எழுத்தாளன் என்னும் நிமிர்வு- கடிதங்கள்

எழுத்தாளன் என்னும் நிமிர்வு

அன்புள்ள ஜெயமோகன்

இன்றைய உங்கள் எழுத்தாளன் கட்டுரை படித்த உடன் இதை எழுதுகிறேன். நீங்கள் கூறியிருப்பதை முழுக்க  உங்கள் வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களிடம் உள்ள அந்த தன் அறிதல் தான் மிக முக்கியமான பிரத்யேகமான பெருமையாகவே என்னைப் போன்ற உங்கள் வாசகர்கள் எண்ணுவார்கள் என்றே கருதுகிறேன்.

நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவ்வளவே.

நன்றி

சுஜா.

***

அன்புள்ள ஜெ

இன்றைய உங்கள் கட்டுரை என்னை என்னவென்று தெரியாத உணர்வுகளுக்குள்ளாக்கியது. நான் என்றும் உங்கள் அணுக்கமான வாசகியாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசு எழுதும் நாட்களில் உங்களுக்கு மிகமிக அருகே இருந்துகொண்டிருப்பவளாகவே நினைத்தேன். உண்மையில் நீங்கள் அடைந்த எல்லா கொந்தளிப்புகளையும் நான் உணர்ந்திருந்தேன். அதெல்லாம் ஒரு தவம் போல. வெண்முரசிலேயே வருவதுபோல ஐந்து நெருப்பு நடுவே தவம் செய்து உருகி பொன்னாகி மீண்டு வருவது. யுதிஷ்டிரர் அவ்வாறு கந்தமாதன மலையில் உருகி மீள்வதை வாசித்தபோது அது உங்கள் அனுபவம் என்றுதான் நானும் உணர்ந்தேன். நான் எத்தனையோ நாட்கள் வெண்முரசின் வரிகளை வாசித்து கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

உங்கள் வாசகர்கள்தான் உங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் மட்டும்தான் உங்களை அறிந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இலக்கிய வம்பும் அரசியல்வம்பும் மட்டும்தான் தெரியும். பெரும்பாலானவர்களுக்கு இங்கே காமமும் சண்டைசச்சரவும் மட்டும்தான் தெரியும். அவர்களிடம் வெண்முரசின் ஆசிரியன் என்று சொல்லி நிற்கமுடியாது. உடனே அவமானப்படுத்தவே அவர்களுக்குத் தோன்றும். நீங்கள் பேசிக்கொண்டிருப்பது வெண்முரசின் இந்நாள் வாசகர்களிடமும் நாளைய வாசகர்களிடமும். அந்த நிமிர்வே உங்கள் குரலில் வெளிப்படுகிறது.

ஆர்.ராஜலக்ஷ்மி

***

அன்புள்ள ஜெ

உங்கள் குறிப்பைப் பார்த்தபோது சட்டென்று ஒரு அழுகைதான் வந்தது. ஏன் என்று தெரியவில்லை. உங்களை நான் மிக நெருக்கமான ஓர் ஆசிரியராகவே நினைத்து கொண்டிருக்கிறேன். முன்பு நீங்கள் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும்போது ‘கருத்துக்களின் ஆண்மை’ என்று சொன்னீர்கள். அதை உங்களிடம் நான் பார்க்கிறேன். சிறுமைகள் உங்களில் அமையாது. அதெல்லாம் எரிந்து எரிந்து போய்விடும். நிமிர்வு என்பது தன் எல்லைகளை எல்லாம் தெரிந்தவர்களுக்கே வருவது.

இங்கே சிறுமைகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆண்கள் என்பவர்கள் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் என்பவர்களும் அலைகிறார்கள். கெஞ்சிக்கொண்டும் மன்றாடிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்தவகையான கெஞ்சல்களும் குரல்களும் பிடிக்கும் பெண்களும் உண்டுதான். ஆனால் சிந்தனையின் ஆழத்தை அறிந்தவர்களுக்கு நிமிர்வுதான் பிடிக்கும். நான் உங்களை வாசிக்க வந்ததே கோவையில் ஓர் உரையில் நீங்கள் உங்களைப் பற்றிச் சொன்ன வரியில் இருந்த நிமிர்வைக்கண்டுதான். பெரும்பணக்காரர்களும் பெரிய படிப்பாளிகளும் பெரிய நிறுவனங்களை நடத்துபவர்களும் அமர்ந்த அவையில் தலைதூக்கி நின்று அப்படி நிமிர்வுடன் பேச ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி கொண்டவர்கள் அதை உணர்ந்தும் இருப்பார்கள்.

அந்தத் தகுதி வருவது ஆழ்ந்து உங்களுக்குள் செல்வதன் வழியாகத்தான். எதையெல்லாம் எரித்துக்கொண்டு மேலே வந்தீர்கள் என்று நீங்கள் சொல்லும்போது ஒரு விம்மல்தான் வருகிறது. வேறெப்படி அவ்வளவு மேலே செல்லமுடியும் என்றும் தோன்றுகிறது

எம்

முந்தைய கட்டுரைகவிஞர் இசை, பேட்டி
அடுத்த கட்டுரைஒரு குடும்பம் சிதைகிறது – சுரேஷ் பிரதீப்