‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 25ஆவது நாவல் ‘கல்பொருசிறுநுரை’. மானுட வாழ்வு நீர்க்குமிழியின் வாழ்வுக்கு ஒப்பாகவே இருக்கிறது. நீர்க்குமிழி மிகச் சிறிய நேரத்தில் தன் மீது நிறப்பிரிகையாக ஏழு வண்ணத்தையும் வானத்தையும் காட்டி, மின்னி, மகிழ்ந்து, மெல்நடனமாடி, மெல்ல நடுங்கி, உலைந்து, உடைந்து சிதறுகிறது. துவாரகையும் அவ்வாறே ஆகிறது.

இந்த உலகில் ஒட்டுமொத்த வாழ்வும் அவ்வாறே, நிலையற்றதாகவே இருக்கிறது. இதனை மனித மனம் அறிந்திருந்தும் அதைப் புறக்கணித்து, ‘தன்னால்தான் எல்லாம்; தனக்குத்தான் எல்லாம்’ என்ற இறுமாப்பில் துள்ளிக் குதிக்கிறது. அந்தத் துள்ளலும் சிறுபொழுதுதான் நீடிக்கும் என்பதையும் மனித மனம் மறந்துவிடுகிறது.

நீர்க்குமிழிக்குத் தெரியாது தான் எப்போது உடைந்து சிதறுவோம் என்பது. ஆனால், மனிதனுக்குத் தெரியும். ஆனால், அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை. தன்னைத் தானே விரும்பி அழித்துக்கொள்ளும் புதுமையான உயிரினம்தான் ‘மனித இனம்’. அஸ்தினபுரியின் முற்றழிவைப் பார்த்த பின்னரும் துவாரகை மனந்திருந்தவில்லை என்பதைக் கொண்டே, நாம் இதனைப் புரிந்துகொள்ளலாம். மனித மனத்தைப் போல விந்தையான ஒன்றை இந்த உலகில் காணவே முடியாது.

இந்த நாவலுக்கான தலைப்பினை நாம் குறுந்தொகை பாடலில் காணமுடிகிறது.

காமந் தாங்குமதி யென்போர் தாம

தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்

யாமெங் காதலர்க் காணே மாயிற்

செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

கல்பொரு சிறுநுரை போல     

மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந்தொகை – 290)

காம நோயைப் பொறுத்து ஆற்றுவாயாக என்று வற்புறுத்துவோர் அக்காமத்தின் தன்மையை அறிந்திலரோ? அத்துணை வன்மை உடையவரோ? யாம்! எம் தலைவரைக் காணேமானால் செறிந்த துயர் மிக்க நெஞ்சத்தோடு மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதும்nசிறிய நுரையைப் போல மெல்ல மெல்ல இல்லையாவேம். தலைவரது பிரிவு நீட்டிப்பின் என் உயிர் நீங்கும். கற்பொரு சிறுநுரையென்பது எதுகை நயத்துக்காகக் ‘கல்பொருசிறுநுரை’ எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நுரை கல்லில் மோதுந்தோறும் சிறிது சிறிதாகக் கரைதலைப் போலத் தலைவர் பிரிவை எண்ணுந்தோறும் உயிர் தேய்ந்தொழியும் என்கிறார். இந்த உவமையின் சிறப்பினால் இந்தச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் ‘கல் பொரு சிறுநுரையார்’ என்னும் பெயரைப் பெற்றார்.

 “ஆம், தோரணவாயில் வரைக்கும் இந்நகரின் முழு நிலமும் நீருக்குள் சென்றுவிடும்” என்றார் சுப்ரதீபர். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். “இது அமைந்திருக்கும் பாறைகள் இரண்டு திசைகளிலாக விலகிவிட்டன. நிலையழிந்து அவை கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டு யானைகளின் அம்பாரிகளாக இந்நகரம் அமைந்திருந்தது. யானைகள் இறங்கி ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அம்பாரிகள் மட்டும் எவ்வாறு இங்கிருக்க முடியும்?”

‘துவாரகை’ வெறும் அம்பாரிதான். இளைய யாதவர் அமர்ந்திருக்கும் வரை அந்த அம்பாரி நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அவர் இறங்கிச் சென்ற பின்னர், தன் நிலையழியத் தொடங்கிவிட்டது. கல்மீது நிற்கும் சிறு நுரைக்குமிழி போன்ற துவாரகை முற்றிலும் அழிந்துபடுவதை விவரிக்கும் இந்த நாவலுக்குக் ‘கல்பொருசிறுநுரை’ என்று தலைப்பு வைத்திருப்பது முற்றிலும் பொருந்தக் கூடியதே!

இந்த நாவலைக் குறித்து எழுத்தாளர் தன்னுடைய எண்ணப் பதிவை வெளியிட்டுள்ளார். அது இங்கு நமக்குப் புதிய வகையிலான புரிதலை நல்கும் என்று நம்புகிறேன்.

“வெண்முரசின் நாவல் நிரையில் நான் எழுத எண்ணும்போதே தயங்கிப் சொல்பின்னெடுத்த நாவல் இதுதான், கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் கல்பொருசிறுநுரை. இந்த இருபத்தைந்தாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால், அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்ம வடிவானவனும் அதற்குக் கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால், ‘இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு  துலாத்தட்டில் உள்ளது’ என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது. ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது. மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையைத் தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே, அவன் அதை அளித்தான். அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால், அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையைக் கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வைகொண்டவன். அவனுக்குக் கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட. எழுத எண்ணியபோது வந்தமைந்த ‘கல்பொருசிறுநுரை’ என்னும் சொல் என்னை ஊக்கியது. அச்சொல்லைப் பற்றிக்கொண்டே இதை எழுதி முடித்தேன். இதன் முழுமை நிகழ்ந்தபோது வெண்முரசிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டேன்.”

உண்மையிலேயே எழுத்தாளர் வெண்முரசிலிருந்து விடுபட்டுவிட்டார். ஆனால், வாசகர்கள் ஒருபோதும் இந்த வெண்முரசிலிருந்து விடுபடவே முடியாது. ஆம்! அதுதான் ஊழின் திட்டம். அதுவே, நமக்குக் கொடையும்கூட என்பேன்.

இளைய யாதவருக்கு எட்டு மனைவியர். இளைய யாதவரின் மகன்கள் எண்பதுபேர். அதில் மூன்று மகன்கள் மட்டுமே துவாரகையின் மணிமுடியைச் சூடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆனால், எண்பதுபேரும் துவாரகையை ஆளவே விழைவு கொண்டுள்ளனர். இளைய யாதவரின் மகன்களுள் ஒருவரான முரளி மட்டும் இவர்களை விட்டு விலகி இருக்கிறார். அவர் தன் தந்தையான இளைய யாதவருக்கு இணையாகக் குழலிசைக்கும் மாற்றுத் திறனாளியாகப் பின்னாளில் அறியப்படுகிறார்.

துவாரகை சத்யபாமையின் ஆட்சியிலிருந்தது. பின்னாளில் அது துரியோதனனின் மகள் கிருஷ்ணையின் ஆளுகைக்கு உட்படுகிறது. பின்னர், இளைய யாதவரின் மகன்கள் துவாரகையை முழுதாள எண்ணுகிறார்கள். அவர்களுள் மூத்தவர் ஃபானு. அவரை எதிர்க்கவும் ஆதரிக்கவும் அவரின் தம்பியரும் துவாரகை மக்களும் திரள்கிறார்கள்.  இளைய யாதவரின் மகன்கள் அனைவருமே தன் தந்தையை வெறுக்கிறார்கள். அவரைப் போருக்கு அறைகூவிக் கொல்லவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அஸ்தினபுரியின் முற்றழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த கணிகர் துவாரகைக்கு வருகிறார். அவரின் எண்ணம், துவாரகையையும் முற்றழித்தலே!

இந்நகரை அழிக்கவேண்டும். அதற்கான வழியை நான் கூறுகிறேன்என்று கணிகர் சொன்னார். அழிப்பதென்றால்?” என்றேன். இந்நகரின் ஒவ்வொரு அடித்தளமும் நொறுங்க வேண்டும். ஒவ்வொரு மாளிகையும் சரிய வேண்டும். இந்நகர் கடல்கொண்டு மறைய வேண்டும்.நான் மூச்சு இறுக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய இனிய புன்னகை விரிந்தது. ஒரு குமிழியென இது மறைய வேண்டும். கல்பொருசிறுநுரை எனஎன்றார் கணிகர்.

கணிகர் ஒரு நச்சுநிழல். அந்த நிழல் எங்குப் படிந்தாலும் அந்த இடம் பாழ்தான். அந்த நிழல் எவர் மீது படிந்தாலும் அவர் தன்னைச் சுற்றியிருப்பவரையும் அழித்து, தன்னையும் அழித்துக் கொள்வார். எல்லாவற்றையும் அழித்துவிட்டு இறுதியில் கணிகர் இளைய யாதவரின் பாதங்களில் சரணடைகிறார். ஒருவகையில் பார்த்தால் இளைய யாதவர் கணிகரையும் தன்னுடைய படைக்கலமாகவே கையாண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கிருதவர்மரும் ருக்மியும் துவாரகைக்கு ஒருவகையில் ஆதரவாகவும் பிறிதொரு வகையில் எதிர்ப்பாகவும் இருக்கிறார்கள். இளைய யாதவரையும் அவரின் மனைவியர் மற்றும் மகன்களையும் ஒன்றிணைக்க சாத்யகி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். அவரும் கிருதவர்மரும் இணைந்து துவாரகையின் பிதாமகர் நிலையில் அமர்ந்து, இளைய யாதவரின் மகன்களை ஒன்றிணைக்கின்றனர். அந்த ஒற்றுமை கணிகரின் அதிசூழ்ச்சியால் சிதறுகிறது. இளைய யாதவரின் மகன்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்கின்றனர். துவாரகையில் ஆழிப்பேரலை எழுகிறது. கணிகர் எண்ணியது போலவே அனைத்தும் நிகழ்கின்றன.

இப்போது சீற்றம்கொண்டிருப்பது கடல். கடலை அறிந்தவர்கள் கடலோடிகள். முதிய கடலோடிகள் எழுவரை நான் அழைத்துவரச் சொன்னேன். அவர்கள் எண்ணுவதைக் கேட்டேன். இந்த நிலஅதிர்வு கடலுக்குள் இருந்து வந்திருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவேதான் நிலம் நடுங்கியபோது அலைகள் பெரிதாக எழவில்லை. ஆகவே, இது முழுமையாகவே கடல்சார் நிகழ்வுஎன்றார். அவர்கள் சில குறிகளைத் தேர்ந்து சொன்னார்கள். கடல் உள்வாங்கியிருக்கிறது. திறந்த வாய்க்குள் நாக்கு உள்வளைவது போன்றது அது. வாய் விழுங்க வருகிறதென்றே பொருள். நகரிலிருந்து அத்தனை காகங்களும் பறவைகளும் அகன்றுவிட்டன. அதைவிட, கடலோரத்தில் கடற்காகங்கள் ஒன்றுகூட இல்லை. கடலில் இருந்து எதுவோ வரவிருக்கிறது. எதுவென்று சொல்ல எவராலும் முடியாது. அது இங்கு வராமல் திசைமாறிப் போகலாம். ஒன்றும் நிகழாமலும் போகலாம். ஆனால் இது எச்சரிக்கை” என்று கிருஷ்ணை சொன்னார்.

இந்த உரையாடலில்,

கடல் உள்வாங்கியிருக்கிறது. திறந்த வாய்க்குள் நாக்கு உள்வளைவது போன்றது அது. வாய் விழுங்க வருகிறதென்றே பொருள்.

என்ற இந்த வரிகள் மிக முக்கியமானவை என்று கருகிறேன். ‘சுனாமி’ (ஆழிப் பேரலை) பற்றிய நுட்பமான, மிகப் பொருத்தமான உவமையை எழுத்தாளர்  எழுதியிருக்கிறார். இதனை வாசகர்கள் எண்ணி எண்ணி வியக்கலாம்.

ஃபானு சினத்துடன் உமது உளப்பதிவென்ன? அதை சொல்லுங்கள்என்றார். அதன் பின்னரே சுப்ரதீபர் ஃபானுவின் உளநிலையை புரிந்துகொண்டார். அரசே, இந்நகர் அழிந்துகொண்டிருக்கிறது. இனி எத்தனை நாட்கள் என்பதே வினாஎன்றார். நாட்கள் என்றால்?” என்றார் ஃபானு. எனது கணிப்பின்படி இன்னும் மூன்று நாட்களில் பெரும்பாலான துவாரகையின் பகுதிகளுக்குள் நீர்புகும். பதினைந்து நாட்களுக்குள் துவாரகையின் அனைத்துக் கட்டடங்களும் நீருக்குள் மூழ்கிச் செல்லும். இன்னும் ஒரு மாதத்திற்குள் துவாரகையின் தோரண வாயில் வரைக்கும் கடல் நீர் சென்று அடிக்கும்என்றார் சுப்ரதீபர்.

இந்த நாவலில் அக்கால சுனாமியை நம்மால் கண்டுணர முடிகிறது. அந்த வகையில் தன்னுடைய சொல்லுளியால் காட்சிகளைத் தொடராகச் செதுக்கி எழுதியுள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்.

பொ.யு.மு. 426 ஆம் ஆண்டிலும் பொ.யு.மு. 365 ஆம் ஆண்டிலும் உலகில் ஏற்பட்ட சுனாமிகள் பற்றிய எழுத்தாதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1755, பொ.யு.1883, பொ.யு.1929, பொ.யு.1946, பொ.யு.1950, பொ.யு.1958, பொ.யு.1960, பொ.யு.1964, பொ.யு.1998, பொ.யு.1999, பொ.யு.2001,  ஆகிய ஆண்டுகளில் உலக அளவில் சுனாமிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் பாதிப்பு பற்றிய விரிவான செய்திகளை அறிய முடிகின்றது.

கடலுக்குத் தமிழில் ‘முந்நீர்’ என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் ‘முந்நீர்’ என்ற சொல் வருகிறது (பார்க்க – புறநானூற்றுப் பாடல் எண்கள் 9, 13, 20, 30, 35, 60, 66, 137, 154).

“நிலத்தைப் படைத்தலும். காத்தலும். அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்”

என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே, கடலின் அழிவுசக்தி குறித்தும், ‘சுனாமி’ எனப்படும் ராட்ஷதப் பேரலைகள் குறித்தும் தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறள் அடியினை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.

இந்த ‘சுனாமி’யைக் “கடல்கோள்” என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென்மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப் பற்றி விளக்கமாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கியங்களில் உள்ள சில குறிப்புகள் பழந்தமிழகத்தைத் தாக்கிய பெரிய சுனாமி பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

“மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப்

புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட

வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்”

(கலித்தொகை – 104)

முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவற்றைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.

தற்காலத் தமிழர்கள் அறிந்த சுனாமிகள் இரண்டு. ஒன்று, 22.12.1964 ஆம் நாள் தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி (ஆழிப் பேரலை). இரண்டு, 26.12.2004 ஆம் நாள் சென்னை உள்ளிட்ட கடலோரத் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி. இரண்டும் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இவற்றை அறிந்தவர்கள் துவாரகையைத் தாக்கிய சுனாமியைப் பற்றியும் அதன் பேரழிவுகளைப் பற்றியும் எளிதில் உய்த்துணர முடியும்.

தகுதிப்படி மணிமுடி சூடப்படவேண்டும் என்று அவர் எண்ணுவது உண்மை என்றால், மணிமுடியை வெல்லும் திறன்கொண்டவரே சூடும் தகுதிகொண்டவர் என்று அவர் சிசுபாலரின் அவையில் எழுந்து கூறியது அவர் முன்வைக்கும் மெய்மை என்றால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு அமையும் என்று தன் இறைப்பாடலில் அவர் கூறிய வரி மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டுமென்றால், நாங்களே இங்கு முடிசூட வேண்டும். எங்கள் மணிமுடியை உறுதி செய்வதனூடாகவே தான் உரைத்த வேதத்தின் சொல்லைத் தன் வாழ்க்கையால் அவர் நிறுவுகிறார். அவரிடம் கூறுக, நோக்கிக் கொண்டிருக்கிறது பாரதவர்ஷம்! அவர் எடுக்கப்போகும் முடிவென்ன என்று அது காத்திருக்கிறதுஎன்று சுமித்ரன் கூவினார்.

இந்த உரையாடலில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள் – 972)

‘பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்’ என்ற திருக்குறள் செய்தி இழையோடியுள்ளது.

இந்த நாவலில் அரச மரபு சார்ந்த ஒரு வழக்காறு சுட்டப்பட்டுள்ளது.  குழந்தைக்கு வீரமரணம் அளிக்கும் நிகழ்வு சார்ந்தது அது.

அந்நகர் அழிய வேண்டுமென்று அரசமுனிவர் வந்து தீச்சொல்லிட்டுச் சென்றார் என்று சூதர்கள் கதை பெருக்கினர். ஊன்தடி பிறக்கும். வாள் போழ்ந்து புதைப்பர். முளைத்தெழுந்து பெருகும். முற்றழித்து செல்லும்என்ற சொல் நிலைகொண்டது.

இந்த வழக்காறினைப் புறநானூற்றில் காணமுடிகிறது. குழந்தை பிறந்து இறந்தாலும் உறுப்பில்லாத சதைப் பிண்டம் பிறந்தாலும் முதுமை எய்தியோ அல்லது நோயுற்றோ இறந்தாலும் நெஞ்சில் வாளால் காயம் செய்து அடக்கம் செய்யும் அரச மரபு இருந்துள்ளது.

குழவி  இறப்பினும்  ஊன்தடி  பிறப்பினும்

ஆள்அன்று  என்று  வாளின்  தப்பார்

தொடர்ப்படு  ஞமலியின்  இடர்ப்படுத்து  இரீஇய

கேளல்  கேளிர்  வேளாண்  சிறுபதம்

மதுகை  இன்றி  வயிற்றுத்தீத்  தணியத்

தாம்இரந்து  உண்ணும்  அளவை

ஈன்மரோ  இவ்  உலகத்  தானே. (புறநானூறு – 74).

குழந்தை பிறந்து இறந்தாலும் இறந்த உறுப்பில்லாத சதைப் பிண்டமாக பிறந்தாலும் அதனையும் ஓர் ஆளாகக் கருதி, வாளினால் காயம் செய்து அடக்கம் செய்யும் மரபில் வந்து; இன்று, பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல துன்பப்பட்டு, பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, மனவலிமையின்றி, வயிற்றுப் பசியை தணிக்க, கையேந்தி இரந்து உண்ணும்படி உடையவரை, அத்தகைய அரச மரபினர் பெறுவார்களோ இவ்வுலகத்தில்?  என்று கேட்கிறது இந்தப் பாடல்.

இந்த நாவலில் ஒரு புதுமை உள்ளது. சாத்யகி, பிரதிபானு, சோமன், ஸ்ரீகரர் ஆகியோர் தனித்தனியே இளைய யாதவரைச் சந்தித்து உரையாடுவதன் வழியாகத் துவாரகையில் நடந்தவை அனைத்தும் வாசகருக்குக் காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் இந்த நாவல் முழுக்கவே நீண்ட உரையாடல்களின் தொகுப்புதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இளைய யாதவரை மீண்டும் துவாரகைக்கு எழுந்தருளச் செய்யும் உருக்கமான மன்றாடல்கள். ஆனால், இவற்றுக்கு அப்பால் தன் மனத்தை வைத்திருந்தார் இளைய யாதவர். அவர் யுகத்தின் முடிவில் நின்றுகொண்டிருந்தார்.

இளைய யாதவரின் மகன்களுள் சிலர் துவாரகையின் கருவூலத்தோடு புதிய நிலத்துக்குப் புலம்பெயர்கின்றனர். செல்லும் வழியில் மக்களிடையே கலவரம் எழுகிறது. பலர் இறக்கின்றனர். அவர்கள் பிரபாசக்ஷேத்ரத்திற்கு வருகின்றனர். புதிய நிலத்தில் காலூன்றுகின்றனர். அது எந்த வகையிலும் அவர்களுக்கு வாழ்வளிக்காத நிலமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதில் வாழ முற்படுகின்றனர் இளவேனில் விழாவைக் கொண்டாடுகின்றனர். கள்மயக்கில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்கின்றனர்.

இந்த நாவலில் மீண்டும் ஒரு சூதாட்டம் நிகழ்கிறது. அஸ்தினபுரியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சகுனி கள்ளாட்டம் ஆடினார். மூத்த யாதவரான பலராமருக்கும் ருக்மிக்கும் இடையே மதுராவில் நடைபெற்ற இந்தச் சூதாட்டத்தில், ஊழே கள்ளாட்டம் ஆடுகிறது. அதன் விளைவாக ருக்மி கொல்லப்படுகிறார்.

‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவல் தனித்ததொரு சரித்திர நாவலாக நிலைகொண்டுள்ளது என்பேன். இந்த நாவலை அப்படியே ஒரு சரித்திரத் திரைப்படமாக எடுக்கலாம். பார்வையாளர்களுக்குத் திகட்ட திகட்டக் கொடுக்கும் அளவுக்குச் சூழ்ச்சிகளும் வஞ்சங்களும் திடீர்த் திருப்பங்களும் இந்த நாவலில் நிறைந்துள்ளன.

முனைவர் . சரவணன், மதுரை


‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைஆசிரியர்கள் என்னும் களப்பலிகள்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8