சுவாமி வியாச ப்ரசாத் வலை தளம்
சுவாமி வியாச ப்ரசாத் வகுப்புகள், காணொளிகள்
ஊட்டி ஆசிரமத்துக்குச் சென்று ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று எனக்குள்ள குழப்பமான மனநிலையில் நான் சென்று நித்யாவிடம் நிற்க முடியும் என்று தோன்றியது. ஆசிரமம் செல்வதற்கு வியாசப்பிரசாத் சுவாமியிடம் மெயில் செய்து கேட்டிருந்தேன். வந்த அன்றே திரும்பிச் செல்வதாக இருப்பதால் வரலாம் என்றும் யாரையும் ஆசிரமத்தில் அனுமதிப்பதில்லை என்றும் மெயில் செய்திருந்தார்.
காலை 5.30 மணி பஸ் பிடித்தேன். குறைவான ஆட்களுடன் கிளம்பியது. கல்லார் வரை யூட்யூபில் உரை கேட்டபடி சென்றேன். கல்லார் தாண்டியதும் டவர் இல்லாததால் கேட்க முடியவில்லை. மழையினால் காடு கனத்து அதிகாலை வெயிலுக்கேற்ப பச்சையும் பொன்மஞ்சளும் செந்தளிர்நிறமுமாக மாறிக்கொண்டிருந்தது. சாலையோரம் நிற்கும் குரங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது, ஆறுதலாக இருந்தது. மேலே ஏறுவதற்குள் பஸ் நிறைந்துவிட்டது.
பூக்களைப் பார்க்கும்போது நித்யாவை நினைத்துக் கொள்வதுண்டு. அங்கேயே பூக்கடையில் அரளியும் மல்லிகையும் வாங்கினேன். 9.00 மணிக்கு ப்ரேயர் இருப்பதாக சுவாமி முந்தின நாள் சொல்லியிருந்தார். அதற்குள் வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். வந்து சேர்ந்துவிட்டிருந்தேன்.
ஆசிரமத்தின் சுற்றுவேலி வேலைகள் முடிந்து கம்பிக்கதவு போடப்பட்டிருந்தது. வாசலில் நின்று பார்க்கும்போதே முன்னைவிட பசுமையாக இருப்பதாகத் தோன்றியது. வாசலில் நின்று அழைக்கவும் கஸ்தூரி வந்து கதவு திறந்தார். நலம் விசாரித்தபடி மீண்டும் பூட்டினார். யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் சுவாமியும் அப்புவும் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் தான் தினமும் வந்து சமைத்துவிட்டுச் செல்வதாகவும் சொன்னார்.
நான் பழங்கள் வாங்கிச் சென்றிருந்தேன். அவற்றைக் கொண்டு போய் சுவாமியிடம் கொடுத்து விட்டு வரலாம் என்று மேலேறிச் சென்றேன். அவர் அவருடைய அறையை பூட்டிக் கொண்டிருந்தார். “Namaskaram Swami” என்றேன். வழக்கம் போல “Namaskaram Namaskaram! Good to see you yaar! It’s been a long time seen your smiling face” என்றார் மலர்ந்து சிரித்தபடி.
நான் அருகில் சென்று கால்தொட்டு வணங்கி பழங்கள் இருந்த பையைக் கொடுத்தேன். “ஓ குட்!” என்றபடி வாங்கி வைத்துவிட்டு “பிரார்த்தனைக்கு நேரமாயிற்று போகலாம்” என்றார். கையில் வைத்திருந்த பிஸ்கட்டைப் பொடித்து அருகிலிருந்த மீன்குளத்தில் போட்டார். சென்ற வருடத்தில் பராமரிப்புப் பணி நடந்து புதியதாக இருந்தது. கையளவு விதவிதமான மீன்கள் இருந்தன. “They like biscuits” என்று கைகளை உதறியபடி வந்தார். “வழக்கமாகக் கேட்பதைவிட அதிக பறவைக்குரல்கள் கேட்கிறது” என்றேன். “ஆம், இங்கு யாரும் வருவதில்லை, அமைதியாக இருக்கிறது, தொந்திரவில்லாமல்” என்றார். அவர் பெரும்பாலும் தனிமை விரும்பி. வகுப்புகளில் கலந்துகொள்வதும் அவர் வகுப்பு எடுப்பதையும் மிக விரும்புவார். அதற்கு அப்பாற்பட்ட கூட்டங்களில் தப்பியோடுவது போன்ற பரபரப்புடனே நிற்பார்.
பிரார்த்தனைக்கு வரும் வழியிலேயே “இரண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்று உற்சாகமாகச் சொன்னார். நான் வீடியோக்கள் பார்த்தேன் என்றும் உள்சென்று கேட்கவேண்டும் என்றும் தொடர்ந்து பயிற்சி செய்ய எனக்கு சொல்லித் தருமாறும் கேட்டபடி பின்னால் நடந்தேன்.
லைப்ரரி திறந்திருக்கிறது என்றும் இளைப்பாற வேண்டுமெனில் அங்கு அமரலாம் என்றும் சொன்னார். பிரார்த்தனைக்கு வருகிறேன் என்று சொன்னேன்.
தலையசைத்தபடி ”இன்று தைத்ரிய உபநிஷதம் படிக்கிறோம் வா” என்றபடி விரைந்தார். அவர் விரைந்த வேகம் நித்யாவே கேட்பதற்காக அமர்ந்திருப்பது போல இருந்தது. அவர் மட்டுமே இருந்தாலும் குறித்த நேரத்தில் பிரார்த்தனை என்பது தவறுவதில்லை. உள்ளே நுழையும் வேகத்திலேயே அலமாரியிலிருந்து தியான மஞ்சுஷாவை எடுத்து என் கையில் கொடுத்தார். ஏற்கனவே அமர்ந்திருந்த அப்பு எனக்கும் ஒரு அமரும் மெத்தை எடுத்துக் கொடுத்தார். நமஸ்காரம் என்றபடி அமர்ந்துவிட்டேன்.
பிரார்த்தனை தொடங்கிவிட்டது. என் செல்போனை அணைக்கவில்லை என்ற பதற்றம் எழுந்தது. ஆனால் அதை ஒதுக்கி அவர்களோடு சேர்ந்து கொண்டேன். பக்க எண்கள் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. தேடிக்கண்டடைய வேண்டியிருந்தது. தெய்வ தசகம், பிறகு தைத்ரிய உபநிஷதம் வாசித்த பிறகு அதற்கான குரு முனி நாராயண பிரசாத் அவர்களின் விளக்கம் ஒரு பக்கம் வாசிக்கப்பட்டது. இங்கு பிரார்த்தனை என்பதே அறிந்துகொள்ளல் தான், எதையும் வேண்டுதல் அல்ல.
அவர் கையிலிருந்த புத்தகமும், அவருடைய படிக்கும் முகமே என் மனதை இழுத்துக் கொண்டிருந்ததால் சொற்களைக் கவனிப்பதற்காகக் கண்களை மூடி அமர்ந்திருந்தேன். பிரம்மம் பேரிருப்பாக (Absolute) உருவகப்படுத்தப்படுகிறது. அதுவே இங்கு எண்ணற்ற உருவங்களாக விரிந்திருக்கிறது. வானிலிருந்து விரிந்திறங்கிப் பரவும் மேகம் போல ஒரு சித்திரம் எழுந்தது என்னுள்.
இவ்வாறு விரிந்ததை அறிய முதலில் உணவு, பிராணன், மனம், அறிந்துகொள்ளல், ஆனந்தம் (Food, Vital Breath, Mind, Understanding, Happiness) என்று கவனம் கொள்ள வேண்டும் என்று வரிசைப்படுத்தியிருந்தது. இவை அனைத்தும் பொருண்மையான உருவகங்களாக என்னில் படிந்தன. இன்னும் செறிவான மொழியில் விளக்கங்கள். “ஆன்மாவின் முதற்கடமை தன்னை அறிவதே” என்ற சொற்றொடர் பலமுறை நான் அங்கு கேட்டது. ஆனால் இம்முறை தனித்துக் கேட்டது, நான் கேட்டுவந்த கேள்விக்கு விடைபோல.
நித்யாவின் வீணையும் புகைப்படமும் நடராஜகுருவின் புகைப்படமும் இருந்த இடத்தில் ஒரு குத்துவிளக்கும், சுவற்றில் மாட்டியிருந்த நாராயண குரு புகைப்படமும் மட்டுமே இருப்பதை பிரார்த்தனை முடிந்தபின் தான் பார்த்தேன். நித்யாவின் புகைப்படமும் நடராஜ குருவின் புகைப்படமும் இரு பக்கங்களிலும் இருந்த புத்தக அலமாரிகளின் மேல் வைக்கப்பட்டு பூமாலை போடப்பட்டிருந்தது. வியாசா சுவாமி அவர் அறைக்குச் செல்லக் கிளம்பினார். என்னிடம் ”உனக்கு இளைப்பாற அமர வேண்டுமெனில் லைப்ரரி திறந்திருக்கிறது” என்றார்.
“நான் சமாதிக்குச் சென்றுவிட்டு வருகிறேன்” என்றேன்.
“சரி சமாதியைத் திறந்து வைக்கிறேன்” என்று முன்னால் சென்றார்.
நான் நின்று புதிய புத்தகங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்த்தேன். நிறைய மலையாளப் புத்தகங்கள்.
வெளியே வந்தபோது மழை பெய்யத் தொடங்கியிருந்தது. என் கைப்பையைத் தூக்கிக்கொண்டு மழைக்குளிரில் மூச்சிரைத்தபடி மேலேறிச் சென்றேன். இம்முறை செடிகளில் நிறைய பூக்கள் இருந்தன. ஒருவித அடர்வயலட்நிற பூக்கள். அடர்சிவப்புநிற டேலியா, வெள்ளை மஞ்சள் இதழ் கொண்ட பூக்கள், பார்க்கப் பார்க்க மனம் மேலும் கனத்து நெகிழ்ந்து கொண்டிருந்தது.
சமாதி கதவைத் திறந்துவிட்டபின் அவர் அறைக்குச் செல்லும்பாதையில் நின்று நான் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். “புற்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன பார்த்து கால்வைத்து வா” என்றார். மழை அதன் மறுவடிவம் போல புல்வெளிமீது நிறைந்திருந்தது.
எவரும் அதிகம் நடக்காததால் பாதையிலும் புல் படர்ந்திருந்தது. “காம்பௌண்ட் சுவர் வேலை முடிந்துவிட்டதால் காட்டுமாடுகள் வருவதில்லை. எனவே செடிகளில் பூக்கள் நிறைந்திருக்கின்றன” என்றார்.
என்னிடம் பேசும்போது அவரிடம் ஒரு நாடகத்தில் பேசும் ‘டயலாக் பாணி’ வந்துவிடும். குதூகலமான அசைவுகள். குழந்தைகள் செய்வது போல இருபக்கமும் சாய்ந்து, கைகளை உயர்த்தி, விழிகளை விரித்து நடனம் போன்ற அசைவுகளுடன் பேசுவார். நான் சிரிக்கத் தொடங்கினால் ”சிரிக்காதே” என்று வழக்கமான குருமார்களின் இறுக்கத்தை நடித்துக் காண்பிப்பதும் உண்டு.
அன்றைய பிரார்த்தனையில் வாசிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு “இதற்கு முந்தைய வாசிப்பில் நம்மிலிருந்து பிரம்மத்திற்கான பயணம் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று சொன்னார். நம்மிலிருந்து பிரம்மத்தை அடைதல் ஒருபயணம், பிரம்மத்திலிருந்து நம்மை அறிதல் ஒரு பயணம். Not only, we are praying to God, God is also praying to us என்று கையை உயர்த்தி வானுக்கும் பூமிக்குமாகச் சுட்டியபடி குருவின் வாக்கியத்தைச் சொன்னார். இவை சந்திக்கும் புள்ளியை விளக்க வார்த்தைகள் இல்லை, அந்த இடம் மௌனம், வார்த்தைகளால் விளக்க முடியாதது. அது நம் உள்ளுணர்வாலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்று சொன்னார்.
தைத்ரிய உபநிஷதத்துக்கான குரு முனி நாராயணபிரசாத் அவர்களின் விளக்கம் மிகப் புதிதாக விளங்கிக்கொள்ள எளிதாக இருப்பதாக வியாசா சுவாமி சொன்னார். நான் தலையசைத்து கவனித்துக் கேட்டேன்.
“எங்கிருந்தோ மீண்டு வந்தது போல் இருக்கிறது இரண்டு வருடங்களாக இருந்த வேலையினால் எதையும் படிக்காமலாகிவிட்டேன். இப்போது பதிப்பக வேலைகள் மட்டுமே இருப்பதால் இனிமேலாவது தொடர்ந்து படிக்கவேண்டும்” என்று சொன்னேன்.
சிரித்து, “சரி போய்விட்டு வா. காலை உணவுக்குச் செய்த உப்புமா இருக்கிறது. சாப்பிடு லைப்ரரியில் இரு” என்று சொல்லி மேலேறிச் சென்றார்.
நான் நித்யாவின் சமாதிக்குள் செல்வதற்குமுன் மூச்சு வாங்கி என்னை நிதானப்படுத்திக்கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நாதாங்கி சத்தமிட்டது தவிர்க்க முடியவில்லை. குளிருக்கு இறுகியிருக்கலாம். உள்ளே விளக்கு எதுவும் ஏற்றப்பட்டிருக்கவில்லை. ஊதுபத்தியும் இல்லை. நான் கொண்டு சென்ற பூவை சமாதிக்கு எப்படி அணிவிப்பது என்று எண்ணி எடுத்து வைத்தேன். இத்தகைய அலங்காரக்கலைகள் எனக்கு வருவதில்லை. நான் மெனக்கெட்டு பயில்வதும் இல்லை. இம்மாதிரி நேரங்களில் ஒரு குற்ற உணர்வு தோன்றும். ஒரு வட்டமும் அதனுள் ஒரு நட்சத்திரமுமாக அமைத்தேன்.
சமாதிக்கு வலப்புறம் நான் எப்போதும் அமருமிடத்தில் இருந்த மெத்தை மேல் அமர்ந்தேன். இங்கு எந்தத் துயரத்தையும் வெளியிடக்கூடாது என்று ஒரு தடை மனதுள் தோன்றியிருந்தது. பிரார்த்தனைக்கான மந்திரத்தை சொல்லிவிட்டு ஃபோனை அணைத்துவிட்டு அமர்ந்தேன்.
அது ஒரு உரையாடல். நித்யா என்ன சொல்லுவார் என்று எனக்குத் தெரியாது. என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடைகளாக அந்த இடத்தில் என்னுள் தோன்றியவை, அவர் எனக்களித்தவை என்று கொள்கிறேன். இங்கு ஒவ்வொருவரின் பயணமும் தனித்தது. ஞானத்தின் பாதையும் அத்தகையதே. இன்றிருக்கும் தத்தளிப்புகளுக்கு அப்பால் தன்னை அறிதல் என்பதே நான் முதன்மையாகக் கொள்ளவேண்டியது. மற்ற அனைத்தும் மேலோட்டமானவை. இங்கு எனக்கு நிகழும் அனைத்தும் அங்கு கொண்டு சேர்ப்பதற்கான வழிகளே என்று தோன்றியது. கடக்க வேண்டிய உணர்ச்சிகரமான தருணங்களை மிகுந்த எச்சரிக்கையுடன், விழிப்புடன் கடந்து செல்லவேண்டும் என்றும் தோன்றியது.
இந்திரநீலம் புத்தகத்தை எடுத்து ஒரு அத்தியாயம் மனதுக்குள் வாசித்தேன். பிறகு கிண்டிலில் இமைக்கணம் எடுத்து முதல் அத்தியாயம் வாசித்தேன். தியானிகனும் பிரபாவனும் பேசிக்கொள்வது. ஸ்தூல வடிவில் இருக்கும் புழு எண்ணத்தில் சிறகு கொண்டிருத்தல், எண்ணத்தில் கால்கள் கொண்டிருத்தல். இல்லாத கால்கள், இல்லாத சிறகுகள் எண்ணத்தில் தோன்றுதல். புழுவின் வடிவு முயன்று பறவை வடிவெடுத்தல், எல்லைகளைக் களைந்து பறத்தல் என ஒவ்வொன்றும் புதிய பரிமாணத்தில் விளங்கிக்கொண்டிருந்தது. ஒரு புழு பறவையாகும் முயற்சியில், மேம்பட்ட மற்ற அனைத்துயிராக ஆகும் முயற்சியில் இருக்கிறது. எனில், நான் அடையவேண்டியதென்ன? Self-Realisation. வந்தவுடனேயே விடை அளிக்கப்பட்டிருந்தது. அதுவரை இருந்த எடைகுறைந்து எளிதானது போல உணர்ந்தேன். இங்கு உலகியலின் உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. மேலான அறிதல் மட்டுமே கேட்டுப்பெற்றுக் கொள்ளவேண்டியது. நித்யாவிடம் எப்போதும் உலகியல் தேவைக்கான எதையும் நான் கேட்டதில்லை.
சமாதியை ஒரு புகைப்படம் எடுத்தேன். என் பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். மீண்டும் உள்ளே சென்று நமஸ்காரம் செய்தேன். சென்றுவருகிறேன் என்று விடைபெற்றுக்கொண்டேன்.
வெளியில் புற்கள் உயரமாக மழையில் நனைந்திருந்தன. சமாதியின் வெளிப்புறத்தை சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. சுற்றி வரும்போது சுவாமி மீண்டும் மீனுக்கு உணவளித்தபடி நின்றுகொண்டிருந்தார். நான் வெகுநேரம் உள்ளே அமர்ந்திருந்ததை இடையில் ஒருமுறை வந்து தொலைவில் நின்று பார்த்துவிட்டுச் சென்றிருந்தார். பதினைந்து நிமிடம் சமாதியில் அமர்ந்துவிட்டு அவரிடம் ஓடுவது என் வழக்கம். இம்முறை ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாகியிருந்தது நான் சென்று.
என் முகம் பார்த்தபின் “ஆர் யூ க்ளியர் நௌ?” என்றார் குரலில் அக்கறையுடன்.
நான் அவரிடம் எதையுமே சொல்லியிருக்கவில்லை. “எஸ் ஆல் க்ளியர்” என்று சிரித்தபடி சொன்னேன்.
“இந்த சிரிப்புதான் உன்னிடம் இருக்க வேண்டியது. குட் டு ஸீ” என்றார்.
அவருடைய அறையின் வெளிப்புறம் படர்ந்திருந்த செடி, சுவற்றை, சன்னல் இடைவெளியைத் துளைத்து உட்புறம் புக ஆரம்பித்திருந்தது.
”See, this is creeping in. We have cut it. Still its green” என்றார்.
அதுவும் அவருடன் வசிக்க விரும்புகிறது போலும் என்று சொல்லிச் சிரித்தேன். அவரும் சிரித்தார்.
“பதிப்பக வேலைகள் மட்டும்தான் செய்கிறாயா?” என்று கேட்டார்.
”ஆமாம்” என்றேன்.
தான் ஒரு புத்தகத்திற்கு தயாரித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். நினைத்துக் கொண்டு “முதலில் சாப்பிட்டுவிட்டு வா, பேசலாம். நான் லைப்ரரியில் இருக்கிறேன்” என்றார்.
நான் சென்று சாப்பிட்டு, அவசரமாக சில பூக்களைப் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்ப இருபது நிமிடங்கள் ஆகியிருக்கலாம். லைப்ரரியில் சென்று பைகளை வைத்தேன். உள்ளே நுழையும்போது திடுமென ஒரு அதிர்வு. நித்யா அங்கே அமர்ந்திருப்பது போல அவரது சிலை. சென்று கால் தொட்டு வணங்கினேன்.
அடிக்கடி அமர்ந்து படிக்க, படம் பார்க்க இருப்பது போல மேசைமேல் கம்ப்யூட்டரும் டிவியும் அமைக்கப்பட்டிருந்தது. லைப்ரரியின் அடைசலாக இருந்த சோபாக்கள் நீக்கப்பட்டு விசாலமாக இருந்தது. திறந்திருந்த அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹெம்மிங்வேயுடைய பழைய கால நீல கெட்டி அட்டை போட்ட புத்தகம். லே மிசரபிள்ஸ் பெரிய புத்தகமாய், இன்னும் சிறிதும் பெரிதுமாய் நிறைய இலக்கியப் புத்தகங்கள்.
கை வைக்க அஞ்சி பார்த்துக் கொண்டிருந்தேன். கதவு திறந்து வியாசா சுவாமி ஒரு ஃபைலுடன் வந்தார். அலமாரி திறந்திருக்கிறதே என்றேன். “இப்போது நிறைய வாசிக்கிறேன். அதற்காகத் திறந்திருக்கிறது” என்றார். “லே மிசரபிள்ஸ் வாசித்தேன். என்ன ஒரு அற்புதமான புத்தகம்!” என்றார்.
“நானும் இவற்றில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ஆனால் கிண்டிலில் வாசித்தேன்” என்றேன்.
“என்ன இருந்தாலும் புத்தகத்தில் வாசிப்பது போல வராது, நானும் கிண்டில் வாங்கினேன். சிறியதாக இருக்கிறது படிக்கப் போதுமானதாக இல்லை” என்றார்.
மேசைக்கருகில் போட்ட நாற்காலியில் அமர்ந்தபடி மேசை மேல் இருந்த இந்திரநீலம் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். ”எவ்வளவு பெரிய புத்தகம்!” என்று வியந்தார்.
“இது போல 26 புத்தகங்கள்” என்றேன், அவருக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி. ”இதை குரு சமாதியில் வைத்து பிரார்த்திப்பதற்காக எடுத்து வந்தேன்” என்றேன்.
“எத்தனை பக்கங்கள்! உன் மூளை இப்போது சரியாக இயங்குகிறதா?” என்று சிரித்தபடி கேட்டார். சிரித்துக்கொண்டேன்.
அவர் கொண்டுவந்த ஃபைலை விரித்து “இவை என் ப்ளாக்கில் எழுதியவை. அவற்றைத் தொகுத்துத் திரும்பப் படித்துத் திருத்தங்கள் போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார். பிறகு “இரு இதற்குப்பின் திருத்திய வடிவம் இருக்கிறது எடுத்துவருகிறேன். மேலே என் அறை இடைஞ்சலாக இருக்கிறது. இல்லாவிட்டால் அங்கேயே இருந்திருக்கலாம்” என்றபடி மேலே சென்றார்.
அவர் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அறைக்குச் செல்ல நேர்ந்தால் அவர் படிக்கும் அந்தப் பக்கத்திலிருந்தே உரையாடல் தொடங்கும். முன்பொருமுறை நேராக அவரது அறைக்குச் சென்று அரைநாள் அமர்ந்து பேசி யாரையும் பார்க்காமல் சமாதிக்கும் செல்லாமல் திரும்பியிருக்கிறேன். அன்று காந்தியைப் படித்துக்கொண்டிருந்தார். படித்துக்கொண்டிருந்த பக்கத்திலிருந்து மேற்கோள் காட்டித் தொடங்கி நாராயணகுருவுக்கும் காந்திக்குமான உரையாடல்களைப்பற்றி சொன்னார். நாராயண குருவைப்பற்றிய அறிமுகமாக இன்று என் நினைவில் நிற்பவை அன்று அவர் சொன்னவையே.
வந்தபின் புத்தகமாகக் கையில் வைத்து வாசிப்பது, இப்போது அடுத்த பரிணாமமாக கிண்டிலில் வாசிப்பது, என்று உபயோகிக்கும் டூல்கள் மாறியிருப்பதை விந்தை போலச் சொல்லிக் கொண்டிருந்தார். பிரம்மம் எல்லையிலா வடிவங்கள் எடுக்கிறது. ஒவ்வொரு வடிவமும் தனித்தது இன்னொரு இணை சொல்ல இயலாதது. அவை ஒவ்வொன்றும் பிரம்மத்தை அறியும் வேட்கை கொண்டிருக்கின்றன. அதைப் போலவே பிரம்மமும் அவற்றை அறிய விரும்புகிறது என்று சொல்லிக்கொண்டு தொடங்கினார். அவர் வழக்கம் அது. எத்தனை சாதாரணமான ஒன்றிலிருந்தும் பிரம்மத்தை அடைந்துவிடுவார்.
தனித்தன்மை கொண்டது என்று சொல்லத் தொடங்கி நாராயண குருமரபின் மெய்மரபின் தொடர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். “நடராஜ குரு எவ்வகையிலும் நாராயண குருவைப்போல் இல்லை. அதுபோலவே நித்யா குரு எந்த விதத்திலும் நடராஜ குருவைப் போல் இல்லை. குரு முனி நாராயண பிரசாத் அவர்களும் அப்படித்தான். அவர்களின் வழிகளும் அவ்வாறே தனித்தவை.
முழுமுதல் என்றும் பிரம்மம் என்றும் absolute என்றும் சொல்லப்படும் ஒன்றை அறிந்து கொள்ளுதலே ஆன்மாவின் கடமையாக நமது மெய்மரபு சொல்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய புதிய கண்டுபிடிப்புகள் அதன்வழியாகப் பிரம்மத்தை அறிந்து கொள்ளப் பிரயத்தனம் செய்யப்பட்டது. நாராயணகுரு அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள், பௌதிக அறிவியலில் வந்த மாற்றங்களினூடாக இந்த ஞானத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினார். நடராஜ குருவை அதற்கே பணித்தார்.
நடராஜ குரு வரும்போது லண்டன் உலகை ஆண்டு கொண்டிருந்தது. Modern Thinking என்று சொல்லப்படும் தத்துவங்கள் யூரோப்பிலிருந்து பிறந்தன. அவர் அங்கிருப்பவர்களுடன் தொடர்பிலிருந்தார், ஐரோப்பிய தத்துவங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தார். அவரை வந்து சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் ஹிப்பிகள். அதுவரை அறிதல் என்பது மதம் சார்ந்ததாக இருந்தது. இதற்குப் பின் ஞானம் மதத்தின் வாயிலாக அல்லாமல் தனித்தரிசனமாகவே பயிலமுடியும் என்ற நிலை வந்தது.
அவருக்குப்பின் வந்த நித்யா குரு சைக்காலஜியின் வழி தத்துவத்தை அறிந்துகொள்ள, விளக்கத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமெரிக்கா வலிமையுடனிருந்தது. அமெரிக்கா தத்துவத்தை விட சைக்காலஜியை அடிப்படையாகக் கொண்ட நாடு. குரு நித்யாவின் பெரும்பாலான நண்பர்கள் அமெரிக்கர்கள் என்று சொன்னார். இப்போது இருக்கும் குரு முனிநாராயண பிரசாத் அவர்களின் வழி வேறு. இன்றைய அறிதல் முறையுடன் உரையாடுவது” என்று சொன்னார்.
“இதுவரை கருவிகளை நாம் பயன்படுத்தினோம். இப்போது டெக்னாலஜி யுகத்தில் கருவிகள் நம்மை அளவிடுகின்றன. நம்மை கண்காணிக்கின்றன. நமக்குத் தேவையானவை உகந்தவை என அவை தேர்வு செய்கின்றன. நம் பயணங்களில் செல்போன் இருந்தால் எத்தனை தொலைவிலிருந்தாலும் அறிந்த இடத்தில் இருப்பது போலத்தான். தொலைவு, தனிமை என்பதே இல்லை.”
”முன்பெல்லாம் எனக்குத் தோன்றியதை பிளாகில் எழுதிவிடுவது வழக்கம். இப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. இன்று நான் எழுதுவது நாளை எனக்கு சுமையாகிவிடக்கூடாது என்ற கவனம் வந்துவிட்டது என்றார். இது Algorithm-தின் யுகம்” என்றார். இந்தப்பதம் புரிய எனக்கு சில நாட்களாகும்.
இப்போது படித்துக்கொண்டிருக்கும் Evan Thompson-ன் Waking, Dreaming, Being: Self and Consciousness in Neuroscience, Meditation, and Philosophy புத்தகத்தை எடுத்துவந்தார். அதைப் பிரித்து, “பார் இதுவரை உபநிஷதக் கருத்தை எடுத்தாளுபவர்கள் ஒருபோதும் எங்கிருந்து எடுத்தது என்று சொல்லமாட்டார்கள். இவர் ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். நல்ல விளக்கங்கள், படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
மீண்டும் எல்லாம் தனித்தது. ஒன்று போல இன்னொன்று இல்லாதது. ஒவ்வொன்றும் அதன் இன்னொரு பிம்பம்/பிரதி. ஆனால் தனித்தது, Unique. என்றார். அதுவும் இதுவும் நானும் ஒன்றே எனில் பிறிதொன்று எது, எதற்கு எதிராக நம்மை வளர்த்துக்கொள்வது என்றார். இந்த ஆறாண்டுகளில் நான் அவரிடம் என் மனக்குழப்பங்களை எப்போதும் சொன்னதில்லை. அவர் அவற்றைப் பொருட்படுத்தி என்னிடம் பேசியதுமில்லை. ஆனால் இம்முறை என்னவென்று கேட்காமலே அவற்றுக்கு விடைகளை சொல்லத் தொடங்கினார்.
“If you suffer because of emotions, you have to maintain two things. Be silent, be kind, Maintain silence in emotional state. If you have to react, be kind. All are suffering in different ways. If you take one perception as happiness, another is suffering, that is the duality, but there is no duality. Both are same. To know that you have to be Neutral. When you have a side you cannot perceive what is actually there” என்றார்.
அகங்காரமே நெகட்டிவான அனைத்து எண்ணங்களுக்கும் அடிப்படை, பொறாமையாகவும் பயமாகவும் தோன்றுவது கூட அதுவே. அகங்காரம் பொறாமையையும், பொறாமை பயத்தையும் விதைக்கிறது. பயம் நம் நிலைபற்றிய கேள்விகளை எழுப்புகிறது. பொறாமையும் பயமும் நம்முடைய இருப்பிற்கு அத்தியாவசியமான உணர்ச்சிகளாக தங்களை உணரச்செய்கின்றன, தீவிரமாக இங்குள்ளவற்றுடன் பிணைக்கின்றன. இது மிக அழுத்தமான களைய முடியாத தளை. அயரா முயற்சியுடனும் விழிப்பு நிலையுடனும் கண்காணிக்கப்பட வேண்டியது என்றார்.
அறிதலில் குருவின் இடம் என்பது ஒளியை ஏற்றிவைத்தல், ஏற்றிக்கொள்ள உதவுதல். ஏனெனில் இங்குள்ள அறிதல்கள் எல்லாமே நம்முள் இருப்பவை. அவற்றை நாம் கண்டறிகிறோம் என்பதே ஞானம் அடைதல். குரு என்பவர் இந்தக் கண்டடைதலுக்கு உதவி செய்பவர். அறிதலின் தடைகள் பற்றி, அதை எதிர்கொள்வது பற்றி விரிவாகச் சொன்னார். இவ்வுலகில் அன்றாடம் செய்யவேண்டியவைகளை செய்து கொண்டிருக்கும்போது கூட ‘நாம் இந்த தேடலின் பாதையில் இருக்கிறோம்’ என்ற awareness, conscious-உடன் இருப்பதே மிக உறுதியாகப் பயிற்சி செய்யப்பட வேண்டியது. ”Guru also cannot help on this, One has to walk on his own” என்றார்.
முடிவற்றதாக விளங்கும் ஒன்றே இங்கு எல்லைக்குட்பட்டதாக விரிந்திருக்கிறது. இரண்டும் வேறு வேறு என்பது மாயை. நன்மையும் தீமையும் இரண்டு வேறு எதிர் நிலைகள் அல்ல. இரண்டும் ஒன்றின் இருமுகங்களே என்றார் மீண்டும். கிருஷ்ணரையும் கணிகரையும் பற்றிச்சொன்னேன். மாயை பற்றி அவர் சொல்லும்போது விக்ரமாதித்யனின் நீலகண்டம் கவிதையைச் சொன்னேன். இரண்டாகப் பிரிந்தாடும் ஆட்டம். ஒரு முறை உணர்ந்துவிட்டால் அதன் பின் இத்தனை அழுத்தமாக இவ்வாழ்க்கையின் மேல் படியமாட்டோம் என்றார்.
எனக்கு கல்பற்றா நாராயணனின் டச்ஸ்க்ரீன் கவிதை நினைவுக்கு வந்தது. அதை அவரிடம் சொன்னேன். இத்தகைய உயர்தள உரையாடல்களில் கவிதை எத்தனை எளிதாக உணர்த்திவிடுகிறது என்று வியந்து கொண்டேன்.
“ஆம் அதுபோலத்தான். இவை எதுவும் பாதிக்காமல் வேடிக்கை பார்” என்றார் சிரித்தபடி. “நாங்கள் முதலிலேயே நியூட்ரலாக இருந்துவிடுகிறோம். அதனால் இவை எல்லாம் எங்களில் பிரதிபலிக்கின்றன அவ்வளவே” என்றார்.
நான் எனக்கான ஒரே விடையை என் கேள்வி என்ன என்று சொல்லிக் கொள்ளாமலேயே மூன்று இடங்களிலிருந்து பெற்றேன். உபதேசமாக, மந்திரமாக, ஆசியாக. அருகிருத்தல்!
பிறகு குருநித்யாவைச் சந்திக்க வருபவர்களைப் பற்றிப்பேச்சு திரும்பியது. குருநித்யாவைப் பற்றி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு டாக்குமெண்டரிக்காக அவர் பேட்டி எடுத்ததை சொன்னார். மீண்டும் சென்று ஐபேடை எடுத்துவந்தார். அதில் அவர் எடுத்த பேட்டி தொகுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. பேட்டியில் பேசியவர் குருநித்யாவைப் பார்க்க வந்த முதல் சந்திப்பிலேயே அவரை, அவர் அணுக்கமாக. அன்பானவராக உணர்ந்தது பற்றிச் சொன்னார்.
சுவாமி “முதல் சந்திப்பிலேயே நானும் அவ்வாறு உணர்ந்தேன். முதல்முறை பார்த்தவுடனேயே அவர் என் அன்னை தந்தைக்கும் மேல் எனக்கு அணுக்கமானவர் என்று தோன்றிவிட்டது. ஆனால் அதன் பின்னும் அவரிடம் வந்து சேர பலதடைகள் இருந்தது. இதுதான் நம் இடம் என்று உணர்ந்து அமையச் சற்று நேரம் பிடித்தது” என்று சொன்னார். பேட்டியைப் பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிடப் போனோம்.
எனக்கென்று மனமொன்று இல்லாதது போல வெறுமே நாய்க்குட்டி போல அவர் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.
“எப்போது திரும்புகிறாய்?” என்றார்.
“நீங்கள் ஓய்வெடுக்கச் சென்றால் நான் கிளம்புகிறேன்” என்றேன்.
“எப்படிப் போவாய்?”
“பஸ்ஸில் போய்க்கொள்கிறேன்”
“வேண்டாம். நான் கொண்டு போய் விடுகிறேன்” என்றார்.
சமையலறையை நெருங்கும்போது “நாம் கட்லெட் செய்தது நினைவிருக்கிறதா?” என்றார்.
நான் அங்கு தங்கியிருந்தபோது முன்பொரு முறை கட்லெட்டும் ஆலூ சப்பாத்தியும் செய்து தந்தார். “நன்றாக நினைவிருக்கிறது” என்றேன். அவர் சமைப்பதே ஒரு நடனம் நிகழ்வது போலிருக்கும். சமஸ்கிருத மந்திரங்கள் வசனங்களும் பாடல்களுமாகும். கரண்டி வயலின் இசைக்கும்.
இன்று எனக்காக ஸ்பெஷலாக ஏதாவது செய்யச் சொல்லியிருக்கிறார். கஸ்தூரி, வெஜிடபிள் பிரியாணி செய்திருந்தார். காரமில்லாமல் மசாலா இல்லாமல்.
தட்டில் உணவு எடுத்து வந்து அமர்ந்தபடி “அன்னம் பிரம்மேதி” என்றார். அப்புவும் சாப்பிட வந்தமர்ந்தார்.
ஈகோவைக் களைய ஒரு வரிசை சொன்னார். காலையில் படித்தது அது. ”உணவு பிராணன், மனம், அறிதல், ஆனந்தம் எல்லாமே பிரம்மமே. முதலில் உணவு பிரம்மம் என நினைக்கவேண்டும். தொடர்ந்து அதை கருத்தில் வைத்திருக்க அது பிரம்மமென துலங்கும். ஆனந்தம் என்பது இறுதி நிலை.” (அவர் குறிப்பிடும் ஆனந்தம் என்பது Bliss அல்ல, Value). “குரு முனி நாராயணபிரசாத் அவர்களின் அந்த வரிசையை இன்று காலை படிக்கும்போதுதான் உணர்ந்தேன், இது ஒரு நல்ல வைப்புமுறை” என்றார்.
எனக்கு வியப்பாக இருந்தது. அங்கே இந்தப் பாடங்களே திரும்பத் திரும்பப் படிக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைக் கண்டடைகிறார்கள். அதனால் தான் அங்கு ஒவ்வொன்றும் அன்றே பிறந்தது போல இருக்கிறது.
வழக்கம் போல பேசிச் சிரித்து கொண்டாட்டமான உணவு அருந்தல். பதிப்பகத்தின் முதல் புத்தகமாக குமரித்துறைவி வந்தது பற்றி மீனாட்சி கல்யாணம் பற்றி சொன்னேன். அச்சுப்புத்தகமாக வந்தபிறகு எடுத்துவருகிறேன் என்றேன். “எனக்குத் தமிழ் தெரியாதே, எப்படி படிப்பது?” என்றார். நான் மொழியாக்கம் செய்து தருகிறேன் என்றேன். இருகைகளையும் துப்பாக்கிக்கெதிரே தூக்குவது போல் தூக்கிக் குலுங்கிச் சிரித்தபடி தலையை ஆட்டினார். அவருக்கு தமிழில் பேசுவது முழுவதும் புரியாது. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மொழி. என் ஆங்கிலத்தை சகித்துக்கொள்கிறார்.
பிறகு வெண்முரசுக்கு எடுக்கப்பட்ட டாகுமெண்டரி பற்றிச் சொன்னேன். அதில் நானும் பேசியிருக்கிறேன் என்று சொன்னேன். “எவரிடமும் பகைமை இல்லை என்று அதில் சொன்னேன். ஆனால் நான் என்னில் எழுந்த தீவிரமான எதிர்மறை எண்ணங்களை பார்க்கையில், இது நானா என்று வெட்கமாகவும் பயமாகவும் இருக்கிறது” என்றேன்.
“Hey! all have that, that`s not important. I see only a beautiful soul in you, those are all shadows, they will be there, don’t mind” என்றார். “Don’t think I am this, that. Only pouring happiness is you, see how you are blooming” என்று சிரித்தபடி கையை நீட்டி என்னைச் சுட்டியபடி சொன்னார்.
என் உயிர் கண்களின் வழியாக வெளிவந்துவிடும்போல இருந்தது. அவருடைய கண்பார்வையே நீண்டு என் உள்ளத்துயரை துடைத்துவிட்டது போல, அதனுடன் அப்போதே என் உயிர் வெளியேறிவிடும்போல உணர்ந்தேன். கண்கள் மட்டுமே நான் என்றிருந்தது. உணவின் கடைசி கவளத்தை மிகுந்த சிரமப்பட்டு விழுங்கினேன். கைகழுவி வரும் வரை நின்றார்.
எங்கள் உரையாடல்களுக்கிடையே கஸ்தூரியும் அப்புவும் அங்குதான் இருந்தார்கள் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். மழை பெய்துகொண்டிருந்தது கையில் குடை வைத்திருந்தார். “நான் தொப்பி அணிந்திருக்கிறேன் நீ வைத்துக்கொள்” என்றார்.
“இல்லை, நீங்கள் நனையவேண்டாம்” என்று அவருடன் குடைக்குள் இணைந்து கொண்டேன். எப்போதும் அவரிடம் எனக்கு உருவாகும் அணுக்கம் கூடியிருந்தது. காலையில் என் அகத்துயரினால் அவரிடம் அணுகவில்லை. அந்த எடை குறைந்திருந்தது. மிக லேசாக உணர்ந்தேன். பிறகு அவரை பார்த்துக்கொண்டிருப்பதன், அருகிலிருப்பதன் இன்பமே இருந்தது.
பின்னர் விட்டுவந்த பேட்டியை முழுதும் பார்த்தோம். அவர் ஓய்வெடுக்கச் செல்லவில்லை. குருநித்யாவைப் பற்றி, அவர்கள் சேர்ந்து செய்த பயணங்கள் பற்றி, அவர் குருநித்யாவை உணர்ந்தது பற்றிச் சொன்னார். முழுச்சுதந்திரத்தை குருநித்யாவிடம் உணர்ந்ததாக சொன்னார். “குரு ஆரம்பத்திலேயே பயணங்களுக்கு என்னை துணையாக அழைத்துப்போவார். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாளில் சென்றதற்கும் மேலாக பல நாடுகளுக்கு கணக்கில்லாமல் சென்றிருக்கிறேன். அங்கேயே பலநாட்கள் தெற்கும் வடக்குமாக அலைந்து திரிந்திருக்கிறேன். வெற்றுப்பாக்கெட்டுடன். சுமையோ, அச்சமோ இல்லை. என் விருப்பம் போல இருந்திருக்கிறேன்” என்றார்.
”உறுதியாக, இதைச் செய் என்ற தொனியில் குரு எதையும் சொன்னதில்லை. அவர் அம்மா போல. நாம் அம்மாக்களின் பேச்சை மிகக்குறைவாகவே பொருட்படுத்துவோம். எனக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யும்படி ஒருபோதும் பணிக்கப்பட்டதில்லை. அவர் மென்மையாகச் சொல்வதை நான் உள்வாங்கிக்கொள்ள சற்றுக் காலமாகியிருக்கிறது. அவர் என் போக்கிலேயே விட்டுவிடுவார். நான் இங்கிருந்து சென்றபிறகு மீண்டும் இதுதான் என் இடம் என்று திரும்பி வருவேன், இரண்டு முறையும் அப்படித்தான் என்றார். ஃபிஜி தீவுக்குச் செல்லவிரும்பவில்லை என்று சொன்ன கணமே போக வேண்டாம். நீ இங்கிரு என்று சொன்னார்” என்றார்.
பின் “குரு என்றால் அன்பு. என் அன்னை சமைத்த உணவை உண்டு அன்பு என்று உணர்ந்திருக்கிறேன். குரு சமைத்ததை உண்ணும்போது அதைவிட இந்த உணவு அன்பாக இருக்கிறதே என்று எண்ணினேன்” என்று சொன்னார். அங்கு அவ்வப்போது வரும் இயானும் அப்படிச் சொல்வதுண்டு. உணவை அன்பு என்று கேட்பது அங்கு மட்டும் தான்.
நான் “அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று ஜெ சொல்லியிருக்கிறார்” என்றேன்.
“சிலபேரின் ஈகோவை சுத்தியலில் தட்டி வெட்ட வேண்டியிருக்கிறது” என்று சிரித்தார். கடுமையாக நடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கச் சீடர்கள் பெயரை நினைவு கூர்ந்தார். அவர் முகபாவனையிலேயே அவர்கள் அடைந்திருக்கக்கூடிய துயர் தெரிந்தது. “என்னைக் கடுமையாக ஏதும் சொன்னதில்லை. எல்லாமே மிக மென்மையான வார்த்தைகளில் சொல்லப்பட்டவை. குரு எழுதிய இருநூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள், உரையாடல்கள் என்னிடம் இருக்கின்றன” என்றார். சீடர்கள் அல்லாதவர்களிடம் அன்பு மழை பொழிவார். அவர்கள் அவ்வாறு அன்புடன் நடத்தப்பட வேண்டியவர்களே என்றார்.
“இருவேறு அறிதல்கள் உடையவர்கள் ஞானிகள். விசேஷ தளத்தை அறிந்துகொண்டதனால் சாமானிய தளத்தில் இயல்பாக அவர்கள் இருக்கக்கூடாது என்றில்லை. அவர்கள் இயல்பாகவே இருக்கிறார்கள் மற்றவர்கள்தான் வியந்து விசேஷமாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்று சொன்னார்.
(அவர் இங்கு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் குறிப்புகளின்றி நினைவுகளின் தொகுப்பாக பின்னர் எழுதியவை. அவர் சொன்ன அத்தனையும் இங்கே சொல்லப்படவும் இல்லை. எனவே குறிப்புகளில் போதாமை இருக்கலாம். இவற்றில் பிழை இருந்தால் என்னுடைய புரிதல் பிழையே அன்றி அவர் சொன்னதாக ஆகாது.)
“நீங்கள் நித்யாவைப்பற்றி பேட்டி கொடுக்கவில்லையா? நித்யா உங்களுடன் இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஆம். அவரது வழிகாட்டுதல் எப்போதும் உள்ளது” என்றார். “அவர் இருக்கும்போது அவருடைய புத்தகங்களுக்கான வேலைகள் அவருடைய உரைகளை எழுதிக்கொள்வது, தட்டச்சு செய்வது என்று வேலைகளே பிரதானமாக இருக்கும். சிலசமயம் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே தியானத்தில் மூழ்கிவிடுவதும் நடக்கும். இப்போது எண்ணிப் பார்க்க படிக்க அறிய முடிகிறது. குருவின் Presence விசேஷமானது” என்றார்.
மலர்ந்து மலர்ந்து கண்கள் விரிய, முற்றும் வெளுத்த புருவங்கள் மேலேறி வளைய சன்னலில் தெரிந்த பச்சைவெளிக்கு மேல் மலர்ந்திருந்த மேகவெளிக்குள் தெரிபவற்றைச் சொல்பவர் போல, தொலைவில் பார்த்தபடி உள்ளிருந்து எழும் நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். சென்றமர்ந்ததிலிருந்து அவ்வப்போது அவர் பின்னால் நித்யா அமர்ந்திருந்த இடத்தைப் பார்ப்பது தவிர, கண்கள் நிறைய அவருடைய முகமும் கையசைவுகளுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன வாக்கியங்களை நினைவுகூர்கையில் இந்த பாவனைகளுடனே அவை நினைவுக்கு வருகின்றன, அருகிருந்த இனிமையும்.
குருவிடம் மாணவன் வைக்கவேண்டிய நம்பிக்கையை (Faith, belief அல்ல) கீதையில் வரும் அர்ஜுனன் கிருஷ்ணன் உறவை உதாரணமாக வைத்து சொல்லிக்கொண்டிருந்தார். ஏழாம் அத்தியாயம் வரைக்கும் கேள்விகள். பதினொன்றாம் அத்தியாயத்தில் நட்பு, விஸ்வரூப தரிசனம், இரண்டும் ஒன்றென ஆதல். ஒவ்வொன்றைச் சொல்லும்போதும் சொல்லப்பட்ட அத்தியாயம், நூல் பெயர், அதன் சமஸ்கிருத வாக்கியம் மூன்றையும் குறிப்பிட்டு விளக்குவார். வெவ்வேறு தத்துவ ஞானிகளின் தேற்றங்களை கோட்பாடுகளை இணைப்பதையும் ஒப்பிட்டு சொல்வதையும் கேட்கையில் அன்று அவர்களுடன் அவர் உரையாடி வந்தது போலிருக்கும்.
‘முக்தி என்ற கோட்பாடு எதையும் அடைதல் அல்ல’ என்று முதன்முறை கேட்டபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுகூர்ந்தேன். அறியாமை மட்டுமே இருக்கிறது, ஒரு திரை போல. Cancellation என்பது அவருக்குப் பிடித்தமான பதம். அறிதலினால் திரைவிலகி இரண்டற்ற நிலைக்கு மாறுவதை Cancellation என்கிறார். இரண்டற்ற நிலையை Becoming Zero என்பார் (டெக்கார்த்தேயின் தேற்றம்). இன்னும் விரிவான விளக்கங்கள் சொன்னார்.
ஐபேடில் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை படிக்கும்படி கொடுத்தார். ஒருபக்க அளவிற்கு அவர் நித்யாவைச் சந்தித்தது பற்றி அவரால் ஈர்க்கப்பட்ட பின்னும் வேலைக்குச் சென்றது பற்றி எழுதியிருந்தார்.
1990-ல் நித்யா படுத்திருக்கும் அறைக்குள் வியாசா சுவாமி நுழையும்போது கைமேல் தலைவைத்து ஒருக்களித்து படுத்திருந்த நித்யா, “Ok, here after we will call you Vyasa Prasad” என்று சொல்லியிருக்கிறார். “அவர் செயல்களே விந்தையானவை அவர் அப்படித்தான்” என்றார். 1992-ல் ஃபிஜி தீவுக்குச் செல்வதற்காக விசா எல்லாம் வாங்கிய பின் மிக இயல்பாக காவி வஸ்திரம் கொடுத்து இனிமேல் இதை அணிந்துகொள் என்று சொன்னதாகச் சொன்னார். பெயர் கிடைத்து இரண்டு வருடம் பின் காவி கிடைத்ததா என்று கேட்டேன்.
அந்தப்புகைப்படத்தை முன்பு அவர் சேகரிப்பில் பார்த்திருக்கிறேன். அடர்ந்த கறுத்த தாடி, தலைமுடியுடன் மிக இளமையான வியாசா சுவாமி. மிக இளம் வயதிலேயே இங்கே வந்துசேர்ந்துவிட்டீர்களே என்று கேலி செய்தபோது. பெரிதாகச் சிரித்து கைகளைத் தலைக்கு மேல் தூக்கி ஆட்டியபடி “Oh! Don’t ask, Guru has taken me” என்றார். அவர் புதிதாக வருபவர்களிடமோ மற்ற ஆசிரமவாசிகளிடமோ பேசுவதைப் பார்க்கும்போது, இப்படி விளையாட்டும் சிரிப்புமாக இருப்பவர் இவர்தானா என்று தோன்றும். கீதாம்மா இருக்கும் நாட்களில் ”இன்னும் நிறையப் பேர் இப்படி அவரைப் பார்க்க வந்தால் நல்லது. அவருள் இருக்கும் ஆசிரியர் இன்னும் உயிர்ப்புடன் இருப்பார்” என்பார்.
வியாசா சுவாமி அவர் எடுக்கும் வகுப்புகள் பற்றி யூட்யூபில் அதை எந்த தேசத்தில் யார் பார்க்கிறார்கள் என்றெல்லாம் போட்டு காண்பித்துக் கொண்டிருந்தார். ஒரு வாரத்தில் ஆறு முறை பார்க்கப்பட்டிருந்தது. மலேசியாவில் ஒருவர், பெல்ஜியத்தில் ஒருவர், இந்தியாவில் ஒருவர். மலேசியாவிலிருந்து இரண்டு நாட்கள் பார்க்கப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்து பார்ப்பவரை “This guy often sees” என்றார் பெருமையுடன்.
நான்குமணிக்கு “எனக்குப் பழம் சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது சாப்பிடலாமா?” என்றார்.
“சரி” என்றேன்.
மீண்டும் மேலேறிச்சென்று கத்தி பழம் பிஸ்கட் எல்லாம் எடுத்து வந்தார். மிகலாவகமாக ஆப்பிளை தோலுரித்து நிமிடத்தில் வெட்டி வைத்துவிட்டார். நீளமான விரல்கள், விரைவான அசைவுகள்.
பிஸ்கட் சாப்பிட எடுத்தேன். ”இதில் சீஸ் வைத்து சாப்பிடுகிறாயா? நன்றாக இருக்கும், ஒரிஜினல் கொடைக்கானல் சீஸ். இரு கொண்டு வருகிறேன்” என்று மேலே சென்றார். வந்து சீஸை வெட்டி இருபிஸ்கட்கள் நடுவில் வைத்து தந்தார். ”என்னுடைய அறை அமர்வதற்கு ஏதுவாக இல்லை. அதனால் தான் இங்கே அமர்ந்திருக்கிறோம். இல்லாவிட்டால் அங்கேயே இருந்திருக்கலாம்” என்று மூன்றாவது முறையாகச் சொன்னார். ஃபைல் எடுக்க, புத்தகம் எடுக்க, குடை எடுக்க, பழங்கள் எடுக்க என்று பத்துமுறையாவது மேலேறி இறங்கியிருப்பார், அத்தனை உற்சாகமாக இருந்தார்.
லைப்ரரியின் பக்கவாட்டு சன்னலில் தெரிந்த மழையும் பச்சையும் மேகங்களும் கனவு போல இருந்தது. மழை வரும் என்று தோன்றியது. எனக்குக் குளிரத் தொடங்கிவிட்டிருந்தது. மதியமே உனக்கு சால்வை வேண்டுமா என்று கேட்டிருந்தார். அப்போது வேண்டாம் என்றேன். ஆனால் நான் அணிந்திருந்த குளிராடை எனக்குப் போதவில்லை. எனவே ரொம்பக் குளிருமுன் கிளம்பலாம் என்று எண்ணினேன்.
“மழை வருமுன் நான் கிளம்புகிறேன். இருட்டிவிடும்” என்றேன்.
“சரி வா என் அறைக்குப் போகலாம்” என்றார். “ஒரு லில்லி பூத்திருக்கிறது அதையும் பார், கிளம்பலாம்” என்றார். ஊட்டியில் மழைக்காலம் தொடங்கும்போது வரும் முதல் மேகத்திரளின் புகைப்படத்தை ஒவ்வொரு முறையும் எனக்கு அனுப்புவார். குருபூர்ணிமா அன்று அழைக்காமலே ஆசிகள் வந்துவிடும் மெயிலில்.
மிகச்சிறிய அறை அவருடையது, உள்நுழையும்போது இடதுபுறச் சுவர் முழுக்கப் புத்தகங்கள். அவற்றை அங்கேயே அமர்ந்து படிக்க ஒரு மரஅட்டாணி, அதனுடன் இணைந்த ஏணி. அதன் கீழே தரையில் படுக்கும் மெத்தை. அதையொட்டி பெரிய மேசை. (அலமாரி மேசை எல்லாம் அவரே செய்தது. அங்குள்ள பெரும்பாலான பொருட்கள் சோலார் ஹீட்டர் உட்பட அவரே செய்தவை.)
மேசையின் ஒருமுனையில் டிவி இண்டர்நெட் இணைப்புடன் படுக்கையில் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக மாட்டப்பட்டிருந்தது. மேசை மேல் மானிட்டர் அப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் குறிப்பேடுகள். மேசையை ஒட்டிய சுவரில் மீண்டும் புத்தகங்கள். மேசைக்கும் அதன் எதிர் சுவற்றுக்கும் நடுவில் ஒரு நாற்காலி மட்டுமே போடமுடியும். திரும்பி நின்றால் சமைக்கும் மேடை. அதை ஒட்டி வெளிப்புறம் பார்த்தபடி கூரை தொட ஒரு அலமாரி.
மேலே அறைக்குச் சென்றதும் ஒரு குழந்தை தன் விளையாட்டுப் பொருளை விளக்குவது போல மேசையில் இருந்த புதிய மானிட்டர், பழைய சிறிய டிவி, அதில் புதிதாக இணைக்கப்பட்ட இண்டர்நெட், அந்த அறையில் அவர் புதிதாகச் சேர்த்த புத்தகங்கள், புதிதாகச் செய்திருந்த மாற்றங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
மேசையில் ஒருமுனையில் ஐபேடை மாட்டிக்கொண்டால் கூகிள் மீட்டில் பாடங்கள். இன்னொரு திசையில் செல்போன் வைக்கும்படி ஒரு பிடி. அது அவரது பேச்சை பதிவு செய்தபடி இருக்கும். “வகுப்பெடுக்கத் தொடங்கினால் என்ன சொன்னேன் என்பது தெரிவதில்லை. மற்றவர்கள் சொன்னால் தான் என்ன சொன்னேன் என்பதே தெரிகிறது. எனவே பதிவு செய்துகொள்கிறேன்” என்றார்.
சென்ற வருடம் பதிப்பித்த நடராஜ குருவின் கீதை உரையைக் காட்டி “இது கொரொனாவின் கொடை. குரு இங்கிருந்ததால் பதிப்பிக்க முடிந்தது” என்றார். அவர் படுக்கும் மெத்தைக்கு மேல் சுவற்றில் புதிதாக ஒரு பலகையும் அதில் சிலபுத்தகங்களும் சேர்ந்திருந்தன. ”மறுபடி புத்தகங்கள் சேர்த்துவிட்டீர்களே?” என்று கேட்டேன். “ஆமாம், பலவருட சேகரிப்பு. இப்போது யுவால் நோவா ஹராரியின் ஹோமோடியஸ் ஆர்டர் செய்திருக்கிறேன். இனி புத்தகங்கள் வாங்குவதில்லை” என்றார்.
நீங்கள் அவருக்குச் சமர்ப்பித்த இமைக்கணம் கீதை உரையுடன் வைக்கப்பட்டிருந்தது. “ஹே! இதை இங்கே வைத்திருக்கிறீர்களே!” என்றேன். அவர் புத்தகத்தை எடுத்துப் பிரித்து “இதில் என்ன எழுதியிருக்கிறது?” என்று கேட்டார். “வணக்கத்துடன் ஜெயமோகன்” என்று கைகுவித்து வணங்கிக் காட்டியபடி சொன்னேன். “Oh! Welcome!” என்று சிரித்துக்கொண்டார்.
“நீ To kill a mocking bird படம் பார்த்தாயா?” என்று கேட்டார். “ஹார்ப்பர் லீயுடைய நாவல்.”
“இல்லை” என்றேன்.
“நான் முன்பே பார்த்திருக்கிறேன். ஆனால் அது இப்போது புதியதாகத் தெரிகிறது. ரேசிசம் பற்றியது. ஒரு சினிமா கூட சில வருடங்கள் கழித்து புதிய பரிணாமத்தை தருகிறது” என்றார் சிறுபிள்ளை போல.
நான் காலையில் இருந்த எடையில் நூறில் ஒரு பங்கு எடையே கொண்டிருந்தேன். என் இருப்பே இனிதாக மாறிவிட்டிருந்தது. என் முகம் பெரிதாகி விரிந்திருப்பது எனக்கே தெரிந்தது. இந்த இடத்திற்கு அறிமுகப்படுத்திய உங்களை நெடுஞ்சாண் கிடையாக மனதார விழுந்து வணங்கிக்கொண்டேன்.
ஜீப்பின் சாவியை எடுத்தபடி “இங்கே வாசலிலேயே நில். ஜீப்பை இங்கே கொண்டு வருகிறேன். நீ அணிந்திருக்கும் ஷுவுடன் இந்த புல்லில் நடந்தால் நனைத்துக் கொள்வாய்” என்றார்.
நான்மட்டும் செல்லும்போது ஒவ்வொரு முறையும் என்னை பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து விடுவார். அதுவரை பேசிக்கொண்டிருந்த விஷயங்களின் தொடர்ச்சி பேருந்து நிலையம் வரை நீளும். பஸ் ஸ்டாண்டில் சிறிய கேட்டுக்கு நேராக இறக்கிவிட்டார். நான் அதைக் கவனிக்காமல் முன்னே நடக்க, மீண்டும் அழைத்து கேட்டை கைகாட்டினார். சிரிப்பும், கேலியான நாடக வணக்கமுமாகப் பிரிந்தோம்.
திரும்பி வரும்போது பஸ்ஸில் விடுபட்ட உரையைக் கேட்க முயற்சி செய்தேன். ஆனால் மொழியோ அதன் உணர்ச்சிகளோ என் நிலைக்கு வெகு தூரத்தில் இருந்தன. என்னால் கேட்கமுடியவில்லை. வெறுமே அறியாத மொழியின் பாட்டுகள் கேட்டபடி வந்தேன். இசை மட்டும் உடனிருந்தது.