அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் கவிதைகளை நீண்டநாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பன் மறைந்த நாகராசன் விக்ரமாதித்யனின் கவிதைகளை போனில் வாசித்துக் காட்டுவான். அவனுடைய கடிதங்களிலும் விக்ரமாதித்யனின் வரிகள் இருக்கும். அப்படித்தான் விக்ரமாதித்யன் எனக்கு அறிமுகமானார்.
அவருடைய கவிதைகளை இப்போது நான் என் டைரி முழுக்க குறித்து வைத்திருக்கிறேன். எப்போதாவது என்னுடைய பழைய கணக்கு வழக்குகளை துழாவும்போது விக்ரமாதித்யனின் வரிகளும் சேர்ந்து அகப்படுவதை ஓர் ஆனந்தமான விஷயமாக நினைக்கிறேன். சிலசமயம் குத்துமதிப்பாக புரட்டிப்பார்க்கும்போதும் ஏதாவது ஒரு நல்ல வரி அகப்படும். அது ஓர் அற்புதமான உணர்ச்சியை அளிக்கும்.
ஏராளமான வரிகளைச் சொல்லமுடியும் என்றாலும் அவருடைய கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்தமான ஒன்றாக இன்றைக்கும் இருந்துகொண்டிருப்பது இதுதான்
தூத்துக்குடிப் பிள்ளை கடையில்
பொட்டலம் மடித்தவன் நீ
சித்தாளாய்
செங்கல் சுமந்தவன் நீ
கீற்றுக் கொட்டகைகளில்
வேர்க்கடலை விற்றவன் நீ
காயலான் கடையில்
காலம் கழித்தவன் நீ
வீடுவீடாகப் போய்
அழுக்கெடுத்தவன் நீ
வாளியேந்தி
எச்சில் இல்லை எடுத்தவன் நீ
பத்து வயதில்
ஓடிவந்து
ஓடும் ரயிலில்
பெட்டிபெட்டியாய்த் தாவி
எத்தனை பேர்
உன் காதைத் திருகியிருக்கிறார்கள்.
எத்தனை பேர்
உன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள்.
தென்னக ரயில்வேக்கு இன்னமும்
தீராத கடனிருக்கு.
மறக்கமுடியுமா மாநகராட்சிப் பள்ளியில்
மதிய உணவுக்குத் தட்டேந்தி நின்றதை.
மாயக்கவிதை பண்ண
மற்ற ஆளைப் பாரு.
நான்
தொந்தரவுபட்ட பிள்ளையாய் இருந்தவன்.
இன்னமும்
தொந்தரவுபடும் மனுஷன்தான்.
இந்தக் கவிதையை விட்டால் நான் தமிழிலேயே முக்கியமான கவிதை என்று நினைப்பது இராமச்சந்திர கவிராயர் எழுதிய பாடல்
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் அச்சோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே!
தாமரையிலையில் இருக்கும் பெருமாள் எங்கும் பல்லைக்காட்டத்தான் எனக்கு விதித்தான் என்று நொந்து பாடிய கவிஞனின் வழிவந்தவர் போல இருக்கிறார் விக்ரமாதித்யன். இந்த வரியை நான் சொல்லாத நாள் இல்லை. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான். அவ்வளவு போதும், கவிதை ஆகிவிடுகிறது.
ரா. மாணிக்கவாசகம்
***
அன்புள்ள ஜெமோ,
விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விளக்கு விருது தவிர விருதுகள் ஏதும் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். இந்த விருது அவருக்கு முக்கியமானது.இந்த முதுமைக்காலத்தில் அவருக்கு நிறைய விருதுகள் வந்துசேரும் என்றால் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கும் எங்காவது கொஞ்சநாள் நிலைத்திருந்ததாகவும் இருக்கும்.
விக்ரமாதித்யனின் கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருபவன். இந்தக்கவிதைகளை விமர்சனம் செய்வதெல்லாம் என்னால் முடியாத விஷயம். நான் கவிதைகளை வாழ்க்கையில் வைத்து பார்ப்பவன். அவருடைய வரிகள் எனக்கு வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தோளை பிடித்து ஆறுதல் சொல்லியிருக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துக்கள்
ராஜா குமரவேல்
***