விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

ஜெமோ,

விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுகள் தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளை நெருங்கி அறிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியக்கக் கொண்டாட்டம். குறிப்பாக 2018ல் விருது பெற்ற ராஜ் கௌதமன் அவர்களின் ஆக்கங்கள் பெரும் திறப்புகளை எனக்களித்தவை.

இந்த விருது பெறும் ஆளுமை ஏற்கனவே நாம் அறிந்தவராக இருக்கும் போது, நமக்கு ஏற்படும் பரவசம் நாம் சராசரிகளுக்கு மேல் என்ற ஒரு அறிவாணவத்தை உருவாக்கி விடுகிறது. இவ்வருட விருதை பெற்றுக் கொள்ளப்போகும் கவிஞர் விக்ரமாதித்தனை அவருடைய கவிதைகள் மற்றும் சினிமா வழியாக அருகிலிருப்பவராகவே உணர்கிறேன்.

அவருடைய கட்டுரைகளைப் படிப்பதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. “தமிழ்க் கவிதை மரபும் நவீனமும்” என்ற தலைப்பில் இக்கட்டுரைகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய என்னுடைய அவதானிப்புக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கவிஞனின் நிலையாமை

அன்புடன்

முத்து

***

அன்புள்ள ஜெயமோகன்

விக்ரமாதித்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது நிறைவளிக்கும் செய்தி. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர் .பொதுவாக விருதுகளை அளிக்கும்போது சராசரித்தன்மை அல்லது ஸ்டேண்டேட் அளவு உள்ள கவிஞர்களுக்கு தான் அதிகமாக அளிக்கப்படும். ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய நடத்தையும் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கும் .கவிஞர் என்று சொல்லும்போது சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் குணாதிசயங்களும் அவர்களிடம் இருக்கும்.

ஆனால் விக்ரமாதித்தன் போன்ற ஒருவர் இதற்கெல்லாம் வெளியே இருப்பவர். அவரை ஒரு கவிஞர் என்று அறிமுகம் செய்தால் சாதாரணமாக நம்ப மாட்டார்கள். அவரை ஒரு நாடோடி என்றுதான் நினைப்பார்கள். அவரால் ஒரு கவிஞனைப் போல கம்பீரமாக மேடையில் பேச முடியாது. மேடையிலே கவிதை வாசிக்வும் அவரால் முடியாது .எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எழுதிய கவிதைகளை காட்டினால் ரொம்ப சாதாரணமாக இருக்கிறது என்றுதான் சொல்வார்கள். அது ஏன் கவிதை என்று பலருக்கும் புரியாது.

ஆகவே அவரைப் போன்ற ஒருவரை பொதுவான அமைப்புகள் கௌரவிக்க வாய்ப்பில்லை .விஷ்ணுபுரம் போன்ற இலக்கியத்துக்காக செயல்படும் தனியான அமைப்புகள்தான் கௌரவிக்கக வேண்டும். அது நம்முடைய கடமை. அதை நீங்கள் செய்கிறீர்கள் .அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

விக்கிரமாதித்தன் அவர்களுடைய கவிதையை பற்றி நான் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். கவிதை சம்பந்தமான கூட்டங்களில் கவிதை சொல்லும் போது இது ஏன் கவிதையாகிறது என்று என்னிடம் சிலர் கேட்பது உண்டு .நான்  ‘கவிதை என்பது ஒரு சமூகத்தினுடைய கூட்டு உரையாடல்’ என்று சொல்லுவேன் .அந்த உரையாடல் தான் அந்த கவிதையை அர்த்தப்படுத்துகிறது. பத்து பேர் நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது நடுவில் ஒருவர் ஒரு விஷயம் சொல்கிறார். அப்போதுதான் அதிலுள்ள பகடியோ எதிர்ப்போ அல்லது விளக்கமோ நமக்கு அர்த்தமாகிறது. அந்தப் பத்து பேரும் இல்லாமல் அவர் மட்டுமே அந்த விஷயத்தைச் சொல்லி இருந்தால் அர்த்தமாய் இருக்காது. அது போலத்தான்

விக்கிரமாதித்தன் அவர்களில் இருந்து மாறுபட்டவர். இங்கே அனைவரும் அலங்காரமாகவும் பூடகமாகவும் பேசிக் கொண்டிருக்கு போது  நேரடியாக பேசுகிறார். வாழ்க்கை பற்றிய தன் அடிநிலை அறிதலைச் சொல்கிறார். வெளியே இருந்து பேசுகிறார். அந்தக் குரல் தனியாக ஒலிக்கிறது. நம் ஒட்டுமொத்த கவிதைப் பின்னணியில்தான் கவிதையாக ஆகிறது.

நாம் புகோவ்ஸ்கியை கொண்டாடுவோம். ஆனால் விக்ரமாதித்தனை புரிந்துகொள்ள மாட்டோம். புகோவ்ஸ்கியை அங்கே கொண்டாடி எழுதுகிறார்கள். அதை வாசித்துவிட்டு நாம் கொண்டாடுகிறோமே ஒழிய நமக்காக ஒன்றும் தெரியாது. விக்ரமாதித்தன் வகையான  எழுத்துக்கு தமிழில் நிறைய முன்னுதாரணங்கள் உண்டு. விக்கிரமாதித்தனை போல பல பெரிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். என்பதை நாம் தனிப்பாடல் திரட்டில் பார்க்கலாம். காளமேகப்புலவர் ,இரட்டையர் போன்ற பலர் இருந்திருக்கிறார்கள்.

அவரைப் புரிந்து கொள்ளவும் அவரை ஒரு முக்கியமான கவிஞர் என்று அடையாளப்படுத்தவும் தமிழ் கவிதையுடன் ஒட்டுமொத்தப் போக்கை அறிந்திருக்கும் அமைப்பால்தான் முடியும். அவ்வாறான வாசகர்கள் தேவை.  அதை  நவீன இலக்கிய அமைப்பில் செய்த பிறகுதான் கல்வித்துறை அமைப்புகளும் அரசு சார்ந்த அமைப்புகளும் அவரை அடையாளம் காணமுடியும். அதைச் செய்கிறீர்கள். அதற்கு என் நன்றி.

ஆறுமுகம் எம்.ஏ

***

முந்தைய கட்டுரைநீலம் குரலில், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு