ஆபரணம், பா.திருச்செந்தாழை

இன்னொரு நல்ல கதை, திருச்செந்தாழையிடமிருந்து. இவருடைய இந்த வகைக் கதைகளின் அமைப்பு யதார்த்தவாத எழுத்திலேயே சுவாரசியமான ஒரு புதுமுயற்சி. முதலில் ஒரு தருணத்தை விவரிக்கிறார். அங்கே நிகழ்வன, உணரப்படுவன நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் திடுதிப்பென ஒரு புதிய வாழ்க்கைச்சூழலுக்குள் சென்றுவிட்டதுபோல என்ன ஏது என புரிவதில்லை. அதேசமயம் அந்த நுட்பமான அவதானிப்புகள் ஆர்வமும் அளிக்கின்றன.

உதாரணமாக “சீனிச்சேவின் வினோத கிளைகளைப் பார்த்தபடியிருந்தான் பெரியவன்” என்பதுபோன்ற வரிகள். அதனூடாகச் செல்லும் கதை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைகிறது. அவுட் ஆஃப் ஃபோகஸில் இருந்து லென்ஸ்கள் திரும்பி ஒன்றோடொன்று இசைந்து, காட்சி ஃபோகஸ் ஆவது போல. வாழ்க்கையின் நுட்பமான ஒரு தருணத்தை, அதில் துலங்கும் உண்மையைச் சொல்லி அமைகிறது கதை. கு.அழகிரிசாமி எழுதியிருக்கக்கூடிய படைப்பு என்று தோன்றியது.

வியாபாரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ‘ஈடுபடுதல்‘ என்றுதான் நேர்ப்பொருள். அதை நாம் வணிகத்துக்குப் பயன்படுத்துகிறோம். நாம் ஈடுபடும் ஒவ்வொன்றும் வணிகமே. நம்மால் சக மனிதர்களுடன் வியாபாரம் செய்யமுடியும். கடவுளிடமும் வியாபாரம் செய்ய முயல்கிறோம். வியாபாரத்தை கடந்து, பேரம்பேசமுடியாத மூர்க்கத்துடன் நம் முன் நின்றிருப்பன சில உண்டு.

ஆபரணம்

முந்தைய கட்டுரைஅருகர்களின் வழி… சுகதேவ் பாலன்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4