொண்டனர்.
ஜெயமோகனின் ‘வெண்முரசு’ நாவல் நிரை நிறைவு பெற்ற 2020 ஆம் ஆண்டு தொடங்கி, ஆடி மாத பௌர்ணமி நாளில் வெண்முரசைப் பிற வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவு கூரவுமென அந்நாளை குருபூர்ணிமையாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்நாளில் தன் எழுத்துக்களால் வாழ்வை மாற்றிய ஜெயமோகனுடன் உரையாடி மகிழ்கின்றனர். இத்தகைய வாசகப் பரப்பைப் பார்த்து மலைத்து சாத்தியமல்லாத வாசிப்புப் பயணமாக வெண்முரசு அமையுமோ என்று ஐயப்படுபவர்கள் இருக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையளிப்பவர்களாக அவர் எழுதி முடித்த பின் படிக்க ஆரம்பித்து நிறைவு செய்த வாசகர்கள் அமையப் பெறுகிறார்கள்.
அவர்களில் ஒருவராக, நம்பிக்கையின் முகமாக முனைவர் ப. சரவணன் திகழ்கிறார். வெண்முரசின் ஒவ்வொரு நாவலின் முடிவிலும் ‘இனிமேலும் என்ன சொல்லிவிட முடியும்!’ என்ற மலைப்புடனேயே 26 நாவல்களையும் கடந்ததாகச் சரவணன் கூறுவார். தன் தீவிரமான வாசிப்பனுபவத்தால் தொடர்ந்து பத்து மாதங்களாகப் படித்து ஒவ்வொரு நாவலின் முடிவிலும் அதையொட்டித் தன் வாசிப்பனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
“கல்லெழும் விதை” என்ற ஜெயமோகனின் உரைக்காக 2021 ஆம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு அன்று மதுரைக்குச் சென்றிருந்தேன். பதின்மூன்று நாட்களாக ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்த “அந்த முகில் இந்த முகில்” என்ற கதை நிறைவடைந்த அடுத்த நாளில் நிகழ்ந்த விழா அது. பிரேமையின் உச்சியில் திளைத்திருந்த நாட்களும் கூட.
நிகழ்ச்சி முடிந்ததும் வாசகர்களிடம் ஜெயமோகன் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது ஜெயமோகனுடனான இரண்டாவது சந்திப்பு. நியாயமாக நானும் சென்று முண்டியடித்துக் கொண்டு அவரைப் பார்க்க முற்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான் ஏதோ முதிர்ந்த வாசகர் போல, ‘புதியவர்கள் சந்திக்கட்டும்’ என்று தூரத்தில் நின்று அவர்களையும் ஜெயமோகனையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு குரல் ‘நீங்க ரம்யா தானே’ என்று என்னை வந்து சேர்ந்தது. ஜெ வைப் பார்க்க முடியாமல் இன்னொருவருடன் பேச வேண்டுமென்பதே தவிப்பாய் இருந்தாலும் அவர் முனைவர் ப. சரவணன் என்று தெரிந்ததும் மகிழ்ந்தேன்.
ஏற்கனவே நண்பர்கள் சகிதம் அவரின் விரைவான வாசிப்புத் தன்மையைப் பற்றி சிலாகித்திருக்கிறோம். ‘உங்க வெண்முரசு கட்டுரைகள் எல்லாமே படித்திருக்கிறேன்’ என்றேன். ‘இவ்ளோ வாஞ்சையா ஜெ வை என்னைப் போலவே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. அதான் உங்க கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்’ என்றார். ‘என்னைப் போலவே’ என்று அவர் சொன்னது ஒரு திறப்பைத் தந்தது எனக்கு. அங்கு இருந்த ஒவ்வொருவர் முகத்திலும் அந்த வாஞ்சையை நான் கவனிக்கலானேன். நானும் கரைந்து நாங்களெல்லாம் ஜெயமோகன் முன்பு ஒன்றெனக் கண்டேன்.
இசைஞானி இளையராஜா அவர்களிடம் அவரின் இசை பலராலும் விரும்பப்படுவதை சிலாகித்தவரிடம்,
“அது அப்படியல்ல. நீங்களெல்லாம் என் இசையை விரும்ப ஏற்கனவே டியூன் செய்யப்பட்டிருக்கிறீர்கள்”
என்றார். அதற்கான சான்றாக அவர் ‘அல்ஃபாரிதம்’ பற்றிச் சொன்னார்.
“பியானோவின் ஒரு அல்ஃபாரிதத்திற்கு வயலினை டியூன் செய்து விட்டு அந்த ரிதத்தை பியானோவில் வாசிக்க, வயலினின் ஸ்டிரிங் அதிர்வதைக் கண்டிருக்கிறேன். என் முதல் படம் அன்னக்கிளி வந்தபோது யாரையும் அந்த பாட்டை விரும்ப நான் வற்புறுத்தவில்லையே. அந்தப் படம் வெளிவந்த போது எப்போதும் போல் மாலை மெரினாவில் நடைப்பயிற்சிக்காகச் சென்றேன். அப்போதெல்லாம் டேப் கிடையாது. ஆல் இந்தியா ரேடியோவில் தான் மக்கள் பாட்டு கேட்பார்கள். அடுத்த பாடல் ‘அன்னக்கிளி’ என்ற அறிவிப்பு வந்தது. நான் கடந்து செல்ல செல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஆரவாரத்தோடே அந்தப் பாட்டை டியூன் செய்து கேட்பதைக் கவனித்தேன். நான் கடற்கரையை நெருங்கும்போது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அந்தப் பாட்டுதான். அப்போது என்னுள் அந்தக் கேள்வி எழுந்தது. எது எல்லோரையும் என் பாட்டை நோக்கி ஈர்த்தது? என்று. பின்னாளில் ‘அல்ஃபாரிதம்’ பற்றி நான் தெரிந்து கொண்டபோதுதான் அதற்கான விடையைக் கண்டடைந்தேன். நானல்ல. நீங்கள் எல்லோருமே என் பாட்டை விரும்ப ஏற்கனவே டியூன் செய்து அனுப்பப்பட்டிருக்கிறீர்கள். என் பாடலில் நீங்கள் கண்டடைவது உங்களைத் தான்.”
ஆம்! நாங்களெல்லாம் எழுத்துலக ஞானியான ஜெயமோகனை நோக்கி ஏற்கனவே டியூன் செய்யப்பட்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அப்படி ஒரு சக வாசகராகவே சரவணன் அவர்களை முதலில் தெரிந்து கொண்டேன். அதன் பின் அவருடைய வெண்முரசின் தீவிர வாசிப்பை ஒரு நண்பராகக் கண்டு பிரமித்திருந்தேன்.
காலையும் மாலையுமென வெண்முரசிலேயே அவர் உழல்வதைக் கண்டிருக்கிறேன். ஜெயமோகனின் மற்றெந்த ஆக்கங்களையும் சிறுகதைகளையும் பற்றி அவரிடம் விவாதிக்க முடியாதளவு வெண்முரசிலேயே மூழ்கியிருந்தார். வெண்முரசை அவரைப் போல வாசிக்க என்னையும் பல நண்பர்களையும் ஊக்குவித்திருக்கிறார். அவர் அளவுக்கான தீவிரத்தைக் கடைபிடிக்க முடியாதளவு திணறி என் வாசிப்பு இலக்கை சற்று இலகுவாக்கியிருக்கிறேன்.
ஒவ்வொரு நாவல் முடித்த அன்றும் அந்த நாவலைத் தன் நண்பர் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்குள் கதை சொல்லியாக மாறி, சுருக்கிச் சொல்வதும் உடனேயே அதைக் கட்டுரையாக வடித்து ஜெயமோகனுக்கு அனுப்புவதுமென தீவிர செயலில் இருந்தார் சரவணன்.
சென்றடைந்து விடக்கூடிய ஓர் இலக்கை தீவிரத்தன்மையோடு ‘செயல்! செயல்!’ என விரைந்து கொண்டிருந்தார். ஒன்றிலேயே செயலைச் செலுத்திக் கொண்டிருப்பவன் அதில் விரைவும் கைத்தேர்ச்சியும் பெற்றுவிடுவதைப் போல அவரின் கட்டுரைகள் ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.
நாவலைப் படிக்கும் விதத்தைப் பற்றி ஜெயமோகன் சொல்லும் போது அவர் கூறுவதும் இந்தத் தீவிரத்தன்மையைத் தான். சிறு இடைவெளி விடுவதால் அந்தப் பேரொழுக்கிலிருந்து விடுபட்டு வழிமாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒரு நாவலைக் கைக் கொண்டுவிட்டால் வேறெந்த சிந்தையுமின்றி முழு மூச்சாக வாசிப்பதையே `வாசிப்பு’ என ஜெயமோகன் கூறுவர். தன்னை முழுதளித்து வாசிக்கும் அத்தகைய வாசிப்பைச் சாத்தியமாக்கிக் காட்டி நமக்கு ஒரு முன்னோடி வாசகராக முனைவர் சரவணன் அவர்கள் திகழ்கிறார்.
‘வெண்முரசு’ வாசக நண்பர் ஒருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது அவர் சரவணன் அவர்களின் கட்டுரை தனக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே வாசித்த நாவல்களை அசைபோடுவதற்கு ஏதுவாக உள்ளதென்றும் வாசிக்காதவற்றின் போக்கை உய்த்துணரவும் உதவுகிறது என்றார்.
உள்ளபடியே சரவணன் அவர்கள் நாவலின் பொதுவான சுருக்கத்தை முதல் பத்தியில் கூறுகிறார். அது நாவலைப் பற்றிய ஒட்டுமொத்த சித்திரமாக அவர் புரிந்து வைத்திருப்பதை நமக்குக் காட்டுகிறது. அதன் பின் நாவலில் பிடித்த வரிகள், கதைமாந்தர்கள் செல்லும் போக்கு, அதை அவர் கண்ணோக்கும் விதமென எடுத்துக் கூறுவார். ஒவ்வொரு நாவலுக்கும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் வரிகள் அந்த நாவலில் அவர் கண்டு வியந்ததை நாமும் காண வழிவகை செய்கிறது. தமிழிலக்கியத்தில் அந்த நாவலின் இடம், ஜெயமோகனை எந்தெந்த இடங்களிலெல்லாம் வியந்தார் என்ற பெருமையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லிக்கொண்டு வருகிறார்.
வெண்முரசை குறைந்தபட்சமாக ஆறு மாதத்தில் வாசித்த வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால், சென்ற ஆண்டு நவம்பர் தொடங்கி பத்து மாதத்தில் ஒரே மூச்சாக வாசித்ததோடல்லாமல் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் ஒரு கட்டுரை வீதம் எழுதியிருப்பது அளப்பரிய செயல்.
“நல்ல வாசகர் எழுதாத எழுத்தாளர். அவர் நாளைய எழுத்தாளராக ஆகலாம். வாசகராகவே இருந்தும்விடலாம். ஆனால், வாசிக்கையில் அவர் எழுத்தாளருடன் சேர்ந்தே தானும் மொழியில் பயணம் செய்கிறார்.” என்று ஜெயமோகன் நல்ல வாசகரைப் பற்றிக் கூறுவார்.
எழுத முடியாத எழுதத் தெரியாத வாசகர்களுக்கும் சேர்த்தே ஒரு வாசகர் அவர்கள் சார்பில் கடிதம் எழுதுவதாக எனக்குத் தோன்றும். ஒட்டுமொத்த வாசகப் பெருக்கிலிருந்து ஒரு துளி எழுதி, தன்னை நிறுவிக் கொள்கிறது. வாசகரின் கடிதங்களில் பிற வாசகர் உணர்ச்சிகரமாவதைப் பார்க்கலாம். முதலில் சிறு பொறாமை பின் ஆரத்தழுவி அது நானும் தான் என்ற உணர்தல். வெண்முரசைப் பற்றி வாசகராக எழுதும் ஒவ்வொருவரும் அது எழுதப்பட்ட காலத்தினின்று இனிவரும் காலப் பேரொழுக்கின் வாசகர்களுக்காகவும் சேர்த்தே எழுதுகிறான்.
கனடா அ.முத்துலிங்கம் அவர்கள், “கதையைப் படித்துவிட்டு ஒரு வரியேனும் அந்த கதை ஏன் பிடித்திருக்கிறது என்று ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுங்கள். அதுவே அவன் உவப்பது” என்பார்.
தமிழ் இலக்கியம் பயின்று, இருபது ஆண்டுகளாக வாசகராய்த் தமிழிலக்கியத்தில் உழன்று, அ. முத்துலிங்கம் ஐயாவின் சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சரவணன் அவர்கள் இவ்வாறு எழுதுவதில் ஆச்சரியமில்லைதான். எனினும் ‘வெண்முரசு’ எனும் பேரொழுக்கை நோக்கி ஒரு வாசகராக அமைந்து, ஜெயமோகன் எனும் ஆசிரியரை வியந்து வியந்து எழுதிய கட்டுரைகளாக இவை விளங்குகின்றன. ஒவ்வொரு வகை வாசிப்பனுபவமும் வாசகருக்கு ஆசிரியரை அணுகும் ஒவ்வொரு விதமான வாசல் எனலாம்.
வெண்முரசு வாசிப்பிற்கான ஒரு வாசலாக இந்தக் கட்டுரைகள் அமைந்தொழுகும் என்பதில் ஐயமில்லை. இங்கு வாசகர்கள் கண்டடையப் போவது தங்களைப் போலவே வாஞ்சையான இன்னொரு வாசகரைத்தான். ஏற்கனவே வாசித்தவர்கள் தங்களைத் தொகுத்துக் கொள்ளவும் இனிமேல் ‘வெண்முரசு’ எனும் தொடர் நாவல் வரிசையைத் தொடங்குபவர்களுக்கு ஒரு வாசலாகவும் இந்தக் கட்டுரைகள் அமைந்தொழுகும்.
இரம்யா
***
‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்