விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்…

கடந்த ஆகஸ்ட் 4 முதல் 15ஆம் தேதி வரை திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் நிகழ்ந்த விபாசனா தியானமுகாமில் கலந்து கொண்டேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் இதேபோல் ஒரு பத்து நாள் விபாசனா தியான முகாமில் சென்னையில் கலந்துகொண்டார். முகாம் பற்றிய நூலொன்றை எனக்கு பரிசளித்து என்னையும் கலந்து கொள்ள சொன்னார்.

ஓஷோ தன்னுடைய உரையில் நிறைய இடங்களில் விபாசனா பற்றி விரிவாகப் பேசியுள்ளார். பூனாவில் ஓஷோ அவர்களின் சமாதி அமைந்துள்ள இடத்தில் விபாசனா தியானம் கற்றுத்தரப்படும். ஓஷோ சமாதியில் முதல் முறை செய்தேன்.

அதன் பின்பு கொடைக்கானல் பெருமாள் மலையில் அமைந்துள்ள போதி ஜென்டோ என்ற ஜப்பானிய ஜென் மரபில் வந்த பவுத்தமடாலயத்தில் இரண்டாம் முறை கலந்து கொண்டேன். தாய்லாந்து பின்னணி கொண்ட அமைப்பில் மூன்றாம் முறை செய்திருக்கிறேன்.

மேற்கண்டவற்றில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்டது மரியாதைக்குரிய அமரர் திரு சத்யநாராயண கோயங்கா அவர்களால் உலகெங்கும் நூற்றுக்கும் மேலான நாடுகளில் பல நூறு மையங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விருப்ப நன்கொடையின் அடிப்படையில் மிக தர்மமான முறையில் நடைபெற்றுவரும் விபாசனா தியானம்.

திரு ச நா கோயங்கா அவர்கள் பர்மாவின் பெரும் செல்வாக்கு பெற்ற ஹிந்து மதத்தின் மேல் பெரும் பற்றுக் கொண்ட தொழிலதிபர் குடும்பத்தில் 1924ல் பிறந்தவர். பர்மாவில் ஒரு இந்தியர் வகிக்க சாத்தியமான அனைத்து உயர் பதவிகளும் வகித்தவர்.

கோயங்கா

மூன்று விஷயங்களுக்காக தான் பெரிதும் அதிர்ஷ்டம் செய்தவன் என்று அவர் ஒரு உரையில் குறிப்பிடுகிறார்.

அ. வெற்றிகரமான தொழிலதிபராக செல்வத்தில் திளைத்தது.

ஆ. உலகின் அனைத்து முன்னணி நாடுகளிலும் உள்ள பெரிய மருத்துவமனைகளில் புகழ்பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் தனக்கு குணமாகாத ஒற்றை தலைவலி.

இ. தம்மப்பாதை மற்றும் தன்னுடைய குரு சாயாஜீ ஊ ப கின் அவர்களை கண்டு கொண்டது.

பெரும்பணம் ஈட்டுவதன் மூலம் வெற்றிகளின் மூலம் புகழும் அதிகாரமும் அடைவதன் மூலம் மகிழ்ச்சியாக துன்பமின்றி இருக்க முடியும் என்று பெரும்பாலோனோர் நம்புகிறார்கள். அவ்வாறான எத்தனையோ பேரை தன் வாழ்வில் அனுதினமும் சந்திக்க நேர்ந்ததோடு தானும் அவ்வாறான ஒருவன் என்பதாலும் அவற்றால் துக்கநிவர்த்திக்கு வழி இல்லை என்பதை திட்டவட்டமாக கண்டுகொண்டதாக கூறுகிறார்.

ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, இந்தியா, இங்கிலாந்து, பர்மா என பல்வேறு நாடுகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத தலைவலியே எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைய வைத்து ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில் அவரின் குருவை சந்திக்க உந்தித் தள்ளி இருக்கிறது.

அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இந்தியாவிலிருந்து உலகெங்கிலும் அனுப்பப்பட்ட புத்த துறவிகளில் இருவர் மூலமாக பர்மாவில் புத்த மதம் வேரூன்றிய தாக கூறப்படுகிறது. அந்த குரு மரபின் தொடர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த புகழ்பெற்ற பர்மிய துறவி லேடி ஸாயாதாவ்(ledi sayadaw) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஸாயா யூ தேட் இவரின் மாணவர் ஸாயா ஊ தேட் இவரின் மாணவர் தான் திரு கோயங்கா அவர்களின் ஆசிரியர் ஸாயாஜி ஊ பி கின் (sayagyi u ba khin) நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் பாலி மொழி சுவடிகளிலிருந்து தொன்மை மாறாத இந்த விபாசனா தியான பயிற்சி முறைகள் அவர் குரு மூலமாக அவருக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது.

கோயங்கா அவர்களின் குரு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த பர்மாவின் முதல் தலைமை கணக்காளராக இருந்திருக்கிறார். ஊழல் மலிந்து இருந்த அவருடைய அலுவலகத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழித்து அலுவலகத்திலேயே தியான கூடத்தை நிறுவி சக பணியாளர்கள் அனைவரையும் தியானிகளாக மாற்றி உள்ளார்.

அவரின் தூய்மை மற்றும் செயல் திறனால் கவரப்பெற்ற பர்மாவின் பிரதமர் பிற நான்கு துறைகளை அவரே தலைமை ஏற்று நடத்துமாறு கூறியிருக்கிறார். நீங்கள் ஆத்மானந்தர் பற்றி எழுதியவற்றை நினைத்துக் கொண்டேன்.

ச நா கோயங்கா அவர்களும் ஒருபோதும் தன்னை அரஹந்தராகவோ குருவாகவோ முன்வைத்ததில்லை. தியானம் கற்பிக்கும் ஆசிரியராகவே தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வார். மனைவியோடு வந்திருந்தே முகாம்களை நடத்துவார். முதன்மையான பௌத்த நாடுகளின் தலைமை குருக்களாக இருக்கும் பல பௌத்த பிக்குகளுக்கு தியானம் கற்பித்து உள்ளார்.

பல ஆயிரம் ஆசிரியர்களை உருவாக்கி கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த பாதையை திறந்து வைத்துள்ளார்.

கற்க வரும் மாணவர் முற்றிலும் இலவசமாகவே இதை கற்க வேண்டும் என்ற கொள்கையில் இன்றுவரை மாறாது நடக்கின்றன இவரின் அமைப்புகள். வேண்டுமானால் நன்கொடை வழங்கலாம் அது அடுத்து வரும் முகாம்கள் நடத்த பயன்படுத்தப்படும். விலைமதிப்பற்ற தம்மத்திற்கு எந்த விலையும் நிர்ணயம் செய்யக் கூடாது என்பது கோயங்கா அவர்களின் எண்ணம்.

பயிற்சி முகாம் பற்றிய சில குறிப்புகள்.

முதல் நாள் தொடங்கி நிறைவு நாள் வரை முழு மௌனம்.

காலை 4 மணிக்கு பலமாக மணி அடித்து எழுப்பி விடுவார்கள் பின்பு இரவு 9 மணி வரை சிறு சிறு இடைவெளிகளுடன் கூடிய  இரண்டு மணி நேரம் வரை நீளும் அமர்வுகள்.

மிக எளிய தென்னிந்திய சைவ உணவு வகைகள் மசாலாக்கள் காரம் எண்ணெய் என எதுவுமே இருக்காது. இரவுணவு மாலை 5 மணிக்கே வழங்கப்பட்டுவிடும்.

முழு முகாமிலும் பேச எழுத படிக்க மந்திர உச்சாடனங்கள் உடற்பயிற்சிகள் ஆசனங்கள் நடைப்பயிற்சி என எதற்குமே அனுமதி இல்லை.

கண்களை மூடி முதுகு கழுத்து வளையாமல் கைகால்களை அசைக்காமல் நாளொன்றுக்கு 10 மணி நேரங்கள் அமர்ந்திருக்க வேண்டும் முதல் மூன்றரை நாட்கள் மூச்சையும் அதன் பின்பு உடல் உணர்ச்சிகளையும் கவனிக்க வேண்டும்.

மனம் அசைந்தால் உடல் அசையும் உடல் அசைந்தால் மனம் அசையும் இரண்டில் எது அசைந்தாலும் மூச்சு சலனத்திற்குள்ளாகும். மூச்சினை தொடர்ந்து கவனிக்க கவனிக்க சலனம் குறைந்து ஸ்திரப்படும். மனது எவ்வளவு உறுதி பெறுகிறதோ அவ்வளவு தூய்மையடையும் எவ்வளவு தூய்மை அடைகிறதோ அவ்வளவு விடுதலையும் பெரும் இதுதான் இத்தியானத்தின் அடிப்படை.

2015 ல் வயநாட்டு ஆசிரம வாழ்க்கையில் இருந்து வெளியேறிய பின் அதிதீவிர சாதகங்கள் தொடர் மௌனங்கள் என எதிலுமே நான் பெரிதாக ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக நிறைய வாசித்தல் குறைந்த இடைவெளிகளில் தொடர் பயணங்கள் மலையேற்றங்கள் கூடவே கட்டற்ற சமூக ஊடக பயன்பாடு ஓடிடியில் கொட்டிக்கிடக்கும் படங்கள் வெப்சீரிஸ்கள் என வேறுவிதமாக சென்று கொண்டிருக்கும் எனக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

பத்து நாட்களில் ஒரு நாள் கூட மொபைல் குறித்து எண்ணவில்லை ஏங்கவில்லை. அமர்வுகள் எனக்கு மிகச் சிறப்பாக சென்றன. எவ்வித புதிய சம்ஸ்காரங்களயும் தோற்றுவிக்காமல் அசைவின்றி அமர்ந்திருக்கும் பொழுது உடலின் பழக்க பதிவுகள் மனதில் அழுத்தி வைக்கப்பட்ட பதிவுகள் மேல் மனதிற்கு வருகின்றன. இன்பமானவை துன்பமானவை இன்பதுன்பமற்றவை முழு அமைதி என அவரவரின் முந்தைய கர்மங்களுக்கு ஏற்றவாறு சுருளவிழ்தல் நிகழ்கிறது.

எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது…

என் அகம் எந்த அளவு உங்கள் சொற்களால் நிரம்பி உள்ளது என்பதைக் கண்டு கொண்டேன். திடீரென வெண்முரசில் இருந்து ஒரு வரி இடையிடையே புனைவு களியாட்டு கதைகளில் இருந்து எழுந்து வரும் பாத்திரங்கள். பின்தொடரும் நிழலின்குரல் காடு விஷ்ணுபுரம் என உங்களின் மகத்தான நாவல்களிலிருந்து நினைவுக்கு வரும் சம்பவங்கள். உங்களுடனான நேர் சந்திப்புகளின் போது அந்தத் தருணத்தில் நீங்கள் நிகழ்த்தும் நீண்ட உரையாடல்களில் எனக்குள் எஞ்சியவைகள் என ஒரு மறு கண்டுபிடிப்பு தான் எனக்கு இந்த நாட்கள்.

அடுத்து நான் சொல்லப் போவது மிகையாகத் தோன்றலாம் பலரால் நம்ப முடியாமலும் இருக்கலாம் ஆனால் உண்மையை தான் கூறுகிறேன்… என் மனைவி குழந்தையை விடவும் அதிகமாக என் மனோ விஞ்ஞானமய கோசங்ககளை உங்கள் சொற்கள் நிரம்பியிருக்கின்றன. தியான அறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னுடைய முதல் செயல் ஒரு சில நிமிடங்கள் நின்று  சிறுமலையை பார்ப்பது.

உடனே வெண்முரசில் இருந்து ஒருவரி மின்னிச் செல்லும்

மலை உச்சியின் ஒற்றை மரத்தில் கூடும் தனிமை 

இந்த பத்து நாட்கள் குறியீட்டு ரீதியான துறவறத்தில் சிக்கல் வரும் போதெல்லாம். உங்கள் மூன்றாண்டு கால தேசாந்திர வாழ்க்கையை எண்ணிக்கொள்வேன்.

நீங்கள் எந்த ஒரு உணவையும் பழித்து நான் பார்த்ததே இல்லை. எந்த ஒரு தட்பவெப்ப நிலையையும் குறை கூற மாட்டீர்கள். (ஒரே ஒருமுறை திருநெல்வேலி வெயிலை தாள முடியவில்லை என்று எழுதி இருந்தீர்கள்) பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாம் சென்ற மகாராஷ்டிரா மலர்ப் பள்ளத்தாக்கு பயணத்தில் கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்று அவ்விடத்தை மாறி மாறி குறை கூறிய உடன். ஒரு செண்டி மீட்டருக்குக் குறைவான மிகச் சிறிய பல வண்ண மலர்கள் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் நிறைந்து இருப்பதை சுட்டிக்காட்டி எந்த இடத்திலும் ஒரு அழகு இருக்கும் எதிர்மறை அம்சங்களும் இருக்கும் நாம் சரியானதையே பார்க்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினீர்கள். ஒரு பாடல் எப்படி நன்றாக இல்லாமல் இருக்க முடியும் பாடல் பாடல் தான் என்று கூறியிருக்கிறீர்கள். உடையின் பொருட்டோ உணவு பழக்கத்தின் பொருட்டோ ஒருவர் பின்பற்றும் பண்பாட்டின் பொருட்டோ எதன் பொருட்டும் ஒரு மனிதனிடம் உயர்வு தாழ்வு காணக்கூடாது என்று கற்பித்து இருக்கிறீர்கள். மிக சமீபத்தில் எந்த ஒரு மனிதனிடம் இருந்து வரும் மனித வாசனையும் நன்றாகத்தான் இருக்கும் என்று கூறினீர்கள். உங்கள் ஆசிரியர்கள் உங்கள் தனிப்பட்ட வாசிப்பு தேடல் மூன்றாண்டு துறவு வாழ்க்கை என எங்கெங்கெல்லாம் நீங்கள் மேற்கண்டவற்றை பெற்றுக் கொண்டீர்கள் என்பதை எனக்கு அங்கே உணர முடிந்தது.

மேலும் மேலும் நுணுகி நுணுகி செல்ல செல்ல ஏன் உங்கள் சொற்கள் இவ்வாறு எனதாழத்தை தைத்துள்ளது என்பது சற்று விளங்கியது. ஒரு தருணத்தை ஒரு காட்சியை ஒரு மனிதரை ஒரு மனநிலையை உங்களுடையது எதையும் கலக்காமல் உள்ளது உள்ளபடி உங்களால் பார்க்க முடிகிறது. துல்லியமாக நிகழும் அந்த பதிவினை ஆகச்சிறந்த சொற்களைக் கொண்டு இனிய சந்தம் நிரம்பிய சொற்றொடர்களாக ஆக்குகிறீர்கள். கவித்துவமும் அழகியலும் சேர்த்து வரலாற்றுணர்வுடன் தத்துவ சாற்றில் நனைத்து நவீன அறிவியல் கண்கொண்டு நகைச்சுவையை நிரப்பி கூர்மையாக உங்கள் அனைத்து செயல்பாடுகளிலும் உங்களால் சீரோடு தீவிரமாக கொண்டுவர முடிகிறது.

மீண்டும் வெண்முரசின் வரிதான்…

ஒன்றுக்காக மறுபிறப்பு கொள்ளும் மானுடர்கள் அதற்காக மட்டுமே வாழ்கிறார்கள் அவர்கள் வில்லில் இருந்து கிளம்பி விட்ட அம்புகள்

தேனி மதுரை திண்டுக்கல் மாவட்டங்களுக்கென சில பிரத்தியேக குணங்களை கவனித்துள்ளேன்.

போஸ்டர் பிளக்ஸ் கலாச்சாரம் அரசியல்வாதிகளுக்கு நடிகர்களுக்கு என்று மட்டுமல்ல சாதாரணன் கூட தனக்குத்தானே நிறைய போஸ்டர்களை அடித்து ஊரெங்கும் ஒட்டிக் கொள்வான். அவற்றில் ஒன்று ஸ்பீக்கர் கலாச்சாரம்.

செட்டியப்பட்டி என்ற சிறு கிராமத்தில் இருந்து மலையடிவாரத்திற்கு அருகில் அக்கம் பக்கம் ஒரு சில வீடுகளே உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் தியானகூடம் அமைந்துள்ளது.

காலை ஐந்து மணிக்கு பெரும் சத்தத்தோடு ஸ்பீக்கர்களில் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். எல் ஆர் ஈஸ்வரி சீர்காழி கோவிந்தராஜன் டிஎம்எஸ் என ஆறு ஆறரை வரை பலவிதமான பக்தி பாடல்கள்.

அதன் பின்பு எண்பது தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட ரகமான பாடல்களாக கேசட்டில் பதிவு செய்வார்கள். நிலவு என தொடங்கும் பாடல்கள் ஒரே நடிகரின் பாடல்கள் ஒரு தலை காதல் பாடல்கள் சோகப் பாடல்கள் என. அதேபோன்ற வரிசைக்கிரமமாக பல மணி நேரங்கள் பாடல்கள் நீளும்.

அதிகாலை மற்றும் காலை நேரம் என்ற வார்த்தையில் தொடங்கும் இத்தனை பாடல்கள் தமிழில் உள்ளதா என்பதையே அங்குதான் நான் கண்டு கொண்டேன்.

அதிலும் ஒரு கண்டடைதல் எனக்கு நிகழ்ந்தது.

தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். இங்கே வகைதொகையின்றி நாள்தோறும் பல மணி நேரம் ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் சில பாடல்கள் பிடிக்கும் சில பிடிக்காது சில பாடல்கள் பற்றி கருத்து இல்லை சில பாடல்கள் என் கவனத்திற்கு வராமல் முதல் முறை அன்று கேட்டதாக இருக்கும்.

ஆனால் இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக் கோர்வைகள் என் உச்சி முதல் பாதம் வரை நாடி நரம்புகளில் எல்லாம் நிறைந்து இருப்பதை கண்டு கொண்டேன். கிட்டத்தட்ட அவரின் எந்த ஒரு பாடலின் இடையில் அடுத்தடுத்து வரும் ஒரு சிறு இசைக்கருவியின் இசை துணுக்கும் எனக்கு தெரிந்திருக்காமல் இருக்க வில்லை. அதை நான் ரசிக்கிறேன் விரும்புகிறேன் என்பதை எல்லாம் கடந்து என் அகமாக என் அகத்தின் இசை மொழியாக அவரின் இசை இருக்கிறது. இசைஞானியின் இசை எனக்கு மகிழ்ச்சியை தருவதோ ஆசுவாசம் தருவதோ இல்லை என் இருப்பின் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது இத்தனை ஆண்டுகளில். இனி மீதமிருக்கும் வாழ்க்கையில் ஒரு முறைகூட அவரின் பாடலை இசையை கேட்கவில்லை என்றாலும் எனக்கு ஒரு குறையும் இல்லை எனக்குள்ளேயே அனைத்தையும் என் மீண்டும் மீண்டும் மீட்டிக்கொள்ள முடியும்…

உங்கள் வாசகர்களுக்கு உங்கள் சொல் எப்படியோ பெரும்பான்மை தமிழர்களுக்கு அவரின் இசை அப்படி…

7,8 நாட்களுக்கு பின்பு 70 80 மணி நேர தொடர் அமர்வுகள் கடந்தபின் ஒரு விதமான முயற்சியற்ற முயற்சியில் தியானம் தானாக நிகழ தொடங்கியது… எவ்வித இறுக்கமும் இன்றி எல்லாவற்றிலும் கவனத்தோடு செயல்பட முடிந்தது.

ஒன்பது பத்தாம் நாளில் எல்லாம் மேலும் துலக்கமாக இருந்தது.

தம்மப் பாதை சத்யநாராயண கோயங்கா மற்றும் அவர்களின் குரு மரபு உத்தேசிப்பது எதை நம்மிடம் கேட்பது எதை நான் செய்ய வேண்டியது எது செய்து கொண்டிருப்பது எது அதெல்லாம் மேலும் விளங்கியது.

புத்தரால் அநித்யம் துக்கம் அநாத்மா போன்ற பேசு பேசுபொருட்களை வைத்து எழுதப்பட்ட காவியத்தின் பெயர்தான் தம்மமோ… என்ற எண்ணம் வந்தவுடன் அகம்மலர்ந்து சிரித்தேன்.

உடனே நிழல் காகம் கதையிலிருந்து இவ்வரி மின்னியது

நாங்கள் அந்த விசித்திரமான கதையால் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆளாகியிருந்தோம். அசிதர் சொன்னார் “கலை என்பது ஒரு நடிப்புதானே? அதிலுள்ளவை எதுவும் மெய் அல்ல. நிழல்நாய் கடிப்பதில்லை. ஆனால் அதனுடன் விளையாடலாம்.”

அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமி “ஆம், துறவு என்பதும் வாழ்க்கையை வேறு ஒருவகையில் நடிப்பதுதான்” என்றபின் எழுந்து சென்று டீ கொதித்த அடுப்பில் இன்னொரு பீடியை பற்ற வைத்துக்கொண்டார்.

நித்யா சொல்லி முடித்தார் “பித்ருகடன்கள் இல்லாத ஒரு துறவியிடம் காகம் என்ன சொல்லும் என்று அன்று நான் அசிதரிடம் கேட்டேன். ’நான் பித்ருவே அல்ல, இவர்கள் நம்புகிறார்கள் ஆகவே சும்மா நடிக்கிறேன்’ என்று சொல்லும் என்று சிரித்தார். 

காவியகர்த்தர்களின் உணர்வால் உணரப்படுவது இவ்வுலகு… காவியகர்த்தர் களின் கண்களால் பார்க்கப்படுவது காட்சிகள்… காவியகர்த்தர்களின் சொற்களால் பேசப்படுபவை எளிய மாந்தரின் உரையாடல்கள்…

இங்கே புத்தரின் சிலை கூட கிடையாது எவ்வித படங்களும் கிடையாது. ஆசிரியர் சத்யநாராயண கோயங்கா அவர்களின் படங்களுமே எங்குமில்லை. தத்துவம் கூட மிக விரிவாக பேசப்படுவதில்லை. பயிற்சி பயிற்சி பயிற்சி மட்டுமே.

ஆசிரியர் கோயங்கா ஜி மிக நன்றாக பேசக்கூடியவர் அவருடைய உரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தன்னுடைய குருவை சந்திக்கும் வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் தத்துவ ஆன்மீக உரைகளை ஆற்றியதாகவும். அதில் மெய்யான எந்த அறிதலும் இல்லாமல் ஆன்மா பற்றியும் ஸ்திதபிரஞ்ஞை பற்றியுமெல்லாம் பேசியுள்ளேன்.

நம்முடைய உடல் மன எல்லைக்குள் அனுபவமாகாத எந்த ஒன்றையும் நம்ப வேண்டாம் என்கிறார்.

பேசாதே செய்து அதுவாகிவிடுஎன்பதை. ஒரு தொழிலதிபருக்கே உரிய  கராரான கூரிய மொழியில் குறைந்த சொற்களில் தீவிரமாக மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருப்பார் பயிற்சியின்போது.

கோயங்கா அவர்களின் குரல் மிகவும் தாழ்ந்த ஸ்ருதி கொண்டது கனமானது பேசுகையில் கம்பீரமாக இருக்கும்  அவர் குரல் தம்மபத கீர்த்தனைகளை  பாடும்போது முற்றிலும் வேறு ஒரு அனுபவத்தை தரும்.

புத்தர் துவக்கி வைத்த தர்மசக்கரம் தொடர்ந்து சுழல்கிறது இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப  திரு சத்திய நாராயண கோயங்காஜீ

அவர்களும் சுழலச் செய்கிறார்.

என்னால் ஒன்றை மிக உறுதியாக கூற முடியும் தன்னுடைய தகுதியை விடவும் குறைவான புகழும் அங்கீகாரமும் பெற்றவர் கோயங்கா அவர்கள்.வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் பாரதப்பெருநிலத்தின் ஒளிமிகுந்த நட்சத்திரங்களில் ஒருவர்  கோயங்கா…

செயல் வீரர் செய்தும் வாழ்ந்தும் காட்டிய மாமனிதர் அவர் பாதங்களுக்கு என் வணக்கங்கள்.

பயிற்சி நாட்களில் உணவு சார்ந்து கடும் துன்பத்திற்கு உள்ளானேன். அப்பா நெடுங்காலம் உணவகம் வைத்திருந்தார் விதவிதமாக விரும்பிய நேரத்தில் உண்டு பழகியவன் நான். பத்தாண்டுகளுக்கு மேல் மூன்று இயற்கை அங்காடிகளை நான் நடத்தி வந்தேன் ஒரு தருணத்திலும் தரமான சுவையான உணவிற்கு பஞ்சமே இருந்ததில்லை.அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக முதல்தர புரதமும் உயர்தர கொழுப்பும் நிரம்பிய உணவுகளை நன்கு மசாலா சேர்த்து ருசியாக சாப்பிட்டு வருகிறேன்.

முகாமில் இரண்டாம் நாளும் ஆறாம் நாளும் மிக முக்கியமான சவால் நிறைந்த நாட்கள் என்று கூறினார்கள். இவ்விரண்டு கண்டத்தை தாண்டிவிட்டால் எல்லாம் சுகமாக அமையும்.

முகாம் துவங்குவதற்கு சற்றுமுன்பு இந்த ராணுவ விதிகளைக் கண்டு அஞ்சி ஒருவர் சென்று விட்டார், இரண்டாம் நாள் இன்னொருவர் சென்றுவிட்டார் ஆறாம் நாள் மேலும் சிலர் சென்றனர்.. சுவர் தாண்டி குதித்து செல்லும் எல்லைவரை ஒரு பெண் சென்றார்.

வழங்கப்படும் உணவில் ஓரளவு எனக்குப் பிடித்தவற்றை ஏதோ உண்டு சமாளித்து வந்தேன் ஆறாம் நாள் நன்றாக உண்ண வேண்டும் என்ற ஆர்வம் உடல் முழுவதும் நிரம்பி இருந்தது மாலை 5 மணிக்கு ஆர்வத்தோடு உணவுக் கூடம் சென்றேன் ஆறு நாட்களில் வழங்கப்பட்டதிலேயே மிக மிக சுமாரான காரம் உப்பு அற்ற ஒரு உணவு கிட்டத்தட்ட மிகசுமாராண வெறும் இட்லி என்று சொல்லலாம். கொஞ்சமாக தட்டில் எடுத்து வந்து எப்படியாவது சமாளித்து உண்டு விட முயன்றேன். தாங்கமுடியாத உணர்ச்சியில் உணவு பரிமாறுபவர் இடம் சென்று சிறிது ஊறுகாய் கேட்டேன் மதியத்திற்கு மட்டுமே ஊறுகாய் இப்போது கிடையாது என சற்று அலட்சியமாக பதில் கூறினார் ஒரு நொடி நிதானத்தால் கையிலிருந்த தட்டைக் கொண்டு அவர் மண்டையை உடைக்காமல் தவிர்த்தேன். எந்த வன்முறையிலும் இறங்கவில்லை எனினும் கடும் நிலைகொள்ளாமை இருந்தது. காரணமற்ற எரிச்சல் நடுக்கம் கூடிக்கொண்டே சென்றது. உண்மையில் என் இயல்பில் நான் வன்முறையாளனோ இது போன்று செயல்படும்  ஆளோ இல்லை என் இயல்புக்கு முற்றிலும் மாறான வெளிப்பாடிது.

இந்த முகாமை நடத்திய பூனாவை சேர்ந்த இளம் ஆசிரியர் திரு ஜிதேந்திரா அவர்களிடம் சென்று நடந்ததை என் உணர்வுகளை உள்ளபடியே தெரிவித்தேன். உன்னை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் உனக்கு இந்த முறை நன்றாக வேலை செய்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள் இது தூய்மையாக்கத்தின் ஒரு பகுதிதான் என்று கூறினார்.மறுநாள் அனைத்தும் சரியானது.

நிகழ்வு முடிந்து வீடு வருகையில் எதையோ சாதித்த உணர்வை விடவும் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி இருந்தது.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

மு.கதிர் முருகன்

கோவை

[கதிர்முருகன் திருப்பூரைச் சேர்ந்தவர். கோவையில் வாழ்கிறார். சென்ற பல ஆண்டுகளாக ஆன்மிகப்பாதையில் பலவகையான பயிற்சிகள் வழியாகச் சென்றுகொண்டிருப்பவர். தியானப்பயிற்சியாளர்.

தொடர்புக்கு : bodhiyogaandhealingcenter@gmail.com, 9442306633  ]

அன்புள்ள கதிர்,

இந்த விபாசனா பயிற்சியைப்பற்றியும் திரு கோயங்கா அவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். விபாசனாவை உலகமெங்கும் கொண்டுசென்று சேர்த்தது அவர்களின் அமைப்புதான்.

விபாசனா பௌத்த முறை. ஆனால் அதன் வேறுவடிவங்கள் அத்வைத மரபிலும் உள்ளன. பிற மரபுகளில் அவை இருக்கமுடியாது, கொள்கையளவில் அவை விபாசனாவுக்கு எதிரானவை. ’அகம்’ என தன்னில் குவியும் தரிசனத்தின் செயல்வடிவமே விபாசனா. அங்கே ‘கடவுள்’ உடனிருந்தால் விபாசனா இயல்வது அல்ல.

இந்தப் பயிற்சிமுறை பலருக்கும் உதவியாக இருந்திருப்பதைச் சொல்லிக்கேட்டிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை வைத்து நானறிந்த முறைமையில் உள்ள சில வேறுபாடுகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

அ. தத்துவப் பயிற்சி

விபாசனா என்பது முதன்மையாகக் தன்னைக் கவனிப்பது, தன்னில் குவிவது. பிற தியானமுறைகள் தனக்கு அப்பால் ஒன்றில் குவிவதையே கற்பிக்கின்றன. தனக்கு வெளியே உள்ள ‘அது’ அந்த தியான முறையில் மந்திரமாக, ஒளிப்புள்ளியாக, சிலையுருவமாக, அடையாள எழுத்தாக இருக்கலாம். விபாசனாவில் அப்படி ஏதும் இல்லை.

அவ்வண்ணம் தன்னில் குவியும் பயிற்சி தனக்கும் தன் பிரக்ஞைக்கும் நடுவே ஒரு பூதக்கண்ணாடியை வைப்பதுபோல. பலரை அது அதிர்ச்சி அடையச் செய்யலாம், குழப்பலாம். சிலருக்கு மிக எதிர்மறையான விளைவுகளையும் உருவாக்கலாம்.

ஆகவே முன்னரே முறையான தத்துவக் கல்வியின் வழியாக தன் உள்ளத்தின் ஆழங்கள் பற்றியும், அவை செயல்படும் விதம் பற்றியும் ஒரு புரிதலை அடைந்தவர்களே விபாசனாவைச் செய்யமுடியும். அது அனைவருக்கும் உரியது அல்ல. அவ்வாறு எங்கும் இருந்தது இல்லை. அது பிக்‌ஷுக்களுக்கும் ஆசிரம வாழ்க்கையில் வேதாந்தக்கல்வி பெற்றவர்களுக்கும் மட்டுமே கற்பிக்கப்பட்டது முன்பெல்லாம்.

அகம் என்பதன் படிநிலைகளை பௌத்தமோ, வேதாந்தமோ முறையாகச் சொல்லிக்கொடுத்தபின் நிகழவேண்டியது விபாசனா. நவீன உளவியலையும் நவீன இலக்கியத்தையும் அதற்குப் பயன்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். நவீன ராக் இசையைக்கூட அதைப்பற்றிய அறிதலுக்காக பயன்படுத்தலாம். அந்த சாதகர் அந்தக் கல்வியை உள்வாங்கியிருக்கிறாரா என அவருடைய ஆசிரியர் கண்காணிக்கவும் வேண்டும்.

ஆ.உடல்நிலைக் கண்காணிப்பு

விபாசனா செய்பவரின் உடல்நிலையை அவரும் அவருக்கு வழிகாட்டுபவரும் முன்னரே கண்காணிக்கவேண்டும். உணவுப்பழக்கத்தை முரட்டுத்தனமாக மாற்றக்கூடாது. ஓரிரு நாட்களுக்கு முன்னரே மெல்ல அந்த மாற்றம் நிகழவேண்டும். உண்ணாவிரதத்திற்கு அளிப்பது போல இனிமா அளிக்கப்படுவதையும் கண்டிருக்கிறேன்.

விபாசனா செய்பவருக்கு குடற்புண், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதிப்பார்கள். அவற்றின் அடிப்படையிலேயே உணவும் உணவின் நேரமும் வகுக்கப்படும். அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே உணவு அல்ல. விபாசனா செய்பவர் தன் உணவை தானே தயாரித்துக்கொள்வதே பொதுவாக உகந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு தயாரிப்பது உணவின்மீதான ஒவ்வாமை, மிகையார்வம் ஆகிய இரண்டையும் இல்லாமலாக்குகிறது என்பது நடைமுறை உண்மை.

உணவை பல அலகுகளாக, குறைந்த அளவில் உண்பது விபாசனாவில் வழக்கம். விபாசனாவில் பசி என்பதற்கே இடமில்லை. பசி இருந்தால் பசி தவிர எதையுமே நினைக்க முடியாது. உணவைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்போம். அது விபாசனா அல்ல.

உடல் இளைப்பது போன்ற இயற்கை மருத்துவ முறைகளிலேயே உடலைப் பட்டினிபோட்டு வருத்துவது உள்ளது. செரிப்பதற்கு கடினமான உணவும் உள்ளத்தை எடுத்துக்கொள்ளும், பசியும் உள்ளத்தை எடுத்துக் கொள்ளும். விபாசனாவின் உணவுக்கட்டுப்பாடு என்பது உடலை முற்றிலும் மறந்து உள்ளத்தில் ஆழ்ந்திருப்பதற்காகவே.

களைப்படையவைக்கும் அளவுக்கு உடலுழைப்பும் அதன் விளைவான நல்ல தூக்கமும் விபாசனாவில் இன்றியமையாதவை. ஏனென்றால் அரைத்தூக்க நிலை விபாசனா அல்ல. அது முழுவிழிப்பு நிலை.

மொத்தத்தில், உடலை வருத்திக்கொண்டு செய்யும்  ஒன்றல்ல விபாசனா. அதில் கட்டாயமே இருக்கலாகாது. நாமேகூட கட்டாயப்படுத்தலாகாது. அப்படி நாமே நிபந்தனை விதித்துக்கொண்டால் அதை முடிப்பதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்போம். அது விபாசனா அல்ல. முடித்தபின் எதையும் அடையமாட்டோம், முடிந்துவிட்டது என்னும் நிம்மதியை தவிர.

ஆகவே முடியவில்லை எனத் தோன்றிய கணமே தானாகவே நிறுத்திவிடவேண்டும். அப்படி நிறுத்திக்கொள்ளலாம் என்னும் நினைப்பே ஒரு விடுதலை. நிறுத்த முடியாது என்னும் தன்னுணர்வு இருந்தால் அதுவே அகப்பதற்றத்தை அளித்துவிடும். அதுவே விபாசனாவை குலைக்கும்.

நானறிந்து எட்டு முறைக்கு மேல் விபாசனாவை நாலைந்து நாட்களில் நிறுத்தியவர்கள் உண்டு. அதெல்லாம் பிழையே அல்ல, இயல்பு. அது பயிற்சியின் படிநிலைதான். ஒருவகையில் விபாசனா என்பது ஒரு பரமபதம்போல. ஏறியிறங்குவது இயல்பானது. பௌத்த நூல்களிலேயே இந்த உவமை உண்டு.

இ. உள்ளப்பயிற்சிகள்

விபாசனாவுக்கான உள்ளப்பயிற்சிகள் பல உண்டு. அவை முன்னரே அளிக்கப்பட வேண்டும். நூல்களை பயில்வது, எழுதுவது, தியானம் செய்வது என பல அதிலுண்டு. அவை அமைப்புகளுக்கு ஏற்ப மாறுபடுபவை. பொதுவாக கொந்தளிப்பும் உளச்சோர்வும் அளிக்கும் எவையும் செய்யப்படலாகாது என்பது நெறி

ஆனால் இரண்டு விஷயங்களைக் கவனிப்பார்கள். விபாசனா செய்பவர் சோர்வுநோய்க் கூறுகள் [ஹைப்பர் டிப்ரஷன்] மற்றும் உளப்பிளவுக்கூறுகள் [ஸ்கிஸோஃப்ரினியா] கொண்டிருக்கலாகாது.

தனக்கு அவை இருப்பது விபாசனாவில் இருக்கும் சாதகனுக்கு தெரியாது. அவனைக் கூர்ந்து கவனிக்கும் ஆசிரியருக்குத்தான் தெரியவரும். ஆகவே அவ்வாறு கூர்ந்து கவனிப்பவர் அங்கே இருக்கவேண்டும்.

பொதுவாக ஒருவர் விபாசனா தொடங்கியதுமே ஆழ்ந்து தனிமையில் மூழ்கிவிட்டால் அவர் உளச்சோர்வு நோயின் கூறுகொண்டவர். மிகையான செயல்பாடுகளும் மிகையான உணர்வுகளும் வெளிப்பட்டால் உளப்பிளவுக்கூறுகள் கொண்டவர். அவர்களுக்கு உரியதல்ல விபாசனா.

விபாசனா ஒருபோதும் இரைச்சலான, நெரிசலான நகர்ப்புறங்களில் நிகழலாகாது. புறம் அகத்தை ஊடுருவிச் சிதைத்துக்கொண்டே இருக்கும். கடற்கரைகள் உகந்தவை அல்ல. அலைகள் மிக எதிர்மறையான விளைவை அளிப்பவை. மிகைக்குளிரும் மிகைவெப்பமும் இல்லாத மலைப்பகுதிகளே உகந்தவை, சிறுமலை நல்ல இடம்.

*

சாதாரணமாக, நம் தியானப்பள்ளிகள் கற்பிக்கும் தியானமுறைகள் எளியவை. உள்ளத்தை அடங்கச்செய்யும் பொருட்டு சும்மா இருப்பதுதான் அவை. ஆனால் விபாசனா அப்படி அல்ல. அது கூர்மையான குவிதல் முறை. தியானம் என்பது சமநிலத்து நடை. விபாசனா மலையேற்றம். மலையேற்றத்திற்கு பயிற்சி தேவை வழிகாட்டியும் தேவை.

ஜெ

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்
அடுத்த கட்டுரைகோணங்கிக்கு கிரா விருது.