‘நீர்ச்சுடர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 23ஆவது நாவல் ‘நீர்ச்சுடர்’. நீரை அள்ளி, வான்னோக்கிப் பார்த்து, தன் மனத்தால் அவற்றை இறந்தோருக்குச் சமர்ப்பிப்பது. ஒரு சுடரை ஏற்றி, வான்னோக்கிக் காட்டுவதுபோல இங்கு நீரையே சுடராக்கி வான்னோக்கிக் காட்டுகிறார்கள். அந்த நீர்ச்சுடரின் வெளிச்சத்தின் உதவியால் இறந்தவர்கள்  தமக்குரிய மறுவுலகில் நுழையக்கூடும். இறந்தோருக்கும் இழந்தோருக்குமான ஆத்மார்த்தமான உரையாடலாவே இந்த நாவல் உருப்பெற்றுள்ளது. அதன் உச்சம் அபிமன்யூ – சுபத்திரை உரையாடல் எனலாம்.

மரணவீட்டில் எஞ்சியிருப்பது என்ன? இறந்தோரின் நினைவுகள் அவர்களோடு வாழ்ந்தவர்களின் விழிகளின் வழியாகக் கண்ணீராகக் கசிந்து கசிந்து ஆடையில் உப்புப் படலத்தை விரிக்கும். இழந்தோருக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற இயலாது எனத் தெரிந்தும் ஆறுதல் வார்த்தைகளைப் பொழிந்துகொண்டிருப்பர் உற்றாரும் உறவினரும் நண்பர்களும்.

மரணவீட்டின் நிகழ்வுகளைக் கண்டும் அங்குள்ளோரின் உளநிலையை உய்த்தறிந்தும் எழுதினால் அது மிகப்பெரிய உளவியல் ஆவணமாக உருப்பெறும். காரணம், அதில் இறந்தோரின் வரலாறும் இழந்தோரின் வரலாறும் சம அளவில் கலந்திருக்கும்.

இந்த ‘நீர்ச்சுடர்’ நாவல் ‘மாபெரும் மரண வீட்டின் நினைவுக்குறிப்பு’ என்றுதான் எனக்குப்படுகிறது. பாரதவர்ஷத்தின் பெரும்பகுதிநாட்டைச் சுடுகாடாக்கிவிட்டது குருஷேத்திரப்போர். பாரதவர்ஷத்தின் பெரும்பகுதிநிலமே மாபெரும் மரணவீடாகக் காட்சியளிக்கிறது. இந்த நாவலில் இறந்தோரின் நினைவுகளோடு இழந்தோரின் மனவோட்டங்களும் இணைந்து இணைந்து மாபெரும் துன்பியல்சுவையை வாசகர்களுக்கு வழங்குகிறது.

பாண்டவர், கௌரவர் ஆகிய இரண்டு தரப்புகளிலும் எஞ்சியிருப்போரே இறந்தவர்களைப் பற்றிய அதிரும் நினைவுகளை இழந்தோருக்கு ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அர்சுணனைப் பார்க்கும்போது அபிமன்யூவின் மரணத்தை நினைவில்கொள்ள நேர்கிறது. அதனைத் தொடர்ந்த லட்சுமணனின் மரணமும் நிழலாகப் படரத் தொடங்குகிறது. போர் மரணங்கள் ஒரு சங்கிலிப் பின்னல்போல ஒன்றைத் தொட்டு ஒன்றென வெவ்வேறு அதிரும் நினைவுகளை எழுப்புகின்றன.

பெரும்பாலும் மரணவீட்டில்தான் மிகப் பல சிக்கல்கள் உருவாக்கப்பட்டு, பேசி பேசி வளர்க்கப்படுகின்றன. அதுபோலவே இங்கு அடுத்த தலைமுறைவாரிசு குறித்த பேச்சு வளர்க்கப்படுகிறது. அதுசார்ந்த மனப்போராட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. விஜயை தன் மகன் சுகோத்ரனிடம் (சகதேவனின் மகன்), “அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன் நீ” எனக் கூறி அவனை மன்னனாக்க விரும்புகிறாள். ஆனால், அவனோ குடியையும் குலத்தையும் தானே துறந்துவிடுகிறான்.

நாவல் ஓட்டத்தில், ஊடுபாவாகக் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளைப் பற்றி விவரிக்கப்படுகிறது. ஒரு பெரும் போர் எவ்வாறெல்லாம் நாட்டைச் சீரழிக்கும் என்பதையும் எளிய குடிகள் தம் மொத்த வாழ்வையும் போரை முன்னிட்டு எவ்வாறு சிலதலைமுறை காலத்துக்கு இழக்கிறார்கள் என்பதையும் விவரித்துள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்.

இறந்தோர் மறுஉலகை அடைவதற்குரிய கடமைகளை இழந்தோர் தன்னைச் சார்ந்தோரின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. நீத்தார் கடன் – மறுவுலகு – இறந்தோருக்கும் இழந்தோருக்குமான மனப்போராட்டம் என இந்த மூன்று தரப்புகளிலும் சுழல்கிறது இந்த நாவல். ஆனால், எந்த நிலையிலும் அது வாசகருக்குச் சலிப்பூட்டவே இல்லை எனலாம். காரணங்கள், எழுத்தாளரின் எழுத்தாற்றலின் தனித்துவமும் சிறப்பும்தான்.

மகாபாரதத்தைப் பற்றி எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதையை எழுதினார். அதன் பின்னர் பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கதை, குறுநாவல், நாடகம் என்ற வடிவங்களில் மகாபாரதம் சார்ந்து எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ‘பதுமை’ என்ற நாடகம். இந்த நாடகம் ‘வடக்குமுகம்’ நாடகத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அந்த நாடகத்தின் நீட்சியாகவே இந்த நாவலில் சில பகுதிகள் வருகின்றன. ‘பதுமை’ நாடகத்தைப் படித்தவர்கள் அதில் வரும் சில உளவியல் சார்ந்த செய்திகளை இந்த நாவலில் உய்த்துணர முடியும்.

தன்னிடம் வாழ்த்துப்பெற வந்த பீமனைக் கொல்ல நினைத்த திருதராஷ்டிரர் பீமனுக்குப் பதிலாக இளைய யாதவரால் தன் முன்னிறுத்தப்பட்ட இரும்புப் பாவையை உடைத்தலும் பின்னர் அதைச் சரிசெய்து மீண்டும் அதைப் பாவையாக்கி, அதனைத் தன் மகன் ‘துரியோதனன்’ என நினைத்து, தழுவிக்கொண்டு துயில்தலும், இரவில் அந்தப் பாவை தன்னைக் கொல்ல முற்பட்டது என நினைத்து, அதை உடைத்தெறிதலும், மீண்டும் அதைச் சரிசெய்து அணைத்துக் கொள்ளுதலுமாக இந்த நாவலில் அந்தப் பாவை தொடர்ந்து இடம்பெறுகிறது.

என் பார்வையில் அந்த ‘இரும்புப் பாவை’க்கு உளவியல் அடிப்படையில் மூன்று வடிவங்கள் உண்டு என்பேன். அது பீமன்தான், ஆனால், அது துரியோதனனும்கூட. மிக நுட்பமாக அது விழிகள் உடைய திருதராஷ்டிரர் எனலாம்.

துரியோதனன் அந்தப் பாவையைத் தன் எதிரி பீமனாகவே கருதுகிறான். தன்னுடைய பதின் வயது உயிர்தோழன் பீமனாகவும் அதனைக் கருதுகிறான். தன்னுடைய பிம்பமாகவும்கூட அதனைக் கருதுகிறான். உண்மையில் அவன்  அதில் தன்னையே உணர்கிறான், காண்கிறான்.

திருதராஷ்டிரருக்கு அந்தப் பாவை தன் மகன் துரியோதனன்தான். ஒருவகையில் அவரும் துரியோதனனும் ஒருவரையொருவர் வெறுப்பதால்தான் ‘அவன் அந்தப் பாவையின் வடிவில் தன்னைக் கொல்ல வந்ததாக’ அவருக்கு உளமயக்கு ஏற்பட்டிருக்கலாம். ‘தந்தைப் பாசம்’ அவரை இழுப்பதால்தான் அவர் மீண்டும் அந்தப் பாவையைச் செப்பம்செய்து, அணைத்துக்கொள்கிறார். அவர் ‘பெருந்தந்தை’ அல்லவா!

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள இரண்டு பழஞ்சொற்கள் என் மனத்தை ஈர்த்தன. அவற்றுள் ஒன்று ‘நிரத்தி’, மற்றொன்று ‘கவடி’. அவ்விரண்டு சொற்களும் இந்த நாவலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

நிமித்திகர்கள் கவடி நிரத்தி நோக்கினர்

நிமித்திகர் கவடி நிரத்தி மெய்கண்டு உரைக்க

‘நிரத்தி’, ‘நிரத்துதல்’ என்றால், ‘பரப்பி’, ‘பரப்புதல்’ என்று பொருள். சரி, அது என்ன ‘கவடி’?

இந்தச் சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.

“வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்

கவடி வித்திய கழுதையே ருழவன்

குடவர் கோமான் வந்தான் நாளைப்

படுநுகம் பூணாய் பகடே மன்னர்

அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்

(சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை, 225-229)

வடநாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து. கழுதை பூட்டி ஏரினை உழுது, வெள்வரகை விதைத்தவன் குடவர் (இடையர்) நாட்டு கோமான் வந்தான். நாளை பகையரசர்களின் காற்றறையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாடு பெரும்மங்கலமாகும். ஆகலின் பகடே நியும் நுகம்பூண்டு உழுவாய். விழாக்கொண்டு உழும் உழுவர்.

கவடி – வெள்வரகு. இது ‘உண்ணாவரகு’ எனவும் கூறப்படும். பகைவர் அரணையழித்துக் கழுதையேரால் உழுவித்து வெள்ளை வரகும் கொள்ளும் வித்திடுவர். இது வென்ற மன்னர் தோற்ற மன்னரின் நிலத்தை அமங்கலம் செய்யக்கூடிய செயலில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கவடியைத்தான் நிமித்திகர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நாவலில்தான் யுயுத்ஸு பேருருக்கொள்கிறார். கௌரவர்களுள் மிக இளையவரான இவர் விதுரரைப் போலவும் கர்ணனைப் போலவும் பிறப்பால் ஓரடி விலக்கித் தள்ளியே எல்லோராலும் பார்க்கப்பட்டவர். கர்ணனைப் போலவே தன் மனைவியால் புறக்கணிக்கப்பட்டவர் யுயுத்ஸு. கௌரவர்களின் முற்றழிவில் விடிவெள்ளியாய் நின்று அஸ்தினபுரிக்கு நம்பிக்கை ஒளியாய் இருப்பவர் இவர் ஒருவரே. அவரிடமே பெரும்பொறுப்புகளைக் கையளிக்கிறார் தர்மர். அவரிடம் தர்மர் கூறுகிறார்,

விந்தை இதுதான். இன்று அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உனது ஆட்சியிலிருக்கிறது. கௌரவ நூற்றுவரையும் வென்று இளைய கௌரவனாகிய உன்னிடம் மண்ணை ஒப்படைத்திருக்கிறோம். இதோ, என் ஊழையும் உன்னிடமே அளித்திருக்கிறேன்என்றார்.

யுயுத்ஸு, அதுவும் நன்றே. மண்ணுக்கான அனைத்துப் போர்களும் மண்ணில் எப்பற்றும் இல்லாதவரிடமே அதைக் கொண்டுவந்து சேர்க்கின்றனஎன்றான்.

போர் நிறைவுற்றது இனி நீர்க்கடனுக்குப் பின்னர் இயல்புவாழ்வு திரும்பும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த பொழுதில், அஸ்வத்தாமனின் நுதல்விழியைக் கொண்டுவந்தால்தான் போர் முடிவுக்கு வரும் என்று திரௌபதி ஆணையிடுகிறாள். அர்சுணன் தயங்குகிறான். ஆனால், உடனே, அந்த ஆணைக்கு அடிபணிந்து, பீமன் புறப்படுகிறான்.

முன்பு திரௌபதியின் அகவிருப்பத்திற்காக அகத்தால் மட்டுமே நுகர்ந்தறியும் மெய்மையின் மலர் வடிவமான ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலரைத் தேடிச் சென்றான் பீமன். அந்தத் தேடல் பயணம்தான் வெண்முரசு நாவல் வரிசையில் ‘மாமலர்’ என்ற நாவல். இப்போது அஸ்வத்தாமனின் நுதல்விழியைக் கொய்துவரச் செல்கிறான்.

தன் மனைவியின் கனவினை நிறைவேற்றுபவனே சிறந்த கணவன். அவனே அவளுக்கு வாழ்நாள் காதலனாகவும் இருக்கத் தகுதியுடையவன். பெண்ணின் ஆசைகளையும் விருப்பங்களையும் மட்டுமல்ல கனவினையும் நிறைவேற்றுபவனே அந்தப் பெண்ணுக்குக் கணவனாகவும் வாழ்நாள் காதலனாகவும் இருக்க வல்லவன். அத்தகையவனைப் பெண்கள் பெறுவது அரிது.

திரௌபதிக்கு ஐந்து கணவன்கள். ஆனால், அதில் பீமன் மட்டுமே கணவனாகவும் வாழ்நாள் காதலனாகவும் இருக்கத் தகுதியுடையவன். பீமனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் போர்நிகழ்ந்தால் பீமன் அழிவது உறுதி என்பதை உணர்ந்த அர்சுணன், பீமனைக் காப்பதற்காகவே தான் அஸ்வத்தாமனுடன் போரிடுகிறான். போர் நிகர்நிலையை அடைகிறது. அஸ்வத்தாமன் தன்னுடைய நுதல்விழியைத் தானே அர்சுணனுக்கு அளிக்க முனைகிறான். அர்சுணன் அதனைப் பெறத் தயங்குகிறான். ஆனால், அதைப் பீமன் பெற்றுக் கொள்கிறான்.

இந்த நாவலில் ‘நிமித்தவியல்’ பற்றிய நீண்ட உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது மானுடப் பெருவாழ்வு.

நீர்க்கடன் நிகழ்வின் போது பேரரசி குந்தி தேவி வருகிறார். பெண்கள் அங்கு வருவது முறையல்ல எனினும் அங்கு வந்து ஒரு வரலாற்று உண்மையை உரைத்துச் செல்கிறார். கர்ணனைத் தன் மூத்த மகன் என்று உரைத்து, தர்மரிடம், ‘அவனுக்கும் சேர்த்து நீர்க்கடன் செய்’ என ஆணையிடுகிறார். ‘காலங்கடந்து அறிவிக்கப்படும் எச்செய்திக்கும் எப்பொருளும் இல்லை’ என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

திருதராஷ்டிரர் சஞ்சயனை முற்றாக விலக்கிவிடுகிறார். அவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அப்போது சஞ்சயனின் புன்னகை, இளைய யாதவரின் புன்னகையைப் போலவே இருக்கிறது. தெய்வம் மானுட உருவில் வருவதும் வாழ்வதும் உண்மைதான் போலும்.

இந்த நாவலில் மட்டுமல்ல ‘வெண்முரசு’ நாவல்வரிசை முழுக்கவே அதாவது, தர்மரின் பதின்பருவத்திலிருந்தே அவரிடம் ஓர் உளப்போராட்டம் இருக்கிறது. அவரின் மனம் எல்லாவற்றுக்கும் அறத்தராசினைத் தூக்கிப்பிடித்து, இல்லாத பொருளுக்கு எடையிட்டுக்கொண்டே இருக்கிறது. சமனற்ற தராசுத் தட்டுகளைப் போலவே அவரின் உள்ளம் எப்போதும் இரண்டு தரப்பாகப் பிரிந்து, அலையாடிக் கொண்டிருக்கிறது. அவரின் உள்ளத்தைச் சமன்படுத்த வல்லவர்கள் இருவர்தான். ஒருவர் இளைய யாதவர். மற்றொருவர் சகதேவன்.

பாண்டவர்கள் ஐவரில் நால்வர் புறத்தில் அலையாடுகின்றனர். தருமர் மட்டும் அகத்தில் வாழ்நாள் முழுவதும் அலையாடுகிறார். அவர் அடையும் உளப்பதற்றத்தைப் பார்த்தால், ‘ஒருவேளை அவர் தவறுதலாகத் தனக்குத் தானே நீர்க்கடன் செய்துகொள்வாரோ?’ என்று கூட எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அவர்பெற்ற அறமெய்மையில் அதற்கு இடமிருந்தால், அதையும் செய்யக் கூடியவர்தான் தர்மர்.

இந்த நாவல் குருஷேத்திரப் போரை வாசகரின் மனத்திற்குள் மீண்டும் நிகழ்த்தி, அதன் பின்விளைவுகளை வாசகரின் கண்களுக்கு முன்பாகவே கணக்கிட்டு, இறுதியில் கிடைப்பது இந்த ‘வெறுமை’ என்று முடிவாகச் சொல்லிவிடுகிறது. ‘ஆம்! வெறுமைதான் எல்லாம். நாம் செய்யும் எல்லாமே இந்த வெறுமைக்காகத்தான்’ என்பதை அறுதியிட்டு உரைக்கிறது இந்த நாவல்’ என்றே நான் கருதுகிறேன்.

முனைவர் . சரவணன், மதுரை

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைகவிதையை அறிதல்
அடுத்த கட்டுரைகிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்