ஏசியாநெட் பேட்டி, கடிதங்கள்

அழகான குறும்படம். நல்ல கேமரா கோணங்கள், பின்னணி இசையோடு பச்சை நிறம் மனதை அள்ளுகிறது. நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை என்று மு.க திமுகவை குறித்து சொன்னது பழமொழியாகி விட்டதா !

செந்தில்

டோக்யோ

***

அன்புள்ள ஜெ

ஆசியாநெட் பேட்டி பார்த்தேன். இன்னும் கைரளி செய்திப்படம் பார்க்கவில்லை. அது ஒரு படி மேல் என்று சொன்னார்கள். இங்கே ஊடகங்கள் உங்களை காட்டியது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான். நீங்கள் ஒரு குண்டரால் தாக்கப்பட்டபோது. அதுவும் உங்களை இழிவுசெய்யும்படியாக. தமிழன் என நினைக்கையில்…

ஆனால் எந்த எழுத்தாளரையுமே இவர்கள் காட்டியதில்லையே என நினைத்தால் கொஞ்சம் ஆறுதல்தான். காட்டாமலிருக்கும் வரை நல்லது என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

ஆ.முருகேசன்

***

ஐந்திணைகளில் பாலை தவிர நான்கும் நிறைந்த மண், கேரளத்தின் பித்ரு நிலம், இரு பண்பாடுகளின் கூடலில் கிடக்கும் நிலத்தில் வந்த முக்கிய ஆளுமைகள் என இந்த நிலத்தை அதன் வரலாற்றைப்  பதிவு செய்த முக்கியமான பேட்டி. மிக அழகாக வேணாட்டையும் ஆசானையும் பதிவு செய்திருக்கிறார்கள்

சுபா

***

அன்புள்ள ஜெ

ஆசியாநெட் பேட்டி கண்டேன். கைரளி டிவி இன்னும் யூடியூபில் வெளிவரவில்லை. மிகச்சிறப்பான பேட்டி. இருபத்தைந்து நிமிடம். ஆனால் ஓணம் அன்று பிரைம் டைமில் இரண்டு முறை. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற ஆண்டு மும்பையில் ஓர் ஊடகவியலாளரைக் கண்டேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.

ஊடகங்கள் தங்கள் பேசுபொருளை தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெவ்வேறு தளங்களில் பேசுபொருட்களையும், ஆளுமைகளையும் அவர்கள் அறிமுகம் செய்யவேண்டும். அவற்றை பார்வையாளர் ரசனைக்கு கொண்டு செல்லவேண்டும். ஆளுமைகளைப் பற்றிப் பேசிப் பேசி அவர்களை முக்கியமானவர்களாக ஆக்கவேண்டும்.

அவ்வாறன்றி, ஏற்கனவே பார்வையாளர்களால்  ரசிக்கப்படும் விஷயங்களைப் பற்றி மட்டும் பேசினால், அவர்களுக்குத் தெரிந்த பிரபலங்களையே முன்வைத்தால் மிக விரைவில் பேசுபொருள் தீர்ந்துவிடும். ஆளுமைகள் சலிப்பூட்டுவார்கள்.

பழைய அச்சு ஊடகங்கள் தொடர்ச்சியாக பேசுபொருட்களை கண்டுபிடித்தன, ஆளுமைகளை உருவாக்கி முன்னிறுத்தின. ஆகவே அவை அரை நூற்றாண்டுக்காலம் ஆர்வம் குறையாதவையாக நீடித்தன. காட்சியூடகம் ஆரம்பத்திலேயே வணிகநோக்குக்கு ஆட்பட்டுவிட்டது. நிகழ்ச்சி அதிகபட்ச லாபம் சம்பாதிக்கவேண்டும், அதற்கு புரவலர்கள் வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. காட்சியூடகத்தில் ஊடகத்தை அறிந்த பொதுவான ’ஆசிரியர்கள்’ இல்லை. தொகுப்பு நிர்வாகிகளே உள்ளனர். விளைவாக காட்சியூடகம் உருவான இருபதாண்டுகளிலேயே பெரும் சலிப்பை உருவாக்கிவிட்டது.

காட்சியூடகம் திரும்பத் திரும்ப ஒரு சில வட்டங்களில், ஒரு சில ஆளுமைகளில் சுற்றிவருகிறது. பெரும்பாலும் வணிக சினிமா, கொஞ்சம் அரசியல். வெளியே போனால் மக்களுக்குப் பிடிக்குமா என்னும் ஐயம் அதை ஆட்டிப் படைக்கிறது. அது உண்மையும்கூட, ஏனென்றால் மக்களுக்கு அவர்கள் எதையும் அறிமுகம் செய்யவில்லை. ரசனையைப் பழக்கவுமில்லை. ஆகவே மக்கள் ஒரு சிக்கலான இடத்தில் இருக்கிறார்கள். புதிய எவையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்கு தெரிந்த அனைத்தும் சலிப்பூட்டுகின்றன.

ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைநிகழ்ச்சி ஒன்று டிவியில் வந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் பாய்ந்து டிவியை அணைத்துவிட்டு சலிப்புடன் ஏதோ சொன்னார். “ஏன் எஸ்பிபி பிடிக்காதா?” என்று நான் கேட்டேன். “நான் எஸ்பிபி ரசிகன். ஆனால் அவருடைய பாட்டை, நடிப்பை, சிரிப்பை எத்தனை முறைதான் பார்ப்பது? அவர் பாடும் பாடல்களை எத்தனை தடவை கேட்பது? இருபதாண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு நாற்பது வயதாகிறது” என்றார்.

தமிழ் காட்சியூடகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. கிராமப்புற ரசிகர்கள், வயதானவர்கள் மட்டுமே டிவி பார்க்கிறார்கள். அதிலும் ஓடிடி தளங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் ஊடுருவிவிட்டன. இன்று தொலைக்காட்சி காலாவதியான ஊடகமாக ஆகிவிட்டது. ஆனால் இன்னமும்கூட தொலைக்காட்சிகளில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இந்த விஷயம் சென்று சேரவில்லை. அவர்கள் மூழ்கும் கப்பலில் எலிகள் போல அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்திய நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதைத் தடுக்க!
அடுத்த கட்டுரைகரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை