உலகின் உச்சிப் பாதையில் ஒரு பைக் பயணம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தாங்கள் சொல்லி சொல்லி உளம்பதிந்த வாக்கியம் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ”சிலநாட்களுக்கு மேல் ஒரே இடத்தில்  உறங்கி, ஒரே இடத்தில்  எழுந்து ஒரே டீயை பருகுவது மிகவும் சலிப்பானது”. ஒரே இடத்தில இருக்கமுடிவதில்லை, மனம் பயணம் பயணம் என்று ஏங்குகிறது. நோய்த்தொற்றுகாலத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக நீண்ட பயணங்கள்  இல்லாமலாகிவிட்டன.

தற்போது ஏற்பட்ட தளர்வுகளினால் உடனடியாக நண்பர்கள் பெங்களூரு கிருஷ்ணன், சிவா, சிவாவின் உறவினர் முருகேஷ் மற்றும் எனது அலுவலக நண்பர் ஜான்சன் ஆகிய  ஐந்து பேர் ஓரு பயணம் திட்டமிட்டோம்.  மொத்தம் 10 நாட்கள். ஸ்ரீநகர் வரை விமானத்தில் சென்று அங்கிருந்து  கார் மூலம் இரு நாட்களில் லே- லடாக்கை அடைந்து, அதன்பிறகு பைக்கில் ஆறு நாட்களில் சுமார் 1000 கி.மீ சுற்றி, பல்வேறு பகுதிகளைப் பார்த்துவிட்டு லேவில் இருந்து விமானத்தில் சென்னை திரும்ப  திட்டம்.

ஆகஸ்ட் 6 விமானத்தில் ஸ்ரீநகர் சென்றோம். இரவு சிறு படகில் தால்  ஏரியில் ஒரு மணி நேரம் பயணித்தோம். யாருமற்ற ஏரியில், இரவொளியில், ஆழ்ந்த அமைதியில் நீரலைகளின் மேல் மிதப்பது பெரும் பரவசம் அளிப்பது. கரையில் இருந்த விளக்கொளிகள் தூரம் செல்லச்செல்ல மறைவது போல் நாமும் சிறிது சிறிதாக மறைந்து சூழ்ந்துள்ள நீருடன் முற்றிலும் கலந்து ஒன்றாகிவிட்ட  ஒரு உன்னத நிலை. பிறகு அங்குள்ள ஒரு படகு இல்லத்தில் தங்கினோம்.

அடுத்த நாள் காலை உமர் என்பவரின் இன்னோவா காரில்  லே நோக்கி பயணம். செல்லும் வழியில் ஹஸ்ரத்பால் தர்காவிற்கு (Hazratbal Shrine) சென்றோம். இது முகமது நபி அவர்களின் முடியை வைத்திருக்கும் மிக முக்கியமான புனித தலமாகக்  கருதப்படுகிறது. தால் ஏரியை ஒட்டி அமைந்த பெரிய பரப்பளவில் உள்ள இடம். உள்ளே நுழைகையில் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள் பின்பு பெயர்கேட்டார்கள். ஒரு நிமிட யோசனைக்கு பிறகு Most welcome என்று கூறி வரவேற்றார்கள்.  உள் அறை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. அங்கு அமர்ந்து சிறிது நேரம் பிராத்தனை செய்துவிட்டு கிளம்பினோம்.

வழியெங்கும் காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள்.  எங்கள் கார் ஓட்டுநர் உமர் ஸ்ரீநகரில் பிறந்து வளர்ந்த சன்னி வகுப்பை சேர்ந்த இளைஞன். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தாலும் பொருளாதார வளர்ச்சிதான் அனைத்திற்கும் தீர்வு என்ற நம்பிக்கையோடு செயல்படக் கூடியவர். எங்களுடன் மிக அன்பாகவும், நட்பாகவும் பழகினார். காரில் சுஃபி பாடல்களையும், காஷ்மீரில் திருமணம் போன்ற விழாக்களில் பாடப்படும் பாடல்களையும் கேட்டுக்கொண்டே வந்தோம். இரு நாட்களும் காஷ்மீர் இசையில் மூழ்கி இருந்தோம்.

இரவு கார்கிலில் சென்று அங்கு தங்கினோம். கார்கில் தற்போது காஷ்மீர் மற்றும் லடாக்கின் எல்லைப் பகுதி. தங்கியிருந்த இடத்திற்கு எதிரே இந்துஸ் ஆற்றின் கிளை நதியான சுரு மிக ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருந்தது. அதிக பாறைகள் கொண்ட இடம் எனவே இரவு முழுதும் நீரோசை அச்சமூட்டும் வகையில் இருந்தது.

ஹஸ்ரத்பால்

கார்கில் எதிர்பார்த்ததை விடவும்  பெரு நகரம். முக்கிய வணிக தளம். காஷ்மீரின் முக்கிய உணவான ரோகன்ஜோஷ்  மற்றும் ரிஸ்டா எனப்படும் மட்டன் உருண்டைகள் அனைத்து இடங்களிலும் மிக தரமாகவும், சுவையாகவும் கிடைக்கின்றன.

கார்கிலில் இருந்து காஷ்மீரின் நிலப்பரப்பு மாறத் தொடங்குகிறது. அழகிய பசுமை போர்த்திய மலைத்தொடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, கொஞ்சம் கூட பச்சை இல்லாத மண்ணும் பாறையும் மலையென நிற்கின்றன. கார்கில் நகரில் இருந்து சிறு தொலைவிற்கு அப்பால் கார்கில் யுத்த நினைவுப் பகுதி முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது. யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களின் சிலைகளும், குறிப்புகளும் உள்ளன. நடுவில் மிக உயரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

அடுத்த நாள் காலை முல்பெக் மொனாஸ்ட்ரி (Mulbekh Monastery) சென்றோம். 800 ஆண்டுகால பழமையான மடாலயம். உள்ளே நுழைகையில்  30 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மைத்ரேய புத்தர் பாறையில் செதுக்கப்பட்டு விஸ்வரூப காட்சி அளிக்கிறார்.  உள்ளே பல அழகான புத்தரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன.

மதியம் லாமையுரு மொனாஸ்ட்ரி (Lamayuru) சென்றோம். இந்தியாவின் பெரும் ஞானிகளில் ஒருவரான நரோபா (Naropa) அவர்களால் 1000 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது இந்த மடாலயம். லடாக்கின் மிகப் பழமைவாய்ந்த மற்றும் பெரிய மடாலயம் இது.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு புதிது போல் தோன்றியது ஆனால் உள்ளே அதன் பழமை மாறாமல் நன்றாகப் பராமரிக்கிறார்கள். உள்ளே சிறு சிறு அறைகளாக சென்று கொண்டே இருக்கிறது. ‘தங்க புத்தகத்தின்’ இடங்கள் போலவே இருந்தது.  இங்கிருக்கும் அவ்லோகிதேஸ்வர சிலை அழகின் உச்சம். இங்கு ஓரிடத்தில் “even criminals can enter” என்றிருந்தது. அதிர்ந்துவிட்டேன் பிறகு தான் நீங்கள் குறிப்பிட்ட சமண மதத்தில் இருந்த “அஞ்சினான் புகலிடம்” பற்றி நினைவு வந்தது.

இரவு லே நகரை சென்றடைந்தோம். லே லடாக் பகுதி தான் உலகத்தின் உயரமான பகுதியில் அமைந்த குடியிருப்பு.  நகரம் அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எங்கும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வெகு விரைவில் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறுவதற்குரிய அனைத்து செயல்களும் விரைந்தோடி கொண்டிருக்கின்றன. நகரத்தின் வெளியில் தொடர்ச்சியாக ராணுவ முகாம்கள். ஒரே இடத்தில் இத்தனை முகாம்களும், வீரர்களும் இந்தியாவில் வேறு எங்கும் பார்த்ததில்லை.

ஆனால் காஷ்மீர் போல் இங்கு எந்த சோதனைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. இங்குள்ள மனநிலையே வேறு. லே லடாக் பகுதிகளை இவ்வளவு காலம் காஷ்மீர் உடன் இணைத்து வைத்திருந்தது பெரும் வரலாற்று பிழை என்று நினைக்கிறேன். எந்த வகையிலும் காஷ்மீர் உடன் இணைந்திராத பகுதி. வேறுபட்ட நிலப்பரப்பு, மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் வேறுபட்டது ஆனால் காஷ்மீர் உடன் இணைத்து இப்பகுதிகளை, மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டார்கள் என்று தோன்றுகிறது. லே, லடாக்கை தனியாக பிரித்தது இப்பகுதிக்கு அளித்த பெரும் கொடை.

அடுத்த நாள் காலை பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயணித்தோம். இந்த பகுதிகளில் பைக் ஓட்டுவதெற்கென்றே பல பேர் இந்தியா முழுவதிலிருந்தும் வருகிறார்கள் குறிப்பாக ஐடி துறையிலிருக்கும் ஆண், பெண்கள் குழு குழுவாக வருகிறார்கள். இந்த பகுதியே “பைக் ஓட்டுபவர்களின் சொர்க்கம்” என்று அழைக்கப்படுகிறது.

இங்கு ஆகஸ்ட் மாதம்  சுற்றுலாவிற்கான காலமல்ல வசந்தமும் இல்லாமல் பனிப்பொழிவு இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமிது. சுமார் பகலில் 20, இரவில் 5 டிகிரி உள்ளது. இருப்பினும் நகரத்தில் பெரும் சுற்றுலா கூட்டம் அலைமோதியது.

பைக் வாடகைக்கு அளிப்பதற்கு பல்வேறு கடைகள் இருந்தாலும் வண்டி கிடைப்பது மிகவும் சிரமமாயிற்று. ஐந்து பேருக்கு நான்கு பைக்குகள் எடுத்துக்கொண்டோம். அனைத்தும்  ராயல் என்பீல்டு  புல்லட். அங்கு 90% புல்லட் தான். பெரும்பாலும் நகரத்தை இரண்டு, மூன்று நாட்கள் பைக்கில் சுற்றி விட்டு போகும் ஆண் பெண் இணை தான் அதிகம். குறைவானவர்கள்தான் பைக்கில் அதிக தூரம் பயணிக்கிறார்கள்.

நாங்கள் சந்தித்த இரண்டுமூன்று பேர் தமிழ்நாட்டிலிருந்தே பைக்கில் வந்துள்ளார்கள். சில பெண்களும் தனியாக வந்துள்ளார்கள். தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை பயன்படுத்தி இங்கு வந்து தங்கி வேலையும் செய்து கொண்டு ஊரும் சுற்றுகிறார்கள்.

இமயமலைத் தொடரின் மிக வித்தியாசமான பகுதி லே, லடாக்.  மழையே இல்லாத குளிர் பாலைவனம். இப்போது பனிப்பொழிவு இல்லாததால் மண் போர்த்திய மலைகள் வெறுமையாக நிற்கின்றன ஆனால் இரண்டு, மூன்று மலை மடிப்பு களுக்கு பின்னே பனி மூடிய சிகரம் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதே போன்ற நிலப்பரப்பான ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் நாம் பயணித்துள்ளோம். ஆனால் அது கார் பயணம். பைக்கில் பயணிக்கையில் இதன் வேறுபாட்டை மிக உணர்ந்தேன்.

கார் பயணம் பைக்கை காட்டிலும் பல மடங்கு பாதுகாப்பான பயணம். உடல் சோர்வை அளிக்காது. மேலும் ரொம்ப தூரத்திற்கு பயணிக்கலாம். பல இடங்களை பார்க்கலாம். இந்த பகுதிகளில் பைக்கில் பயணிப்பது என்பது பரமபத விளையாட்டு தான் ஏறிக்கொண்டே இருப்போம். ஏதாவது நடந்தால் அதாள பாதாளம் தான். உயிர் பயம், உடல் வேதனை என்று பல சவால்கள் இருந்தாலும் வாழ்க்கையில் இந்த பகுதிகளில் பைக்கில் ஒரு முறையேனும்  பயணிக்க   வேண்டும்.

காரில் பயணிக்கையில் நிலப்பரப்பிற்கும் நமக்கும் ஒரு இடைவெளி இருக்கும் ஆனால் பைக் பயணத்தில் ஒவ்வொரு நொடியும் அந்த நிலத்தில் நாம் உயிர்ப்புடன் நின்றிருப்போம். நாம் வேறு அது வேறு அல்ல அதனுடன் முற்றிலும் கலந்துவிட்ட உணர்வு. காரில் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் பார்த்து வரமுடியும். ஆனால் பைக்கில்  கிடைக்கும் காட்சியனுபவம் கண் கொள்ள முடியாதது. ஓரிரு நாட்களுக்கு பிறகு ஒரு சீரான வேகத்தில் செல்கையில் காற்றில் பறப்பது போன்றே இருக்கும். பிரமிப்பும், பயமும், பரவசமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

மலைப்பாதையில், உச்சியில், விளிம்புகளில் பைக் ஓட்டும் போது ஏற்படும் சாகச உணர்வை அனுபவிக்கத்தான் பெரும்பாலும்  வருகிறார்கள். ஆனால் இந்த பகுதிகளில் பைக்கில் செல்வது என்பது வெறும் சாகசம் அல்ல மாறாக பெரும் பரவசம்.  இரு பெரும் மலைகளுக்கு இடையே சிறு எறும்பு போல் ஊர்ந்து செல்வோம். மகத்தான பிரபஞ்சவெளியின் முன்  சிறு புள்ளியாய் இருப்போம். இயற்கையின் பிரமாண்டம் என்பதை அங்கு மட்டுமே உணர முடியும். யாருமற்ற முடிவில்லாத நீண்ட பாதையில் பயணிக்கையில்  இந்த உலகத்திலேயே நாம் இல்லை என்று தோன்றும்.

அஜித் ஹரிசிங்கானி

பைக்கில் பயணிப்பதை பற்றி எழுதிய முக்கியமான புத்தகம் அஜித் ஹரிசிங்கானி என்பவரின் “One life to Ride”. இதில் பைக் பயணத்தை ஒரு தவம் போல் விவரிக்கிறார். உலகத்திலே  உயரமான இடத்தில் உள்ள வாகனம் செல்லும் சாலை கர்துங்லா கணவாய் இதன் உச்சியில் ஒரு காஃபி கடையும் அருகில் சிறு குன்றின் மேல் புத்த வழிபட்டு தளமும் உள்ளது. ஆனால் இங்கு சுமார் 10 நிமிடத்திற்கு மேல் இருந்தால் கடுமையான தலை வலியும், மூச்சு திணறலும் ஏற்படும்.

பைக்கில் வரும் பெரும்பாலானோர் செய்யக்கூடிய தவறு, லே வந்தவுடன் அங்கிருந்து பைக்கில் கிளம்பி உயரமான பகுதிகளுக்கு உடனடியாக வந்துவிடுவார்கள் உடல் அந்த தட்பவெப்ப நிலைக்கு உடனடியாக மாறமுடியாமல் எதிர்வினையாற்றும். மொத்த பயணமும் வேதனையில் முடிந்து ஒரு கசப்பான அனுபவமே எஞ்சும்.

அதேபோல அதிகம் பேர் அங்கு இருக்கும் சுற்றுலா நிறுவனங்களால் ஏற்பாடு செய்யும் தொகுப்பு பயணத்தில் (Package Trip) வருகிறார்கள். ஒரு நல்ல பயணி செய்யவே கூடாதது அது. பார்க்கும் இடம், உண்ணும் உணவு, தங்கும் இடம்  அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். சுற்றுலா எண்ணத்தில் வருகிறவர்களுக்கு இது பரவாயில்லை. இயற்கையை தரிசிக்க விரும்புவர்கள் சொந்தத் திட்டத்தில், சுதந்திரமாகவே செல்லவேண்டும்.

நாங்கள் எந்த ஒரு இடத்திலும் எதையும் முன்பதிவு செய்யவில்லை. நமது ஊரில் சமதள பரப்பில் பைக் ஓட்டும் கணக்கில் அங்கும் தூரத்தையும், நேரத்தையும் கணித்து எங்கள் பயணத்தை திட்டமிட்டோம் அது பெரும் தவறு.  சாலைகள் மிக நன்றாக இருந்தாலும் மலையில் ஏறுவதும், இறங்குவதும் சற்று கடினம் கொஞ்சம் தப்பினாலும் மரணமே. மேலும் குறைவான ஆக்சிஜன், குளிர் காற்று என்று பல காரணிகளால் ஒரு நாளைக்கு 150 கி.மீ  ஒட்டினாலே அதிகம்.

கல்சர் என்ற இடத்தில் எங்களது ஒரு பைக் பஞ்சர் ஆகிவிட்டது.  20 கி.மீ பயணித்து ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்து சக்கரத்தை கழட்டி மறுபடியும் பயணித்து பஞ்சர் ஒட்டி திரும்பி  வந்து சரி செய்து கிளம்ப  நான்கு மணி நேரத்திற்கு மேல்ஆகிவிட்டது.

மொத்த பகுதியும் பாலைவனம் என்றாலும் நம் மனதில் பதிந்த மணல் நிரம்பிய பாலைவன சித்திரம் ஹன்டர்பகுதியில் தான் பார்க்கமுடியும். ஆனால் தார் பாலை போல் மணல் பெரிதாகவும், அடர்த்தியாகவும் இல்லை மிகச்சன்னமான, வெளிர் நிறத்தில் மெல்லிய படலம் போர்த்தியது போல் பரப்பி உள்ளது. பகலில் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.

மலைக் காட்சி குறைவாகவும், நீண்ட மணல் போர்த்திய நிலப்பரப்பு மிகுதியாகவும் உள்ள இயற்கையை லடாக்கில் இப்பகுதியில் மட்டுமே காணமுடியும். தார் பாலை போல் இங்கும் ஹான்டர் ஊருக்குள் இருக்கும் மணற் பரப்பை ஒட்டி ஏகப்பட்ட கூடாரங்கள், சுற்றுலாவிற்கான நிகழ்ச்சிகள், பெரும் கூட்டம். எனவே நாங்கள் உள்ளே செல்லவில்லை.

துர்துக் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கிராமம். கார்கில் யுத்தத்திற்கு முன் வரை அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாகிஸ்தான், இந்தியா என்றில்லாமல் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. பெரும்பாலும் உறவினர்கள். போருக்கு பின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டது. துர்துக் வருபவர்கள் எல்லை கிராமத்தை மலையின் ஓரத்தில் காட்சி முனை ஒன்றிலிருந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

நாங்கள் அங்கிருந்து அரைமணி நேரம்நடந்து மலையிறங்கி கிராமத்தை சென்றடைந்தோம். அழகான, செழிப்பான கிராமம்  கோதுமை அறுவடைக்கு பின்னான வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அருகே சிந்து நதி பெரும் பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்தது. இன்னும் சில தூர அளவில் பாகிஸ்தானுக்குள் புகுந்துவிடும். நமக்கு தானே எல்லைகள்? அதற்கு எல்லைகளை மீறுவதுதானே மரபு! ஊருக்குள் மேல் தளத்தில் முழுதும் மரத்தால் கட்டப்பட்ட ஒரு பழைய மசூதிக்குச்சென்று திரும்பினோம்.

பல இடங்களில் மண் சரிவு இருந்துகொண்டே இருக்கிறது இங்கு மண் சரிவு என்பது மலையே சரிவது தான். நேற்று நின்ற மலை இன்று படுத்துள்ளது. இருப்பினும் எல்லை சாலை அமைப்பு (B R O) நினைத்துப்பார்க்க முடியாதளவிற்கு மலைச்சரிவை சரி செய்து சாலை அமைத்து கொண்டே இருக்கிறார்கள். உலகில் நிலப்பரப்பில் வேறுயெங்கும் மனிதனுக்கும், இயற்கைக்கும் இவ்வளவு பெரிய போராட்டம் நிகழுமா என்றுதெரியவில்லை. இவன் சரி செய்துகொண்டே இருக்கிறான் அது அதை அழித்து கொண்டே இருக்கிறது. புரியாத விளையாட்டு.

இந்த பகுதிகளின் நில, மலை அமைப்பை பற்றி நீங்கள் “நூறு நிலங்களின் மலை” யில் மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். நான் பச்சை நிறத்தில்தான் அத்தனை வேறுபாடுகளை காட்டில் கண்டுள்ளேன். மண்மலையில் இத்தனை நிற வேறுபாடுகள் இருக்கும் என்பதை இங்குதான் கண்டு பிரமித்தேன். இராணுவ உடைநிறத்திற்கான காரணம் இங்குதான் புரிந்தது.

பாங்கொங் ஏரி இந்தியாவின் அழகான காட்சிப்பகுதிகளில் ஒன்று. தமிழ் பாடல்களில் அடிக்கடி கேட்ட ‘நீலவானம்’ என்பதன் சரியான பொருள் அங்குதான் விளங்கும். பொதுவாகவே லடாக் பகுதிகளில் காற்று மாசு, ஒளிச்சிதறல் போன்றவை இல்லாததால் வானம் மிக தெளிந்து இரவில் நட்சத்திரங்களை ரசிப்பதற்கு மிக உகந்ததாய் இருக்கும்.

பாங்கொங் ஏரியில் நீரும் வானமும் நீலத்தின் உச்சம். ஒரு மாலைப் பொழுதை அங்கு கழிப்பது நமக்குகிடைத்த வரம். இங்கும் தற்போது எண்ணற்ற குடில்கள் போடப்பட்டு ஒரு வரைமுறை இல்லாமல் சுற்றுலா செயல்பாடு நடந்துகொண்டு உள்ளது.

அதை விட மோசமாக, 3 இடியட்ஸ் படத்தில் ஒரு காட்சி அங்கு எடுக்கப்பட்டதால் அந்த காட்சியில் நாயகி வரும் ஸ்கூட்டர் போன்று 10,20 ஸ்கூட்டர்களையும், நாயகன் அமரும் பின்பக்கம் போல் வடிவம் கொண்ட இருக்கைகளையும் வரிசையாக எரிக்கரையோரம் அமைத்துள்ளார்கள். வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் பேரழகு இயற்கை காட்சியின் முன் இந்த அவலம். மக்கள் அங்குதான் கூடி அதில்அமர்ந்து புகைப்படம் எடுத்து தள்ளுகிறார்கள். நாங்கள் நடந்து வெகுதூரம் சென்று மறைந்துவிட்டோம்.

இந்த பகுதிகளின்  ஐந்து நாட்கள் பைக் பயணம் என் வாழ்வின் மகத்தான தருணங்களின் நிகழ்வுகளில் ஒன்று. பெரும் வாழ்க்கை அனுபவம். கடைசி இரண்டு நாட்கள் திரும்பவும் புத்த கோவில்களையும், மடாலங்களையும் சென்று தரிசித்தோம்.

ரிஞ்சென் ஸ்ங்ப்பூ (Rinchen Zangpo) என்பவரால் 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது  அல்சி மடாலயம் (Alchi Monastary). இவர் சமஸ்கிருதத்தில் இருந்த புத்த மத நூல்களை திபெத்தியன் மொழிக்கு மொழிபெயர்த்து, திபெத்தில் புத்த மதம் வளர பெரும் காரணியாக இருந்த மகா ஞானியாகக் கருதப்படுகிறார்.

இந்து கோவில் அமைப்பை போல் ஒவ்வொரு இறை வடிவத்திற்கும் ஒரு கோவில் என்று மொத்தம் ஆறுகோவில்கள் அமைந்த வளாகம் இது. இதில் உள்ள மஞ்சுஸ்ரீ கோவில் முக்கியமான ஒன்று. உட்புற சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் லடாக் பகுதியில் அமைந்த பழைமையான ஓவியங்கள் ஆகும். ஓவியங்களை பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே ஒருநாள் தேவைப்படும்.

மிக அழகான, நுட்பங்கள் நிறைந்த புத்த மதத்தை விவரிக்கும் ஓவியங்கள்  சிலவற்றில் அரசர்களைப் பற்றிய ஓவியங்களும் உள்ளன. இண்டிகோ, ஆரஞ்சு மற்றும் தங்க பூச்சு போன்ற நிறங்கள் அனைத்து ஓவியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எமா எனப்படும் எமதர்ம ராஜா பல கோணங்களில் பலவர்ணங்களில் காட்சியளிக்கிறார்.

அங்கிருந்த புத்த பிட்சு ஒருவர் சில ஓவியங்கள் தொடர்பான கேள்விகளுக்கும், சில மந்திரங்களை பற்றியும், மடாலாலயங்களின் பிரிவுகள் (sect) பற்றியும் விரிவான விளக்கமளித்தார். சிதிலமடைந்த பகுதிகளை புனர்பிக்கிறோம் என்று கூறி பழங்காலத்து ஓவியங்கள் மேல் புது ஓவியம் வரையப்பட்டதை மிக வருத்தத்துடன் கூறினார். வளாகத்தின் கீழ்புறம் சிந்து நதி சலனமற்று ஓடிக்கொண்டிருந்தது.

11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹெமிஸ் மடாலயம் (Hemis Monastery)  மற்றுமோர் மிக முக்கியமான மடாலயம் ஆகும். இங்கு  பத்மசம்பவா எனப்படும் குரு ரின்போச்சேவை மையமாக கொண்டு வழிபாடு நடக்கிறது. அமர்ந்தவடிவில் உள்ள அவரின்  மிகப்பெரிய சிலை உள்ளது. பத்மசம்பவா அவர்களின் தாந்திரீக மரபை இங்கு பின்பற்றுகிறார்கள். பத்மசம்பவாவை போற்றும் வகையில் வருடம்தோறும் இங்கு நடக்கும் முகமூடி நடனம் உலகப்புகழ் பெற்றது.

இந்த வளாகத்துக்குள் ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளார்கள். புத்த மதவரலாற்றின், அதன் தத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு படங்கள், ஓவியங்கள், பொருட்கள் அதன் விளக்கங்களுடன் வைத்து சிறப்பாக பராமரிக்கிறார்கள்.

புலி மூக்கு என்று அழைக்கப்படும் ஸ்டக்ன (Stakna Monastery) மடாலயம் லடாக்கில் இருக்கும் ஒரே பூட்டான்புத்த மரபை சேர்ந்த மடாலயம். இது சுற்றுலா தள வரைபடத்தில் இல்லாததால் யாரும் இல்லாமல் புத்தமடாலயத்துக்கே உரிய ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தது. அவ்வளவு பெரிய இடத்தில் ஒரே ஒரு துறவி மட்டும் இருந்தார் எங்களுக்காக கதவை திறந்து வழிபட அனுமதித்தார்.

பிரம்மாண்டமான ஆர்யஅவலோகிதேஸ்வரா சிலை, சுற்றிலும் ஓவியங்கள்.  புத்தர், தாரா தேவியின் புணர்ச்சி ஓவியத்திற்கு நீங்கள்கூறிய விளக்கத்தை நண்பர்களிடம் சொன்னேன். “அளவற்ற ஆற்றலும், அளவற்ற கருணையும் இணைவது”. எவ்வளவு பெரிய தரிசனம் அது. கண்ணீருடன் கை கூப்பி அமர்ந்திருந்தோம்.

திகசெய் (Thiksey) மடாலயம் மிக பெரியது. இந்த பகுதியின்  நவீன மடாலயம்.  “கரு” வில் வருவது போன்றுமலை உச்சியில் தொங்கி கொண்டிருக்கும் மடாலயத்தில் இருந்து பக்கவாட்டில் அறைகள் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள் பழைய அறைகள் இடிந்து சிதிலமடைந்து உள்ளன. உள்ளே சில அறைகள் மிக சின்னதாய் ஒருவர் மட்டும் படுக்கும் அளவிற்கு மட்டுமே உள்ளது. அங்கு துறவிகள் தங்குகிறார்கள். உள்ளே இருப்பது கருவறைக்குள் இருப்பது போல் என்று நினைத்தேன்.

இரண்டு அடுக்குகளில் சிமென்டில் கட்டப்பட்ட 49 அடிமைத்ரேய புத்தர் இதன் சிறப்பு முகம் பொன் நிறத்தில் மின்னுகிறது. அவர் முகத்தில் உள்ள சாந்தத்தை நான்வேறெங்கும் கண்டதில்லை.  21 தாரா தேவியின் சிலைகள் இதன் மற்றுமோர் சிறப்பு.

இங்குள்ள குறை என்பது அனைத்து சுற்றுலா பயணிகளையும் அனுமதிப்பது. எதை பற்றியும் எந்த அடிப்படை அறிதலும் இல்லாமல், குறைந்தபட்ச பொது நாகரிகம் இல்லாமல் கண்டபடி கத்திக்கொண்டு, பழமையான ஓவியத்தின் மேல் சாய்ந்து கொண்டு, அனைத்து இடத்திலும் தற்படம் எடுத்துக்கொண்டு அந்த இடத்தின் புனிதத்தை குலைகிறார்கள்.

சிவா சொல்லிக்கொண்டே இருந்தார்.  இமயமலை தொடரை ஐ.நா போன்ற உலக அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதன் மைய நோக்கம்  இயற்கையையும், அங்குள்ளவர்களின் தனித்தன்மையையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். இமையம் என்பது இறை, இயற்கையாக உறையும் இடம். பெரும் ஞானிகள் வாழ்ந்த, வாழுகிற இடம். அது  இயற்கையை நேசிப்பவர்களுக்கும், இறையை வழிபாடுபவர்களுக்கும், உணர்பவர்களுக்கும் மட்டுமே உரிய இடம். எவ்வித அரசியலும் அங்கு இருக்கக் கூடாது.

நீங்கள் ஒரு முறை கூறினீர்கள், “திபெத்தை சீனா  ஆக்கிரமித்தல் என்பது, ஒரு அரசை மற்றொன்று பிடிப்பதல்ல, ஒரு நிலத்தை மற்றோர் நாடு எடுத்துக்கொள்வது அல்ல மாறாக மனிதகுல வரலாற்றில் தோன்றியமாபெரும் உன்னதமான ஒரு பண்பாட்டை அழிக்கும் செயல். மனித பேரினத்திற்கு இழைக்கும் மாபெரும் அநீதி. ஆகவே திபெத் அதன் அடையாளம் மாறாமல் பாத்துக்கப்படவேண்டும்”. உங்கள் கூற்று லே, லடாக் பகுதிகளுக்கும் பொருந்தும்.

V.S.செந்தில்குமார்.

ஜெயமோகன் நூல்கள் வாங்க

 

முந்தைய கட்டுரைஇரண்டு நாட்கள்
அடுத்த கட்டுரைகாந்தியும் பிராமணர்களும்