ஓநாய்குலச் சின்னம், கடிதம்

ஓநாய்குலச்சின்னம்

அன்புள்ள ஜெ,

உங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக வாசித்து வந்த போதும், இதுவரை கடிதம் எதுவும் எழுதத் துணியவில்லை. தற்போது படித்து முடித்த ஓநாய் குலச்சின்னம் நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவம் இது. எனது தயக்கத்தைக் கடந்து முன்செல்வதற்கு மட்டுமேயாக இதை முயற்சிக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து அது முடிந்த பின் ஏற்பட்ட பெரியதொரு வெற்றிடத்தை இன்னுமும் கூட நிரப்ப முடியவில்லை. வேறு சில நூல்களை வாசிக்க முற்பட்டு, அந்த தட்டையான மொழி நடையைத் தொடர முடியாது இருந்த நிலையில், நமது தளத்தில் வந்த வாசகர் கடிதங்களின் பரிந்துரைப்பில், சென்ற ஆண்டு இந்தியாவிற்குச் சென்ற போது ஓநாய் குலச்சின்னம் நாவலை வாங்கி வந்தேன்.

வெண்முரசு, அதன் பின்னான நூறு கதைகள் மற்றும் குமரித்துறைவி போன்ற எழுத்திற்கு பழகிப்போன மனத்திற்கு, முற்றிலும் வேறுவகை எழுத்தை வாசிக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. ஆயினும், நாவலின் முதல் பக்கத்திலேயே வந்து விடும் ஓலோன்புலாக்கின் ஓநாய்களும், அவற்றின் தீராப் பசியும் அடங்கா வெறியும்,  சகுனிக்கு பிரியமான ஜரன் ஓநாயின் தொடர்ச்சியாக அமைந்து இந்த நாவலைத் தொடர்ந்து வாசிக்கச் செய்தன.

இருபத்தோரு வயதேயான ஜென் சென், கலாச்சாரப் புரட்சியின் கட்டாயத்தின் பேரில், பழங்குடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பழைய கொள்கைகளை அகற்றி, ‘புரட்சியைப் பூரணமாக்கிட’, மற்ற மாணவர்களோடு சேர்ந்து ஓலோன்புலாக் புல்வெளிப் பகுதிக்கு வந்து சேர்கிறான். மேற்கத்திய செவ்வியல் படைப்புகளோடு வந்து சேரும் ஜென் சென், நாடோடி இனக்குழுத் தலைவரான முதியவர் பில்ஜியிடம் தனது குருவைக் கண்டு கொண்டு, அவர் மூலம் மங்கோலிய மக்களின் வரலாறு, நாடோடி மக்களின் கலாச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்கிறான். ஓநாய்களைப் பற்றிய பயம் தங்களது எலும்பிலேயே உறைந்திருக்கும் சீனனாக இருந்த போதும், பில்ஜியின் வழிகாட்டுதல் அவனை மேய்ச்சல் நில ஓநாய்களின் மேல் தீவிர வேட்கை கொள்ளச் செய்கிறது. அதன் விளைவாக, ஒரு ஓநாய்க்குட்டியைத் தானே எடுத்து வளர்த்து, ஓநாய்களைப் பற்றிய நேரடி அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். சீனாவின் ஹேன் இனக்குழுவின் மேலாதிக்கம் மற்றும் அதன் ராணுவ ஆட்சியானது, மேய்ச்சல் நிலத்தின் குலச்சின்னமாக இருக்கும், டெஞ்ஞர் என்ற சொர்க்கத்திற்குப் பிரியமான ஓநாய்களைக் கொன்றொழிப்பதின் மூலம் மேய்ச்சல் நில ஆன்மாவையும், அதைச் சார்ந்து வாழும் நாடோடி மக்களையும் சிதைக்கும் கதையை ஜென் சென் தனது பார்வையில் கூறிச்செல்கிறான்.

நாவலின் தொடக்கத்தில் இருந்து மீளமீளச் சொல்லப்படும் ஓநாய் மற்றும் மேய்ச்சல் நிலம் பற்றிய வர்ணனைகளும் விவரங்களும் ஒரு கட்டத்தில் படிப்பதற்கு சலிப்பை ஏற்படுத்திய பொழுது, “ஓர் இலக்கியப்படைப்பு கதை சுவராசியத்துக்காக எழுதப்படுவதில்லை” என்று கூறும் தங்களது இலக்கிய வாசகனின் பயிற்சி கட்டுரை, இந்த நாவலை வாசித்துத் தொகுத்துக்கொள்ள மிகவும் உதவியது.

‘மனிதனே பிரதானமானவன்’ என்ற மாவோவின் கொள்கை, ‘மேய்ச்சல் நிலமே பிரதான உயிர்; மனிதன் உள்ளிட்ட மற்ற யாவும், அதை ஒட்டி வாழும் சிற்றுயிர்களே’ என்று இயற்கையோடிசைந்து வாழும் நாடோடி மக்கள் கலாச்சாரத்தை அழித்து முன்செல்வதே நாவலின் மையம் எனத் தோன்றுகிறது. மற்றொரு பார்வையில், ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்து மிகையான நுகர்வினால் அவ்விடத்தின் வளங்களை எல்லாம் சுரண்டும் வேளாண் மக்களின் ஆதிக்கம், எத்தனை கடின வாழ்க்கைச்சூழலிலும் மேய்ச்சல் நிலத்தையும் அதன் புல்வெளியையும் பாதுகாக்க ஒவ்வொரு பருவகாலத்திற்கும் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் நாடோடி மக்களை வென்று அடிமைப்படுத்துவதைக் காட்டிச் செல்கிறது.

நாவல் நெடுகிலுமாகக் கூறப்படும் பல தகவல்கள் நேரிடையான பொருளைத் தாண்டி, குறிப்பால் வேறு பலவற்றை உணர்த்தும் படிமங்களாக வந்து கொண்டே இருக்கின்றன. நாவல் முழுதும் வாசித்து முடிந்த பின்னர் இத்தகைய படிமங்களே நினைவில் நீடித்து நிற்கின்றன. மேய்ச்சல் நிலத்தில் ஓநாய்கள் குறைந்து விட்டதும், திருடர்களாக இருந்த எலிகள் கொள்ளையர்களாக மாறி, மங்கோலியக் குதிரைகளையே கடிக்கும் துணிவு பெறுவது எந்தக் கலாச்சாரத்துக்கும், எக்காலத்துக்கும் பொருந்துவது. யான் கீயின் மனதைக் கொள்ளை கொண்ட அன்னப்பறவைகள் நீந்தும் ஏரி, வேளாண் மக்களின் குடியேற்றத்திற்குப் பின் காட்டு வாத்துக்களின் குட்டையாக மாறிப்போவது அதிநுகர்வின் விளைவையே காட்டுகிறது. ”அளவுக்கு மீறிய மக்கள் தொகை கொண்ட ஒரு இனத்தின் மிக முக்கியமான பிரச்சினை, உயிர் வாழ்ந்திருப்பதுதான். அழகியல் அணுக்களுக்கு உணவூட்டக்கூடிய சத்துக்கள் ஏதும் அங்கு மிச்சமிருப்பதில்லை” என்று ஜென் சென் சொல்வது ஹேன் இனத்தைப் பற்றி மட்டுமல்ல.

ஓலோன்புலாக்கின் ஓநாய்களுக்கு எதிரான போராட்டமே, மேய்ச்சல் நிலத்தை உயிர்த்துடிப்புடன் பல்லாயிரம் வருடங்களாக நிலைநிறுத்தியது. அதீத நுகர்வின் வெறியினால், நவீன ஆயுதங்களைத் துணைகொண்டு ஓநாய்களை அழித்தபின்னர், மேய்ச்சல் நிலத்தின் பசுமை, மங்கோலிய குதிரைகளின் போர்த்திறம் எல்லாம் தரம் குறைந்து போவது மட்டுமன்றி நாடோடி மக்களும் பெரும்பாலும் குடிக்கு அடிமையாகிவிட்டிருப்பது, புல்லை தவிர மற்ற யாவும் சிற்றுயிரே என்ற உண்மையை நிதர்சனமாக்குகிறது. நாவலின் தொடக்கத்தில் முதியவர் பில்ஜி, “அமைதியாகவும் நிம்மதியாகவும் தூங்க விரும்பும் மக்களால், மோசமான போர்வீரர்களையே உருவாக்க முடியும். ஓநாயுடன் போரிட வேண்டுமென்றால் நீயும் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று ஜென் சென்னிடம் சொல்வது எவ்வளவு தீர்க்கதரிசனமான கூற்று. முதியவர் பில்ஜி மறைந்து இருபது வருடங்களுக்குள்ளாகவே, அழகிய அந்த மஞ்சள்நிற மேய்ச்சல் புல்வெளி அழிந்து, மஞ்சள்-டிராகன் புழுதிப்புயல் எழுந்து பீஜிங் முழுதும் மூடி மூச்சைத் திணறடிப்பது, தன் அழிவைத் தானே தேடிக்கொள்ளும் மனிதனின் அடங்கா விழைவின் சித்திரம் எனத்தோன்றுகிறது.

பில்ஜியின் வழிகாட்டுதலில் ஓநாய்களின் மேல் தீவிர வேட்கை கொள்ளும் ஜென் சென், தானே ஒரு ஓநாயை எடுத்து வந்து வளர்ப்பது, எத்தனை இடர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது? தன் தந்தைக்கு நிகரான,  குருவுமான பில்ஜி அத்தனை கோபம் கொண்டு தடுத்தபோதும், குழுமம் முழுதும் எதிர்த்த போதும் விடாப்பிடியாக அந்த குட்டி ஓநாயை வளர்ப்பது எதன் பொருட்டு, அதன் மூலம் எதனை அடைய நினைக்கிறான் ஜென் சென் என்று மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. இறுதியில் ஜென் சென் தன் பிரியத்துக்குரிய குட்டி ஓநாயைத் தானே அடித்துக்கொல்வது, வெண்முரசில் சகுனி தன் மானசீகக்குருவான ஜரன் ஓநாயை, தானே கொல்வதை நினைவுபடுத்தியது.

மேய்ச்சல் நிலப்புல்வெளியின், ஓநாய்களின், நாடோடி மக்கள் கலாச்சாரத்தின் அழிவை முற்றுணர்ந்த நிலையில், முதியவர் பில்ஜி வேதனையுடன் பாடும் இந்தப் பாடல், ஓநாய் குலச்சின்னம் நாவலின் சாரமாக என்றும் நினைவிலிருக்கும்.

“வானம்பாடிகள் கீதமிசைக்கின்றன, இளவேனிற்காலம் இங்கிருக்கிறது;

மர்மோட்டுகள் கீச்சிடுகின்றன, வண்ணப்பூக்கள் மலர்கின்றன;

சாம்பல் கொக்குகள் அழைக்கின்றன,மழை இங்கு பெய்கிறது;

ஒநாய்க்குட்டிகள் ஊளையிடுகின்றன, நிலா வானில் எழுகிறது.”

-சாரதி 

முந்தைய கட்டுரைMountains’ Dialogue
அடுத்த கட்டுரைஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்