அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
வண்ணக்கடலில் இருக்கிறேன். காளாத்தி குகையில் இடநெறி சிவப்படிவர்கள் பலர் வெறிகொண்டு சூலம் ஏறினர். இளநாகனின் அச்சம் இன்று என்னிடமும் சற்று இருக்கிறது.
”இளைஞரே காமம், குரோதம், மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது, மோகமோ புறவுலகைச் சாரந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிரைந்திருப்பது குரோதமேயாகும்”
அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பான அது துரியோதனனைப் பற்றுகிறது. அவனிடம் இருந்து மற்ற கௌரவர்கள் அனைவரிடமும் பற்றுகிறது. விருகோதரனாகிய பீமனை அச்சம் கொள்ளச்செய்கிறது. எதைக்கொண்டு குரோதத்தை எதிர்கொள்வது? அன்பைக் கொண்டு என்பது இங்கு அபத்தம்தான். தர்ம-அர்த்த-காமம் – இன்னொரு ஆன்மாவைச் சார்ந்த காமம், புறவுலகைச் சார்ந்த அர்த்தம் இரண்டும் தவிர்த்து தர்மத்தை குரோதத்தின் எதிர்நிறுத்தும் விளையாட்டு இங்கு துவங்குகிறது. தர்மம் தானும் குரோதம் கொள்ளாமல் குரோதத்தை எதிர்கொள்ள இயலாது. குரோதமும் பொய்யாகவேனும் தனக்கான தர்மத்தைக் கற்பித்துக் கொள்ளாமல் தர்மத்தை எதிர்கொள்ள இயலாது.
இன்றும் பிறவற்றை அழித்து தம் அதிகாரத்தை உலகில் நிறைத்துப்பரவத் துடிக்கும் அரசியல், அடிப்படைவாத வெறி என எல்லாப்பக்கமும் இயக்கும் விசை குரோதம் தானே? எல்லாத் தரப்பிலும் குரோதம் உண்மையாகவே இருக்கிறது ஆனால் எல்லாத் தரப்பின் தர்மத்தின் உண்மைத்தன்மையை யார் உறுதிசெய்வது?
உண்மையுள்ள குரோதங்கள் மோதட்டும் அல்லது கூட்டுத்தற்கொலை செய்துகொள்ளட்டும் உண்மையுள்ள தர்மம் எது என்பதை விண்ணாளும் அப்பேராற்றல் எஞ்ச எடுத்து நிறுத்தட்டும்.
உலக நிகழ்வுகளுக்கு எங்காவது எவ்வாறாவது (அது ஒருபோதும் எவ்வகையிலும் பயன்தரப்போவதில்லை என்றபோதும்) எதிர்வினை ஆற்றவேண்டும் என்ற பொருளற்ற மனத்தவிப்பை விலக்கிநிறுத்தி சாதகம் ஆகிறது வெண்முரசு.
”இருளாகவும் ஒளியாகவும் இருப்பவனை எவ்வழியில் அறிந்தாலும் விடுதலையே என்கிறார்கள் இடநெறியினர்”
மகாகுரோதரூபனிடம் அல்லாமல் யாரிடம் இருந்து மனிதர்கள் குரோதம் பெற்றுக்கொள்ளமுடியும்? எரிச்சலுள்ள தேவனிடம் அல்லாமல் யாரிடம் மனிதர்கள் எரிச்சல் பெற்றுக்கொள்ளமுடியும்?
ஜார்ஜ் குர்ட்ஜிப் கூட சொல்கிறாரே “Humanity is the earth’s nerve-endings through which planetary vibrations are received for transmission”
என்னமோ இந்த குரோதம் -அதிகார அரசியல் மதவெறி எல்லாம் மனிதரின் சொந்த திறன் போல ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? ஆடல்வல்லானுக்குத் தெரியாதா எப்படி ஆட்டத்தை மாற்றுவது என்று? எப்போது ஆட்டத்தை நிறுத்துவது என்று?
அன்புடன்
விக்ரம்
கோவை