முன்னிலை மயக்கம்

சதீஷ்குமார் சீனிவாசன்

கவிதை என்பது பொருள்மயக்கம் வழியாக பொருளுணர்த்தும் ஒரு கலை. பொருள் என நாம் எண்ணுவது ஒரு நிலைப்புள்ளி. அதை எண்ணியிராச் சொற்கூட்டின் வழியாகக் கவிதை அசைக்கிறது. ஜப்பானில் ஒரு கலையைக் கண்டேன். ஒரு சிறு களிமண் சிற்பம். அதைத் தலைகீழாக திருப்பி வைத்தால் மற்றொன்று.

பொருள்மயக்கம் கவிதையில் அடிக்கடி நிகழும் புள்ளிகளில் ஒன்று முன்னிலை. ‘நீ’ என்றும் ‘உன்’ என்றும் கவிதை சொல்வது எவரை? உலகில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகளை காதல்கவிதைகளாக வாசிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. அத்தனை காதல்கவிதைகளையும் பக்திக் கவிதையாகவும் வாசிக்கமுடியும். அனைத்திலும் உள்ள இந்த ‘நீ’ தன்னை உருவழித்து உருவாக்கிக்கொண்டே தழலாடுகிறது.

அது தன்னை நிரப்பும் எதிர்பாலினம் ஆக இருக்கலாம். தன்னை உள்ளடக்கிய பெருவெளியாக, முழுமையாக இருக்கலாம். அல்லது தானேயாக இருக்கலாம். அந்த நீயை எளிதாக வரையறை செய்யாமலிருக்கும் வாசகன் கவிதையில் மேலும் மேலும் எதையோ அடைந்துகொண்டிருக்கிறான்.

சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகள்:

அழைக்கும் தீ

காற்றில் அலையும்
ஒரு சுடர்போல் தீண்டு என ஏங்குகிறாய்
தீண்டிவிட்டு விலக முடிந்த
தீயா இதுவென
யோசித்தவன்
குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்
அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்
சுடர் அணையும்வரை
அத்தனை வெளிச்சம்
இருளென்ற ஒன்று
இல்லவே இல்லை என்பது மாதிரி

*

இந்தக் கவிதையை உடனடியாக ஒரு காதல்கவிதையாக வாசிக்கவே இன்று நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டிலென்றால் பக்திக்கவிதையாக வாசிக்கப்பட்டிருக்கலாம். இரண்டையும் ரத்துசெய்துவிட்டு தன்னையோ தானல்லாத பிறிதொன்றையோ அந்த  ‘நீ’யில் நிறுத்தி பார்க்கலாம். மெல்லவந்து தொடும் சுடர். இருளிலா வெளிநோக்கி ஈர்க்கும் விசை.

தளும்பும் சொல்

அவலமான சொற்கூட்டத்தில்
நாலைந்தை பொறுக்கி
உடைத்து உடைத்து
ஒரு அற்புத சொற்றொடரை
உருவாக்கிவிட்டேன்
நீர்க்குமிழிபோல அந்தச் சொற்றொடர்
பழைய ஸ்திதிக்கு உடைந்துபோகத் தளும்புகிறது
நீ அதை சட்டென புரிந்துகொள்
அல்லது
எதிலாவது இப்போது
குறிப்பெடுத்து வை
ஏனெனில் மீண்டுமொருமுறை
அதை என்னால் சொல்ல முடியாமல் போய்விடலாம்
நீயும் அதை புரிந்துகொள்ளும்
புலனை இழந்துவிடலாம்
அந்த அற்புத சொற்றொடர்
உடைந்துபோக
எப்படி தளும்பி நிற்கிறது பார்.

*

எவர்முன் தளும்பிச் சொட்டிவிட்ட சொல் அது? காலவெளியென்றான ஒன்றிடமா? கண்முன் எழுந்த ஒருத்தியிடமா? அல்லது தனக்குத்தானேயா?

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

பிறிதொன்று கூறல்

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது – வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைபயிற்சிகளில் நான்…