வாசகன் என்னும் நிலை
அன்புள்ள ஜெ
செந்தில்குமாரின் பேட்டியும் அதைப்பற்றிய உங்கள் குறிப்பும் கண்டேன். அதைப்பற்றியே சிந்தனை செய்துகொண்டிருந்தேன். என் 26 வயதுவரை எனக்கு இலக்கிய அறிமுகமே இல்லை. என் குடும்பச்சூழலில் ராணிதான் வரும். அதைக்கூட நான் படித்தது இல்லை. நான் தமிழில் படிக்க ஆரம்பித்ததெல்லாம் கொஞ்சநாள் வட இந்தியாவுக்குச் சென்று தனிமையில் உழன்றபோதுதான். இணையத்தில் அங்கிங்காக வாசித்தேன். ஈழத்தமிழர் பற்றி நீங்கள் சொன்னதாக ஒரு அவதூறு கிளம்பியது. அப்போதுதான் உங்களைப்பற்றி அறிந்தேன். நான் உங்களுக்கு ஒரு வசைக்கடிதம் எழுதினேன். நீங்கள் பதில் சொல்லவில்லை.
அதன் பிறகு இணையத்தில் உங்களைப் பற்றி பலர் பொருமிப்பொருமி வசைபாடியிருப்பதை வாசித்தேன். எல்லாவற்றையும் நம்பி உங்களைப்பற்றி நானும் நிறைய நக்கல் நையாண்டி வசை எல்லாம் எழுதினேன். இப்போது அந்த அக்கவுண்ட் இல்லை. நான் முதலில் படித்த நாவல் இரவு. அதுவும் இணையத்தில் சும்மா கிடைத்தது. அதில் என்னுடைய தனிமையைப்பற்றிய சித்திரம் அப்படியே இருந்தது. அதிர்ச்சி ஆகிவிட்டேன். அரசியல் எல்லாம் ஒன்றுமே இல்லை, மனிதனின் வாழ்க்கையை இலக்கியம் பேசுகிறது, அதை அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது என்று உணர்ந்துகொண்டேன்.
அது ஒரு தொடக்கம். நான் இப்போது வெண்முரசு வாசிக்கிறேன். இந்த உலகம் எத்தனை நுட்பமானது என்று தெரிந்துகொள்கிறேன். இதிலுள்ள ஆழமும் அழகும் வெளியே வம்பு பேசுபவர்களுக்கு புரியாது என்பதும் புரிகிறது. இது என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிவிட்டது. இன்றைக்கு நான் தீவிரமானவனாகவும் நேர்நிலையான வாழ்க்கைப்பார்வை கொண்டவனாகவும் ஆக இலக்கியம் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருக்கிறது.
செந்திலைப்போலத்தான் நானும் சரஸ்வதி கடாட்சத்துக்கு வழிதவறி வந்து அடைந்தவன்தான். ஆனால் வழிதவறினாலும் வந்துவிட்டேன். வந்து சேரவிடாமல் தடுக்கும் காழ்ப்புகளும் சிறுமைகளும்தான் நம்மைச்சூழ்ந்து நிறைந்திருக்கின்றன. செந்தில்குமாரின் வாசிப்பும் அவருடைய கள்ளமில்லாத சிரிப்பும் மனசை நிறைக்கின்றன. இதெல்லாம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது என்பதே மிகப்பெரிய ஒரு வாக்குறுதி
த.அன்பரசு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
செந்தில்குமார் காணொளி பார்த்தேன். பெரும் மகிழ்வை தந்தது அவரின் பேச்சு. கனவில் இருப்பவரை போல மனதில் அவரின் வாசிப்பை மீள் மீள நிகழ்த்திக் கொண்டு பேசுகிறார், கள்ளமற்ற அவரின் கண்களின் பளிச்சிடல் காட்டுகிறது உங்கள் மீதான அவரின் தூய அன்பையும் பெருமதிப்பையும்.
வாசிப்பில் அவரின் அகமொழி மேம்பட்டிருப்பது ’’சங்கறுத்து ரத்தம் கொடுப்பேனென்றல்ல , ’குருதிப்பலி’ என்பதில் தெரிகிறது.. தொடர் வாசிப்பில் நம்மை அறியாமலேயே அகம் கூர் கொண்டு விடும் என்று சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தீர்கள், அதுவே முன்னேறுதல் என்றும். இதோ செந்தில் வந்து நிற்கிறார்.
மிக எளிய குடும்பங்களை சேர்ந்த கிராமத்து மாணவர்கள் கற்கும் எங்கள் கல்லூரியில் முழுக்க ஆங்கிலத்தில் கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு துவக்க காலங்களில் எதுவும் புரியாது என்பதால் முதல் இரண்டு வருடங்களில் முதலில் ஆங்கிலத்தில் சொன்ன அதே வரியை தமிழில் சொல்லி மேஜர் சுந்தரராஜன் போல கற்பிக்க வேண்டியிருக்கும். மரபியல் வகுப்புக்களில் ’’குருதி கலப்பு . கொடி வழி’’ என்றெல்லாம் பாடம் நடத்தினேன் என்பதை வகுப்பு முடித்து அறைக்கு திரும்புகையில் தான் எனக்கு நினைவுக்கு வரும்.
பொதுவாக புதிய வாசகர்கள் எழுதும் கடிதம் உங்கள் தளத்தில் வெளிவருகையில் எப்படியும் ஒரு துளி பொறாமை எனக்குள் வந்து விடும் அப்படி அல்லாது இவர் மீது பெரும் பிரியம் உண்டாகி இருக்கிறது. இவரைக் குறித்து நீங்கள் எழுதி இருக்கும் இன்றைய பதிவில் செந்தில் குமார் என்னும் பெயருக்குள்ளே லோகமாதேவி உள்ளிட்ட பல நூறு வாசகர்களின் பெயர்களும் கலந்திருக்கிறது.
சென்னைக்கு போனால் செந்தில் குமாரை பார்க்கனும் என்றல்ல, செந்தில்குமாரை பார்க்க வென்றே சென்னை செல்ல வெண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
லோகமாதேவி