அன்புள்ள ஜெயமோகன்
எப்படி இருக்கிறீர்கள்? இண்டியன் எக்ஸ்பிரஸில் உங்கள் கட்டுரையைப் படித்தேன்.உங்கள் நோக்கம் தெளிவாக வெளிப்ட்டுள்ளது. நான் இதேபோன்ற ஒரு கட்டுரையைஎழுதியிருக்கிறேன்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=50901221&format=html
நம் இதழியல் அறிவுஜீவிகள் உருவாக்கும் பிம்பங்களைப்பற்றி நான் சில விஷயங்களைச்சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தியாவைப்பற்றி இந்த வகையான பிம்பங்களையே நம்முடைய ஐ ஏஎஸ் பயிற்சி மாணவர்களும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாளிதழ்களில் அருந்ததி ராய்போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளில் இருந்து இந்த சித்திரத்தைஉருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் நாளிதழ்களை மட்டுமல்லாமல் நூல்களையும்படிக்கும்படி நான் சொல்வதுண்டு. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு நாளிதழ்களேபோதுமானவை. இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் இப்படி இந்தியாவின் நிர்வாகத்துக்குள்ளும்ஊடுருவுகிறது
தண்டபாணி
அன்புள்ள தண்டபாணி அவர்களுக்கு,
தங்கள் கருத்து முற்றிலும் உண்மையானது.நம்முடைய இடதுசாரி- ‘முற்போக்க‘¡ளர்களுக்கு இந்தியத்தன்மை கொண்ட எதுவுமேபழமையானது, ஆகவே மானுட விரோதமானது என்ற எண்ணம் உண்டு. காலனியாதிக்கம் மீது நம்இடதுசாரிகளுக்கு உண்மையான எதிர்ப்பு இருந்தது இல்லை. காலனி ஆதிக்கம் இந்தியா என்ற ‘இருண்ட நிலப்பரப்பை‘ மீட்க வந்தது என்றே அவர்கள் எண்ணியிருந்தார்கள். அந்தச்சித்திரம் மார்க்ஸில் இருந்து வந்தது. எம் என் ராய் போன்றவர்களால் விரிவாகஉருவாக்கம்செய்யபப்ட்டது.
உண்மையில் மார்க்ஸியமேகூட இங்கே ஒரு நவீன ஐரோப்பிய தத்துவமாகவே அறிமுகம்ஆகியது. மார்க்ஸியத்தில் உள்ள ஐரோப்பியமையநோக்கு மிக அடிபப்டையானது. ஆகவேதான்இடதுசாரிக்ள் முழுமனத்துடன் பிரிட்டிஷாரை எதிர்த்தது இல்லை. பின்னர் ஐரோப்பாஇரண்டாகியபோது அவர்கள் ரஷ்ய பக்கம் சேர்ந்துகொண்டார்கள், அவ்வளவுதான்.
இந்த ஐரோப்பிய வழிபாட்டு நோக்கு நம் இடதுசாரிகள் வழியாக ஊடகங்களில் குடியேரியது.ஆரம்பகால இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள்தான். அவர்கள் உருவாக்கியஇந்திய நிராகரிப்பு என்ற கருத்தியல் அடித்தளம் மீதுதான் இன்று இந்திய வெறுப்பைநிலைநாட்டி வளர்க்கிறார்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் இன்டியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை சற்றே கடுமையானது. இந்திய ஆங்கிலஎழுத்தாளர்கள் அதிகமும் மேல்தட்டைச்சேர்ந்தவர்கள். அவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவாழ்க்கையை தெரிந்த மொழியில் எழுதுகிறார்கள். அதில் என்ன தவறு? அதை வாசிக்கஅவர்களுக்கு வாசகரக்ள் இருக்கிறார்கள். அந்த வாசகர்களுக்கு இந்திய எழுத்து ஆங்கிலம்மூலமாகவே சென்று சேரமுடியும். அதில் என்ன பிழை இருக்கிறது? ஏன் நாம் இந்திய ஆங்கிலஎழுத்தை வெறுக்க வேண்டும்?
செல்வம்
அன்புள்ள செல்வம்
1. நான் இந்திய ஆங்கில எழுத்தை வெறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை. ஆனால் அதுமட்டுமேஇந்திய இலக்கியம் என்று ஊடகங்கள் ஓயாமல் சொல்லி நிலைநாட்டுவதை மட்டுமேஎதிர்க்கிறேன். வைக்கம் முகமது பஷீரை விட அருந்ததி ராய் முன்னிறுத்தப்படுவதை.சிவராம காரந்தை விட அர்விந்த் அடிகா முன்னிறுத்தப்படுவதை எதிர்க்கிறேன். உலகம்முழுக்க நம் இலக்கியத்தின் மேலோட்டமான ஒரு பகுதி மட்டுமே நம் எழுத்தாகக் கொண்டுசெல்லப்படுகிறது. இதையே எதிர்க்கிறேன்
2. இந்திய ஆங்கில எழுத்து ‘இயல்பாக‘ ஓர் வாழ்க்கை நோக்கை முன்வைப்பதில்லை.அவர்கள் மேலைநாட்டில் அங்கீகாரம் பெற துடிக்கிறார்கள். ஆகவே மேலைநாடுகள்நம்மைப்பற்றிக் கொண்டுள்ள மனச்சித்திரத்தை அவர்களும் முன்வைக்கிறார்கள். அவர்களைமகிழ்விக்க எண்ணுகிறார்கள். மேலைநாட்டு சராசரி மனம் இந்தியாவை ஓர் இருண்ட கண்டமாகபார்க்க விரும்புகிறது., ஆகவே இவர்களும் அதையே ழுதுகிறார்கள்.
3 நல்ல இலக்கியம் ஒரு சமூகத்தின் ஆழத்துக்கு மொழி வழியாகச் செல்லக்கூடியது. நம்மக்கள் பேசாத ஒரு மொழியில் நாம் நம் மக்களின் ஆழங்களை சென்று தீண்ட முடியாது
இவையே என் கருத்து
ஜெ
ஜெ:
இந்த கட்டுரையை இன்று படித்தேன்.http://bostonreview.net/BR25.1/chandra.html.
அவுட்லுக் பத்திரிக்கையில் நீங்கள் சொன்ன “five star hotel சாம்பார்” போல் பலஇந்திய-ஆங்கில எழுத்துக்கள் இருந்தாலும், அவையும் ஒரு வகை உலகத்தை உண்மையுடன்பிரதிபலிப்பதாகவே படுகிறது. ஆனால், அடுத்த நிமிடமே, பஷிரையோ, அசோகமித்திரனையோ, தங்கள் எழுத்துக்களையோ படிக்கும் போது, அந்த எண்ணம் மாறுகிறது. அந்த கனத்தில்மற்றவை தட்டையாகவே தெரிகிறது.
எனக்கு இது புரியாததாகவே உள்ளது. ஆனால் மேலுள்ள கட்டுரையின் மாற்றுப்பார்வைகொஞ்சம் சிந்திக்க வைத்தது. இது பற்றி உங்கள் எண்ணங்களை அறிய ஆவல்.
அரவிந்த்
அன்புள்ள அரவிந்த்
இந்தக்கட்டுரையின் தரப்பும் ஒரு வலுவான இடத்திலேயே இருக்கிரது. இந்திய ஆங்கிலஎழுத்தின் மேல்தளத்தன்மைக்கு எதிராக நம் உள்ளூர் எழுத்தின் பயிற்சியற்ற தன்மையையும்வெற்றுத்தகவல்முன்வைப்பையும் ‘களங்கமின்மை‘ என்று சொல்லி நியாயப்படுத்தக்கூடாது.கற்பனாவாத நோக்கு எதில் இருந்தாலும் அது அபத்தமே.
நான் சொல்வது இதுதான்.மேலைநாட்டில் இலக்கியம் என்று சொல்லப்படுவதிலேயே இரண்டுவகைஉள்ளது. ஒன்று ஒரு கேளிக்கைப்பொருளாக காணப்படும் எழுத்து. பெருவாரியான வாசகர்கள்விரும்புவது. ஆகவே சிக்கலற்றது, ஆழமும் அற்றது. இன்னொன்று, வாழ்க்கையைச் சொல்லும்சவாலை எடுத்துக்கொண்டமையாலேயே புரிந்துகொள்ளச் சவால் விடக்கூடிய நுண்மையானஎழுத்து. பாவ்லோகொய்லா முதல்வகை என்றால் மிலோஷவிக் பாவிக் இரண்டாம் வகை. சினுவாஆச்சிபி முதல் வகை என்றால் பென் ஓக்ரியும் வோலெ ஸொயிங்காவும் இரண்டாம் வகை.நம் இந்தியஆங்கில எழுத்துக்கள் அனைத்துமே முதல்வகையைச் சார்ந்தவை.
ஒருபண்பாட்டின் உள்ளுறைகளுக்குச் செல்ல உழைப்பு, கவனம், நல்லெண்ணம் தேவை. அவையேதும்இல்லாதவர்களுக்காக இவை எழுதப்படுகின்றன. அவற்றை மட்டும் நம் இலக்கியமாகமுன்வைத்தலின் வழியாக நம் ஊடகங்கள் நம் இலக்கியத்தையும் பண்பாட்டையும்சிறுமைப்படுத்துகின்றன.
நம்முடைய சீரிய இலக்கியத்தை நாம் உலகெங்கும் கொண்டுசென்றால்மட்டுமே நாம் நம்மைக் கொண்டு செல்கிறோம். அது மேலைநாட்டவர்வர்களுக்கு உள்ளே நுழைய கஷ்டமானதாகவேஇருக்கும். அது அவர்களுக்காக அமைக்கப்பட்டதில்லை என்பதே காரணம். ஆனால் அந்த ரசனைநோக்கி அவர்களைக் கொண்டுவருவதே சவால்
அச்சவாலை இந்திய பண்பட்டுப்பிரச்சாரகர்கள்இந்திய மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஜெ