புதிர்நிலைகள் – இளம்பரிதி

சிக்கலான ஒருவழிப் பாதை அமைப்பின் மூலம் மையப்பகுதியை அடையும் முறைக்கு புதிரம் அல்லது புதிர்நிலை என்று பெயர்.

புதிர்நிலைகள் என்பவை பொதுவாக இரண்டு ஆங்கில வார்த்தைகளுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது, அவை

Labyrinth – (சிக்கல் வழி) இவை மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்படி அமைந்துள்ள சிக்கல் (puzzle) முட்டும் வழிகளையும் (dead ends), சிக்கலிலிருந்து வெளியேற (exit) முடியாதபடியும், வெளியிலிருந்து மையத்தை நோக்கி உள்ளே நுழைய (to find one’s way) முடியாதபடியும் சுற்றிச் சுற்றி அமைக்கப்பட்ட சிக்கலான ஓரொழுங்குப் பாதை.

Image: Lake Erie Arboretum at Frontier Park

Maze (புதிர்பாதை) – இவை பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான வழியாகும் (பல்லொழுங்குப்பாதை).

சிக்கல் வழி (Labyrinth), மற்றும் புதிர்வழி (maze) பொது வழக்கில் ஒரே பொருளில் பேசப்பட்டாலும் இரண்டும் வெவ்வேறானவை. தமிழ் ஊடகங்கள் இந்த அமைப்புகளை ‘புதிர்நிலை’ என்று குறிப்பிடுகின்றன. நாமும் புதிர்நிலை என்ற சொல்லையே கையாளலாம்.

புதிர்நிலைகள் பல வடிவங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: வட்டப்புதிர்வழிகள்,

நீள் வட்டப் புதிர்வழிகள்,

சதுரவடிவப் புதிர்வழிகள்,

செவ்வகப் புதிர்வழிகள்,

முக்கோணப் புதிர்வழிகள்.

இவற்றில் வட்டப்புதிர்வழிகள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.

தமிழகத்தில் புதிர்நிலைகள்:

பைரேகவுணி – கிருஷ்ணகிரி வட்டம், சின்ன கொத்தூர் (குந்தாணி), பைரேகவுணியில் சுருள் வளைய வடிவ புதிர்நிலை,

காம்மைநல்லூர் – தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரில் சதுரவடிவ புதிர்நிலை,

கெடிமேட்டி- திருப்பூர் மாவட்டம் தெற்கு பொள்ளாச்சி வட்டம், கெடிமேட்டில் சதுரவடிவ புதிர்நிலை,

ஏணிபெண்டா – அகநள்ளி – கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துக்கோட்டை அருகே ஏணிபெண்டா என்னும் இடத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான வட்டப்புதிர் நிலை.

கோட்டைப்புதுார் புதிர்நிலை – சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், வேம்படித்தளம் அருகே கோட்டைப்புத்தூரில் வட்டவடிவ ஓரொழுங்கு புதிர்நிலை.

கீரமங்கலம் புதிர்நிலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள சதுரவடிவ புதிர்நிலை.

வேம்படித்தளம் – கோட்டைப்புதுார் புதிர்நிலை (வட்டப்புதிர்  நிலை.)

15 மீட்டர் விட்டம், 140 மீட்டர் சுற்றளவு, 700 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த புதிர்நிலை, உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் ஒன்றாகும்.

இது அரிக்கமேடு செல்லும் பெருவழிப்பாதையின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிர்நிலை வழிபாட்டிற்காக பலமுறை, கற்களை கலைத்து கட்டப்பட்டுள்ளதை அறிய முடிகிறது, இதன் அருகில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சடங்கு மேடு ஒன்று உள்ளது.

இது ஒடிசா மாநிலம், ராணிபூரில் உள்ள, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஜஹாரியாவின் சவுன்சாத் புதிர்நிலையை ஒத்துள்ளது என்றாலும், அது, அளவில் சிறியதாகும்.

ஜஹாரியாவின் சவுன்சாத் புதிர்நிலை

காம்மைநல்லூர் (செவ்வக வடிவ புதிர் நிலை)

இது தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் 1,600 சதுர அடி பரப்பளவில் அமைந்து உள்ளது.

இது வேம்படிதாளத்தை விட பழமையானது அதாவது கிட்டத்தட்ட 2000 ஆண்டு பழமையானது, இந்த புதிர்நிலை தான் உலகிலேயே பெரியது என ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

இந்த புதிர்நிலை கிரேக்கத்தில் பைலோஸ் என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் தட்டு ஒன்றில் வரையப்பட்டுள்ள, சதுர புதிர் நிலையை ஒத்து உள்ளது

இங்கே காணப்படும் புதிர்ப்பதை இன்னும் சிதைவடையாமல் நல்ல முறையில் இருப்பதற்கு அங்குள்ள நாட்டார் வழிபாட்டு மரபுடன்  சம்மந்தப்பட்டதால்  இருக்கலாம்.

பைரேகவுணி (சுருள் வடிவில் அமைக்கப்பட்ட ஓரொழுங்குப் பாதை)

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் குந்தாணியான சின்ன கொத்தூர் என்ற கொத்தூர் கிராமம், பைரேகவுணியில் அமையப்பெற்ற வட்டப்புதிர் நிலை.

இதுதான் தமிழகத்தில் கண்டறியப்பட்ட முதல் புதிர்நிலை.

இப்பகுதியில் இயல்பாகக் கிடைக்கும் கற்குண்டுகள் இங்கு தரையில் வரிசையாகப் பதிக்கப்பட்டு இப்புதிர்நிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பைரே கௌனி புதிர்வட்டப்பாதையின் விட்டம் 28 அடி (8.5 மீட்டர்) அளவும் பாதை அளவு 1 அடி 261⁄64 இஞ்சுகள் அல்லது 38 செ.மீ. அகலமும் ஆகும்.

இந்தப் புதிர்நிலையின் காலம் இன்னும் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. என்றாலும் இது கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம். (Caerdroia – Indian Labyriths). இதன் அமைவிடம் பெருங்கற்கால கல்திட்டைகளுக்கு (amidst dolmens) இடையில் என்பது இவருடைய முடிவிற்கு காரணமாயிருக்கலாம்.

ஏணிபெண்டாஅகநள்ளி புதிர்ப்பாதை (வட்டப்புதிர்  நிலை)

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துக்கோட்டை அருகே ஏணிபெண்டா என்னும் இடத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான வட்டப்புதிர் நிலை உள்ளது.

இந்தப் புதிர்நிலை ஏழு சுற்றுப்பாதைகள் கொண்ட முட்டை வடிவமாகும்,

இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது புதிர்நிலையாகும்.

இது பண்டைய கிரேக்கத்தில் ஏழு சுற்றில் அமைக்கப்பட்ட புகழ் பெற்ற புதிர்கோட்டையை அடியொற்றி தமிழகத்தில் இருப்பது.

ஏழு பாதைகள் உள்ளதால், ஏழுசுற்றுக் கோட்டை என இது அழைக்கப்படுகின்றது.

இதன் வாய்ப்பகுதி5 மீ. உள்ள சமபக்க முக்கோணம் என்பதே இதன் சிறப்பாகும், இதன் நுழைவாயில் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

இதன் விட்டம் 9 மீட்டர். அதுமட்டுமல்ல, 99 சதுரடிப் பரப்பு கொண்டது.

1,3,5,7 ஆகிய பாதைகள் 75 செ.மீ. அகலத்திலும், 2,4,6 ஆகிய பாதைகள் 50 செ.மீ. அகலத்திலும் உள்ளன.

சுற்றுப்பாதையின் கற்கள் சில விலகியிருப்பதால், அவ்விடங்களின் அளவு மாறுபடுகின்றது.

இதன் மையப் பகுதியானது, சிறு பலகைக்கற்கள் கொண்டு மூடுபலகை கொண்ட சிறு கல்திட்டை அல்லது அறை போன்ற அமைப்பு கொண்டதாக விளங்குகிறது.

அகல்விளக்குகள் வைத்து வழிபட இந்த அமைப்பு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

இச்சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு 1 கி.மீ தொலைவில், கல்வட்டம் மற்றும் கல்குவி, கல்வட்ட வகை பெருங் கற்படைச் சின்னங்கள் அமைந்துள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.

நன்றி : ராஜமாணிக்கம், விஷ்ணு

உதவிய இணைப்புகள்

https://www.tagavalaatruppadai.in/stone-age-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZle

https://agharam.wordpress.com/2017/10/21/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-labyrinths-mazes/

தமிழக புதிர்நிலைகள் கல்திட்டைகள் கல்வட்டங்கள் முகநூல் பக்கம்

https://jeanlouisbourgeois.com/

முந்தைய கட்டுரைஅர்ச்சகர் சட்டம் – காளிப்பிரஸாத்
அடுத்த கட்டுரைகைரளி பேட்டி