மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற நாவலை அனேகமாக உலகிலேயே நான் மட்டும்தான் ஞாபகம் வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன். அதைப்பற்றி ஒரு மிகநீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன். மலையாளத்தில் எண்பதுகளிலேயே எழுதியிருக்கிறேன்.
உலகம் மறந்துவிட்ட ‘மாஸ்டர்’களில் ஒருவர் மேரி கெரெல்லி. என் அம்மாவுக்குப் பிடித்தமான நூல் மாஸ்டர் கிறிஸ்டியன். நான் என் 19 ஆவது வயதில் அகராதியும் கையுமாக அமர்ந்து, ஒருநாளுக்கு ஆறுமணிநேரம் வீதம் ஒருமாதம் எடுத்துக்கொண்டு படித்த நாவல். நான் சொல்லி சமீபத்தில் சில நண்பர்கள் படித்ததுண்டு.ஆனால் இணையத்தில் தேடினால்கூட மதிப்புரையோ கட்டுரையோ கிடைப்பதில்லை.
இன்றைய ஐரோப்பிய பொதுவாசகச் சமூகம் மதம்சார்ந்த கேள்விகளை, ஆன்மிகமான சிக்கல்களை பொருட்படுத்துவதில்லை. அதன் வரலாறும் மிதமிஞ்சி தோண்டப்பட்டுவிட்டது. இன்று அவர்களுக்கு எஞ்சியிருக்கும் அரசியல்சிக்கல் பல்லினச் சமூகம் ஒன்றை உருவாக்குவது, எதிர்கொள்வது பற்றி மட்டுமே. அகவயக் கேள்வி என்பது பாலியல், தனிமைசார்ந்த உளச்சிக்கல் என இரு தளங்களிலேயே உள்ளது.
அவை எனக்கு பெரும்பாலும் அன்னியமாகவே தெரிகின்றன. இங்கே அவை என் பிரச்சினைகள் அல்ல. அவர்கள் அந்த தளங்களில் எழுதப்படும் படைப்புக்களை தங்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது இயல்பானது. ஆனால் அதை இங்கே, நம் வாழ்க்கைச்சூழலில் நாம் அப்படியே ஏற்று எதிரொலிக்கவேண்டியதில்லை.
அவர்களின் ஆக்கங்களிலேயே நமக்கான ரசனைகளும் நமக்கான தெரிவுகளும் இருக்கலாம். நம் அறவியலும், நம் வாழ்க்கைமுறையும் வேறானவை. ஆகவே நான் எப்போதுமே அங்கே ஊடகங்களில் பேசப்பட்ட படைப்பாளிகளை அப்படியே இங்கே கொண்டுவந்து பேசுவதில்லை. நான் முன்வைக்கும் ஆசிரியர்கள் பரவலாக அறியப்படாதவர்கள் என்பதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்.
அமெரிக்க ஆசிரியர்களில் ஐசக் பாஷவிஸ் சிங்கர், எடித் வார்ட்டன், ஜான் ஓ ஹாரா போன்றவர்களையே நான் பேசியிருக்கிறேன். அவர்களின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். எவருமே பேசாத காதலீன் நோரீஸ் எனக்கு மிக முக்கியமானவர். பிரிட்டிஷ் ஆசிரியர்களில் எனக்கு ஜார்ஜ் எலியட், மேரி கெரெல்லி, ஃபான்னி பர்னி முக்கியமானவர். ஐரோப்பிய எழுத்தாளர்களில் இசாக் டெனிசன் போல சிலரை நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
இவர்கள் அனைவருமே ஆன்மிகமான வினாக்கள், அறம்சார் உசாவல்கள் கொண்டவர்கள். மேரி கெரெல்லி அவர்களில் ஒருவர். மாஸ்டர் கிறிஸ்டியன் வெறும் மதம்சார்ந்த வினாக்களை முன்வைப்பது அல்ல. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஓவியக்கலையின் ஆன்மிகமும் அறச்சிக்கல்களும் அதில் உள்ளன.
நண்பர் சுபஸ்ரீ மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலை மொழியாக்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இரண்டு அத்தியாயங்கள் செய்திருக்கிறார். அந்நாவலின் ஆங்கிலம் பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ்நடை கொண்டது. நீண்ட சொற்றொடர்கள், சிக்கலான சொல்லாடல்கள். அத்துடன் கிறித்தவக் கருத்துக்களும் சொல்லாட்சிகளும் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கலையின் கலைச்சொற்களும் நிறைந்தது. அதை கடும் உழைப்பில் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் சுபஸ்ரீ.
தமிழில் மீண்டும் அந்நாவலை வாசிக்கையில் அதே உளநெகிழ்வும் நிறைவும் உருவாகிறது. என்ன இருந்தாலும் தமிழ்தான் என் அகமொழி. இந்நாவல் மொழியாக்கம் முடிந்து வெளிவந்தால் உலகச் செவ்விலக்கியங்களில் ஒன்று தமிழுக்கு வரும்.
[ I ]
அனைத்து மணிகளும் கன்னிமேரியை வாழ்த்தி ஒலித்துக் கொண்டிருந்தன. மாலைக்கதிர் அணைந்து கொண்டிருந்தது. புராதன ரூவான் நகரத்து அழகிய சாம்பல் நிறக் கோபுரங்களிலிருந்து எழுந்த தூய மணியோசை இலையுதிர் காலத்து வெங்காற்றில் உயரே எழுந்து கலந்து இனிமையைச் சேர்த்தது. அன்றைய நீண்ட நாளின் வணிக பேரங்களை முடித்துக் கொண்டு பழம், பூ, காய்கறிகளை விற்ற களைப்போடு சந்தையிலிருந்து தங்கள் குடில்களுக்கு களைத்த நடையில் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் அங்கே சற்று நின்று பக்தியுடன் சிலுவையிட்டுக் கொண்டார்கள். ஆற்றொழுக்கில் சோம்பலாக மிதந்து சென்ற தட்டையான எடைமிக்க படகொன்றில் இருந்த படகோட்டி தனது தொப்பியை கழற்றிவிட்டு “புனித மேரியே, இறையின் தாயே, எமக்காக பிரார்த்தியுங்கள்!” என பிரக்ஞையாலன்றி நாட்பட்ட பழக்கத்தால் ஆன பிரார்த்தனைச் சொற்களை உதிர்த்தான்.
பள்ளியிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்த சில குழந்தைகள் சட்டென்று நின்று ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு தயங்கின. தாங்கள் முன்னர் கற்றுக்கொண்டிருந்த தேவாலயத் தோத்திரத்தை தங்களுக்குள் சொல்வதா வேண்டாமா எனத் தயங்குவது போலிருந்தது. ஒருவேளை அவ்விதம் சொல்வது அறிவார்ந்த செயலாக அன்றி முட்டாள்தனமாக கருதப்படுமோ எனும் ஐயம் அவர்களுக்கு இருந்தது. ஆம், ஒருகாலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்றிருந்த தேவாலய நகரொன்றின் தலைமைப் பேராயர் அன்றைய தினம் ரூவனுக்கு வந்திருப்பதாக ஒரு வதந்தி இருந்தது. அந்தப் பேராயர் மிக எளிமையான தூய உள்ளம் கொண்டவர் என்றும் ஒரு ஞானி என்றும் அவரது திருச்சபையின் ஆளுகைகுட்பட்ட பகுதிகளில் அறியப்பட்டவர். இவை எல்லாம் இருந்தாலும் அந்த மதச்சார்பற்ற கல்வி கற்கும், நவீன முற்போக்குக் குழந்தைகள் தேவாலய மணிகள் இசைக்கும் போது தேவனின் துதி பாடுவது சரியா என்பது குறித்த குழப்பம் இருந்தது. அது ஒரு சந்தேகத்துக்குரிய விஷயம்தான் – அவர்கள் படித்த அரசாங்கப் பள்ளியில் பிரார்த்தனைகள் கற்றுத்தரப் படவில்லை, பாடுவது ஊக்குவிக்கப் படவில்லை.
பிரான்ஸ் அப்போது கடவுளைத் தனது அரசு நிறுவனங்களில் இருந்து விலக்கியிருந்த காலம். ஆனாலும் கூட அந்த விலக்கப்பட்ட படைத்தவனின் எழில், ஆழ்ந்த ஒளிகொண்டு சொர்க்கமென அங்கே துலங்கியது. காலத்தால் அழியாப் புகழ் கொண்ட அந்த நகரை மலர் மாலை போல தழுவிச் சென்ற ஸெயின் நதியின் வெள்ளி வளைவுகள் அந்தி வெயிலில் செம்மை கொண்டு ஒளிர்ந்தன. நதியின் தழுவலில் நகரம் விழாவுக்கென இளம் செந்நிற பட்டு ரிப்பன் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது போல் இருந்தது. நதியின் கரையில் நின்ற உயர்ந்த மலர் மரங்கள் கணந்தோறும் மாறி வரும் ஆயிரமாயிரம் மென் வண்ணங்களை இறைத்துக் கொண்டு நின்றன. கண்ணுக்குப் புலனாகும் அனைத்தும் அவ்வொளியைச் சூடி மூடுபனிக்குள் ஒரு தெய்வீகமான கனவொன்றில் இருந்தது. டிங் டாங் – டிங் டாங்! இறுதி மணியின் இறுதி எதிரொலி காற்றில் தேய்ந்து மறைந்தது. மூடப்பட்ட தனியறைகளில் பக்தியில் தோய்ந்த பாதிரியார்களின் இறுதி பிரார்த்தனைச் சொற்கள் ஒலித்தன – எங்கள் மரணத்தின் தருவாயில்! ஆமென்!
சந்தையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் தங்கள் நடையைத் தொடர்ந்தார்கள். குழந்தைகள் தங்கள் பழைய உலகின் பிரார்த்தனை குறித்த யோசனைகளை மறந்து சொல்லப்படாத துதிகளை அப்படியே விட்டுவிட்டு பல திசைகளில் ஓடிச் சென்றன. படகோட்டி தனது படகோடு நீரொழுக்கில் மறைந்து சென்றான். மணியோசையின் கார்வையைத் தொடர்ந்த பேரமைதி ஆழ்ந்த ஈர்ப்பு கொண்டிருந்தது. அணையும் கதிரவன் வான் வெளியெங்கும் தனதெனக் கொண்டு மறையத் தொடங்கியது. அந்திச் சூரியன் நாட்டர்டாம் தேவாலயத்தின் ரோஜா ஜன்னல் எனப்படும் அழகிய வண்ணக் கண்ணாடிகள் வழியாக தனது இறுதிக் கிரணங்களை செலுத்தியது. வண்ணச்சாளரம் வழியே உட்புகுந்த ஒளி பொன்னும் மாணிக்கமும் ஊதா நிறமுமான இழைகளால் கோலங்களை வரைந்தது. அரிமா நிகர் உளம் கொண்டவன் எனப்பட்ட ரிச்சர்ட் மற்றும் கேத்தரின் டீ மெடிஸிஸின் கணவனும் டயானா டீ பாய்ட்டியேர்ஸ்ஸின் காதலனுமான இரண்டாம் ஹென்றி ஆகியோர் உறக்கத்தில் இருந்த அந்த பழைய கல்லறை மீது வண்ணக்கோலங்கள் நிறைந்தன. ஒரு அகன்ற ஒளித்தூண் சரிவாக இறங்கி கன்னி மேரியின் பாடல் மேடையை அடர்நீல நிறமாக்கியது.
அவ்வெளிச்சத்தில் “மரணிப்பவன்” என்றழைக்கப்பட்ட “லே மௌரண்ட்” என்னும் அருகமைந்த பளிங்குக் கல்லறை சிற்பம் ஒளிர்ந்தது. ஒரு விசித்திரமான அழகு பொருந்திய கலை சிற்பம் அது. வலிமை பொருந்திய மனித உடல் ஒன்று மரண வேதனையில் கடைசி வலிப்பு கொள்ளும் வதையை மிகத் துல்லியமாக சித்தரிப்பது. இந்த இழுபட்ட தசை நாண்களையும், தெறிக்கும் நரம்புகளையும், சோர்ந்த விழிகளை பாதி மூடிய வீங்கிய இமைகளையும் செதுக்கிய இரக்கமற்ற உளிகள் கொண்ட கலைஞன் எந்த விதமான போலி மரபுகளாலும் தளைக்கப்படாதவன். அவன் உண்மையின் சிற்பியாக இருந்திருக்க வேண்டும். சமரசமற்ற வெளிப்படையான உண்மை, அனைத்து அழகிய உறைகளில் இருந்தும் கழற்றி எடுக்கப்பட்ட நிர்வாணமான சத்தியம். மரணிப்பவனை அத்தனை உண்மையாக செதுக்கியவன். இன்பத்தை நாடும் உலகத்தாரின் கண்களுக்கு உவக்காத அழகற்ற உண்மையும் கூட. அவர்களுக்கு நாம் அனைவரும் ஒரு நாள் மரணிப்பவர்கள் என்ற நினைவூட்டல் தேவையற்றதாக இருக்கிறது.
ஒளிஊடுருவும் வெண்மையான உருவத்தில் நேரம் கடந்த சூரிய ஒளி மிகவும் மென்மையாக படிந்தது. குனிந்து கரங்களை நீட்டிய கன்னி மேரியின் கருணை நிரம்பிய உருவத்தை நுண்ணிய அழகுடன் கோடிட்டுக் காட்டுகிறது. பழைய சரிகை போன்ற மேலாடையில் ஒரு சில மங்கலான நகைகள் தைக்கப்பட்டுள்ளன. அன்னையின் ஆலயம் அந்த நேரத்தில் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. இருண்ட வளைந்த கூரை வளைவுகளும், சிதைந்த சிலைகளும் கொண்ட அந்த ஆலயத்தில் பழங்கால சிதைந்த போர்க்கொடிகள், கரிய கூரையிலிருந்து தொங்கிக் கொண்டு, காற்றின் ஒவ்வொரு சிறு மூச்சிலும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. தூப தீப வாசனைகளால் நிரம்பியிருந்த காற்று வேண்டுதல்களின் நினைவுகளாலும் பக்தி தோய்ந்த மௌனங்களாலும் எடை கொண்டது போலிருந்தது. வாழ்வு மற்றும் மரணத்தின் சிதைந்த சின்னங்களும், அமரத்துவத்தின் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் சின்னங்களும் அங்கே நிறைந்திருந்தன. அவற்றுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கும் கதிரவனின் கதிர்கள் வரைந்த இளஞ்செந்நிற ஒளிவட்டங்கள் சூழ கார்டினல் ஃபெலிக்ஸ் போன்ப்ரே வந்து கொண்டிருந்தார். தற்காலிக தோற்ற மயக்கங்களிலும் என்றுமுள உண்மைகளை நாடுபவர். வாடிகனில் அன்பாகவும் நகைச்சுவையாகவும் “நமது நற்துறவி ஃபெலிக்ஸ்” என்றழைக்கப்படுபவர்.
நெடிதுயர்ந்த ஒற்றை நாடி உடற்கட்டும் துறவிகளுக்கே உரிய ஆன்மீகத் தோற்றமும் கொண்டவர். அனைத்திலிருந்தும் அகலே நின்ற அவரது இயல்பு அவரை ஒரு அறிஞராக, சிந்தனையாளராகக் காட்டியது. அவரது வாழ்க்கை அன்றைய நவீன பழக்க வழக்கங்களின் வரையறைகளுக்குள் நில்லாததாக, ஒரு போதும் அவ்விதம் அமைய முடியாததாக இருந்தது. அவரது சாந்தமான நீல விழிகளின் தெளிந்த உறுதியான நோக்கு “கடவுளின் அமைதி அனைத்து அறிதல்களையும் கடந்து செல்வது” என்று தெளிவுறுத்துவதாக இருந்தது. அவரது முகத்திலும் முகவாயிலும் இருந்த அறிவார்ந்த நுண்மையின் கோடுகள் அவரது உறுதிப்பாட்டையும் உளத்திண்மையையும் காட்டின. அவ்வுறுதியும் திண்மையும் எப்போதும் நன்மையை நிறுவவும் தீமையை தவிர்க்குவுமே துணை நின்றது என்பதையும் அவை காட்டின. அவரது முகத்தோற்றத்தில் பொலிந்த திறந்த அகத்தின் கண்ணியத்தை, தயக்கம், துணிவின்மை, ஏமாற்று, சிறுமை, பலவீனம் போன்றவற்றின் சாயை எப்போதும் தொடுவதேயில்லை. உள்ளார்ந்த அருளின் ஒளியே புறத்தோற்றத்தில் திகழ்வது என்பதை அவரது நிமிர்ந்த நடையும் அவரது நேர்த்தியான உடல்மொழியும் சொல்லின்றியே உணர்த்தியது.
அவர் முன்னும் பின்னும் சென்று கொண்டிருந்த தன் மென்நடையை நிறுத்தி, “மரணிப்பவன்” எனும் கலை அற்புத சிற்பத்தை சற்றே இரக்கம் தோய்ந்த ஏக்கத்தோடும், வருத்தத்துடனும் நோக்கியபடி பெருமூச்சொன்றை உதிர்த்தார். அவரது உதடுகள் பிரார்த்தனையை சொல்வது போல அசைந்தன. மனித வாழ்வின் சுருக்கமான பரிதாபத்துக்குரிய வரலாற்றை, அதன் தொடக்கம், லட்சியம், மற்றும் இறுதியை, அந்தப் பழமையான அரிய சிற்பம் சொல்லிக்கொண்டிருந்தது.
அவ்வாலயத்தின் உச்சியில் காணப்பட்ட கலை அழகு மிக்க புடைப்பு சிற்பத்தில் ஒரு குழந்தை தன் தாயின் முலையைப் பற்றியபடி இருந்தது. அதன் கீழே ஒரு சிறுவன் தன் இளமையின் தினவோடு வில்லை வளைத்து இலக்கை நோக்கி அம்பை செலுத்தியபடி நின்றான். அதன் பிறகு மேலும் அழுத்தமாக பெரியதாக இருந்த வடிவமைப்பில் ஒரு மனிதன் தன் தொழில் வாழ்வின் உச்சத்தில் பெருமை பொங்க காணப்பட்டான், ஒரு சிறந்த போர்வீரன் படைக்கலன்களும் முழுக்கவச உடையும் அணிந்து, ஈட்டியை நிலையாக ஏந்தியவண்ணம் போரை வெற்றியை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். இறுதியாக அந்தக் கல்லறையின் மீது ஆடைகளற்று, கையறு நிலையில் இறுதி சுவாசத்துக்கான போராட்டத்தில் கைகளை நெரித்துக் கொண்டு, ஒவ்வொரு தசையும் துடிக்க, கரைந்தழியும் வேதனையை எதிர்த்துப் போராடுபவன்.
அவரது உறுதியான உதட்டின் வளைவுகளில் ஒரு புன்னகை வந்தமர, சற்றே உரத்த குரலில் கார்டினல் “ஆனால், அது இறுதி அல்ல. இங்கு அது நிறைவுற்றாலும் அங்கு அது தொடங்குகிறது” என்று சொன்னார். பக்தியுடன் விழிகளை உயர்த்தி, உள்ளார்ந்த உணர்வொன்றால் தன் மார்பில் அணிந்திருந்த ஊதா ரிப்பனில் கோர்த்திருந்த வெள்ளி சிலுவையைத் தொட்டார். செம்மஞ்சள் நிறக் கதிர்கள் நெருப்பு வளையங்களாக அவரைச் சூழ்ந்தன. முன்பொரு காலத்தில் புனிதர் பலரை எரித்தழித்த நெருப்பைப் போல அவ்வளையங்கள் அவரது மெல்லிய கருநிற ஆடையை எரிக்க முயல்வது போலிருந்தது. உடைந்துபட்ட சுவர் மாடங்களில் இருந்த இடைக்கால புனிதர்களின் உருவங்கள் தங்கள் கல் விழிகளால் அவரை நோக்கி “நாங்களும் அவ்வண்ணமே எண்ணினோம். நமது நோக்கங்களுக்காகவும் நம்பிக்கைகளுக்காகவும் மனமுவந்து துயர் சுமந்தோம். ஆனால் இன்றோ நம்மை அறியாத மக்கள், அறிந்தாலும் வெறுத்து ஏளனம் செய்யும் மக்கள் நிறைந்த உலகைக் காணும் காலமும் வந்துவிட்டது” என்று சொல்வது போலிருந்தது.
தூய விசுவாசத்தை மட்டுமே உளம்கொண்ட கார்டினல் போன்ப்ரே சுற்றிலும் இருந்த சுவிசேஷகர்களின் சிதைந்த வடிவங்களைக் கண்ட போதும், அதில் ஏதும் அநீதியையோ மனத்தளர்வையோ காணவில்லை. அவர்கள் கிறிஸ்துவின் அடியவர்கள், அதனாலேயே அவர்கள் அனுபவித்த அத்துணை வாதைகளிலும் மகிழ்ந்திருக்க வேண்டியதே அவர்களுக்குரியது என்றே அவர் எண்ணினார். கிறிஸ்துவுக்காக துன்பம் சுமக்காத, உண்மையான மகிழ்ச்சியை அறியாத ஆன்மாக்களுக்காக மட்டுமே இரக்கம் கொள்ள வேண்டும் என எண்ணினார்.
“மரணிப்பவன் என்று இன்று அறியப்படும் இந்தப் பண்டைய வீரன் தேவனிடம் அகப்பற்றுடைய ஊழியனாய் இருந்திருப்பான் என்றால் அவனும் இப்புனிதர்களை ஒத்தவனே. அவனது ஆன்மா அமைதி கொள்ளட்டும்” என்றும் எண்ணிக் கொண்டார்.
அடுத்ததாக மிக விரிவான செதுக்குகள் கொண்ட சிற்பக்கலை அற்புதமாகிய கார்டினல் அம்போய்ஸின் கல்லறையில் ஒரு கணம் நின்றார். “கிறிஸ்துவில் சகோதரர்” ஆக இருப்பவரின் நித்திய விதியைப் பற்றி ஃபெலிக்ஸுக்கு எந்தவிதமான தயக்கங்களும் ஐயங்களும் இல்லை. சிறிது நேரமாக முன்னும் பின்னும் அவர் நடந்து கொண்டிருந்த இசை மேடையில் இருந்து மென்மையாக இறங்கி அந்த மாபெரும் மையக் கூடத்திற்கு வந்தார். கூடம் அவ்வேளையில் அநேகமாக ஒழிந்து கிடந்தது. நகரின் ஓய்வேயற்ற தறிக்கூடங்களில் இருந்து வரும் களைத்த பட்டு நெசவாளி ஒருத்தி கூட அவ்வேளையில் தனது பிரார்த்தனை மணிகளுடன் அங்கு காணப்படவில்லை.
அகன்று விரிந்து பரந்த அக்கூடம் ஒரு உன்னதமான ஏகாந்தத்தில் நின்றிருந்தது. மாபெரும் நீளமும் அகலமும் கொண்ட சிலுவையை நினைவுறுத்தும் அப்புனித வளாகம் கண்ணறியா தொலைவு வரை நீண்டு கிடந்தது. பனி மூடிய இருண்ட வழிகளில் இருந்த சிற்றாலயங்களில் ஓரிரண்டு விளக்குகள் எரிந்தன. கன்னியின் இடிந்த சிலை முன்னால் வேண்டுதல்களோடு ஏற்றப்பட்ட சில மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன, சில புகைந்து கொண்டிருந்தன, ஒடிந்து விடக்கூடியது போலிருந்த பித்தளை அடுக்குகளில் சில மெழுகுதிரிகள் ஒன்றன் மேல் ஒன்றாக சாய்ந்து நின்றன.
புனித அன்னையை வாழ்த்தும் கீதத்தை இசைத்த மணிகள் நின்று பத்து நிமிடங்கள் கழிந்திருந்தது. தேவாலயத்தின் உயர்ந்த கோபுரத்தில் ஒற்றை மணி மாலை ஆறு மணி ஆகி விட்டதை நாவசைத்து உரக்க முழங்கியது. கோபுரத்தின் ஆழம் வரை, அஸ்திவாரம் வரை அவ்வொலி ரீங்கரித்து இறங்கியது.
இறுதி மணி உயர்ந்து முழங்கி காற்றில் கலந்து மறைந்தவுடன் ஒரு இசைக்கீற்று மெல்லத் துவங்கி இன்னிசையாக தவழ்ந்து வந்தது. கூடத்தின் மத்தியில் இருந்து வெளியேறும் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தவரை அந்த இசை ஒரு தேவதை போல கைப்பற்றிக் கொண்டது. அந்த இசை அவரை அங்கேயே பற்றி நிறுத்தியது. கண்ணுக்குப் புலனாகாத துணைவரிடம் சொல்வது போல “ஆர்கன் இசைப்பவர் தாமதமாகப் பயிற்சி செய்கிறார்” என்று அவர் சத்தமாக கூறினார். பின்னர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் அவருக்கு மேலேயும் வெள்ளமென இனிய இசை பரவியது. நீலமும் சிவப்புமான கண்ணாடி வழியாக வழிந்த மாலையின் இறுதி ஒளி தேய்ந்து கொண்டே வந்தது. இரு பக்கங்களில் இருந்தும் இளம் தண்டுகள் போல முளைத்தெழுந்து மேலே முழுமையாய் பூத்துக் குலுங்குவது போன்ற கோதிக் அலங்காரங்கள் கொண்ட உயர்ந்த கோபுர வளைவுகள் மைய மேடைக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்று கரிய வெளியில் கரைந்தன. திடீரென ஒரு கணத்தில், எந்த புறக்காரணமும் இல்லாமல், விளக்கவியலாத, அமானுஷ்யமான கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று நிகழத் தொடங்கியது. மதிப்புக்குரிய கார்டினலின் மனதை ஆர்வமும் அச்சமும் ஆட்க்கொண்டன.
அந்த விரிந்த கூடத்தின் அழகைக் குலைத்து விடாதிருக்க இருக்கைகள் அனைத்தும் கண்ணில் படாத வண்ணம் வைக்கப் பட்டிருந்தன. ஏனென்றறியாமல் சற்றே நடுங்கியபடி ஒரு நிழல் மூலையிலிருந்து மெல்ல ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டார். அதில் அமர்ந்து ஒரு கையால் தன் விழிகளை மூடியபடி, அவர் மேல் கவிந்த அந்த அறியா மயக்க நிலையிலிருந்து விடுபட முயன்றார். ஆர்கன் மேடையிலிருந்து அவர் மேல் வெள்ளமாய் பொழிந்த இசை எவ்வளவு மகத்தானதாக இருக்கிறது! எத்துணை தேடலும் சத்தியத்தின் சாத்தியதையும் நிறைந்ததாய் இருக்கிறது! என்றுமுள்ள, ஊகிக்கவியலாத மர்மம் ஒன்றின் சத்தியம்! எந்த மானுட சொற்களாலும் அள்ளவியலாத பிரகடனத்தின் சத்தியம்! இறையின் மறுக்க முடியாத இருப்பை பறைசாற்றும் தெய்வீகமான உறுதிமொழி போல, சொர்க்கத்தின் அருகாமையை உணர்த்துவது போல, ஃபெலிக்ஸ் போன்ப்ரே உணர்ந்தார். அந்தத் தூய மென்மையான இசைக்கோர்வைகளில் தன்னை மறந்த கனவு நிலையில் இருப்பவரைப் போல அமர்ந்திருந்தார். முற்றிலும் தனைஇழந்து, தன்னிருப்பைக் கடந்த நிலையில் அவரால் எதையும் சிந்திக்கவோ பிரார்திக்கவோ இயலவில்லை. அவ்விதமான மனநிலையில் திடீரென மிக விசித்திரமான வியப்புக்குள்ளாக்கும் சிந்தனை, அப்போதுதான் பிறந்தவை போல புதிதாக கூரிய சொற்களாக அவருள் தோன்றியது –
“மனிதகுமாரன் பூமிக்கு வரும்போது அவர் மண்ணில் விசுவாசத்தைக் காண்பார் என எண்ணுகிறீர்களா?”
கண்களின் மேல் இருந்த கையை மெதுவாக விலக்கியபடி பாதி திகைப்புடனும் பாதி திடுக்கிடலுடனும் அவர்பார்த்தார். எவரேனும் அச்சொற்களை சொன்னார்களா? அல்லது அவர் மேல் உடைந்து பொழிந்து கொண்டிருந்த இசைக்கடலில் இருந்து துமிதெறித்த தீயின் சொற்களா அவை?
“மனிதகுமாரன் பூமிக்கு வரும்போது அவர் மண்ணில் விசுவாசத்தைக் காண்பார் என எண்ணுகிறீர்களா?”
இந்த கேள்வியை அதன் வெகு அடர்த்தியான பொருளுடன் யாரோ அவரது காதோடு ரகசியமாக சொன்னது போல் தோன்றியது; சுயவிசாரமும் உள்நோக்கும் கூர்கொள்ளவே அந்த கனிந்த முதியவர் தனது கடந்த கால வாழ்க்கையை மனதளவில் திரும்பி நோக்கத் தொடங்கினார். உண்மையில் தனது வாழ்வு நல்ல முறையில் செலவிடப்பட்டதா அல்லவா என்று அவருள் கேள்வி எழுந்தது. தன்னுள் தான் உற்று நோக்கிய போது அவரது பார்வையில் தான் மனதறிந்து பாவங்கள் இயற்றிய, தகுதியற்ற வாழ்வை வாழ்ந்திருப்பதாக கார்டினல் ஃபெலிக்ஸ் போன்ப்ரே-வுக்குத் தோன்றியது. அவர் அதுகாறும் சேவை புரிந்தவர்களின் பார்வையில் அவர் ஒரு அப்பழுக்கற்ற பாதிரியாராக, இறைநேசராக, தேவதைகளின் பாதுகாப்பில் இருப்பவராகத் தெரிந்தார்.
அவர் செழிப்பான ஆங்கில கிராமம் என்று சொல்ல முடியாத ஒரு பகுதியில் ஒரு மறைமாவட்டத்திற்குத் கார்டினலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் ஆன்மீகத் தலைவராக ஒரு பேராயர் எப்போதும் இருந்த போதிலும் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். அந்தக் காரணத்தாலேயே நவீன உலகில் இருந்து மிகவும் விலகியே அவர் வாழ்ந்து வந்தார். எனவே அவரது வாழ்வின் பெரும்பகுதி வாசிப்பிலும் கற்பதிலும் கழிந்தது. சோர்வகற்றும் பொருட்டு ஓய்வு நேரங்களில் அழகிய ரோஜா மலர்களை வளர்க்கும் மகிழ்ச்சியை மட்டுமே அவர் தனக்கே அனுமதித்திருந்தார். ஆனால் இந்த ரோஜா வளர்க்கும் ஆர்வத்தைக் குறித்தும் கூட அவர் ஐயம் கொண்டிருந்தார். அதுவும் ஒரு தன்னலம் சார்ந்த விருப்போ என்று அவரைக் குறித்து அவருக்கே ஒரு அவநம்பிக்கை உள்ளே ஒளிந்திருந்தது. அதை சற்றேனும் சரி செய்யவெண்ணி அந்த அழகிய மலர்களை அவருக்கென வைத்துக்கொள்ளாது, அவற்றில் சிறந்தவற்றை தேவகன்னியின் ஆலயத்துக்கு அனுப்பி விடுவார். பிற அனைத்து மலர்களையும் நோயுற்றோர் மற்றும் நலிந்தோர் இல்லங்களுக்கு அல்லது மரணித்தவர்களின் இறுதி அடக்கத்துக்கு அனுப்பி விடுவார். அவர் அனுப்பும் மலர்கள் “கார்டினல் ரோஜாக்கள்” என்று அந்த எளிய மக்களால் குறிப்பிடப்பட்டன. வாடிய பின்னரும் கூட அவை அற்புதங்கள் செய்ய வல்லதாக அந்த ஏழை மக்களால் கருதப்படுவதும், மரணத்தின் தருவாயில் இருக்கும் உதடுகள் சிலுவைக்கு நிகராக அம்மலர்களைக் கருதி முத்தமிடுவதும், அவற்றை ஒரு தெய்வீக ஆசியென அம்மக்கள் கருதுவதும் அவர் அறிந்ததில்லை.
இவை ஏதும் அறியாமல் தனது ஆன்ம குறைபாடுகள் குறித்து வலிமிகுந்த கவனம் கொண்டவராக இருந்தார். சமீப காலமாக தனக்கு வயதாகி வருவதை அவர் உணர்ந்திருந்தார். அனைவரும் கடந்து சென்றாக வேண்டிய விளிம்பிற்கு, காலத்திலிருந்து நித்தியத்திற்கு செல்ல வேண்டிய எல்லையை ஒவ்வொரு நாளும் நெருங்குவதாக உணர்ந்து மனக்கிலேசம் கொண்டிருந்தார். ஆழ்ந்த வாசிப்பும், தியானமும், தீவிர தேடலும் தரும் ஞானம் அவருக்கிருந்தது. நவீன சிந்தனைப் பள்ளிகளிலும் மரபார்ந்த சிந்தனைகளிலும் அவருக்கு மிகுந்த பரிச்சயமிருந்தது. அவரது ஆன்மா அவர் பின்பற்றிய மரபின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலும், மாறி வரும் உலகின் விசித்திரங்களையும் குழப்பங்களையும் கருணையோடு புரிந்து கொண்டார். சில தீய கூறுகளின் கலவை, வரவிருக்கும் ஒரு பேரழிவொன்று குறித்து அச்சுறுத்துவதாக, அச்சுறுத்தக் கூடியதாக மாறி வருவதை உணர்ந்திருந்தார். இந்த கவலை தரும் முன் உணர்வு நீண்ட காலமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரை வருத்தியது. எப்போதுமே மெலிந்த அவருடைய தோற்றம் இந்தக் கவலைகளால் மேலும் தேய்ந்தது. அந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் உடல்நலம் முற்றிலும் சீர்கெடும் எல்லையை அடைந்தது. அவர் மீது அன்பும் அக்கறையும் கொண்டோர் கவலை கொண்டு மருத்துவரை வரவழைத்தனர். (இது போன்ற துறவிகளை பார்த்த அனுபவத்தில் மருத்துவர்களைப் பொறுத்த வரையில் எண்ணக் குழப்பங்களால் வரும் நோய்க்கூறுகள் சிக்கலானவை, தீர்வற்றவை). மருத்துவர் உடனடியாக இடமாற்றமும் புதிய காற்றும் அவசியமெனப் பரிந்துரைத்தார். கார்டினல் போன்ப்ரே பயணம் செய்ய வேண்டும் என்றும் புதிய காட்சிகளைக் காண்பதன் வழியாக மனதுக்கு ஓய்வும் மாற்றமும் தேடிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
தவிர்க்க இயலாத ஒன்றை ஏற்றுக் கொள்ளும் புன்னகையோடு கார்டினல் அதற்கு ஒப்புக்கொண்டார். மருத்துவ உதவியாளரின் கட்டளையை விட அவருடைய நலம் நாடும் மக்களின் அக்கறை அவரை அதை ஏற்றுக்கொள்ள வைத்தது. அவருடைய தேவாலயம் அமைந்திருந்த நகரை விட்டு பல மாதங்கள் நீடிக்கும் ஒரு பயணத்தைத் தொடங்கினார். அப்பயண காலத்தை இவ்வுலகின் செல்திசையை புரிந்து கொள்ள செலவிடுவதென தனக்குள் ஒரு உறுதியை மேற்கொண்டிருந்தார். உலகம் அழிவையும் மரணத்தையும் நோக்கிய பாதையில் கீழிறங்குகிறதா அல்லது மேன்மைக்கும் முன்னேற்றத்துக்குமான படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறதா என அறிய விரும்பினார். அவர் அப்பயணத்தை தனியாக உதவிக்கு யாருமின்றியே மேற்கொண்டார். அவருடைய உடன்பிறந்தவரின் மகளை பாரிஸில் சந்தித்து ரோமில் இருந்த அவளுடைய தந்தை வீட்டுக்கு செல்லும் திட்டம் இருந்தது. இப்போது அவர் பாரிஸ் செல்லும் வழியில் இருந்தார். ஆனால் வேண்டுமென்றே அப்பயணத்தை சற்று நீண்டதாக, சுற்றி வளைத்து பிரான்ஸ் வழியாக செல்லும் படி அமைத்து கொண்டார்.
இப்பயணத்தில் மக்களின் மதம் சார்ந்த மனநிலையை அறிந்து கொள்ள விரும்பினார். அவர் அங்கு ரூவன் நகரத்துக்கு வந்து சேர்ந்த போதே அவருடைய பழைய மனசஞ்சலங்கள் அதிகரித்திருந்ததே அன்றி குறையவில்லை. அவர் கேள்விப்பட்ட குழப்பங்களும் பிரச்சனைகளும் கட்டுக்கதைகள் அல்ல, நிதர்சனம் என்பதை உணர்ந்துகொண்டார். அவருடைய பார்வையில், மக்களுக்கு இறை மீதும் வருங்காலத்தின் மீதும் நம்பிக்கை இழந்து போனதே நிலவி வரும் குழப்பங்களுக்கு காரணம் எனத் தோன்றியது. கிறித்தவர்களின் உலகில் இந்த இறை மீதான அவிசுவாசம் எப்படி உருவானது? இக்கேள்வியை ஒவ்வொருமுறையும் கவலையோடு அணுகினார். ஒரே விடைதான் அவருக்குக் கிட்டியது. பிழை முதன்மையாக திருச்சபையிடமும் அதன் போதகர்கள் மற்றும் குருமார்களிடமும் இருக்கிறது, மதம் என்னும் அமைப்பிலேயே பிழை இருக்கிறது என்பதே அது.
அவரை ஒத்த பிறரைக் காட்டிலும் அவரே முதன்மையாகப் பிழை செய்தவர் என்ற தனிப்பட்ட மனச்சோர்வுடன் “மிக ஆதாரமான ஒன்றில் பிழை செய்து விட்டோம்” என்று தனக்கென சொல்லிக்கொண்டார். “தேவனின் போதனையை அதன் உண்மையான முழுமையில் பின்பற்ற நாம் தவறிவிட்டோம். நாமே நேர்மையின்மையின் விதையை விதைத்து விட்டோம். அந்த நச்சு விதை முளைப்பதை அனுமதித்தோம் – இல்லை, நம்மில் சிலர் ஊக்கப்படுத்தியுள்ளோம். அது இப்போது ஒட்டுமொத்த ஊழியத்தையும் மாசுபடுத்திவிடுவது போல அச்சுறுத்துகிறது.” என சொல்லிக்கொண்டார். சர்தை (சார்டிஸ்) திருச்சபையில் புனிதர் ஜானின் வார்த்தைகளை எண்ணிக்கொண்டார்
“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு.
நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.”
தேவாலயத்தில் குழுமியிருந்த நீண்ட நிழல்கள் மங்கலடைந்து இருண்டு கொண்டு வந்தன. கன்னியின் முன் சுடர் விட்டுக்கொண்டிருந்த இரண்டு மெழுகுதிரிகள் சட்டென்று படபடத்து தங்கள் குழிகளில் அணைந்தொடுங்கின. பரிசுத்தமான ஆர்கன் இசை தொடர்ந்தது. கேட்கும்தோறும் இசை மேலும் மேலும் மிருதுவாகிக் கொண்டே வந்தது. ஒரு இளம் காற்று கடலில் இருந்து புறப்பட்டு வெப்ப நிலத்துப் பூந்தோட்டங்களின் நறுமணத்தை தன்னோடு சுமந்து வருவது போல அந்த இசை, பரந்த அவ்வளாகத்தில் தவழ்ந்து சென்றது. பொன் மணல் பரப்புகளில் மென் நுரையால் முத்தமிடும் அலைகளையும் , தேன் குரல் பறவைகள் இசைப்பதையும் அந்த இசை நினைவூட்டுவதாயிருந்தது.
அச்சூழலில் இருந்தும் கார்டினல் உலகை வருத்தும் மனிதனின் விவரிக்க இயலாத குழப்பமூட்டும் துன்பங்களையும், கவலைகளையும் சிந்தித்தபடி அமர்ந்திருந்தார். அவை அவருடைய தனிப்பட்ட துயர்கள் அல்லவென்றாலும் அவர் உளம் அந்தக் கவலைகளில் தோய்ந்திருந்தது. இறை நம்பிக்கையிலும் கிறிஸ்து மீதான விசுவாசத்திலும் ஆழ்ந்திருந்த அவருடைய அழகான தெளிவான வாழ்க்கை எந்தப் புயலாலும் அலைக்கழிக்கப் படவில்லை என்பதை அவர் கருதவேயில்லை. “நன்மை இன்பத்தையே விளைவிக்கும், தீமையே துன்பத்தை உருவாக்கும்” என்னும் வழக்கு, சொல்லித் தேய்ந்த சொற்கள் என்பதாலேயே உதாசீனப்படுத்தப்பட்டாலும் சூரியன் உள்ளளவும் நித்தியமான சொற்கள். இரவை இரவென்றும் பகலைப் பகல் என்றும் அறியும் அதே உறுதிப்பாடுடன் இதை நம்பலாம், எனினும் அவர் அதை எண்ணவில்லை. அவரைப் பற்றி அப்படி ஒரு எண்ணம் அவருக்குத் தோன்றியதே இல்லை. ஏனையோரைக் காட்டிலும் அவர் மேலான நிலையில் இருக்கிறார், அதனாலேயே மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என அவர் ஒரு கணமேனும் எண்ணியிருந்தால் அவர் அந்த ஆணவத்தின், அனுமானத்தின் மன்னிக்க இயலாத குற்றவுணர்வை அடைந்திருப்பார்.
அவர் கண்ணால் பார்த்தறிந்த உண்மை, அவரை வருத்தியது. தற்காலத்தில் மக்கள் துக்கம் நிரம்பியவர்களாக, நிறைவற்றவர்களாக, அமைதியிழந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் கண்டார். இருத்தலின் சின்னஞ்சிறு இனிமைகள் இல்லாமலாகிவிட்ட உலகு. அறிவியலின் திறன்மிக்க கண்டுபிடிப்புகளும், மானுட “முன்னேற்றம்” என சொல்லப்படுபவையும் மனிதர்களின் நிறைவின்மையையே வளர்க்கிறது எனக் கண்டார். அவர்கள் துக்கத்தாலும், நோயாலும், மரணத்தாலும் சோர்வுறும் போது அவர்களை ஏந்திக் கொண்டு இளைப்பாறுதல் தரவல்ல நம்பிக்கைகளோ தத்துவமோ அவர்களிடம் இல்லை என்பதை வருத்தத்தோடு உணர்ந்தார். கிறிஸ்துவை விசுவசிக்கும் ஒரு சிலரைத் தவிர அனேகரும் புயலில் தொலைந்து அலைக்கழிந்த குழந்தைகள் போல அஞ்சி விடுவதை கண்கூடாகப் பார்த்து வருந்தினார். (தங்களுடைய ஆடைகளை அசுசிப்படுத்தாத) சிலபேர் சர்தையிலும் உண்டு!) வெகு சிலர்! எவ்வளவு குறைவான சிலர்! வாழ்வின் மீதான உலகளாவிய சோர்வே இந்த காலகட்டத்தின் நோய்க்கூறாகத் தெரிந்தது. புத்தம்புதிய அறிதல்களும் அற்புதங்களை நிகர்த்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் பொதுவெளியில் வெளியாகி அறியப்பட்டு ஒரு வார காலத்துக்குள்ளாகவே அவற்றுக்குரிய பொலிவை இழந்து மங்கி விடுகிறது.
“உலகம் முதுமை கொண்டு வருகிறது போலும். அதன் வீரியத்தை இழந்து வருகிறது. ஒளியை நோக்கி எழ முடியாத அளவு சோர்வுற்றிருக்கிறது. பிரார்த்தனை செய்ய முடியாத வகையில் தளர்த்தும் சோர்ந்தும் இருக்கிறது. ஒருவேளை நிகழ்காலத்தின் அனைத்து விஷயங்களும் முடிவுறும் வேளை நெருங்கிவிட்டது. வாக்களிக்கப்பட்ட ‘புதிய சொர்க்கங்கள் மற்றும் புதிய பூமி’யின் தொடக்கமாக இது இருக்கலாம். ” என்று கார்டினல் சோகமாக சொல்லிக்கொண்டார்.
அப்போது ஆர்கன் இசை அறுந்தது போல நின்றது. எண்ணங்களில் மூழ்கியவாறு தனை மறந்த நிலையில் நடந்து கொண்டிருந்த கார்டினல் மெதுவாக எழுந்து மைய மேடையை நோக்கி ஒரு கணம் நின்றார். தொலைவிலிருந்து காணும்போது இருள் சூழ்ந்த அப்பகுதியில் புனித ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னே எரிந்த சிறிய சுடரின் நடுங்கும் ஒளிகொண்டே பீடம் இருப்பதை அறிய முடிந்தது. ஆசரிப்புக்கூடாரத்தின் தங்கத் திறவுகோல் கொண்டு திறக்கும் வெண்பனி போன்ற பளிங்குக் கதவுகளுக்கு பின்னே புனிதமான தேவனின் வாசஸ்தலம் இருந்தது.
“மனிதகுமாரன் பூமிக்கு வரும்போது அவர் மண்ணில் விசுவாசத்தைக் காண்பார் என எண்ணுகிறீர்களா?”
அந்தக் கேள்வி அவரது மனதில் மீள மீள எழுந்து காதுகளில் எதிரொலித்தது. அவரைச் சூழ்ந்திருந்த ஆழ்ந்த மௌனம் ஒரு பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருப்பது போலத் தெரிந்தது. அவர் அறிந்திராத ஒரு வகையறியா மனஎழுச்சி அடைந்தார்.
சற்றே உரத்த குரலில் “ஆம், நிச்சயமாக அவர் விசுவாசத்தைக் காண்பார். ஒரு சிலரிலேனும். சிலபேர் ஆயினும் சர்தையிலும் உண்டு! வருத்தப்படுகிறவர்களிலும், பலவீனமானவர்களிலும், ஏழைகளிலும், பொறுமைசாலிகளிலும், ஒடுக்கப்பட்டவர்களிலும், மனிதகுலத்துக்காக தியாகம் செய்தவர்களிலும், அவர் விசுவாசத்தைக் காண்பார். எந்த மக்களுக்காக தனது உயிரை ஈந்தாரோ, அவர்களிடமே விலைமதிப்பில்லாத உயரிய நற்குணங்களைக் காண்பார். ஆனால் உலகில் சாமர்த்தியசாலிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் பொதுவாக அறியப்படுபவர்களில் அவர் அதைக் கண்டடையமாட்டார். குருமார்களிடம் அவற்றைத் தேடுவது வீணென்று ஆகும். பல புத்தகங்களை எழுதியவர்களில் அதைத் தேடி, அவர்களால் அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக உணர்வார். நவீன உலகின் தற்பெருமையாளர்களின் தரமற்ற, தவறான தத்துவத்தில் அவர் தனது போதனைகள் நிந்தனை செய்யப்பட்டிருப்பதையும், அவை எல்லாம் வீண் என்று கண்டனம் செய்யப்பட்டிருப்பதையும் பார்ப்பார்.
இந்த நாட்களில் அவருக்காக தங்கள் நலனைத் துறப்பவர்கள், அல்லது அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தை தியாகம் செய்பவர்கள் வெகு சிலரே. அதிகம் கற்றலின் பெருமை ஆணவத்தை வளர்ப்பது போல இறைவனின் அற்புதங்கள் நமக்கு அதிகமாகக் காட்டப்படும்போது, நாம் மென்மேலும் திகைத்து, குழப்பமடைகிறோம். அந்தக் குழப்பத்தில் பார்வையிழந்து படைத்தவனை விடுத்து படைப்புகளை விதந்தோதுகிறோம். நம் புலன்கள் அறியும் அனைத்தும் கண்காணா தெய்வீக நுண்ணறிவின் தோற்றமே, வெளிப்பாடே என்பதை மறந்து விடுகிறோம். என்னென்ன அதிசயங்கள்! விஞ்ஞான முடிவுகள்! எத்தனை ஆன்மீக அனுமானங்கள், மற்றும் இன்னும் பல அற்புதமான விஷயங்களைப் பற்றிய அறிவு! இவை அனைத்தும் தேவன் வரப்போகிறார் என்பதன் முன்னறிவிப்புகள் தானே!
“அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்”
அவ்விதம் பேசியபடி போதனை செய்யும் பழைய பழக்கத்தில் கைகளை உயர்த்தினார். அணைந்துவிட்ட வெயிலின் இறுதி ஒளிக்கதிர் ஒன்று அவரது விரலில் இருந்த திருத்தூதரணியும் மோதிரத்தை தொட்டது. அதன் வெளிர் பச்சை நிறம், கனன்று சுடர்நீலம் என இளம் ஊதா நிற மிளிர்வு கொண்டது. அவரது நேர்த்தியான தோற்றம் ஒரு கணம் உள்ளார்ந்த உணர்வில் பொலிந்தது.
வெளியே உலகில் பல கோடி மக்கள் கிறிஸ்துவை அறியாமலும் விசுவசிக்காமலும் இருப்பதை திடீரென உணர்ந்தார். அழகான, சிக்கலான தத்துவங்கள் கொண்ட கீழைத்தேய இனங்கள், பண்படாதவர்களாக இருக்கும் பழங்குடியினர், பிழைகள் பல இருந்தாலும் தங்கள் நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கும் கடுமையான, துணிச்சலான துருக்கிய வீரர்கள் என எத்தனை பேர்! அதைவிட கிறித்தவ நிலங்களிலேயே எத்தனை கிறித்தவர்கள், தேவனை அறியாமலும் நம்பிக்கை கொள்ளாமலும் அவரது புனிதப் பெயரை வீணே சுமந்தலைபவர்கள்! கல்லாத கான்குடியினரின் பொருளற்ற உளறல்களை விட அது எவ்வளவு வீணானது! இவை எல்லாம் முற்றிலும் அழியக் காத்திருக்கின்றனவா? அவர்களின் அழியாத ஆத்மாக்கள் காப்பாற்ற பட வேண்டாமா? ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக திருச்சபைகள் ஊழியம் செய்து இதை விட மேலான நிலையை அடைய முடியவில்லையெனில் அது பெருங்குற்றம் இல்லையா? “சிலபேர் ஆயினும் சர்தையிலும் உண்டு!” அவ்வளவுதானா?
ஆமாம், புனித அன்னை தேவாலயம் கூட, பொய் சொன்ன அப்போஸ்தலரின் நினைவை அடித்தளமாகக் கொண்டதுதானே? ஏதோ சில துன்புறுத்தும் பேய்கள் வந்தேகுவதைப் போல வெகு விரைவாக அவரது மூளையை இந்த எண்ணங்கள் பீடித்தன. அவரது மனசாட்சியின், ஆன்மாவின் மென்மையான இழைகளை எரித்தும், ஏளனம் செய்தும் வேதனைப்படுத்தின. எண்ணற்ற பிரபஞ்சங்களைப் படைத்த அன்பான இறைவன் , ஒரு சிறிய கிரகத்தில் கோடிக்கணக்கான எளிய உயிரினங்களை வேண்டுமென்றே அழிக்கும் அளவுக்கு கொடூரமாக இருக்க முடியுமா? அதுவும் அவர்கள் அறியாமையினால் அல்லது சரியான போதனையின்றி கிறிஸ்துவைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்ட குற்றத்துக்காக அழிப்பவராக இருப்பாரா? அவர் தனது கருணையினையும் மன்னிப்பையும் சர்தையில் உள்ள சிலருக்கு மட்டும் வழங்குபவராக இருக்க இயலுமா!
“இச்சின்னஞ்சிறு உலகம் நித்தியப் பெருவெளியில் ஒரு சிறு புள்ளியாகவே இருக்கிறது, அதில் சிலர் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்று கார்டினல் ஏக்கத்துடன் வாதிட்டார். ஆனால் இந்தக் காரணம் அவருக்கு சமாதானம் அளிக்கவில்லை. “கோடிக்கணக்கானவர்கள் என்றைக்குமாக அழிய வேண்டியவர்களா? பிறகு எதற்கு இந்த உயிர்பெருக்கம்! உயிரின் விரயம்! உயிரின் விரயம் என எதுவும் கிடையாது என்னும் அளவுக்கு நவீன அறிவியலை வணக்கத்துக்குரிய ஃபெலிக்ஸ் அறிவார். எதுவுமே வீணல்ல! ஒரு மூச்சுக்காற்றோ, ஒரு காட்சியோ, ஒரு ஒலியோ எதுவுமே வீணல்ல. அனைத்தும் இயற்கையின் கருவூலத்தில் சேகரிக்கப்பட்டு , இயற்கையின் விருப்பப்படி மீண்டும் நிகழக் காத்திருப்பவையே! அப்படி என்றால் தேவாலயங்கள் காக்கத் தவறிய எண்ணற்ற மக்களின், அழிவற்ற ஆன்மாக்களின் கதி என்ன? திருச்சபை தவறி விட்டது! ஏன் தவறியது? யாருடைய தவறு? யாருடைய பலவீனங்கள்? எங்கோ பிழையும் நொய்மைகளும் இருந்திருக்கின்றன என்பதால் தவறு நேர்ந்தது.
“மனிதகுமாரன் பூமிக்கு வரும்போது அவர் மண்ணில் விசுவாசத்தைக் காண்பார் என எண்ணுகிறீர்களா?”
“இல்லை” என மென்குரலில் கார்டினல் தொடங்கினார். அவரது முந்தைய கூற்றுக்கு முற்றிலும் மாறான நிலையால் கட்டாயப்படுத்தப்பட்டவர் போல மீண்டும் “இல்லை” என்றார். சற்றுத் தயங்கியபின் தேவாலயத்தின் வாயில் நோக்கி உணர்வற்று நடந்தார். கரிய ஓக் மரத்தாலான முகப்பருகே பளிங்குக் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் மங்கலாக மின்னியது. அதில் தன் விரல்களை நனைத்து கண்ணிலும் மார்பிலும் சிலுவையிட்டுக் கொண்டார். “விசுவாசம் பிரதானமாயிருக்க வேண்டிய இடத்தில் அவர் விசுவாசத்தைக் காண மாட்டார். அவர் தோற்றுவித்த திருச்சபையில் கூட அவர் விசுவாசத்தைக் காண மாட்டார். இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும், மனந்திரும்பி ஒப்புக்கொள்ள வேண்டும். இது நமது அவமானம்” என்றார்.
அவருடைய வார்த்தைகளே அவரை காயப்படுத்தியது போல அவரது தலை தாழ்ந்தது. ஆழ்ந்த மன உளைச்சலுடன் மெளனமாக வெளியேறினார். இரும்பால் ஆன பெருங்கதவு அவருக்குப் பின்னால் சத்தமில்லாமல் முன்னும் பின்னும் அசைந்தது.
கோபுரத்தில் இருந்த மணி கல்லறை மணியின் ஒலி போல ஏழு முறை ஒலித்தது. வெளியே அந்தியின் மெல்லொளி சூழலை மென்மையாக்கி, வரவிருக்கும் மாலையின் ஒளியை கூட்டியது. உள்ளே நீண்ட நிழல்கள் இருக்கை நீள்வரிசைகளுக்கு இடையில் உள்ள வழியிலும், ஓரங்களில் செறிவாக செதுக்கப்பட்ட மாடங்களிலும் இருள் சேர்த்து இரவை சற்று முன்னதாகவே அழைத்து வந்தது. இருட்காட்டில் பறந்து மறையும் மின்மினி ஒளி போல தேவகன்னியின் முன்னால் எரிந்து கொண்டிருந்த இறுதி பிரார்த்தனை மெழுகும் அணைந்தது. இறுதி மணியோசையின் எதிரொலி உயர்ந்த கோபுர வளைவுகளிலும், பெயரறியா ஜீவன்கள் ஓய்வு கொண்டுள்ள புனித மூலைகளிலும் சென்று நிறைந்து நடுங்கித் தேய்ந்தது. கார்டினல் விலகிச் சென்றதோடு தேவாலயத்தின் இறுதி உயிர்ப்பும் உணர்ச்சிகளும் மறைந்தன. அந்த மாபெரும் தேவாலயம், கடவுளின் இல்லம், ஒரு சவப்பெட்டியின் தோற்றத்தை அடைந்தது. இருண்ட வெற்றிடம், அதில் ஒரு சிவப்பு நட்சத்திரம் போல பலிபீடத்திற்கு முன் விளக்கு எரிந்தது.
[ II ]
சீரற்ற வடிவமைப்பு கொண்ட ரூவனின் அழகிய சதுக்கம் ஒரு கவிஞன் அல்லது கலைஞனின் கண்ணுக்கு மிக அழகாகத் தெரியும். வழக்கத்திற்கு மாறான வீடுகளின் வடிவமைப்பும், அதன் ஊடுவழிகளும், எங்கோ இட்டுச் செல்வதாய் மயக்கும் அடுக்கடுக்கான குறுகிய படிகளும், கூம்பிய கூரை முகடுகளும், சரிவான கூரைகளும், வடிவமைப்பின் விகிதக் கணக்குகளில் இருந்து விடுபட்ட சுதந்திரக் கட்டுமானங்களும் நிறைந்த அந்நகரின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்று கற்பனையின் அழகை சொல்வதாக இருந்தது. அங்கொரு தேவ சந்நிதி, இங்கொரு உடைந்த சிலை, ஒரு பழைய நுழைவாயிலில் பாதி சிதைந்து கிடக்கும் வீரச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி, இன்றைய மின்மய உலகில் மறக்கப்பட்ட கண்ணாடி விளக்கை ஏந்த அமைக்கப்பட்ட ஒரு துருப்பிடித்த விளக்குத்தண்டு, களைகள் மண்டிய ஒரு அழகு நீரூற்று, துருத்தியபடி நிற்கும் கல்லால் ஆன புனித நீர் கொள்ளும் கலம், அதில் மழைக்குப் பிறகு சிறகுலைத்து குளித்து வெளியேறும் பறவைகள் – இப்படியாக சென்று மறைந்த காலத்தின் ஆர்வமூட்டும் துணுக்குகள் நிறைந்த இடம்.
அதுவே ஒரு மாணவனுக்கு அவ்விடத்தை சுவைமிக்கதாகவும், ஒரு சிந்தனையாளருக்கும் கனவுலகவாசிக்கும் மிகுந்த ஈர்ப்புடையதாகவும் ஆக்கியது. முதலாம் பிரான்சிஸ் காலத்தில் இருந்து அழகிய பார்க்தரோல்டு விடுதி நிற்கிறது. அதன் சுவர்களில் பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் நல்லுறவின் பொருட்டு நிகழ்த்தப்பட்ட மாபெரும் விழாவாகிய “பொற்சீலையின் களம்” குறித்த கதைகள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்கருகிலேயே முரணாக பெட்ரார்க்கின் “ட்ரையம்ப்”பில் இருந்து உருவகங்களும் இடம் பெற்றிருந்தது. ஒருவரை ஒரு மணி நேரம் கற்பனையின் எண்ணவோட்டத்தில் நிறுத்தி வைப்பதற்கு இந்த அழகிய விடுதியின் சிற்பங்களைப் பார்த்தால் போதுமானது. முன்பொரு காலத்தில் இந்த புடைப்பு ஓவியங்களை செதுக்கிய சிற்பியின் மூளையில் பெட்ரார்க்கும் பொற்சீலையின் களமும் எப்படி ஒருங்கிணைந்தன? ஒருவர் வியக்கலாம் – ஆனால் அதற்கு விளக்கம் ஏதும் இல்லை என்பதால் வியத்தலும் வீணே. பார்க்தரோல்டு ஒரு அற்புதமான கட்டிட அழகியல் மர்மமாகவே விளங்குகிறது.
அருகிலேயே இருந்த கிராஸ் ஹார்லோஜ் மற்றும் எபிசெரி இருந்த பழைய வீதிகள் வழியாக, இளம் வயது கார்னெல்லி சகோதரர்கள் சந்தேகங்கள் ஏதுமற்ற இளம் வயதில் நடந்திருப்பார்கள். இளம் பிராயத்தின் நிதானமான மோனத்திலிருந்து எடை மிக்க பிரெஞ்சு சோக காவியங்களின் மேதையாக அவர்கள் உருமாறுவதன் முன்னர் அவர்களது பாதங்கள் நடந்த தெரு. அதற்கு அருகிலேயே இருந்த மற்றொரு நிழல் நிறைந்த, நீண்டு வளைந்த வீதிகளில் ஒன்றின் மூலையில், டயானா டி பொயிட்டர்ஸின் மறுசீரமைக்கப்பட்ட வீடு நிற்கிறது. உயிர்ப்புடன் இருந்த அந்த இல்லத்தில் அரசனைத்(இரண்டாம் ஹென்றி) தன் முகத்தின் மலர்வாலும் சுளிப்பாலும் ஆட்டுவித்த அந்த கள்ளம் நிறைந்த பெண்ணின் முகத்தை இப்போதும் காண முடியும் எனத் தோன்றுகிறது.
கம்பீரமான கோதிக் குன்று போல் நின்ற பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிமன்ற இல்லத்தை (பாலைஸ் டி ஜஸ்டிஸ்) கார்டினல் போன்ப்ரே கடந்து சென்றார். தேவாலயத்தில் அன்று அவரை நனைத்த இசைவெள்ளத்தில் உளம் நிறைந்திருக்காவிட்டால், புறத்தில் மெல்லமெல்ல சூழ்ந்திருந்த இருள் அவரது ஆன்மாவில் அப்போது குடியேறியிருந்த இருளுடன் இணைந்திருந்த அவ்வேளையில் அவையெல்லாம் அவரை மிகவும் பாதித்திருக்கும். பேரடை ஒன்று அவரை அழுத்தியது. திருச்சபையிலும் விசுவாசத்தைக் காண இயலாது என உரத்த குரலில் தேவனின் திருமேடை முன் அன்று அவர் முழங்கிய சொற்களின் குற்றவுணர்வு. ஆம், அவர் ஒரு புனித பேராயராக இருந்து கொண்டு அச்சொற்களை சொல்லியிருக்கிறார். புனித வளாகத்தின் பேரமைதியில் அச்சொற்கள் பொறிக்கப்பட்டிருந்ததைப் போல. அவருடைய தன்னறத்துக்கு முற்றிலும் ஒவ்வொத ஒன்றை அவர் செய்துவிட்டாரா? அவர் தேவநிந்தனைக்கு நிகரான ஒன்றை சொல்லிவிடவில்லையா?
நற்துறவி ஃபெலிக்ஸ் அந்தக் குறுகிய கால வருகையில் ரூவனில் தங்குவதற்குத் தேர்வு செய்திருந்த விடுதியறைக்கு குழப்பத்துடனும் வருத்தத்துடனும் எதையும் நோக்காத விழிகளோடும் சென்று சேர்ந்தார். மிகவும் எளிய பயணியர் கூட அவ்விடுதியில் தங்குவதை விரும்புவதில்லை. அதனாலேயே அவ்வெளிய விடுதியை அவர் தேர்ந்திருந்தார். வசதி மற்றும் தேவைகள் என்பது குறித்து அப்புனிதருக்கு இருந்த அரிய எண்ணங்கள் நமது நவீன மனங்களுக்கு மிகவும் பழங்கொள்கைகள் எனவும் பிற்போக்கானவை எனவும் தோன்றக்கூடியவை. ஒரு மனிதனாக இயன்றளவில் தேவனின் சொற்களுக்கு முழுமையான கீழ்படிதலுடன் வாழ முயல வேண்டும் என்பது போன்ற கொள்கைகள் கொண்டவர். இது ஒரு அரிய எண்ணம் என்றுதான் கருதப்படும். எதற்கும் துணிந்துவிட்ட, தெய்வ நிந்தனைக்கும் தயங்காத நவீன கிறித்தவ வழக்கங்களுக்கு முன்னர் இது போன்ற கொள்கைகள் பழமைவாத மதவெறி என்றே கருதப்படலாம்.
ஆயினும் அத்தகைய வாழ்வியல் விதிகளுக்கு என அவர் விதித்துக் கொண்டிருந்த தேவ கட்டளைகள் சில இருந்தன. உவந்தேற்றுக் கொள்ளும் வறுமை போன்ற கொள்கைகள். ஆம்! உவந்தேற்றுக் கொள்ளும் வறுமை – இறை கட்டளைக்கு முற்றிலும் எதிராக வாடிகனில் குவிந்துள்ள எண்ணற்ற பொக்கிஷங்களும் ஆயர்கள் மற்றும் பேராயர்களால் அனுபவிக்கப்படும் ஆடம்பர சலுகைகளும் இல்லாத வாழ்வு. கிறித்து இவ்வுலகில் ஏழ்மையில்தான் வாழ்ந்தார். மிக எளிய வறிய வாழ்விடங்களையே தேர்ந்தார். அவரது மரண சாசனம் எழுதப்பட்ட யூத மாளிகை உட்பட எந்த மாளிகையிலும் அவரது புனிதமான பாதங்கள் பதியவில்லை.
கார்டினல் ஃபெலிக்ஸ் இதில் உள்ளுறையும் குறியீடு ஒன்றையும் தீவிரமாக உணர்வதுண்டு. எந்த மாளிகையிலும் தெய்வீகமானவை மரணதண்டனையே பெறுகின்றன. மகத்தான இயற்கைவெளியில், சுடர்களும் சூரியனும் ஒளியேற்றும் வானின் கீழ் மட்டுமே கடவுள் இருக்கமுடியும். மனிதகுலத்துக்கான செய்திகளை மீட்பர் தன்னைப் பின்பற்றுபவர்களிடம் திறந்த வெளிகளில் மட்டுமே போதித்ததில் ஒரு நுட்பமான காரணம் இல்லாமல் இல்லை.
ரூவனில் புனித பேராயர்கள் வழக்கமாகத் தங்கும் மாளிகை என்றே சொல்லக்கூடிய இல்லம் ஒன்றில், அவர் எத்தனை காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள அவருக்கு அழைப்பிருந்தது. அந்த போய்டியேர்ஸ் விடுதியை ஒப்புநோக்க அம்மாளிகை கிளர்ச்சியளிக்கும் ஆடம்பரம் கொண்டது. சரிந்து விழக்காத்திருந்த இடுங்கலான அந்த பழைய விடுதியோ நொய்ந்த முதுமையின் தளர்ச்சியுடன் அதற்காக வருந்துவது போல இருந்தது. மேடிட்ட புருவங்களுக்குக் கீழே தேங்கிய வயோதிக விழிகளைப் போல காணப்பட்ட அதன் சிறிய ஜன்னல்கள், ஆழமான செதுக்கப்பட்ட வளைவுகளில் உட்குடைந்து அமைந்து, உயிர்ப்பற்ற ஒளி கொண்டிருந்தன. ஆணிகளும் தாழ்களும் இழந்துவிட்ட ஒரு குறுகிய கதவு பாதி சரிந்த நிலையில் ஒரு துருப்பிடித்த கீலில் அரற்றிக்கொண்டிருந்தது. அது எந்த வாயிலையும் இரவிலோ பகலிலோ அடைக்க முயலவில்லை. தாழ்வாரத்தில் இருந்து தவழும் கொடி தனது தங்கப் பொட்டிட்ட மரகத விளிம்புகளை தலைக்கு மேல் நீட்டி பயணக் களைப்பில் அங்கு நுழையும் எந்த ஒரு பயணியையும் வாழ்த்தும். அக்கொடி அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் உற்சாகமின்மையை நீக்கி, அங்கு குடியிருந்த இருளை சற்று வெளிச்சமாக்கியது. அந்த போய்டியர்ஸ் விடுதியை நடத்தியவர்கள் எளியவர்கள்.
போய்டியர்ஸ் விடுதியை நடத்தி வருபவர்கள் எளிய மக்கள். அதன் உரிமையாளர் ஜீன் பாடோ ரூவனுக்கு வெளியே ஒரு சிறிய தோட்டத்தில் எளிதாகப் பயிரிடக்கூடிய உருளைக்கிழங்கும் செலெரித் தண்டும் பயிர் செய்து சந்தையில் விற்று வருபவர். அவரது மனைவி விடுதி நடத்துவதிலும், அவர்களுடைய இரு அதி சுட்டித்தனமான குழந்தைகள் ஹென்றியையும் பாபெட்டையும் கவனிப்பதிலும் மூழ்கி இருப்பவள். பருத்த சரீரம் கொண்ட மேடம் பாடோ உடலை நகர்த்துவதற்கு விருப்பமில்லாதவள் போலத் தோற்றம் கொண்டிருந்தாலும் மிகவும் சுத்தம் பேணுபவள். அவளுடைய குழந்தைகளின் விஷமத்தனத்தில் முழுவதும் களைப்படைந்துவிடுவதாக கூறப்பட்டாலும் அவளுடைய வட்டவடிவ முகத்தில் நிறைவின் புன்னகையோடு இருப்பவள். அவளுடைய உடலின் இயற்கையான வளம் ஒவ்வொரு நாளும் எடை கூடக்கூடிய தன்மையில் தெரிந்தது.
பாபேட் வாணலியில் போட்டுவிட்டு பொம்மையாலோ, ஹென்றி சூப்பில் மிதக்க விட்ட காகிதக் கப்பலினாலோ மேடம் பாடோவுடைய சமையல் மிகவும் சுவை நிறைந்ததாக இருந்தது. எவ்விதமோ எல்லாம் நடந்து கொண்டிருந்தன. பாடோ தன்னுடைய குறைந்த வருவாயிலேயே நிறைவாக உணர்ந்தார். மேடம் பாடோ தன்னை கவனித்துக் கொள்ளும் வேலையிலேயே இறைவன் முழுவதும் ஈடுபட்டிருப்பதாக முழுமையாக நம்பிக் கொண்டிருந்தாள். குறும்பு நிறைந்த பாபெட்டும் அதனினும் விஷமம் நிறைந்த ஹென்றியும் அவர்களுடைய ஆடல்களில் ஒன்றை நிகழ்த்திவிட்டு, அவளுடைய மடியில் விழுந்து, உருண்ட கழுதைக் கட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்பார்கள். அதன் பின் பரிகாரமாக இரு குழந்தைகளும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மேரியின் பாடலைப் பாடி விட்டால் மீண்டும் எத்தனை விஷமங்களை அவர்கள் செய்தாலும் அந்த இனிய குணம் கொண்ட அன்னைக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லை.
ஆனால் இப்போது அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சூழலில் சாந்தமும் அமைதியும் படிந்து அந்த அலங்காரங்களற்ற எளிய விடுதியை சாந்நித்தியம் உடையதாக்கி இருந்தது. சூழலில் உருவாகியிருந்த பொருளறியா கண்ணியத்தை உணர்ந்தவளாக மேடமும் அவளது வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி தனது அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். பாடங்களைக் கற்க வேண்டுமெனத் திடீரெனத் தோன்றிய ஒரு ஆர்வத்தின் காரணமாக ஹென்றியும் பாபெட்டும் யாரும் அறிவுறுத்தாமலேயே அமைதியாக அமர்ந்திருந்தனர். கருணை நிரம்பிய முகத்தோடும் கனிவான குரலோடும் கார்டினல் போன்ப்ரே அவர்களது எளிய விடுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு வந்தது முதல் இம்மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
“மரியாதைக்குரிய பேராயர் எங்கள் ஏழை விடுதிக்கு வந்து தங்கும் பெருமை எங்களுக்குக் கிட்டும் என நாங்கள் எவ்வண்ணம் எதிர்பார்த்திருக்கமுடியும்” என்று மேடம் பாடோ பணிவான குரலில் முணுமுணுத்தாள். “முக்கிய வீதிகளில் எத்தனையோ புத்தொளி மிக்க இல்லங்கள் மரியாதைக்குரிய பேராயர் அவர்களுக்கு வசதிகள் தரக் காத்திருக்க எங்கள் எளிய குடிலை தனது இருப்பால் ஆசீர்வதித்திருக்கிறார். இவ்விதம் நேர்ந்த புனித அன்னையின் தனித்த உயர் அருளை எளிதில் விளங்கிக்கொள்ள முடியாது” என்றாள்.
இவ்விதமாக வாக்கியங்களுக்கிடையே மூச்சுத்திணறும் இடைவெளிகளோடு மேடம் பாடோ புலம்பியதை கார்டினல் கையசைத்து மறுத்த வண்ணம் தந்தையின் கனிவோடு “என் மகளே” என விளித்து சிலுவைக்குறியிட்டு ஆசீர்வதித்தார். அவர் அங்கு தங்கும் ஒரு எளிய பயணி போலன்றி வேறேதும் தொந்தரவு செய்யப் போவதில்லை என அவளை அமைதிப்படுத்தினார். “தொந்தரவா! அடக்கடவுளே! பேராயருக்கு சேவை செய்வதில் தொந்தரவென்பது ஏது!” அவளால் அவருக்குத் தர இயன்ற இரண்டு எளிய வெறுமை நிரம்பிய அறைகளை கார்டினல் அமைதியாக ஏற்றுக்கொண்டபோது அவளுக்குக் கண்ணீர் துளிர்த்தது.
குதித்தோடும் பந்துகளென உருளும் குழந்தைகள் ஹென்றியையும் பாபெட்டையும் சமையலறைக்குள் அனுப்பியபடி, தங்கள் எளிய குடிலுக்கு ஒரு பெரும் ஞானி வந்திருப்பதை சொன்னாள். அவர்கள் நல்ல குழந்தைகளாக நடந்து கொண்டால், தேவாலயத்தின் ரோஜா சாளரங்களில் காட்சி தரக்கூடிய புனிதர்களில் ஒருவராகிய அவரைக் காண சொர்க்கத்தில் இருந்து இறங்கி வரும் தேவதைகளை அவர்களும் பார்க்கலாம் என சொன்னாள். தன் வாயில் விரலை வைத்தபடி நம்பமுடியாதவளாக பாபெட் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு தேவதைகள் மீது ஏதோ சிறிது நம்பிக்கை இருந்தது. எதையும் சந்தேகப்படும் கீழ்மையான நவீன பிரெஞ்சு மனநிலை கொண்டிருந்த ஹென்றிக்கு அதில் முழுமையான அவநம்பிக்கை இருந்தது. “அம்மா, கடவுள் என ஒருவர் இல்லை என்றும் பாதிரிகளாலும், தேவாலயங்களாலும், பேராயர்களாலும் எப்பயனும் இல்லை, அவை எல்லாமே ஏமாற்று வேலை என்றும் என் வகுப்பில் படிக்கும் ஒருவன் கூறுகிறான்” என்றான். “பரிதாபத்துக்குரிய குட்டிச்சாத்தான்! அவன் நிச்சயம் ஒரு கள்ளனாகவோ கொலைகாரனாகவோதான் ஆகப் போகிறான்! அது நிச்சயம் ஹென்றி! பள்ளிகள் கற்றுக் கொடுக்கத் தவறிய எல்லா புனிதக் கடமைகளிலும் பியர் லாரென் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட நீ அதுபோன்ற நீசத்தனங்களுக்கு ஒருக்காலும் செவிகொடுக்கக் கூடாது” என்றபடி இரவுணவுக்காக அடுப்பில் ஏற்றியிருந்த சூப் இருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தாள். “என் சிறு மூடா, கடவுள் இல்லையென்றால் நாம் உயிரோடிருக்க வழியேதும் இல்லை. இறையருளாலும் புனிதர்களாலுமே இப்புவி இயங்குகிறது” என்றாள். ஹென்றி அமைதியாக இருந்தான் – பாபெட் அவனைப் பார்த்து விட்டு ஏளனத்தின் முகச்சுளிப்போடு சொன்னாள் – “கார்டினல் புனிதர் என்பது உண்மையானால் அவர் அற்புதங்களை நிகழ்த்த வல்லவராக இருப்பார். ஏழு வருடங்களாக நடக்க இயலாதிருக்கும் ஃபேபியன் டௌசெட்டை பேராயரிடம் அழைத்து வருவோம், அவனது காலை அவர் குணமாக்கி விடுவார் என்றால் அதன் பின் துறவிகளை நம்பலாம்” என்றாள்.
அடுப்பு நோக்கி குனிந்திருந்த உருண்டை முகம் சிவக்க திரும்பி வயதுக்கு மீறிப் பேசும் தனது குழந்தைகளை மேடம் முறைத்துப் பார்த்தாள். “என்ன! கார்டினலிடம் நீ பேசப் போகிறாயா? உனது முட்டாள்தனத்தை அவரிடம் காட்டத் துணியாதே! கடவுளே! – இவ்வளவு நீசத்தனமும் உண்டா! நன்றாக கேட்டுக்கொள். உனது துடுக்குத்தனமான ஒரு சொல் அவரை நோக்கி எழுமென்றாலும் தண்டிக்கப்படுவாய்! ஃபேபியன் டௌசெட் குறித்து உனக்கென்ன வந்தது? – அந்தப் பாவப்பட்ட குழந்தை இறை சித்தத்தின்படியே நோயடைந்து இருக்கிறது” என்றாள்.
அப்பதிலால் அடக்க முடியாத ஹென்றி ” எதற்காக இறையின் சித்தம் ஒரு சிறுவனை நோயுற்றவனாக்கும் விருப்பம் கொண்டிருக்கும் என எனக்கு விளங்கவில்லை” என்று தொடங்கினான். அவனை இடைமறித்து குரலுயர்த்தினாள் அவன் அன்னை “வாயை மூடு! அறிவிலி! உனது துடுக்கான சொற்களால் என்னைக் கொன்றுவிடுவாய் போலிருக்கிறது! இந்த தீய எண்ணங்கள் அனைத்தும் பள்ளியிலிருந்தே வருகிறது – உன்னை அங்கே அனுப்பும்படி உன் அப்பா கட்டாயப்படுத்தப் படாமல் இருந்திருக்கலாம்.” என்றாள்.
இதை அவள் உக்கிரமாக சொன்னதும் விளக்கவியலாத உணர்வுகளால் ஆட்க்கொள்ளப்பட்டது போல, அவன் மீது ஏதோ ஏவப்பட்டது போல, ஹென்றி திடீரென பெருங்குரலில் அழத் தொடங்கினான். அவனது அழுகுரல் ஒரு பண்படாத காட்டாளன் துன்புறுத்தப்படுகையில் அலறுவது போல ஒலித்தது. அந்த ஒலியால் மிரண்டுபோன பாபெட்டும் அவனோடு அழத்தொடங்கினாள்.
பேரிரைச்சலின் மத்தியில் கூட அமைதியாக ஒலிக்கும் கனிவான குரலில், “என் குழந்தைகளை எது துன்புறுத்துகிறது? உங்களுக்கு என்ன சிறு கவலைகள்?” என்றபடி கார்டினல் போன்ப்ரே என்ற உயர்ந்த கண்ணியமான மனிதர் அங்கே தோன்றினார். ஹென்றியின் உரத்த அழுகை அப்படியே நின்றது. பாபெட்டின் கீச்சிடும் குரலும் அந்தரத்தில் தேய்ந்து அமைதி நிறைந்தது. உயர் மதிப்பை தோற்றுவிக்கும் ஃபெலிக்ஸின் இனிமையும் நிதானமும் கொண்ட உருவம் இரு குழந்தைகளையும் பிரமிக்க வைத்தது. அங்கு நிகழ்ந்து முடிந்த சிறிய போரை பதற்றத்துடன் மூச்சுத் திணறியபடி மேடம் பாடோ சொல்லி முடித்தாள்.
“இத்தகைய குட்டிச் சாத்தான்கள் வளர்ந்து பெரியவர்களானால் என்ன ஆகுமோ, அந்த மாதாவுக்கே வெளிச்சம்!” என்று உறுமினாள். தங்கள் இரவுணவைக் கண்ணால் காணும் வரை நம்ப மறுக்கும் அளவுக்கு சந்தேகவாதிகள் என்றாள்.
தங்கள் அன்னையின் உணர்ச்சி ஆவேசமிக்க இந்த வார்தைகாளால் ஒரு மெல்லிய புன்னகை போன்ற ஒன்று ஹென்றி, பாபெட் இதழ்களில் விரிந்தது. ஆனால் கார்டினல் சிரிக்கவில்லை. அவருடைய முகம் வெளிறி உறைந்தது போல் கடுமையாக ஆனது.
“குழந்தைகள் கேட்பது சரிதான் மகளே!” என்று மென்மையாகக் கூறினார். “நான் ஞானி அல்ல! நான் ஏதும் அற்புதங்கள் நிகழ்த்தியவனல்ல. நான் ஒரு பாவி. என்னால் இயன்றவரை நல்லது ஆற்ற முயல்கிறேன், ஆம் என் முயற்சிகளும் வீணே! உயரிய வாழ்வென்பதே பழங்கதை ஆயிற்று. பெருமளவு பிழைகளின் பாதையில் வீழ்ந்துவிட்ட நாமோ, நமது மனம் செலுத்தாத அரைகுறை ஊழியத்திற்கு, இறை சேவகர்கள் என அழைத்துக் கொள்ளும் நமக்கு இறைவன் அருள வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
“இங்கே வா என் கண்மணி!” என்று பாபெட்டை அருகழைத்தார். அச்சம் கலந்த ஆர்வத்துடன் அருகே வந்த சிறுமியின் பழுப்பு நிற சுருள் முடியை தன் வெண்கரங்களால் மெல்ல கோதியபடி, “நீ ஒரு மிகச் சிறிய பெண், இருப்பினும் உன்னையோ, உனது எண்ணங்களையோ, உண்மையை உள்ளபடி அறிய விழையும் உன் விருப்பத்தையோ நான் வெறுத்தேன் என்றால் நான் ஒரு முட்டாள் வயோதிகன் என்றே பொருள். ஆகவே நாளை உனது நோயுற்ற நண்பனை அழைத்து வா. என்னிடம் ஏதும் அற்புத சக்திகள் இல்லையெனினும், தேவன் கூறியிருக்கிற படி அவன் நலமடைய வேண்டுமென, அவனைத் தொட்டு இறையிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏதேனும் அற்புதங்கள் நிகழ வேண்டுமென்றால் அது நமது தேவனாலேயே நிகழும்” என்றார்.
மென்மையாக முறையான ஆசிச் சொற்களை முணுமுணுத்துவிட்டு தனது அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டார். பாபெட் திடீரென தீவிரமடைந்து தன் சகோதரனிடம் திரும்பி, கையை நீட்டினாள். தன்னிச்சையான உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கு நேர்வது போல அவளுக்கு ஏதோ விசித்திரமான உளத்தூண்டுதல் நிகழ்ந்திருந்தது.
“தேவாலயத்துக்கு வா. அன்னைக்கு தோத்திரம் சொல்” என ரகசியமாக ஆணையிட்டாள். வழக்கமாக வார்த்தைகளை இறைக்கும் ஹென்றி ஏதும் சொல்லாமல் தனது அழுக்கான மொரமொரத்த உள்ளங்கையால் தன் சகோதரியின் விரல்களைப் பற்றிக்கொண்டு, அடக்கமாக அவளுடன் நடந்து சதுக்கத்தைக் கடந்து நாட்டர்டாமின் அமைதியான இருளுக்குள் நுழைந்தான். தனது குழந்தைகளின் கொழுகொழுத்த உருவங்கள் மறைவதை பிரமிப்புடனும் நன்றியுடனும் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, அற்புதங்கள் உறுதியாக நிகழத் தொடங்கிவிட்டதென எண்ணினாள். கார்டினலின் சில சொற்களே ஹென்றிக்கும் பாபெட்டுக்கும் வேண்டுதலுக்கான அவசியத்தை உணர்த்திவிட்டதே என வியந்தாள்.
சிறிது நேரத்திலேயே அவர்கள் மனதார கைகோர்த்துக் கொண்டு ஒன்றாக நடந்து வந்தார்கள். தங்களது அடுத்த நாளுக்கான பாடங்களை வாசிப்பதற்கு தங்கள் இடங்களில் சென்று அமர்ந்துகொண்டார்கள். ஒரு காலத்தில் நாகரீக பாரிஸ் நகரத்து யுவதி போல ஆடை அணிந்திருந்த பாபெட்டின் பொம்மை, இப்போது ஒரு அழுக்குத் தொப்பி மற்றும் மேலாடையுடன் ஒரு கண்ணுடைய சலவைப்பெண் போல அழகிழந்து அது அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து தன் நீண்ட கரங்களை வீணே நீட்டியபடி பரிதாபகரமாக ஒரு குப்பை முறத்தின் மீது தலை சாய்ந்துகிடந்தது. ரூவனின் கனவில் ஆழ்ந்த வரலாற்று வீதிகளில் எதிரொலித்து முழங்கும் ஹென்றியின் விளையாட்டு முரசும் கவனிப்பாரின்றி அமைதியாகக் கிடந்தது.
முன்னர் சொன்னது போல அப்பா பாடோவின் இல்லத்தில் அமைதி மேலோங்கியது – செலெரி பாத்திகளின் மண் மணம் நிரம்பிய பாடோவின் வருகை கூட அதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்பா பாடோ ஒரு சிறிய உற்சாகமான பருத்த மனிதர். அவருடைய சிறிய உருண்டைத் தலையில் பெரிய யோசனைகள் இல்லை, பிரபஞ்சத்தில் அனைத்தும் நன்றாகவே நிகழ்வதாக அவர் நம்பினார். பாடோவாகிய தான் வாழ்விலும் உழைப்பிலும் மிகவும் பாக்கியவான் என்றும் தன் நிலத்தின் மீது கடவுள் கொண்டுள்ள கிருபையால் செலெரி வளர்ப்பது எளிதாக இருப்பதாகவும் கருதினார். மற்றவற்றைக் குறித்து அவர் ஏதும் கருதவில்லை. உலகம் பலவிதமான சூழ்நிலைகளில் பல்வேறு போக்குகளில் இருப்பதை அறிந்திருந்தார். அவரது அரையணா நாளிதழை தினமும் வாசித்து, அரசியல் நிலைமைகளில் ஆர்வம் கொண்டவராக காட்டிக்கொண்டார். ஆனால் உண்மையில் ஃபிரெஞ்சு செனட் ஒன்றுமில்லாததைக் குறித்து முடிவற்று பேசும் முட்டாள்களால் ஆனதென்று நம்பினார். அவருக்குத் தந்தையர் நாடு போன்றவற்றில் ஓரளவு நம்பிக்கை இருந்தது, ஆனால் அந்தக் கருதுகோளும் அவரது செலெரி விவசாயத்தில் இடையூறாக வருமென்றால் எதிர்த்திருப்பார். தோராயமாக ஃபிரான்ஸ் ஒரு தேசம் என்பதையும், தான் ஒரு ஃபிரெஞ்சுக்காரர் என்பதையும் அறிந்திருந்தார். எதிரிகள் தன் நாட்டின் மீது படையெடுத்து வந்தால் தானும் அவர்களை எதிர்த்து ஒரு துப்பாக்கி ஏந்தி மனைவியையும், பிள்ளைகளையும், செலெரிப் பாத்திகளையும் தன் இறுதி மூச்சிருக்கும் வரை காக்க வேண்டியது தன் கடமை என அறிந்திருந்தார். நாட்டுப்பற்று என்பதை இந்த எளிய எண்ணத்தைத் தாண்டி அவர் ஏதும் கருதவில்லை. மாற்றுக் கருத்துகள், எதிர்க் கட்சிகளின் கருத்து வேறுபாடுகள் போன்றவற்றில் அவருக்கு ஏதும் ஈடுபாடில்லை.
அவரது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் வந்தபோது, அங்கு மதம் குறித்து கற்றுக் கொடுப்பார்களா என்பதையே முதலில் கேட்டார். இல்லை என்ற விடையே அவருக்கு கிடைத்தது. மதக்கல்வியால் லௌகீகமாக எப்பயனும் இல்லை, வெற்று விவாதங்களையே அது உருவாக்குகிறது என அரசு கருதுவதால் அதனை அரசு மறுக்கிறது என்றறிந்த போது பாடோ சிறிது நேரம் தனது மூளையை அதில் செலவழித்து ஆழமாக யோசித்தார். கடைசியாக ஒரு மங்கலான புன்னகையுடன் “நல்லது – அரசாங்கம் ஏன் இது குறித்து அவ்வப்போது இவ்வளவு மெனக்கெட்டு எதிர்க்கிறது என இப்போது புரிகிறது. இறைகடமையை கடவுளின் அருகாமை இன்றி எளிய மனிதர்கள் ஆற்றவேண்டுமென எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் பியர் லாரென் எனது குழந்தைகளுக்கு கிறித்துவத்தின் சாரத்தையும் பிரார்த்தனைகளையும் கற்றுத் தருவார். மற்றவற்றை சொர்க்கம் ஏற்பாடு செய்யும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார். உடனடியாக அந்த விஷயத்தை தனது எண்ணத்திலிருந்தும் உதிர்த்துவிட்டார். அவரது குழந்தைகள் தினமும் அரசு பள்ளிக்கும் ஒவ்வொரு புதன், சனி மற்றும் ஞாயிறு மதியங்களில் பியர் லாரென் எனும் எளிய மனம் கொண்ட கனிவான பாதிரியார் நடத்தும் வகுப்புகளுக்கும் சென்றனர். ஃபிரெஞ்சு தேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் பிரபஞ்சத்தைப் படைத்தவன் குறித்தும், பாவங்களில் ஆழ்ந்த மனிதகுலத்தின் மீது தேவகுமாரன் கொண்டுள்ள முடிவற்ற அன்பு குறித்தும், இவர்களைப் போன்ற அரசுக் கல்வி கற்கும் சிறார்களுக்கு அவரறிந்த அனைத்தையும் பியர் லாரென் கற்றுக் கொடுத்தார்.
இப்படியாக எல்லாம் நடந்து கொண்டிருந்தது – ஹென்றியும் பாபெட்டும் தேசிய கல்வி முறையால் நெரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாழ்வியலுக்கு எப்பயனும் அற்றவை கல்வி என்ற பெயரால் வழங்கப்பட்டது. அக்கல்வி அவர்களை இளம் வயதிலேயே குறை கூறுபவர்களாக மாற்றினாலும், தங்களை விட மகத்தான ஒன்று குறித்த அறிதலின் பாதுகாப்பிற்குள் அவர்கள் இன்னமும் நீடித்தார்கள். மனிதர்களை விட மகத்தானது – அமைதியாக நீல வானென தன்னை வெளிப்படுத்திக் கொள்வது, மலரென மலர்வது, மனிதனுக்கு தொடர்பில்லாத அனைத்திலும் அன்பென வெளிப்படுவது போன்றவற்றின் இருப்பை உணர்ந்ததால் அக்குழந்தைகள் இன்னும் நவீன காலகட்டத்தின் விளைவாக உருவாகும் குழந்தை-நாத்திகர்களாக மாறவில்லை. தன்னைவிட மகத்தான கடவுள் இருக்க முடியாதெனும் அவநம்பிக்கையாளர்களாக மாறிவிடவில்லை.
அந்த குறிப்பிட்ட இரவில் அப்பா பாடோ கதகதப்பான இல்லத்துக்குத் திரும்பிய போது, பொதுவாக மந்த புத்தியினாராக இருக்கும் அவரும், அமைதிப்புறாவின் சாந்தம் தனது இல்லத்தில் பரவியிருப்பதாக உணர்ந்தார். அவரது பருத்த மனைவியின் முகம் சாந்தமாயிருந்தது, குழந்தைகள் ஒழுங்கில் அமைந்திருந்தார்கள். நேர்த்தியாக பரிமாறப்பட்ட இரவுணவின் முன் அமர்ந்த போது எல்லா விதத்திலும் சிறப்பான முறையிலேயே அவரது வாழ்வு நடக்கிறது என்ற உறுதிப்பாட்டை அடைந்தார்.
சூடாக இருந்த சூப்பை அருந்துவதற்கு எடுத்தபடி “மரியாதைக்குரிய கார்டினல் போன்ப்ரே அவர்களுக்கு உணவு பரிமாறியாகிவிட்டதா?” என்று கேட்டார்.
மேடம் பாடோ தன் வட்ட விழிகளை விரித்து அவரை பார்த்தாள். “நிச்சயமாக, அவர் உண்பதற்கு முன்னர் உங்களுக்கு உணவிடுவேன் என நினைத்தீர்களா என் பிரிய வெங்காயமே? உங்கள் கேள்வியே விசித்திரம்தான்” என்றாள்.
அப்பா பாடோ அகப்பை நிறைய எடுத்த சூப்பை வெட்கத்துடன் அமைதியாக விழுங்கினார்.
“இன்று வயல்வெளியில் மிக அழகிய தினம், ஊதா மலர்கள் வளர்ந்திருப்பது போல மண் மனம் கொண்டிருந்தது. இலையுதிர் காலத்து இறுதிநாட்கள் என்றாலும், வானம்பாடி பாடிக் கொண்டிருந்தது. விண்ணுலகம் நீல நிறமாக இருந்தது, சிறிய தேவதைகள் போல வெண்மேகங்கள் ஆங்காங்கே தொற்றிக் கொள்ள வானம் கன்னி மேரியின் ஆடை நிகர்த்த நீலம் கொண்டிருந்தது.” என்று அன்றைய தினத்தை நினைவுகூர்ந்தார்.
மேடம் தலையசைத்து ஆமோதித்தாள். சிலர் அப்பா பாடோ கவிதை சொல்லும் மனநிலையில் இருப்பதாக எண்ணலாம், அவள் அப்படி நினைக்கவில்லை. ஹென்றியும் பாபெட்டும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். “தேவ அன்னையின் ஆடை எப்போதுமே நீலம்தான்” என்றாள் பாபெட். “தேவதைகளின் ஆடைகள் எப்போதுமே தூவெண்மை” என்றான் ஹென்றி.
மேடம் பாடோ ஏதும் சொல்லாமல் மற்றொரு முறை அனைவருக்கும் சூப் பரிமாறினாள். அப்பா பாடோ தனது பிள்ளையை பார்த்து சாதுவாக புன்னகைத்தார்.
“ஆம், வானின் நிறம் நீலமும் வெண்மையும்தான் என் குழந்தைகளே, அங்குதான் நம் மாதாவும் தேவதைகளும் வாழ்கிறார்கள்” என்றார்.
பாதி நிறைந்த வாயோடு, “அங்கே எங்கிருக்கிறார்கள் என வியக்கிறேன். வான் எனப்படுவது எல்லையில்லா வெளி, அவ்வெளியில் சுற்றித் திரியும் எண்ணற்ற கோள்கள், சில நம் உலகை விடப் பெரியவை, எது மிகப் பெரியதென்று நாம் அறியவே முடியாது” என்றான் ஹென்றி.
“நீ சொல்வது சரிதான் மகனே, எது மிகப் பெரியதென யாரும் அறிய முடியாது. ஆனால் எது மிகப் பெரியதோ அது மாதாவுக்கும் தேவதைகளுக்கும் உரியது” என்றார் அப்பா பாடோ.
ஹென்றி பாபெட்டை பார்த்தான். அவள் நீர்க்கீரையை ருசித்துக் கொண்டிருந்ததால் அவனது பார்வைகளுக்கு தலை திருப்பவில்லை. தனது விளக்கத்தில் மிக திருப்தி அடைந்தவராக அப்பா பாடோ இரவுணவை இனிமையாக நிறைவு செய்தார்.
“மரியாதைக்குரியவருக்கு என்ன உணவு வழங்கினாய் என் இளையவளே” என மிக இணக்கமான ஆதரவான குரலில் தன் மனைவியைக் கேட்டார். “நிச்சயம் சுவையும் மணமும் மிகுந்த ஒன்றையே கொடுத்திருப்பாய்” என மிகப் பெரிய உருவம் கொண்ட அவர் மனைவி அவர் கண்களுக்கு மென்மையான அழகிய பெண்ணாக தெரிவது போல பேசினார்.
அவள் சோர்வாகத் தலையசைத்தாள். “அவர் அப்படி எதையும் விரும்பி உண்பவரல்ல. நோன்பிருப்பவரைப் போல சூப் குடித்தார். அதன் பின் சிறிது ரொட்டியும், உலர்ந்த அத்தியும், ஆப்பிளும் உண்டார். கடவுளே! பேராயர் உண்பது எத்தகைய எளிய உணவு! அழுகைதான் வருகிறது.” என்றாள்.
பாடோ அதைக் குறித்து நிதானமாக சிந்தித்தார்.
“ஒரு வேளை பேராயர் மிகவும் வறியவரோ?” என்று சந்தேகமாக கேட்டார்.
“அவர் ஏழையாக இருக்கலாம், ஆனால் அப்படி இருந்தால் அது அவரது குற்றம்தான், யாரேனும் ஏழைப் பேராயர் குறித்து கேள்விப்பட்டதுண்டா? அத்தகையவர்கள் அனைவரும் அவர்கள் விரும்பினால் செல்வந்தர்கள் ஆகக் கூடியவர்கள்தான்” என்றாள் மேடம்.
“எப்படி ஆவார்கள்?” என்று ஹென்றி சுறுசுறுப்பாகக் கேட்டான்.
அவனுடைய கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை. அந்த நேரம் விடுதியின் வாயிலை தட்டியபடி ஒரு உயர்ந்த பரந்த தோற்றம் கொண்ட, மதச்சீருடை அணிந்த மனிதர் ஒருவரும், அவருடன் முக்கியமற்ற தோற்றம் உடைய மற்றொருவரும், குறுகிய வழியில் தோன்றினார்கள்.
பாடோ அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்தார்.
“பேராயர்! நமது பேராயர், அவரே வந்திருக்கிறார் ” என்று ரகசியமான குரலில் மனைவியிடம் சொன்னார்.
மேடம் பாடோ துள்ளி எழுந்து குழந்தைகளை இரு கரங்களிலும் பற்றியபடி குனிந்து மரியாதை செய்தாள். புதிதாக வந்தவர் காற்றில் மெல்ல சிலுவைக் குறியிட்டு அவர்களை வாழ்த்திவிட்டு, “தங்களுக்கு தொல்லை வேண்டாம், மக்களே. உங்கள் இல்லத்தில் மேதகு கார்டினல் போன்ப்ரே உடனிருக்கிறாரா?” என்று கேட்டார்.
மேடம் பாடோ “ஆம், மேன்மையானவரே! சற்று முன்னர்தான் இரவுணவு உட்கொண்டார். அவர் அறையை தங்களுக்கு காட்டட்டுமா?” என்று கேட்டாள்.
“தங்களுக்கு சிரமமில்லையெனில், நான் சந்தித்து மீளும்வரை எனது உதவியாளர் இங்கு உங்கள் அறையில் காத்திருக்க அனுமதியுங்கள்” என்று பேராயர் கூறினார்.
தன்னோடு வந்த மெலிந்த நோயுற்ற தோற்றம் கொண்டவரை அறிமுகம் செய்யும் விதமாய்க் கையை அசைத்துவிட்டு, மேடம் பாடோவைத் தனக்கு முன்பாக வழிகாட்டி அழைத்துச் செல்ல அனுமதித்து மென்மையான நிதானமான நடையில் பின்தொடர்ந்தார். அவரணிந்திருந்த பட்டு ஆடை சரசரக்கும் நுண் ஒலியும், அதிலிருந்து மென்மையாகக் கசியும் நறுமணமும் அவர் நடக்கும் போது எழுந்தது.
உதவியாளரோடு தனித்து விடப்பட்ட ஜீன் பாடோ சில நிமிடங்கள் தர்மசங்கடமாக உணர்ந்தார். ஹென்றியும் பாபெட்டும் ஒளிவுமறைவற்ற ஆர்வத்தோடு அவர் முகத்தை உற்றுப் பார்த்தனர். அவரது தோற்றம் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.
“அவரது கண் இரப்பை மயிர்கள் எல்லாம் வெள்ளையாக இருக்கின்றன” என ஹென்றி கிசுகிசுத்தான்.
“மஞ்சள் பற்கள்” என்றாள் பாபெட்.
பாடோ தனது சிறிய மூளையால் இயன்ற அளவு இது குறித்து சிந்தித்துவிட்டு, அவருக்கு அமர இருக்கை அளித்தார். “அமருங்கள் ஐயா” என்றார்.
வெளிறிய புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு தனக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார்.
பாடோ மீண்டும் யோசித்தார். அவருக்கு இது போன்ற உபசரிப்பு பேச்சுகளில் தேர்ச்சி கிடையாதென்பதால் தொலைந்தவர் போல உணர்ந்தார்.
“தங்கள் முன் புகைப்பது மரியாதைக் குறைவான செயலாக இருக்குமோ..” எனத் தயங்கினார் பாடோ.
“நான் கிளாட் காஸோ, இறைசேவையில் உள்ள ஏழை எழுத்தர். மரியாதைக்குரிய ஜீன் பாடோ அவர்களே, தங்கள் விருப்பத்திற்கேற்ப புகைத்துக் கொள்ளுங்கள்” என்றார் அவர்.
அவரது குரலில் சற்று ஏளனம் தொனித்தது போல உணர்ந்த அப்பா பாடோ விளங்கிக்கொள்ள இயலாத ஒரு ஒவ்வாமையை அடைந்தார். அவர் புகைபோக்கிக்கு மேலே நீண்டிருந்த அலமாரியில் இருந்த தனது பைப்பை எடுத்தார், மெதுவாக அருகில் இருந்த தகரப் பெட்டியில் இருந்து புகையிலையை நிரப்பினார்.
“நான் தங்களை இந்நகரத்தில் பார்த்த நினைவில்லையே, தேவாலய பிரார்த்தனைக் கூட்டங்களிலும் பார்த்ததில்லையே காஸோ அவர்களே” என்று பாடோ கேட்டார்.
சற்றே கேள்வி எழுப்பும் தொனியில் “பார்த்ததில்லையா? நான் அதிகம் வெளியே வீதிகளுக்கு வருபவனல்ல. மேலும் ஞாயிறு அதிகாலை ஜெபக்கூட்டத்தில் மட்டுமே நான் கலந்து கொள்வேன். மேன்மையானவருக்கு நான் செய்யும் வேலைகளிலேயே எனது முழு நேரமும் கழிந்துவிடும்” என்றார் காஸோ .
பாடோ புகைக்கத் தேவையான அளவு நிரப்பிக்கொண்டு, பற்ற வைத்து அமைதியாக புகைக்கத் தொடங்கினார். “ஆ! நிறைய வேலைகள் இருக்கக் கூடும். எத்தனையோ ஏழை எளியவர்கள், நோயுற்றவர்கள், பணமும், துணிமணிகளும், இன்னும் எத்தனையோ உதவிகளும் தேவைப்படுபவர்கள். ரூவனில் வாழும் இத்தகைய எண்ணற்ற மகிழ்ச்சியற்ற ஆன்மாக்களுக்கு இயன்ற அளவு நன்மை செய்வதென்பது மிகக் கடினமான பணிதான், பேராயருக்கும் கூட” என்றார் பாடோ.
காஸோ அதற்கு முழுமையாக உடன்படுவர் போல தனது மெலிந்த கரங்களைக் கோர்த்துக் கொண்டு பக்தியுடன் ஆமோதித்தார்.
“நம்மருகே ஒரு மனமுடைந்த ஜீவன் வாழ்கிறாள். மார்கரிட் லா ஃபோல் என்ற பெயர் கொண்டவள். பியர் லாரென் அவர்களை மேன்மையானவரிடம் இவளைக் குறித்து பேசும்படி கேட்க வேண்டுமென பல முறை எண்ணியிருக்கிறேன். அவளைக் கிழித்துண்ணும் பேய்களிடம் இருந்து அவளை விடுவிக்க வேண்டும். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை அவள் நல்ல விதமாக இருந்த பெண்தான். அவளை யாரோ கயவன் சிதைத்துவிட்டான். அதிலிருந்து அவள் தனது சித்தத்தை இழந்துவிட்டாள். இந்த நிலையில் மார்கரிட் வால்மண்டை பார்ப்பது துயரளிக்கிறது” என்று பாடோ பொறுமையாகத் தொடர்ந்தார்.
“ஆ! ஏன் குதிக்கிறீர்கள்? ஏதாவது வலி ஏற்பட்டதா?” ” என்று கூவியபடி தனது அழுக்கான விரலால் காஸோவை ஹென்றி சுட்டிக்காட்டினான்.
உண்மையில் ஹென்றி கூவியபடி, காஸோ தனது இருக்கையில் சற்றுத் துள்ளி எழ முயன்று அதே வேகத்தில் பொறுமையின்மையோடு அசௌகரியமாக அமர்ந்துவிட்டிருந்தார். அவரை ஆட்கொண்ட ஏதோ உணர்ச்சியில் இருந்து வேகமாக வெளியேறி புன்னகை போல ஒன்று இதழ்களில் தோன்ற கூர்ந்த அவதானிப்புள்ள ஹென்றியைப் பார்த்தார்.
“நீ ஒரு கூர்மையான சிறுவன், உன் வயதுக்கு மீறிய உயரம் கொண்டவனும் கூட, என்ன வயதாகிறது உனக்கு?” என்றார் காஸோ.
“பதினொன்று. ஆனால் அதற்கும் தாங்கள் துள்ளிக் குதித்ததற்கும் தொடர்பில்லையே” என்றான் ஹென்றி.
இருக்கையில் சற்று நெளிந்தபடி “உண்மைதான், ஆனால் நான் எழுச்சி அடைந்தற்கு நீ காரணமல்ல என் சிறிய நண்பனே. ஒரு எண்ணம் தோன்றியது, திடீரென, மறந்து போன ஒரு கடமையை நினைவுறுத்தும் எண்ணம்” என்று ஒரு வேடிக்கையில் ஈடுபட்டிருப்பவர் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.
“ஓ, ஒரு எண்ணமா? எண்ணங்கள் தங்களை இப்படி திகைத்தெழச் செய்யுமா?” என்று நம்பமுடியாமல் ஹென்றி கேட்டான்.
“பேசாமலிரு, பேசாமலிரு” என்று முனகிய பாடோ, புகையை வலித்துக் கொண்டிருக்கும் இடைவெளியில் மென்மையாக “மன்னித்து விடுங்கள் மரியாதைக்குரிய காஸோ அவர்களே, அவன் ஒரு சிறு குழந்தை” என்றார்.
அந்த சூழலை ஒரு இணக்கத்திற்கு கொண்டு வருவது போல காஸோ அசைந்தார்.
“மகிழ்ச்சிகரமான குழந்தை. அவனது சகோதரியாகிய அந்த சிறுமியும் அழகிய குழந்தை, எவ்வளவு கரிய கண்கள்! அழகிய கூந்தல்! அவள் என்னிடம் பேச மாட்டாளா?” என்றார்.
பாபெட்டை அருகழைப்பது போல அவளை நோக்கி கரத்தை நீட்டினார். ஆனால் அவள் மெல்லிய நகையோடு பின்னடைந்து விட்டாள். பாடோ ஆதுரத்துடன் பார்த்தார்.
“அவள் அந்நியர்களை விரும்புவதில்லை” என விளக்கினார்.
“நல்லது, அது நல்ல விஷயம், சிறுமிகள் அந்நியர்களைக் கண்டால், குறிப்பாக என்னைப் போன்ற ஆண்களைக் கண்டால் விலகி ஓடி விடுவது நல்லது” என்று முனகல் ஒலி போல சிரிக்க முயன்றார்.
“பிள்ளைகள் பள்ளிக்கு செல்கிறீர்களா?” எனக் கேட்டார்.
பாடோ தனது பைப்பை வாயிலிருந்து எடுத்து விட்டு நிலையாக கூரையைப் பார்த்தார்.
“சந்தேகமில்லாமல். அவர்கள் போக வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகிறது. என் விருப்புக்கு இடமிருந்தால் அவர்கள் பள்ளி சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் அங்கே விஷமத்தனங்களையே கற்றுக் கொள்கிறார்கள், நல்லதொன்றும் காணோம். இயற்பியல் அறிவியல் என்ற பெயரில் புவியியல், நட்சத்திரங்கள், உடற்கூறு என பலவற்றையும் படிக்கிறார்கள். ஆனால் நேரான, களங்கமற்ற, நேர்மையான, முழுமையான வாழ்வு வாழ வேண்டுமென இறைவன் ஆணையிடுகிறான் என இவர்கள் அறிவுக்கு எட்டியதா எனத் தெரியவில்லை. ஆனால் பியர் லாரென் அந்த அறிவை போதித்து விடுவார் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார் பாடோ.
“பியர் லாரென்?” என அகன்ற சிரிப்போடு அவர் பெயரை எதிரொலித்த காஸோ “உங்களுக்கு பியர் லாரென் மீது நன்மதிப்பு இருக்கிறது. ஆ, அவர் நல்ல மனிதர், ஆனால் அறிவற்றவர்! ஐயோ மிகுந்த அறியாமையில் இருப்பவர்” என்றார்.
உட்கூரையில் பதிந்திருந்த தன் பார்வையை விலக்கி கேள்வியோடு காஸோவைப் பார்த்தார் பாடோ.
“அறிவற்றவரா?” என அவர் தொடங்கியபோது மேடம் பாடோ அங்கு வந்து ஹென்றியையும் பாபெட்டையும் அழைத்துக் கொண்டு, கார்டினல் போன்ப்ரே உடனான பேராயர் சந்திப்பு மேலும் சற்று நேரம் நீளுமென்பதால் காஸோவிடம் காத்திருக்கத் தேவை இல்லையென சொல்லச் சொன்னதாகக் கூறினாள். மேதகு பேராயர் தனித்து அவர் இல்லத்துக்கு சென்று விடுவதாக சொல்லியிருந்தார். அந்த விடுதலையில் மகிழ்ந்தவர்போல உடனடியாக எழுந்த உதவியாளர், பாடோ குடும்பத்திடம் விடை பெற்றுக்கொண்டார். கிளம்புமுன் சற்று தயங்கிநின்று, ஜீன் பாடோவை முகச்சுளிப்போடு நோக்கி, “நான் உங்களிடத்தில் இருந்தால், என்னிடம் நீங்கள் கூறிய மார்கரிட் வால்மண்ட் குறித்து பேராயரிடம் பேச மாட்டேன். அவருக்கு தீமை நிறைந்த பெண்களிடம் மிகுந்த அச்சம் உண்டு” என்று கூறினார்.
அத்துடன் அங்கிருந்து வெளியேறி சதுக்கத்தைக் கடந்து ஒரு கொள்ளைக்காரன் துணிகரமான திருட்டைத் திட்டமிடுவதில் ஈடுபடுவது போன்ற திருட்டுத்தனமான நடையில் பேராயர் இல்லம் நோக்கி சென்றார்.
“அவர் ஒரு எலி – எலி! எலியைப் பிடிக்க பூனை தேவை!” என ஹென்றி திடீரென சமையல் அறையைச் சுற்றி போர் நடனமிட்டான்.
“எலிகள் நல்லவை” என அறிவித்தாள் பாபெட். அவள் முன்னர் வளர்த்த வெள்ளெலி அவள் மடியில் அமர்ந்து அவள் கையில் இருந்து உணவெடுத்துக் கொள்ளும் நினைவு வந்தது. “காஸோ ஒரு ஆண், ஆண்கள் நல்லவர்கள் அல்ல” என்றும் சொன்னாள்.
பாடோ வெடித்து சிரித்துவிட்டார்.
“ஆண்கள் நல்லவர்கள் அல்ல” என்று அவள் சொன்னதை எதிரொலித்துவிட்டு, “அதைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என் சிறுமியே?” எனக் கேட்டார்.
பெற்றோர் தொடர்ந்து சிரிப்பதைப் பொருட்படுத்தாமல், கசந்த அனுபவங்களால் காய்த்துப்போன ஒரு பெரிய மனுஷியின் தோரணையுடன் “நான் பார்த்தவரையில் ஆண்கள் அழகற்றவர்கள். அசுத்தமானவர்கள். அருகே வா என் சிறுமியே என அருகழைத்து, பக்கம் சென்றதும் முத்தம் கொடுக்க முனைவார்கள். அவர்கள் வாய் நாற்றமெடுக்கும், எனவே நான் அவர்களை முத்தமிடமாட்டேன். என் முடியைக் கோதி பலவாறாக கலைத்து விடுவார்கள். எனது முடி ஒழுங்கற்றுக் கலைவதை நான் விரும்பவில்லை என சொன்னால், நான் ஒரு மேனாமினுக்கியாக வருவேன் என்கிறார்கள். மேனாமினுக்கி என்றால் டயானா டி போய்டியேர்ஸ் போல. நான் டயானா டி போய்டியேர்ஸ் போல ஆகட்டுமா?” என்று பாபெட் கூறினாள்.
“அடக்கடவுளே! இப்படித் தேவையற்றதெல்லாம் பேசாதே கண்ணே, உறங்கும் நேரமாகிவிட்டது. ஹென்றி, அப்பாவுக்கு இரவு வாழ்த்தைச் சொல். ஜீன், இருவரையும் வாழ்த்திவிடுங்கள். பேராயர் கிளம்பும் முன் இவர்கள் இருவரையும் உறங்க அனுப்புகிறேன். இல்லையென்றால் தர்க்கம் பயில்பவர்கள் போல அவரை பல கேள்விகளைக் கேட்டு துளைத்துவிடுவார்கள். ” என்றால் மேடம் பாடோ.
அவருடைய தந்தை ஒவ்வொரு நாளும் மரணம் வரை அவருக்கு செய்தது போலவே, அப்பா பாடோ பிள்ளைகளை அன்பாக முத்தமிட்டு, புருவங்களிடையே சிலுவைக் குறியிட்டார். ஆசீர்வாதம் என்றால் என்னவென்று அவர்கள் நினைத்தார்கள் என்பதை விளக்குவது கடினம், ஆனால் இவ்விதம் அப்பா பாடோ அவர்களுக்கு ஆசி வழங்கவில்லை என்றால் பாபெட் கண்களில் உணர்ச்சிமிக்க கண்ணீரும், ஹென்றியின் பேய் அலறலும் தவிர்க்க முடியாததாகி விடும்.
அச்செயலில் உள்ள நல்லொழுழுக்கம் என்பதை விட, அப்பாவின் அந்த ஆசி அவர்களை அமைதியாக, நல்ல மனநிலையில் உறங்க அனுப்பி வைத்தது. திருப்தியுடன் வேகமான நடையில் அம்மாவைத் தொடர்ந்து சென்ற குழந்தைகள் கார்டினல் போன்ப்ரே தங்கியிருந்த அறையைக் கடக்கும் போது காலடிகளை மென்மையாக்கி, குரலையும் தாழ்த்திக்கொண்டனர்.
“பேராயர் ஒரு தேவதூதர் கிடையாது அல்லவா?” என பாபெட் ரகசியமாகக் கேட்டாள்.
அவள் அன்னை புன்னகைத்தாள்.
“அதெல்லாம் இல்லை குழந்தை, ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான கேள்வி?” எனக் கேட்டாள்.
“கார்டினல் போன்ப்ரே ஒரு துறவி என்றும், சொர்க்கத்தில் இருந்து அவரைக் காண வரும் தேவதையை நாம் காணக்கூடும் என்றும் சொன்னீர்களே!” என்று பதில் அளித்தாள் பாபெட்.
“ஆனால் பேராயர் சொர்க்கத்தில் இருந்து வந்தவர் என நீ எண்ண முடியாது. அவர் அவரது இல்லத்தில் இருந்து தனது உதவியாளர் பின்தொடர இவ்வழியாக வந்தார். தேவதூதர்களுக்கு உதவியாளர்கள் இருப்பார்களா?” என்று அதை விளக்க முயன்றான் ஹென்றி.
அதன் அபத்தத்தை எண்ணி பாபெட் உரக்க சிரித்தாள். அப்போது இரண்டு குழந்தைகளும் மரப்படிக்கட்டுகளில் ஏறித் தங்கள் படுக்கையறைக்கு சென்று கொண்டிருந்தார்கள். அம்மா கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் பேராயரின் குரல் சற்று கோபத்துடன் உரத்து ஒலித்தது – “தங்களுக்கான அழைப்பையும் பணியையும் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன்” என்றார்.
அதன் பிறகு மீண்டும் குரல் தெளிவற்ற முணுமுணுப்பாகத் தேய்ந்து மறைந்தது.
“அவர்கள் சண்டையிடுகிறார்கள், பேராயர் கோபமாக இருக்கிறார்” என்று ஹென்றி அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்.
“ஒருவேளை பேராயர்களுக்குத் துறவிகளைப் பிடிக்காமல் இருக்கலாம்” என்றாள் பாபெட்.
“பேசாமலிரு! கார்டினல் போன்ப்ரேவும் ஒரு பேராயர்தான்” என்றாள் மேடம் பாடோ. “அதனால் அவர்கள் இருவரும் சகோதரர்களைப் போன்றவர்கள்.” என்றாள்.
“அதனால்தான் சண்டையிடுகிறார்கள்”என்று அறிவித்தான் ஹென்றி. “என் பள்ளியில் ஒரு பையன் சொன்னான், கெய்னும் ஏபிலும் ஆதியில் சகோதரர்களாம். அவர்கள் சண்டையிட்டார்கள். அன்று முதல் எல்லா சகோதரர்களும் சண்டை போடுகிறார்கள். அது ரத்தத்திலேயே இருக்கிறது. அவனுடைய சிறிய தம்பியிடம் சண்டை போடும் போதெல்லாம் இதைத்தான் சாக்காக சொல்வான். அவனுக்கு பன்னிரண்டு வயது, அவன் தம்பிக்கு ஆறு வயதுதான் ஆகிறது. எப்போதுமே அவனது தம்பியை எளிதாக கீழே தள்ளி வீழ்த்திவிடுவான். அதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை என்கிறான். அவன் உடற்கூறியல் மற்றும் மரபியல் சார்ந்த புத்தகங்களை வாசிப்பவன். ரத்தத்தில் இருக்கும் ஒன்று வெளிப்பட்டே தீரும் என்பதை அந்தப் புத்தகங்களில் இருந்து அறிந்திருக்கிறான். கெய்ன் ஏபிலைக் கொன்றதால்தான் நாடுகள் தங்களுக்குள் போரிடுகின்றன என்கிறான். கெய்னும் ஏபிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாது இருந்திருந்தால் உலகில் போர்களே இருந்திருக்காது. இன்றோ அது அனைவரது ரத்தத்திலும்..” என்று பேசிக்கொண்டே போன ஹென்றியின் அறிவார்ந்த உரையை பாதியில் நிறுத்தி அவனது அன்னை மண்டியிட்டு இரவுப் பிரார்த்தனையை சொல்ல வைத்தாள். பிறகு அவனைக் கட்டிலில் படுக்கச் செய்ததும் அவனுக்கிருந்த உறக்கக் கலக்கத்தில் அனைத்தையும் மறந்துவிட்டான். பாபெட் உறங்க மேலும் சற்று நேரம் பிடித்தது.
அவளுடைய கூந்தல் மிக அழகாக, சுருள் சுருளாக பழுப்பு நிறத்தில் இருந்தது. மேடம் பாடோவுக்கு அதை நேர்த்தியாக வாரி பின்னலிடுவதில் மிகுந்த பெருமை இருந்தது. இரவு படுப்பதற்காக அவளது முடியைத் தளர்வாக பின் புறம் கட்டியபோது தன் உருவத்தை சிறிய கண்ணாடியில் பார்த்தபடி “நான் டயானா டி போய்டியேர்ஸ் போல ஆகக்கூடும், ஏன் ஆகக் கூடாது?” என்றாள்.
“ஏனென்றால் டயானா டி போய்டியேர்ஸ் ஒரு தீமை நிறைந்த பெண், நீ நல்ல பெண்ணாக வளர வேண்டும்” என்று உறுதியாக அன்னை கூறினாள்.
“டயானா டி போய்டியேர்ஸ் தீயவள் என்றால் ஏன் இன்றும் அவளைக் குறித்து இவ்வளவு பேசுகிறார்கள்? எல்லா சரித்திரக் குறிப்புகளிலும் ஏன் அவளைப் பேசுகிறார்கள்? அவள் வீட்டைக் காட்டுகிறார்கள்? அவள் சிறந்த அழகி என ஏன் குறிப்பிடுகிறார்கள்?” என்று பாபெட் கேட்டுக்கொண்டே போனாள்.
பொறுமையிழந்த மேடம் “ஏனென்றால் மக்கள் அறிவற்றவர்கள். அறிவிழந்த மக்கள் தீய பெண்கள் பின் செல்வார்கள். தீய பெண்களோ அறிவற்ற மக்கள் பின் செல்வார்கள். நீ பிரார்தனையைச் சொல்” என்றாள்.
உடனடியாக பாபெட் முழந்தாளிட்டு கண்களை மூடி கைகளை இறுகக் கோர்த்து வழக்கமான மாலை வார்த்தைகளை ஒரு அருளாளர் போல முணுமுணுத்தாள். தனது செய்கைக்கு நெஞ்சறிந்த மன்னிப்புக் கேட்டது போல பெருமூச்சு விட்டு தன்னைக் காக்கும் தேவதைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அவளது அன்னை அவளை முத்தமிட்டு “நல்லுறக்கம் கொள் மகளே. மாதாவையும் புனிதர்களையும் வேண்டிக்கொள். தீமையிலிருந்து அவர்கள் நம்மை விலக்கிக் காக்க வேண்டுமென அவர்களிடம் மன்றாடு. இனிய இரவாகட்டும்” என்றாள்.
“இனிய இரவு!” என்று தூக்கக் கலக்கத்தோடு சொன்ன பாபெட், டயானா டி போய்டியேர்ஸை நினைத்த அளவு மாதாவையும் புனிதர்களையும் நினைத்துக் கொள்ளவில்லை. ஏவாளின் வெகு சில மகள்களே, பணிவைக் காட்டிலும் வெற்றி சிறந்ததென எண்ணவில்லை. பல பெண்களுக்கு ஒரு மன்னன் மீது டயானா டி பொய்டியர்ஸ் கொண்டிருந்த ஆளுமை, தனது வசீகரத்தின் சக்தியை நினைவுறுத்துவதாக இருந்தது. தனது பெண்மையின் மேலாதிக்கம் குறித்த அழுத்தமான சான்றாக அது இருந்தது. தெரிவுசெய்யப்பட்ட கன்னிமேரியிடம் தேவதை சொன்ன “நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற மொழியினும் இது முக்கியமான செய்தியாக இருந்தது.
[தமிழாக்கம் சுபஸ்ரீ]