விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

அன்புள்ள ஜெமோ

வாழ்க வளமுடன்.

விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆண்டுதோறும் அளிக்கப்படும் இந்த விருதுகள் தகுதியானவர்களைத் தேடித்தேடிச் செல்கின்றன. பலரை இளையதலைமுறை இந்த விருது வழியாகவே அறிமுகம் செய்துகொள்கிறது.

இங்கே நான் ஒன்று சொல்லவேண்டும். இந்த விருது 2010 அறிவிக்கப்பட்டபோது தொடர்ச்சியாக கடுமையாக விமர்சனம் செய்து எழுதியவர்களில் நானும் ஒருவன். நீங்கள் உங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், உங்களுக்கு முக்கியத்துவத்தை உருவாக்கிக் கொள்ளவும் முன்னோடிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த விருதை அறிவிக்கிறீர்கள் என்று எழுதினேன். மணிரத்னம் அழைக்கப்பட்டபோது சினிமாப் பர்சனாலிட்டிகளுக்கு இலக்கியத்தைக் கூட்டிக்கொடுக்கிறீர்கள் என்று எழுதினேன். அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

ஆனால் இன்றைய என் மனநிலை வேறு. அன்றைக்கு ஏனோ உங்கள்மேல் ஒரு பொறாமை. ஏன் பொறாமை என்று நினைத்தால் எனக்கே சிரிப்புதான். நான் சில முகநூல் குறிப்புகள் தவிர ஒன்றுமே எழுதியதில்லை. ஆனால் என்னை எழுத்தாளன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் வரும், அன்றைக்கு நான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். அப்போது ஆபீஸ்வேலை கஷ்டம். அந்த சிறுமையை எல்லாம் அந்தக் கற்பனையால் சமாளித்துக் கொண்டிருந்தேன். அப்படி கற்பனை செய்யும்போது எதிரி நீங்கள்தான். உங்களை ஆவேசமாக வாசிப்பேன். ஆனால் அத்தனை பேரிடமும் வெறுப்பாக உங்களைப் பற்றிப் பேசுவேன். உங்கள்மேல் பொறாமை எனக்கு என்று இன்றைக்கு நினைக்க கசப்பாக இருக்கிறது.

முதல் அட்டாக்குக்குப் பிறகு மனசு மாறிவிட்டது. கொஞ்சம் ஆன்மிகமாக மாறிவிட்டேன். மார்க்ஸியம் தொழிற்சங்கம் எல்லாம் பழையகதையாக ஆகிவிட்டது. என்னை நான் உலகைக்காக்க வந்த தேவனாக நினைத்துக் கொண்டிருந்த அற்பத்தனமெல்லாம் இல்லை. போராளி மோடிலேயே கண்டபடி வசைபாடிக் கொண்டிருந்த காலமும் பழையதாகிவிட்டது. இன்றைக்கு எந்த ஃபேஸ்புக் அக்கவுண்டும் இல்லை. எழுதிய சில குறிப்புகளையும் தூக்கிவீசிவிட்டேன்.

இப்போது பார்க்கும்போது நீங்கள் எல்லாவற்றையும் எத்தனை அற்புதமான கனவுகளோடு, எவ்வளவு தீவிரமாகச் செய்திருக்கிறீர்கள் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. இதைப்போல ஒன்றை தனியொருவராக ஓர் எழுத்தாளர் செய்வது வேறெந்த மொழியிலாவது நடந்திருக்கிறதா? ஞானக்கூத்தனுக்கெல்லாம் விஷ்ணுபுரம் விருது கிடைக்காவிட்டால் விருதே இல்லாமல் மறைந்திருப்பார். எவ்வளவு எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு இலக்கியப்பணிகள் நடந்திருக்கின்றன. இலக்கியமாநாடுகள், ஆவணப்படங்கள், கருத்தரங்குகள், விழாக்கள்.

இதெல்லாம் உங்கள் மனதில் இருந்திருக்கின்றன. ஆனால் அன்றைக்கு என்னைப்போல சிறுமையுடன் உங்களை வசைபாடி, கேலிசெய்தவர் நிறையபேர். அவர்களில் பலர் சின்னச்சின்ன எழுத்தாளர்கள். ரிட்டையர்ட் எழுத்தாளர்கள். இன்றைக்கு அவர்களுக்கு உண்மை தெரியும். அவர்கள் செய்த சின்னத்தனம் தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் சாமானியன், ஆகவே ஒப்புக்கொள்ள எந்த தயக்கமும் இல்லை. நீங்கள் பெரிய கனவுகளுடன் இதை செய்யும்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் இதெல்லாம் நனவாகும் என்று. ஏனென்றால் நீங்கள் செயல்வீரர், சும்மா சொல்லிக்கொண்டிருப்பவர் அல்ல. அப்படியென்றால் இப்படி கேலிசெய்தவர்களைப்பற்றி மனசுக்குள் என்ன நினைத்திருப்பீர்கள்?

மன்னிப்புகேட்டு ஒரு குறிப்பு எழுதவேண்டுமென்று போன ஆண்டே நினைத்தேன். அப்போது எனக்கு கொரோனா. நிறைய பயந்துவிட்டேன். அப்பா வேறு தவறிவிட்டார். இன்றைக்கு எழுத வாய்த்தது. இன்றைக்கு எழுத இன்னொரு காரணம் விக்ரமாதித்யன். அவரைப்பற்றியும் நான் வசைபாடி எழுதியிருக்கிறேன். நசிவு இலக்கியவாதி, குடிகாரன், பிச்சைக்காரன் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். ஆணவம், சின்னத்தனம் என்றுதான் சொல்லுவேன். இன்றைக்கு வாசிக்கையில் அவருடைய கவிதைகளில் ஒரு பெரிய ஞான உலகத்தைக் கண்டுகொண்டிருக்கிறேன்.

எவ்வளவு அனுபவம் வந்திருந்தால் இப்படி எழுதமுடியும். எழுதியவை சின்னச்சின்ன வரிகள்தான். ஆனால் அதற்குப்பின்னால் தீயில் உருகிய வாழ்க்கை அனுபவம் உள்ளது.

நீலத்தை சூடிக்கொண்டது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சளை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துகொண்டது மரம்
சிவப்பை வரிந்து கொண்டது ரத்தம்
ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம்.

இந்த வரிகளில் என்ன இருக்கிறது என்று தோன்றும். ஆனால் இந்த வரிகளை சொல்பவன் வாழ்க்கை முழுக்க அலைந்த ஒரு கவிஞன். இங்கே எல்லாவற்றையும் வரையறைசெய்து வைத்திருக்கும் இயற்கை மனித மனசை மட்டும் மேகம்போல அழிந்து அழிந்து உருமாற வைத்திருக்கிறது. அந்த மனசை பிரம்மாண்டமாக ஏந்தியிருக்கும் கவிஞனை அலையவைக்கிறது.

இந்த வரிகளில் உள்ள ஒரு அழகை கொஞ்சநாள் கழித்துத்தான் கண்டுகொண்டேன். இந்திரனின் வில் எல்லா நிறமும் கொண்டது. எல்லாவற்றிலும் இருந்து நிறங்களை எடுத்துக்கொண்டது. அதுவும் அழிந்துகொண்டே இருப்பது. ஆனால் அது தெய்வத்துக்குரியது. இங்கே கவிஞனுக்கு நிறமே இல்லை. எதிலிருந்தும் அவன் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. நிறமே இல்லாத வானவில் போன்றவன் கவிஞன்.

இன்றைக்கு விக்ரமாதித்யனின் துக்கத்தையும் துக்கத்தின் உச்சத்தில் வரும் தர்சனத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருக்கு விஷ்ணுபுரம் விருது கொடுப்பது கொடுப்பவர் பெறுபவர் இருவரையுமே பெருமைப்படுத்துவது. வாழ்த்துக்கள்.

என்.பட்டாபிராமன்

முந்தைய கட்டுரை‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைஅருண்மொழி, கடிதம்