ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்
வெளியூரில் இருக்கிறேன். இணைய இணைப்பு சீராக இல்லை. தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்.தமிழகத்தில் ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கத்தை அரசு முன்னெடுக்கவுள்ளது. சட்டச்சபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இவ்வறிவிப்பு வருவதை சொல்லியிருந்தனர். எனினும் அந்த அறிவிப்பு நேரடியாக சட்டச்சபையில் முன்வைக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்ப்பது ஒரு மெல்லிய சிலிர்ப்பை அளித்தது.
மிக முக்கியமான முயற்சி. இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு பெருந்திட்டம். ஒருவேளை உலகிலேயே கூட இது முதல்முறையாக இருக்கலாம். இதை திட்டமிட்டு முன்னெடுக்கும் கல்வி,நிதி அமைச்சர்களும்; வடிவமைத்து நிகழ்த்தவிருக்கும் அதிகாரிகளும் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். நம் தலைமுறையினர் அவர்களை நினைவுகூர்வர்.
அனைத்துக்கும் அப்பால் முதல்வர் ஸ்டாலின் போற்றுதலுக்குரியவர். இந்த திட்டம் திமுக அளித்த வாக்குறுதிகளில் இல்லை. குறையறிந்து தானாகவே செய்யப்படும் முயற்சிகளிலேயே அரசு மக்கள் மீதான தன் அக்கறையை வெளிப்படுத்துகிறது. இவ்வரசு இதுவரை எடுத்த திட்டங்களில் இதுவே தலையாயது. ஒரு முதல்வராக நிர்வாகத்திறனையும் இணையாகவே பெருங்கருணையையும் வெளிப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் வரலாற்றில் இடம்பெறுவார்.
வாழ்க! பொலிக!
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்