விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட செய்தி பெரும் மனநிறைவை அளித்தது. நான் இதை சென்ற நான்காண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழக அரசு விருதுகளுக்கான அறிவிப்பில் நீங்கள் விக்ரமாதித்யன் பெயரை சொல்லியிருந்ததில் இருந்தே இந்த விருது அவருக்கு அளிக்கப்படும் என்பதை எதிர்பார்த்துமிருந்தேன். இந்த விருதுச்செய்தி இந்த நாளை மகிழ்ச்சியாக ஆக்கிவிட்டது.

நான் கவிதை வாசகனே இல்லை. கவிதையின் நுட்பங்கள் எனக்கு பிடிபடுவதும் இல்லை. ஆனால் இருபதாண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாவல்கள், கதைகள் எல்லாம் வாசித்தேன். கவிதைகளில் எனக்கு பிடித்தவை என்று என்னால் எதையும் சொல்லமுடியாது. ஆனால் சினிமாப்பாடல்களில் கண்ணதாசனின் பல வரிகள் எனக்கு ஆழமான உணர்சிகளை அளித்திருக்கின்றன. அவையெல்லாமே வாழ்க்கையை நேரடியாகச் சொல்லும் வரிகள்.

ஒருமுறை ஒரு புத்தகக் கண்காட்சியில் சும்மா விக்ரமாதித்யனின் ஒரு தொகுதியை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஒருசில வரிகள் நெஞ்சில் தைத்தன. மற்ற கவிஞர்களைப் போல அல்ல இவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. எதையும் அலங்காரமாகச் சொல்வதில்லை. எதையும் அழகாக ஆக்குவதில்லை. வாழ்க்கையிலிருந்து வருவதுபோன்ற வரிகளாக இருக்கின்றன. ஆகவே உடனே வாங்கிவிட்டேன். அன்றுமுதல் இன்றுவரை விக்ரமாதித்யன் என்னுடன் இருந்துகொண்டே இருக்கிறார்.

இன்றைக்கு எனக்கு ஏராளமான விக்ரமாதித்யன் கவிதைகள் ஞாபகத்தில் உள்ளன. நான் என் வரையில்  கவிதைக்கான ஒரு வரையறையை வைத்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையைச் சுருக்கிச் சொல்லும் வரிகள்தான் கவிதை. ஒரு சூத்திரம் மாதிரி. அல்லது நையாண்டி மாதிரி. அந்தமாதிரி கவிதைகள் நவீனக்கவிதையில் அவ்வளவாக எழுதப்படுவதில்லை. விக்ரமாதித்யன் மாதிரி இன்னொரு கவிஞர் இல்லை. அதுவும் தெரியும்.

விக்ரமாதித்யன் மாதிரி இன்னொருவர் எழுதினால் அந்த வரி செயர்க்கையாகவும் ஆகிவிடும். அவருடைய பெர்சனாலிட்டியில் இருந்துதான் அந்த வரி வந்தாகவேண்டும். அப்போதுதான் அதற்கு ஒரு மதிப்பு உருவாகிறது.அவர் நாடோடி. குடிகாரராக இருந்தவர். அவருக்கு தீராத அலைக்கழிப்பு உள்ளது. அப்படி அவர் வாழ்ந்த வரிகள் அவை.

அவருடைய கவிதைகளை நவீன கவிதை என்று சொல்லிவிட முடியாது. எனக்கு நிறைய நவீனக்கவிதைகள் மொழிபெயர்ப்புகள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. நேரடி மொழிபெயர்ப்பு என்று சொல்ல வரவில்லை. அவையெல்லாம் எங்கேயோ படித்த வெளிநாட்டுக் கவிதை பலமுறை ரூபம் மாறி வந்தவைபோல உள்ளன. அவற்றிலுள்ள நடையே மொழிபெயர்ப்புபோல ஆங்கில நடை.

ஆனால் விக்ரமாதித்யன் கவிதைவரிகளை ஔவையார் கவிதைகள் மாதிரி அல்லது திருமூலர் கவிதை மாதிரி என்று சொல்லிவிடலாம். அவையெல்லாம் இங்கே இருந்து ஒரு பழைய கவிஞன் எழுதியமாதிரி இருக்கின்றன. அந்தக்கவிதைகளிலுள்ள வரிகளில் யாப்பு கிடையாது, மற்றபடிக்கு எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

மழைபொழிவதும் மண்ணில் விளைவதும் மக்களுக்கே என்று ஒரு வரி. நான் கோயில்பட்டி தாண்டி போகும்போது மழைபெய்து நல்ல பச்சை நிறம். அந்த வரியை நினைத்துக்கொண்டபோது கண்ணீர் வந்தது. என் ஊர்ப்பக்கமெல்லாம் கரடுதான். இந்தமாதிரியான வரிகள் வந்துகொண்டே இருக்கின்றன.

வெயில் காயும்
மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை

என்ற வரிதான் விக்ரமாதித்யன் அவர்களின் கவிதை. இப்போது மொத்தமாக படிக்கும்போது ரொம்ப ஆச்சரியமான ஒரு விஷயம் இருக்கிறது. தமிழில் அவரை மாதிரி அலைக்கழிந்த ஆத்மா கிடையாது. ஆனால் அவர் வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை உருவாக்குகிற மாதிரித்தான் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டையே ஆசீர்வாதம் பண்ணுகிற மாதிரித்தான் எழுதியிருக்கிறார்.

இவ்வடுப்புகள்
இன்றெரியாது போயினும்
எங்கெங்கோ அடுப்புகளில் தீ

என்றுதான் அவருடைய கவிதை கண்டுபிடிக்கிறது. ஒரு பெரிய கவிஞருக்கு நாம் வறுமையை அளிக்கிறோம். அவர் நமக்கு ஆசீர்வாதத்தை மட்டும்தான் திருப்பி அளிக்கிறார்.

ஆர். ஆனந்த்ராஜ்

***

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது. அற்புதமான கவிஞர் அவர். எளிமையான கவிதைகள். அவருடைய கவிதையெல்லாம் சின்ன முள் மாதிரி. குத்தும்போது தெரியாது. ஊமைவலியாக மாசக்கணக்கில் இருந்துகொண்டே இருக்கும். நான் ஆழமான வாசிப்பு உடையவன் அல்ல. ஆனாலும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நான் கஷ்டப்பட்டவன். பலவேலைகள் செய்தவன். எனக்கு காதல், பூக்கள் போன்ற கவிதைகளில் ஈடுபாடில்லை. மனித உணர்ச்சிகளிலுள்ள நெகிழ்ச்சிகளும் பெரிசாகத் தெரியவில்லை. தத்துவக் கவிதைகளிலும் ஈடுபாடில்லை.

திருடிப் பிழைத்ததில்லை நான் எனினும் திருடிப் பிழைப்பவர்களிடம் யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு என்பது போன்ற வரிகளில்தான் எனக்கு கவிதையனுபவம் நிகழ்கிறது. அவைதான் ஞாபகத்தில் இருந்து வலி தந்துகொண்டிருக்கின்றன.

கண்ணன்

***

முந்தைய கட்டுரைகரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைபுதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2