கரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை

அன்புள்ள ஜெ

கடந்த ஞாயிறு அன்று எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களின் கரம்சோவ் சகோதரர்கள் உரை தமிழில் தாஸ்தோவ்ஸ்கி நாவல்கள் மேல் நடந்த உரைகளில் தனித்துவமானது.

தாஸ்தோவ்ஸ்கி பற்றிய பிற உரைகளில் இருந்து இது தனித்து நிற்பது என உரையின் தொடக்கத்திலேயே அவர் சொல்லி விடுகிறார். தாஸ்தோவ்ஸ்கி என்றாலே மனித மனத்தின் ஆழத்தை பேசக்கூடியவர், அதன் இருண்மையை சொல்லக் கூடியவர் என்ற விமர்சனக் கருத்தே பரவலாக முன் வைக்கப்படுகிறது. அதிலிருந்து தன் வாசிப்பு அனுபவம் எப்படி முன் நகர்கிறது அல்லது வேறுபடுகிறது என ஆராய்கிறார்.

இப்படி தனித்த வாசிப்பனுபவத்தை முன் வைக்கும் போது நிகழும் சிக்கலும் அவர்களது உரையில் இல்லை. என் சொத்த வாசிப்பனுபவம் என்ற உடன் நம் சிறு வாழ்வில் பெரிய உரைநடையை பொருத்திப் பார்ப்போம். ஆனால் அருண்மொழி மேடம் இன் தனி வாசிப்பில் இருந்து இந்த உரை தொடங்குகிறது. கல்லூரி விடுதி அறையில் தனிமையில் வாசித்த அனுபவத்தில் தொடங்கி வரலாற்றுக்கு தாவுகிறார்கள். வரலாற்று நெடுக நிகழ்ந்து வந்த பரிணாமத்தையும் கரம்சோவ் சகோதரர்கள் நாவலையும் ஒப்பிட்டு செல்கிறார். அங்கிருந்து சமகால பிரச்சனைக்கு என ஒரு அடிக்கு அடுத்த அடி பெருந்தாவல்கள் இந்த உரையில் நிகழ்கிறது.

பிறகு மார்க்சிய அறிஞர் அண்டோனியோ  கிராம்ஷியின் ஆதிக்க கருத்தாண்மை என்ற கருதுகோளை ஓரிரு நிமிடங்களில் அவர் விளக்கி செல்லும் விரைவு என்னை வியக்க வைத்தது. பிறகு அவர் குறிப்பிடும் மொழியியல் அறிஞர் நாம் சாம்ஸ்கிக்கும் ஃபூக்கோவுக்கும் நிகழ்ந்த அடிப்படை மனித இயல்பு குறித்த அந்த உரையாடலை நான் காணொளியில் சென்று பார்த்தேன். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேர அந்த  விவாதத்தை இரண்டு மூன்று நிமிடங்களில் அதன் சாரத்தை உணர்த்தும் விதமாக அவ்ர் கூறிய விதம் மிக துல்லியமாக இருந்தது. கடைசியில் அவர் சாம்ஸ்கியின் மனிதன் இயல்பாகவே நீதி உணர்வை கொண்டிருக்கிறான் என்ற அந்த வாதத்தை மாபெரும் விசாரணையாளனின் முடிவில் அந்த ஸ்பானிய விசாரணைப் படுகொலைகளின் முடிவில் வைத்தபோது அதன் பரிமாணமும் பொருளின்மையும் முகத்தில் அறைந்தது. மனித மனம் இறுதியில் விடைகளின்றி முட்டிக் கொள்ளும் இடமல்லவா அது?

அவர்களது பேச்சின் தனியம்சம் டால்ஸ்தோய், தாஸ்தோவ்ஸ்கி இருவருக்குமான ஒற்றுமையை என எழுந்த புதிய பார்வை. இருவருக்குமான சமூக பார்வை, இருவரும் கொண்டிருக்கும் மரபார்ந்த கிறிஸ்துவத்தின் மேலான விமர்சனமும், அதிருப்தியும். வாழ்வியல் மீதான இருவரின் பார்வையும் எந்த புள்ளியில் சந்தித்துக் கொள்கிறது எனத் தொடங்கி அவர்களின் நாவல்களுள் அவை எப்படி பயின்று வந்திருக்கின்றன என யோசிக்க வைக்கிறார். இந்த உரையின் இன்னொரு சிறப்பம்சம் என நான் கருதுவது, அவர் அறுதியிட்டு ஒவ்வொன்றையும் விளக்கிச் செல்லவில்லை. ஒவ்வொன்றிலும் சிறிதளவு தொட்டு காட்டு அதிலிருந்து நம்மை யோசிக்கத் தூண்டுகிறார்.

கரம்சோவ் நாவலைப் பற்றி பேசும் போது கூட கதையை சொல்லி அதிலிருந்து அவர் தன் கருத்திற்கு முன் நகரவில்லை. எத்தனை குறைவாக ஒரு விஷயத்தை சொல்லி தெளிவாக கடத்த முடியுமோ அத்தனை தெளிவாக செய்கிறார்.

திமித்ரி, இவான், அல்யோஷா மூவரின் குனாதிசியங்களையும் தனி துருவமாக நிறுத்தி அங்கிருந்து ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்படி முயங்குகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உரைந்திருக்கும் அந்த கிரே நிறம் எந்த இடத்தில் வெளிப்படுகிறது என்பதை தொட்டுக் காட்டுகிறார். அதிலிருந்து அவர் முன் சொன்ன தத்துவவாத, எழுத்தாளர்களுக்கான பன்பை பற்றிய குறிப்பை நான் ஒப்பிட்டு பார்த்தேன். அவர் முதலில் சொன்ன ஒரு கிளாசிக் நாவல் எந்த இடத்தில் அதன் முழுமையை அடைகிறது. ஒரு பிரச்சனையின் அனைத்து பக்கங்களையும் எப்படி தத்துவ விசாரம் செய்கிறது என்பதிலிருந்து கரம்சோவ் சகோதரர்களில் வரும் மூன்று மைய கதாபாத்திரமும் அந்த கிளாசிக் தன்மை எப்படி தொடுகின்றன என யோசித்துப் பார்க்கிறேன்.

நாவலில் உள்ள சின்ன விஷயங்களைக் கூட வரலாற்றில் தான் அறிந்த பெரிய மனிதர்களில் வாழ்வில் பொருத்தி பார்க்கிறார். உதாரணமாக, திமித்ரியின் குரூசென்கா மீதான காதலை, கவிஞர் கீட்ஸ் காதலுடன், கூல்டிரிஜ், கெம்மிங்வே வாழ்வில் ஏற்பட்ட காதல் நிகழ்வுகள் என நாவலை தான் அறிந்த மனிதர்களோடு, வரலாற்றோடு ஒப்பிட்டு பேசும் இடங்கள் ஒரு நாவலை நம் மனம் எத்தனை சாத்தியத்திற்கு விரித்தெடுக்கும் என்பதை காட்டுகிறது. அங்கே நிறுத்தாமல் ஒரு இந்திய மனம் அந்த நாவலை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதையும் சுட்டுகிறார். தந்தை கொலை என்ற குறியீடு எப்படி தன் வாசிப்பை பிம்பீசாரா, அஜாத சத்ருவுடன் இணைக்கிறது என்பதை பார்க்கிறார். சியாத் வாதம் எப்படி தாஸ்தோவ்ஸ்கியின் சிந்தனையில் ஊடுருவுகிறது என்பதை பற்றி சிந்திக்கிறார்.

இதனை ஒரு உரை என்று சொல்வதை விட கேட்பவரோடு நிகழ்த்தும் உரையாடல் என்ற இதனை சொல்வேன். அவரது ஒரு கட்டுரையின் தலைப்பு “பறக்கும் புரவியின் குளம்போசை” இந்த உரையும் அப்படி தான் சிறு தயக்கத்துடன் பொடி நடையிட்டு நடக்கும் புரவி எத்தருணத்தில் வேகம் கொண்டு சீறிப் பாய்கிறது அதன் பின் அது எப்படி தன் இலக்கை அடைகிறது என இந்த உரையை முழுதும் கேட்டால் புரியும். இந்த உரையின் உச்சம் என்பது முத்தாய்ப்பாய் அமைத்த மரண வாக்குமூலம் பற்றிய பார்வை. அந்த கடைசி நிமிடங்கள் தான் ஒட்டுமொத்த உரையும் சென்று குவியும் மையமாக அமைந்தது. கிட்டத்தட்ட முப்பது பக்கம் தமிழில் வரக்கூடிய அந்த மாபெரும் விசாரணையாளனை  எட்டு நிமிடங்களில் ஒரு உணர்ச்சிகர நாடகம் போலவே நிகழ்த்திக் காட்டினார்.  அது இந்த உரைக்கு ஒரு சிகரம். கடைசியில் கி.பி. 2000 ஆண்டில் போப் ஜான் பால் மன்னிப்பு கேட்டதை  இப்போது தான் கேள்விப் படுகிறேன்.

ஒரு உரையில் ஒரு நாவலைப் பற்றி தனி ரசனைப் பார்வை, வரலாற்றுப் பார்வை, சமூகப் பார்வை, வாழ்வியல் பார்வை அந்த நாவல் முன் வைக்கும் தத்துவ பார்வை என அனைத்தையும் தொகுத்து பேசியதே இந்த உரையின் சிறப்பு என சொல்வேன்.

அவருக்கு என் வணக்கங்கள்.

நன்றி,

கவுதம் குமார்.

***

அன்புள்ள கௌதம் குமார்,

கரமசோவ் சகோதரர்கள் நாவல் பற்றி அருண்மொழியின் உரை ஒரு நல்ல முயற்சி. கதையைச் சொல்வதே பொதுவாக இங்கே நூல்பற்றிய பேச்சாக இருக்கிறது. நாவலில் உள்ள அடிப்படையான சில தத்துவக் கேள்விகளை மட்டும் விவாதிக்கிறாள். குற்றவுணர்வுக்கும் குற்றத்துக்குமான உறவு, குணங்களுக்கும் குற்றத்துக்குமான உறவு, தந்தையை கொல்லுதல் என்னும் அடிப்படை இச்சை என நீள்கிறது. தமிழில் பெரும்பாலும் பேசப்படாத ஓர் இடம் கரமசோவ் சகோதரர்களில் வரும் கிரேட் இன்குவிசிஷன். அதைப்பற்றியும் பேசுகிறாள்.

ஆனால் ஒவ்வொரு விவாதத்தையும் நாவலின் அழுத்தமான ஒரு நிகழ்வைச் சொல்லி தொடங்கியிருந்தால் நாவலை வாசிக்காதவர்களுக்கும் உதவியாக இருந்திருக்குமென கேட்கும்போது தோன்றியது. ஓர் உரையைத் தொடங்குமிடம் முக்கியமானது. தேர்ந்த பேச்சாளர்கள் அல்லாதவர்களிடம் நடுக்கம் இருக்கும். மெல்ல மெல்லத்தான் அவர்களால் உரைக்குள் செல்லமுடியும். பத்துப்பதினைந்து நிமிடம் சென்றபிறகுதான் அருண்மொழியால் உரையின் சாராம்சத்திற்குள் செல்லமுடிகிறது. அதைவெல்ல ஒரு அழுத்தமான கதைத்தருணத்தை யோசித்து அதைச் சொல்லியபடி தொடங்கியிருக்கலாம். இதெல்லாம் என் வழிமுறைகள், ஆனால் அருண்மொழி அவற்றை கேட்கலாகாது என உறுதியுடனிருக்கிறாள்.

ஜெ

முந்தைய கட்டுரைஏசியாநெட் பேட்டி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1